வெள்ளி, 12 செப்டம்பர், 2008

அறிவிப்பு

விழுப்புரம் தமிழ்ச்சங்கம் ஏழாம் ஆண்டுவிழா
நாள் :  திருவள்ளுவர் ஆண்டு 2039  கன்னி(புரட்டாசி) 5
             21-09-2008 ஞாயிறு காலை தொடங்கி மாலை வரை.
இடம் : குரு திருமண மண்டபம்,
கன்னியாக்குளம் சாலை, விழுப்புரம்.
  
காலை 10-00 மணி தொடக்க விழா.
தலைமை :  மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
 தலைவர், தமிழ்ச்சங்கம்.
முன்னிலை :  திரு. பூ.ஆ. நரேஷ்
              முதன்மைக்கல்வி அலுவலர், விழுப்புரம் மாவட்டம்.
வரவேற்புரை :  திரு. வ.பன்னீர்ச்செல்வன்
         துணைத்தலைவர், தமிழ்ச்சங்கம்
வாழ்த்துரை :  திரு. ஏ.சாமிக்கண்ணு
கல்வியாளர், விழுப்புரம்.
தொடக்கவுரை : முனைவர் ஆர்.பழனிசாமி இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், விழுப்புரம்.
வாணாட்பணி பட்டம் பெறுபவர் : 
எழுத்தாளர் பரிக்கல் ந.சந்திரன்
சிறப்புரை : திரு. இ.மா.மாசானமுத்து இ.கா.ப.
காவல்துறைத் துணைத் தலைவர், விழுப்புரம் சிறகம்.
நன்றியுரை : திரு. சி.வீரராகவன்
` பொருளாளர், தமிழ்ச்சங்கம்
மாலை 03-00 மணி இயலரங்கம்
பாட்டரங்கம்
தலைவர் : பாவலர் வையவன்
வரவேற்புரை : திரு வீ. சோழன்
இணைச்செயலர், தமிழ்ச்சங்கம்.
வாழ்த்துரை :  திரு. மு.அனந்தகுமார்
          உதவி திட்ட அலுவலர்,  காஞ்சிபுரம்.
தலைப்பு : என்னதான் சொன்னார்கள்?  
     எதைத்தான் கேட்டோம்?
திருவள்ளுவர் : திரு. இராம. சிவஞானம்.
திருமூலர் : திரு.தி.க.நாகராஜன்
  
வள்ளலார் : திரு. தமிழநம்பி
காந்தியடிகள் : திரு. இரா.ச.சொக்கநாதன்
  
பெரியார் : திருவாட்டி அர, அநுசுயாதேவி
இசையரங்கம்
அரசு இசைப்பள்ளி மாணவர்கள், விழுப்புரம்.
உரையரங்கம்
வாழ்த்துரை : திரு. சாமி.செந்தில்
         ஏ.சா.அறக்கட்டளை, விழுப்புரம்
சிறப்புரை : திரு. கோ.விஜயகுமார்
           காவல் ஆய்வாளர், விழுப்புரம்.
பொருள் : சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம்
பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம்
  பொருள் : சித்திரச்சிலம்பு
நன்றியுரை :  பாவலர் சீ.விக்கிரமன்
         செயலர், தமிழ்ச்சங்கம்.
அருந்தமிழ்ச் சுவைபருக அனைவரும் வருக!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

வெள்ளி, 5 செப்டம்பர், 2008

தமிழ்மாமணி புலவர் இறைவிழியனார் நினைவேந்தல்


 நினைவேந்தல் நாள் :22-05-2008

(நேரிசை வெண்பா)

நிறைதமிழ் காப்பே நினைவேந்திச் சற்றும்
மிறையறியாத் தொண்டால் மிளிர்ந்தாய்! - இறைவிழிய!
உன்னை மறந்திடலும் ஒல்லுமோ?  என்றென்றும்
நின்னையே நாடுமென் நெஞ்சு.

