வெள்ளி, 24 மார்ச், 2017

நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!



நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!
---------------------------------------

தனித்தமிழ் அறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார், தூயதமிழ் இலக்கியத் திங்களிதழாகிய தென்மொழி இதழின் நிறுவுநர்; ஆசிரியர் ஆவார்.


பாவலரேறுவின் தென்மொழி தமிழ் காக்கும் கேடயமாகவும், தமிழ்ப் பகைவர் அஞ்சும் படைக்கலனாகவும் திகழ்ந்தது.
அவ்விதழின் ஆசிரியவுரை (தலையங்கம்) பெரும்பாலும் முதல் பக்கத்தில் இடம் பெறும். ஆசிரியவுரைக்கும் முன்னால் மேல் முகப்புப் பகுதியில் கீழ்க்காணும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறும்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை; மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை உலகில் எவரும் எதிர்நின்றே!

தென்மொழி சுவடி: 12; ஓலை: 1., தி.பி.2005, துலை (ஐப்பசி) (அக்.-நவ.-1974) இதழ் முதல் ஒவ்வொரு மாத இதழிலும் மேற்குறித்த பாடலின் கீழ், ஆசிரியவுரைக்கும் முன்னர் கீழ்க்காணும் செய்தி ஒரு நீள் சதுரக் கட்டத்திற்குள் தவறாது இடம் பெற்றது. அவருக்குப் பின்னரும் இப்பொழுதும் இடம் பெற்று வருகிறது.

     நம் மூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி!

இந்தியா ஒன்றாக இருக்கும்வரை இந்து மதம் இருக்கும். இந்து மதம் இருக்கும் வரை தமிழர்களும் இந்துவாகவே இருக்க வேண்டும். தமிழர்கள் இந்துவாக இருக்கும் வரை மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகவே முடியாது. மதப் பூசல்களும் குலக் கொடுமைகளும் அவர்களைவிட்டு விலகாதவரை, ஆரியப்பார்ப்பனரின் வஞ்சகத்திலிருந்தும் மேலாளுமையினின்றும் தமிழன் மீளவே முடியாது.. அத்தகைய பார்ப்பனீயப் பிடிப்புகளிலிருந்து தமிழன் மீளாதவரை, தமிழ்மொழி தூய்மையுறாது; தமிழினம் தலை தூக்காது; தமிழ்நாடு தன்னிறைவு அடைய முடியாது. எனவே, இந்து மதத்தினின்றும், மதப் பூசல்களினின்றும், ஆரியப் பார்ப்பனீயத்தினின்றும் விடுபட வேண்டுமானால், நாம் இந்திய அரசியல் பிடிப்பினின்றும் விடுபட்டேயாகல் வேண்டும். ஆகவே, தமிழக விடுதலைதான் நம் முழுமூச்சு, நோக்கம், கொள்கை, முயற்சி என்று தமிழர் ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.
************************************************************************       .

புதன், 22 மார்ச், 2017

நல்லவர்போல் நயன்மையர்போல் முகமூடியணிந்தோர்!




நல்லவர்போல் நயன்மையர்போல் முகமூடியணிந்தோர்!
-----------------------------------------------------------------------------------------------------------

ஒழியா ஒடுக்குமுறைக் கொடுமையிலிருந்து விடுபட முயன்றோரை ஒழித்துக்கட்ட உலகிலுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்று சேர்ந்தன!

மாந்த உணர்வே அற்ற மாந்த உருவின னொருவனின் வெறிபிடித்த தலைமையின் கீழ் இயங்கிய வெறிப்படை ஏறத்தாழ ஒன்றரை இலக்கம் தமிழர்களைக் கொன்று குவித்தது!


 

                                 உயிர்மட்டும் எஞ்சிய தமிழர் எண்ணற்றோர் உறுப்பிழந்தும், உறவிழந்தும், வாழ்விழந்தும் வதங்கி உழல்கின்றனர்!

இக் கொடுங் கொடிய கொடுமைகள் நிகழ்ந்து பத்தாண்டுகள் முடிய இருக்கின்றன!

நடுவு நிலையாளர் நல்லுளத்தர் சிலர் நடந்த கொடுமைகளை உசாவி (விசாரித்து) உலகுக் கறிவித்து இனி எங்கும் அத்தகு கொடுமைகள் நிகழாது தடுக்கவும் கொடுமைக் குள்ளானோர் வாழ்க்கைக்கு உறுதி தரவும் பெருமுயற்சி எடுத்தனர்!

தன்னல நோக்கே தம் நோக்காகக் கொண்ட மாந்த நேயமற்ற வளர்ந்த வளராத வல்லாளுமை அரசைக் கொண்ட நாடுகள், கொடியவர்க்கே வெட்கமின்றி நாணமின்றி உதவும் போக்கினராயுள்ளனர்!

கொடுமைகள் நடந்தேறிப் பத்தாண்டுகள் முடியும் நிலையிலும் கொடுமை புரிந்தோர், காரணமானோர், துணை போனோர் பற்றியும், கொடுமைக் காளானோர், காணாமல் ஆக்கப்பட்டோர், சிறைக்கொடுமையில் இன்னும்கூட சொல்லொணாத் துன்புறுவோர் பற்றியும் சிங்கள இனவெறி அரசுகள் எந்த முடிவையும் எடுக்க முன்வரவில்லை!

இன்னும் இரண்டாண்டு காலம் வேண்டுமாம்! ஏய்க்க! அதற்கு ஏதுங்கெட்ட இந்தியா உள்ளிட்ட நாணமற்ற வெட்கமற்ற நாடுகள் ஆமாம் போடுமாம்!

உலகத்து ஒன்றிய நாடுகள் அவை, உரிமைக்குழு உசாவல் முடிவு வேறு எப்படி இருக்கும்? மாந்தநேயமற்ற, தன்னலமே நோக்காயுள்ள நாடுகளே பெரும்பான்மை உறுப்பாண்மை பெற்றிருக்கையில்!

தூ! அறங்கொல்லத் துணைபோகும் இந்த அமைப்புகளின் கீழ்மை, என்னே! என்னே!

நல்லவர்போல், நயன்மையர்போல் முகமூடியணிந்து நல்லறம் தீய்க்கும் தீயர் திருந்தும் நாள் வரவே வராதா?
----------------------------------------------------------------------