செவ்வாய், 2 மே, 2017

எண்ணுப் பெயர்கள் – க.



எண்ணுப் பெயர்கள் க.

எண்ணுப் பெயர்கள தனி நிலையில் ஒரு வடிவும்,
அடையாக வரும்போது மற்றொரு வடிவும் பெறுகின்றன. ஒன்றன் மாற்று வடிவமாக மற்றது அமைகின்றது.

ஒன்று:
ஒன்று என்பது பெயர் வடிவம்.
(எடுத்துக்காட்டு): வீடு ஒன்று, ஆள் ஒன்றுக்கு

ஒரு, ஓர் என்பன அடை வடிவங்கள்.
உயிர் முன் ஓர் என்பதும்,
மெய் முன் ஒரு என்பதும் வழங்குகின்றன.
(எ-டு): ஓர் உயிர், ஒருநாள்.

ஒன்று + ஆயிரம் = ஓராயிரம்} ஒன்று முதல் நீண்டு ஈற்றுயிர்
ஒன்று + கலம் = ஓர்கலம்.   } கெட்டு னகரம் ரகரமாயிற்று.
ஒன்று = பத்து = ஒருபது     }
ஒரு + ஆயிரம் = ஒராயிரம்  (உகரங்கெட்டுப் புணர்தல்)

இரண்டு:
பெயரின் பின் இரண்டு என்னும் வடிவமும்,
அடையாக வரும்போது இரு, ஈர் என்னும் வடிவங்களிலும் வழங்குகின்றன.
(எ-டு): மாடு இரண்டு (பெயர் வடிவம்)
ஈர் உயிர் (உயிர் முன் ஈர், அடையாக வந்தது) 
இரு மாடு (மெய் முன் இரு, அடையாக வந்தது)

இரணை என்பதும் இரண்டைக் குறிக்கும் சொல்லாகும்.

இரண்டு + ஆயிரம் = ஈராயிரம்
இரண்டு + கலம் = ஈர் கலம்
இரண்டு - முதல் நீண்டு ஈற்றுயிர் மெய்யும் னகரமெய்யும் அகர உயிருங்கெட்டன.       
இரு + ஆயிரம் = இராயிரம்  (உகரங்கெட்டுப் புணர்தல்)
இரண்டு + பத்து = இருபது.

மூன்று:
மூன்று என்பது பெயர் வடிவம்.
மூ என்பது மாற்று வடிவம்.
மூன்று என்பது அடையாகவும் இக்காலத்தில் வழங்குகின்றது.

உயிரும் இடையினமும் வருவழி மூ என்பதும்,
ஏனைய மெய் வந்தால் குறில் வடிவும் வழங்கும்.
(எ-டு): மூவுலகம், மூவழி
     முக்கலம்

மூன்று + ஆயிரம் = மூவாயிரம்,
மூன்று + உலகு = மூவுலகு
- உயிர்வர முதல் குறுகாமல், ஈற்றுயிர் மெய்யும் னகர மெய்யும் கெட்டன.

மூன்று + கடல் = முக்கடல்,
மூன்று + நூறு = முந்நூறு
மூன்று +வட்டி = முவ்வட்டி.  
- மெய் வர முதல் குறுகி, ஈற்றுயிர்மெய் கெட்டு, னகரமெய் வந்த மெய்யாகத் திரிந்தது.
                                                (தொடரும்)

புதன், 26 ஏப்ரல், 2017

ஞாயிறு போற்றுவம் – நூல் அறிமுகமும் அலசலும்!



ஞாயிறு போற்றுவம் நூல் அறிமுகமும் அலசலும்!





         ஒரு பொறியாளர் ஏறத்தாழ முப்பது அகவைக்கு மேல் தமிழ் யாப்பிலக்கணம் கற்றுத் தடையின்றிப் பாட்டெழுதி நூலாக்கி வெளியிட்டாரென்றால், அவர், தாய்மொழியாகிய தமிழில் எந்த அளவிற்குப் பற்றும் ஈடுபாடும் ஆர்வமும் கொண்டவராக இருக்கவேண்டு மென்பதை பொதுவாக யாரும் உணரமுடியும். பொறியாளனாகப் பணி செய்து கொண்டே தமிழ் முதுகலை படித்து, ஓரளவு மரபில் பாட்டெழுதவும் கற்ற என்னைப் போன்றோர் அவருடைய ஈடுபாட்டை இன்னும் முழுமையாக உணரமுடிகிறது..