------------------------------------------------------------------------------------------


வியாழன், 4 செப்டம்பர், 2008

அண்ணா- நூற்றாண்டு நினைவு!


இருபத்து நான்கு வரிகளில் -                                                                
அண்ணாவின் இனிய நினைவேந்தல்!       


அண்ணா!  அட,ஓ!  எண்ணம்  இனிக்கும்                             திண்ணியர்  திருப்பெயர்!  ஈரா  யிரமாண்
டிழிதளைப் பட்டஎம் இனத்தினைக் காக்க
எழுச்சியோ டிளைஞரை  ஈர்த்தவர்  பெயரிது!

ஆரையும்  விடவும்  ஆரிய  அரவை                                        -5            
நேருறத்  தாக்கி  நிலைகெடக்  கிடத்திய 
ஒருதனிப் பெரும்பணிப்  பெரியார்  தேர்ந்தசெந்                 தெருள்தெளி  மாணவர்  தீந்தமிழ்ப்  பெயரிது!

மூடுற்ற  தமிழினப்  பீடு  விளக்கிய                                  
ஈடிலா  அறிஞரின்  சூடெழும்  பெயரிது!                                 -10

தாய்நிலந் தன்னைத் தமிழ்நா  டென்றே                         வாய்மகிழ்ந்  தழைக்க  வைத்தவர்  பெயரிது!
ஆட்சியில்  கல்வியில்  காட்சியில் இசையில்
நீட்சி  தமிழின வீழ்ச்சியென் றுணர்த்தி                       
நலக்கலை  சிதைத்தோர்  கலக்குற  துலக்கமாய்ச்             -15  
சொலல்வல்  திறத்தரின்  சுருக்கப்  பெயரிது!

செத்ததை விலக்கிய  செந்தமிழ்த்  திருமணம்
ஒத்தொப் பிடவோர் சட்டஞ் சமைத்தவர்!

பிறப்பிற்  பிரிவினை  இறக்கங்  கூறிய
சிறப்பறு 'ஆரிய மாயை'  செறுத்தவர்!                                  -20

தமிழர் உணர்வுத் தழல்'தீப் பரவுக'!
இழிவொழித் தெம்மினம் ஏற்றம் பெறுகென                    
ஆர்த்தவர்;  உழைத்தவர்;  அதன்வழி
சீர்த்திசால் தமிழினம் காத்தவர் பெயரிதே!                         -24


***************************************************************





செவ்வாய், 2 செப்டம்பர், 2008

உயிர்

(ஆங்கிலமூலம்: ஆபிரகாம்.தொ.கோவூர் **** தமிழாக்கம்: தமிழநம்பி)                          
          பல்வேறு மதங்களின் துய்த(புனித) நூல்களை இயற்றிய எழுத்தாளர்கள், புடவி(universe)யின் உண்மையான இயல்பு பற்றிய அறிவைப் பெற்றிருக்க வில்லை. அவர்களனைவருமே இவ்வுலகம் தட்டையான தென்றும் புடவியின் நடுவாக உள்ளதென்றும் நினைத்தார்கள்.

          இவ்வுலகம் உருண்டையானதென்று கூறிய முதல் ஆளான, கியார்டானோ புரூனோ, உரோமன் கத்தோலிக்கத் திருச்சவையால் எரிக்கப்பட்டு இறந்தார்.

          உலகம் இடம்பெயரா நிலையினதென்றும் கதிரவக்கோளே இவ்வுலகைச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்றும் கூறும் கிறித்தவ மத நூலான பைபிள்கருத்துக்களை எதிர்த்த குற்றத்திற்காகக் கலீலியோ கத்தோலிக்கத் திருச்சவையால் சிறைக்கனுப்பப் பட்டார்.   

          புடவியைப் பற்றிய இன்றைய நம் அறிவனைத்தும் வானியலரின் அறிவியல் ஆராய்ச்சிகளால் பெற்றவையே யன்றி, மத நூல்களிலிருந்து பெற்றவை அல்ல.

          இவ்வுலகம் மற்றைய கதிரவக் கோள்களைப் போலவே நானூறு கோடி ஆண்டுகளுக்கு முன்னர், விண்வெளித் துகள்களின் தொகுப்புத் திரண்மையால் உருவானதென்று வானியலர் கருதுகின்றனர். பின்னர், இவ்வுலகின் வெதண(temperature) வளிப்புரிய(atmospheric) நிலைகள் பொருத்தமானவையாக அமைந்தபோது வேதியல் வினைப்பாடுகளின் விளைவால் உயிர்த் தோற்றம் ஏற்பட்டது.

          எரிமலை மற்றும் கதிரவ ஆற்றல்களின் தாக்கத்துடன், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலையில் சதுப்புவளி(methane), குருவளி (ammonia), நீர் ஆகியவற்றிலிருந்து உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் (livable organic matter) மூலக்கூறுகள் உருவாயின.

          (நோபல் பரிசு பெற்ற முனைவர் அர்கோபிந்து கொரானாவும் முனைவர் சிரில் பொன்னம்பெருமாவும், உலகின் மிகத்தொன்மையான வளிப்புரிய நிலைகளை, அவர்களின் ஆய்வறைகளில் செயற்கையாக ஏற்படுத்தி உயிர்வாழக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகளை உண்டாக்குவதில் வெற்றி கண்டுள்ளனர்)

          இம்மூலக்கூறுகள் காலப்போக்கில் மறுபகர்ப்புறவும், மெள்ள சேர்மவுயிரகவாக்கம் (slow oxidation) என்கின்ற மூச்சுயிர்ப்பு (respiration) மூலம் ஆற்றலை உண்டாக்கவுமான பண்புகளை வளர்த்துக் கொண்டன. மூச்சுயிர்க்கின்ற உயிர்மப்பொருள் உண்டாக்கிய இவ்வகை ஆற்றலையே நாம் உயிர் என்கின்றோம்.

          மூச்சுயிர்த்துக் கொண்டு, உயிர்ப்பாற்றலை (vital energy) உருவாக்குகின்ற பொழுது உயிர்மப்பொருள் உயிரியாக (உயிர்வாழ்கின்ற ஒன்றாக) ஆகி விடுகின்றது.

          மிகத் தொன்மைக் காலத்தில், நிலத்தில் உருவாகிய உயிர்மப் பொருளின் (organic matter) மூலக்கூறுகள் காலப்போக்கில் ஒற்றைக்கல உயிரிகளை (unicellular organisms) உருவாக்கின. இவையே, பல இலக்கக் கணக்கான ஆண்டுப் படிநிலை வளர்ச்சியின் விளைவாக, இன்றைய மரவடை மாவடை(flora and fauna)களைத் தந்துள்ளன.

          புகழ்பெற்ற வான்பூதியலர் (astrophysicist) ஆர்லொ சேப்ளி, உயிர்கள் இருக்கக்கூடிய பல இலக்கக்கணக்கான கோள்கள் விண்வெளியில் இருக்கக்கூடும் என்று கூறுகின்றார். இக்கோள்களுள் சிலவற்றில், மாந்தனை விடப் படிநிலைவளர்ச்சியிலும் அறிவுத்திறத்திலும் மிகுந்த வளர்ச்சி பெற்ற உயிரிகள் இருக்கலாமெனவும் சொல்லுகின்றார்.

          சில வான்பூதியலர், இவ்வுலகை அடைந்த எரிகற்கள் மற்றும் வால்விண்மீன்களின் வழியாக உயிர்க்கக்கூடிய உயிர்மப்பொருளின் மூலக்கூறுகள் இங்கு வந்தனவென்று கருதுகின்றனர்.

          நிலவில் உள்ள நிலைமைகள் உயிர்நிலைப்புக்கு ஏற்பேய்வு இல்லாமை காரணமாக, நிலவிற்குச் சென்ற விண்செலவர்(astronauts), உயிரின் விளைவாக்கத்திற்குத் தேவையான கீழ்க்காணும் மூன்று பொருள்களையும் அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அம்மூன்று பொருள்கள்: 1. உயிர்க்கக் கூடிய பொருள் [புரத்துப்பயினம்(proteinic protoplasm)] 2. உணவு, நீர் வடிவில் உணவூட்டம் 3. உயிர்வளி(oxygen).