     பொறிஞர் மி.அமலன் என்ற ஆசிரியர் பெயரில் எழுதப்பட்ட ஞாயிறு போற்றுவம் என்னும் பொருட்டொடர் நிலைச் செய்யுள் நூல், இக்கால் தேர்ந்த பாவலராக விளங்கும் அகன் அவர்களின் முதல் முயற்சியாக வந்த நூலாகும்.

     பூரிப்பு என்ற தலைப்பில் அணிந்துரை எழுதியுள்ள மூதறிஞர் இரா.இளங்குமரனார் ஐயா, பாவாணர் வாழ்வியலையும் ஆய்வியலையும் ஓடிய ஓட்டத்தில் கண்டு மகிழுமாறு, திரட்டுப்பாகாக வழங்கியுள்ளார் அமலனார் என்று குறிப்பிட்டுள்ளார்.

     நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வென்பா, சிந்தியல் வெண்பா, வெண்கலிப்பா, கலி வெண்பா, பஃறொடை வெண்பா, இணைக்குறள் ஆசிரியப்பா, நேரிசை ஆசிரியப்பா, கட்டளைக் கலிப்பா, கட்டளைக் கலித்துறை யாப்பில், எளிமையாகவும் இனிமையாகவும் அமைந்த பாடல்கள் கருத்தை விளக்குகின்றன.

     மரபுப் பாடல்களை விளக்க வந்த எளிய எடுத்துக்காட்டுப் பாடல்களாகவும், பாவாணர் பற்றிக் கூறும் அரிய செய்யுள் நூலாகவும் அமைத்து ஒரேகல்லில் இரண்டு காய்களை அடித்திருக்கிறார்! வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று குறளைப் படித்தவரன்றோ?          
    
     பாடல்கள் அணிநயத்தோடும் யாப்பமைதியோடும் சிறப்பாக பாடப் பெற்றுள்ளன. தமிழ், தமிழர் உரிமை மீடக உழைத்தோர், உழைப்போர்க்கும், பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் கயவரை எதிர்ப்போர்க்கும் நூலைப் படையல் செய்துள்ளார்.

     தமிழ்வாழ்த்துப் பாடலில் பாவாணர் கூறும் தமிழின் பதினாறு சிறப்புகளை விளக்கியிருக்கின்றார். உணர்வெலா மூடுருவி ஊனெங்கு மூறி உணவாக என்ற னுயிர்க்காகிய தமிழ் என்ற கூற்று ஆசிரியரின் தமிழ்ப் பற்றைக் காட்டுகிறது.

     பாவாணரின் பிறப்பைக் கூறுங்கால், பூத்தரை ஞாயிற்றின் பொற்கதிர் மங்கிடப் பூத்ததே ஞாயிற்றுக் குஞ்சு என்று போற்றும் சிறப்பு சுவையாகும். பொல்லா இறப்புறுக சாவு, எல்லோர்க்கும் கற்ற்றிவே மாடு, அறவழி அருள்சுரந் தொழுகல், கார்முகில் மூடியோ செம்பரிதிக்கு?போன்ற தொடர்கள் சிறப்பானவை.

     ஆசிரியரின் தொடக்கப் படைப்பு இந் நூலாகையால், புவி, சதி, புத்தி போலும் இரண்டு மூன்று அயற்சொற்கள் இடம் பெற்று விட்டன. அமலன் என்பது மாசிலான், மாசிலி எனற பொருளுடைய அயற்சொல் என அறிந்து, இக்கால் ஆசிரியர் அப் பெயரைத் தவிர்த்து, அகன் என்ற பெயரில் எழுதிவருகிறார். ஒரு தொடக்கநிலைப் பாவலரின் மிகச் சிறப்பான மரபுப்பா நூல் ஞாயிறு போற்றுவோம் ஆகும். பாவாணரை அறிமுகப்படுத்தும் வகையில் பாடப் பெற்ற இந்நூல், மரபுப்பா எழுத விழைவாரும் மரபுப்பாவில் ஆர்வமுடையோரும் தவறாமல் படிக்க வேண்டிய நூலாகும்.
-----------------------------------------------------------------------
   

வெள்ளி, 7 ஏப்ரல், 2017

குறை தவிர்த்து நிறை போற்றக் கற்போம்!