          இம்மூன்றனுள் முதலாவதை அவர்கள் தங்கள் உடல்களிலும், மற்ற இரண்டையும் கொள்கலன்களிலும் எடுத்துச் சென்றனர். இவ்வுயிராக்கப் பொருள்களில் எதிலேனும் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தால் அவர்கள் இவ்வுலகிற்கு உயிருடன் திரும்பியிருக்க மாட்டார்கள்.

          உயிரிகளின் கலன்(cell)களில் காணப்படும் இனிகம்(glucose), கொழுப்புகள், புரத்தம் போலும் ஊட்டமளிக்கும் பொருள்களின் மெள்ள சேர்ம வுயிரகமாக்கம் (மூச்சுயிர்ப்பு) உண்டாக்கும் ஆற்றலின் வடிவமே உயிர்! அது, உயிரிகளின் கண்ணறை எனப்படும் கலன்களில் (cells) நடக்கும் வேதிய எதிர்வினைகளின் விளைவாகும்.

          இந்த, உயிர் உண்டாக்கும் மூச்சுயிர்ப்பு, மெழுகுத்திரி போல் எரிபொருளை எரிப்பது போன்றதிலிருந்து எவ்வகையிலும் வேறுபட்டது இல்லை. வேதிய எதிர்வினைகளின் வேகத்தில் மட்டுமே இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது.

          ஓர் உயிரியின் உடலில் நிகழும் சேர்ம வுயிரகமாக்கம், எரிபொருள் எரிந்துகொண் டிருக்கின்ற வேகத்தில் நடைபெறுமானால், அதனால் ஏற்படும் உயர்வெதணம்(high temperature) உயிர்க்கக்கூடிய பொருளை அழித்துவிடும்.

          மெழுகுப்பொருள் வேதியச்சிதைவு உறாதவரையில் அதைப் பலதடவைகள் எரியவிடவும் அவிக்கவும் செய்யலாம். அதைப்போன்றே, ஓர் உயிரின் உடலிலுள்ள புரத்துப்பயினீர்(protoplasm) சிதைவுறாமலிருந்தால் இறந்த உடலைச் செயற்கை வழிகளால் பலமுறை உயிர்பெறச் செய்ய முடியும்.

          1963இல் அமெரிக்கத் திரைப்பட நடிகர் பீட்டர் செல்லர்சு ஏழுமுறைகள் இறந்தார். ஒவ்வொரு முறையும் மின்துகளிய நெஞ்சவியக்கியைப் (electronic pacemaker) பயன்படுத்தி உயிர்த்தெழுப்பப் பட்டார். ஏழாவது மறுவுயிர்ப்பின் பிறகு, அவர் மேலும் பல படங்களில் நடித்தது மட்டுமின்றி மேலும் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டார்.

          அவிக்கப்பட்ட ஒரு மெழுகுத்திரியை மீண்டும் எரியவிடும் நிகழ்ச்சியில், அவிக்கப்பட்ட போது மெழுகுத்திரியின் சுடர் விலகிப் போனதாகவும் மீண்டும் அதை எரிய விட்டபோது, அச்சுடர் திரும்பி வந்ததாகவும் நாம் சொல்லுவதில்லை.

          அதைப்போலவே, பீட்டர் செல்லர்சு இறந்த ஒவ்வொரு முறையும் அவருடைய உடலைவிட்டு உயிர் பிரிந்தது என்பதும் பின்னர் உயிர்ப்பிப்பின் போது, அவ்வுடலுக்குத் திரும்பி வந்தது என்பதும் பொருளற்ற உரைகளே!

வியாழன், 7 ஆகஸ்ட், 2008

பெரும்பாலும்...!?