குறை தவிர்த்து நிறை போற்றக் கற்போம்!
--------------------------------------------------------------------------------------------------------------


ஓர் ஊரில் ஓர் அரசனிருந்தான்; அவனுக்கு ஒரு கண்ணிலும் ஒரு காலிலும் குறைபாடு!

குறைபாடுடைய கண்ணால் பார்க்க முடியாது, சுருங்கி இருக்கும். குறைபாடுடைய காலால் நிற்க முடியாது, நொண்டிக்காலாக இருக்கும்!

அந்த அரசன் தன்னை அழகான ஓவியமாகத் தீட்டித் தருமாறு ஓவியர்களிடம் கேட்டுக்கொண்டான்!
நொண்டிக் காலையும் நொள்ளைக் கண்ணையும் எவ்வாறு அழகான ஓவியமாக வரைவது?’ என்று தயங்கிய ஓவியரெவரும் முன்வரவில்லை!

ஆனால், ஓர் ஓவியர், தான் அழகார்ந்த அரசனின் ஓவியத்தை வரைந்து தருவதாக முன்வந்தார்.


அவர் வரைந்து தந்த ஓவியத்தில், அரசன் எந்த மாற்றமுமின்றி ஒப்பற்ற பேரழகோடு இருந்ததைப் பார்த்து அனைவரும் வியந்தனர்!

அந்த ஓவியத்தில்
அரசன், கையில் நாணேற்றிய அம்புடன் ஒற்றைக் கண்ணால் குறிபார்த்த வண்ணம், ஒருகாலை மடக்கி நின்று, குறி பார்த்த பொருளின் மேல் அம்பெய்யும் நிலையிலிருந்தான்!

குறைபாடுடைய கண்ணையும் காலையும் ஓவியத்தில் காணவே இல்லை! அவற்றைத் தம் ஓவிய அறிவுத் திறத்தால் அறவே மறைத்து, ஒப்பற்ற ஓர் ஓவியமாக வரைந்திருந்தார்!


நாமும், பிறர் பிறர் குறைபாடுகளை, வலுவினமையை அறவே மறந்து அவர்தம் நற்பண்புகளைப் போற்றக் கற்போமே!


{பேரா.பசுபதி ஐயா (தேவமைந்தன்) அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த ஆங்கிலக் குறிப்பைத் தழுவி எழுதியது}
---------------------------------------------------------------------------------------------------------------









புதன், 29 மார்ச், 2017

ஆட்சியாளரின் நேர்மை, ஒழுங்கு, நாணயக் கேடு!



ஆட்சியாளரின் நேர்மை, ஒழுங்கு, நாணயக் கேடு!
--------------------------------------------------------------------------------------------------------------

இந்த ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதிக்குள் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய இயலாதவர்கள், ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் அடுத்த ஆண்டு மார்ச் 31-ஆம் தேதிக்குள் அவற்றை டெபாசிட் செய்து கொள்ளலாம். அப்போது அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய காரணந்நைக் குறிப்பிட்டு, அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்
     -(தலைமைஅமைச்சர் மோடி அறிவிப்பு குறித்து) தினமணி       9-11-2016 காலை 04-32 பதிப்பில் வந்த செய்தி.
 
இந்தியர்கள் திசம்பர் 16-க்குப் பிறகு ரூ500, 1000 தாள்களை மாற்ற முடியாது. அயல்நாடுவாழ் இந்தியர் மட்டுமே 31 மார்ச்சு 2017 வரை மாற்றலாம்!
    - இந்திய ஏம வைப்பகம் (Reserve Bank pf India) செய்தி. 

பழைய ரூ500, 1000 தாள்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம்.
    - இந்திய நடுவண் அரசுச் செய்தி.


மக்கள் விரும்பாத, மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் நடுவண் அரசு செயல்படுத்தாது!  - நெடுவாசல் போராளிகளுக்கு பொன்.இராதா.    உறுதி



ஒப்பந்தம் கையெழுத்தான திட்டத்தை நிறுத்த முடியாது. ஊர் மக்களுக்கு விளக்கம்  கூறிவிட்டு திட்டம் நிறைவேற்றப்படும்.
                         - இந்திய அரசு அமைச்சர்.
-------------------------------------------------------------------------