            பேருந்தில் செல்வதையே விரும்பாதவன் நான். தவிர்க்க இயலாத நிலையில் ஒருநாள், விழுப்புரத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் பேருந்தில் செல்ல வேண்டிய இக்கட்டு ஏற்பட்டது. அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டிய நேரத்தில் தொடர்வண்டி இல்லை. நிகழ்ச்சி நடக்கும் நேரத்திற்கு முன்னராகவும் செல்ல முடியாத நிலை. வேறு வழியின்றிப் பேருந்தில் ஏறினேன்.           பேருந்தின் முன்பகுதியிலுள்ள மூன்றுபேர் அமரும் இருக்கையில் ஓர் இடம் கிடைத்தது. ஓட்டுநருக்கு இடப்பக்கத்திலுள்ள நடத்துநருக்கான இருக்கையில் ஒருவர் வந்து உட்கார்ந்தார். பேருந்து ஓட்டுநர் உடனே அவரிடம், ‘நடத்துநர் உட்கார வரும்போது எழுந்துவிட வேண்டும்என்று எச்சரிக்கை செய்தார். அதைக் கேட்டுத் தலையாட்டிய அவர், ஓட்டுநரிடம் மிக இயல்பாகப் பல செய்திகளைப் பேசத் தொடங்கினார்.
            தொடக்கத்தில் அரைமனத்துடன் பேசத் தொடங்கிய ஓட்டுநர், பிறகுத் தயக்கத்தை விட்டு மிகப் பழகியவரிடம் பேசுவது போல் பேசத் தொடங்கினார். புதுவையிலிருந்து விழுப்புரம் போகும்
            பேருந்து அது. நிலையத்தை விட்டு வெளியே வந்த போது பேருந்தில் ஏறிய வெள்ளை வேட்டிக்காரர் ஒருவர், நடத்துநர் இருக்கையில் அமர்ந்து ஓட்டுநருடன் மிக ஈடுபாட்டோடு பேசிக் கொண்டிருந்தவரை நோக்கி, “ என்ன வேலு, இன்று வழக்கத்தைவிட முன்னராக வருகின்றீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஒரு நிகழ்ச்சிக்குப் போக வேண்டும்; அதற்காகத்தான் முன்னராகக் கிளம்பி வந்துவிட்டேன்என்றார் அந்த வேலு.
            ஓட்டுநருடன் அந்த வேலுவின் பேச்சு தொடர்ந்தது. திடுமென வண்டியைத் தடையிட்டு நிறுத்தினார் ஓட்டுநர்! பேருந்து அதிர்ந்து நின்றது. சாலையில் இரண்டு இளைஞர்கள் ஓட்டுநரை முறைத்துப் பார்த்தவாறே அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு சென்றனர்.             பேருந்திற்குள், வண்டி திடுமென நின்றபோது எதிர் இருக்கையின் பின்புறத்தில் இடித்துக் கொண்ட இரு குழந்தைகள் கத்தி அழத்தொடங்கினர். நடத்துநர் இருக்கையில் அமர்ந்திருந்த வேலு உடனே, “கொஞ்சங்கூட ஒதுங்க மாட்டேனென்கிறார்கள்; ஆடு மாடே தேவலை!..எனத் தொடங்கி சாலையில் நடப்பவர்கள் திமிரையும் எதையும் பொருட்படுத்தாப் போக்கையும் பலவாறு விளக்கிக் கொண்டு வந்தார். அந்த ஓட்டுநர் இசைவாக ஆமாம்போட்டுக் கொண்டும் தலையாட்டிக்கொண்டும் வந்தார்.            
            வண்டி விழுப்புரத்தை நெருங்கியது. நான் இறங்க வேண்டிய மாதாக்கோயில் நிறுத்தமும் வந்தது. நான் இறங்கினேன். அந்த வேலுவும் அங்கேயே இறங்கினார். எனக்கு முன்னால் விரைந்து நடந்த வேலு, சாலையைக் கடக்கப் பாய்ந்து சென்றார். விரைந்து வந்த, நெய்வேலியிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்து, அவரருகில் வளைந்து திரும்பி பேரொலியை எழுப்பிச் சட்டென நின்றது.      அப்பேருந்தின் ஓட்டுநர் வேலுவை ஓர் அருவருப்பான உயிரியைப் பார்ப்பதுபோலப் பார்த்து விட்டுப் பேருந்தைக் கிளப்பிச் சென்றார். பின்னால் வந்த என்னிடம் வேலு பொருமினார். பெரிய வண்டியில் உட்கார்ந்து ஓட்டினால் இவர்களுக்குக் கண்மண் தெருவதில்லை; வானூர்தி ஓட்டுவது போன்ற நினைப்பு; சாலையில் போவோரைப் பற்றிக் கொஞ்சம் கூட நினைத்துப் பார்ப்பது கிடையாது...எனத் தொடங்கியவர் நான் என் நண்பர் வீட்டுப் படியேறும் வரையும் பேருந்து ஓட்டுவாரின் அடாவடித் தனங்கள்பற்றிய விளக்கத்தை முடிக்கவில்லை!
            வீட்டுக்குத் திரும்பி வந்த நான் நடந்தவற்றை யெல்லாம் என் மனைவியிடம் விளக்கி, அந்த வேலுவைப்பற்றி என்ன நினைக்கின்றாய்? என்று கேட்டேன். மிக அமைதியாக அவள் சொன்னாள்: பெரும்பாலும் அப்படித்தான் இருக்கிறார்கள்! இதில் வியப்பதற்கு ஏதுமில்லை!அதைக் கேட்டதும் என்ன சொல்வதென்று புரியாமல் வாயடைத்து நின்றேன்!          

            *********************************************************

ஓர் அறிவிப்பு

தமிழ்ச் சான்றோர் மூவர் - நூற்றாண்டு விழா!
நாள் : தி.பி. கடகம்(ஆடி) (-09-08-2008)
காரி(சனி)க்கிழமை மாலை4-30 மணி
இடம் : சோலைமகால் திருமணமண்டபம்
திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்
தலைமை : எழில்.இளங்கோ
வரவேற்புரை : ஆ.இரவிகார்த்திகேயன்
முன்னிலை : நகர்மன்றத்தலைவர் இரா.கனகராசு
தொடக்கவுரை :மாண்புமிகு அமைச்சர் க. பொன்முடி
1. கப்பலோட்டியதமிழர் வ.உ.சிதம்பரனார்
சிறையில் செக்கிழுத்த நூற்றாண்டு
சிறப்புரை :
சென்னைமாவட்ட நூலக ஆணையத் துணைத்தலைவர்
ஆ.கோபண்ணா
படத்திறப்பு : பொறியாளர் கி.இராதாக்கிருட்டிணன்
2. பொதுவுடைமைப்போராளி பாவலர் தோழர்
ப.சீவானந்தம் நூற்றாண்டு
சிறப்புரை : நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்
திருப்பூர் கே.சுப்புராயன்
படத்திறப்பு : பேராசிரியர் து.திருநாவுக்கரசு
3. இராவணகாவியம் படைத்த புலவர் குழந்தை நூற்றாண்டு
சிறப்புரை : தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன்
படத்திறப்பு: மருத்துவர் சி.மா.பாலதண்டாயுதம்
நன்றியுரை : ஆய்தெழுத்து பா.சோதிநரசிம்மன்
நிகழ்ச்சி அமைப்பு: தமிழியக்கம் - விழுப்புரம்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2008

மற்றெவரே?


[கலித்துறை (மா கூவிளம் விளம் விளம் மா)] 

சோழ மன்னரின் கொடியினைப் பெயரெனச் சொல்லும் 
வேழ மாமத விலங்கினை ஒத்தநல் வீரர் 
வாழ வேண்டிய நாளினில் வலிந்துயிர் ஈவோர் 
ஈழ மாமறத் திண்ணிய ரலாதுமற் றெவரே?