புதன், 15 மார்ச், 2017

மாலனின் மனக்கோணல் கக்கும் நச்சுக் கருத்துக்கள்!



மாலனின் மனக்கோணல் கக்கும் நச்சுக் கருத்துக்கள்!
-------------------------------------------------------------- 
13-3-2017 தினமணி நாளிதழ் நடுப்பக்கத்தில் உத்திரப்பிரதேசம் சொல்லும் செய்தி கேட்கிறதா? என்ற தலைப்பில் மாலன் என்ற பெயரில் இடம்பெற்றுள்ள கட்டுரை தமிழ், தமிழினத்துக் கெதிராக மறைமுகமாக நச்சுக்கருத்துக்களை உமிழ்ந்துள்ளது எனில் சற்றும் மிகையில்லை!



உத்திரப்பிரதேசத்தில் பா.ச.க. 403 இடங்களில் 312இல் வெற்றி பெற்றுவிட்டதாம்!

இதை வைத்து இவர் கூறுகிறார்...

அமெரிக்க வெள்ளை இனத்தவர், சிங்கப்பூரில் சீனர், இலங்கையில் சிங்களர், மலேசியாவில் மலேயாக்காரர் பெரும்பான்மையினர் நிறத்தாலோ மொழியாலோ பண்பாட்டாலோ தனியாக பொது அடையாளம் சூட்டப்பட்டு அதை விரும்பி ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்.



அதாவது, தனித்தனி மொழி, இனம், வரலாறு, பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கம் போன்றவற்றைக் கைவிட்டுவிட்டுப் பெரும்பான்மையினரின் மொழி, இனம், பண்பாடு, நாகரிகம், பழக்கவழக்கத்தை விரும்பி ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களாம்! 

தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? உலகோடு ஒட்ட ஒழுகுமா? ஒதுங்கித் தனித்துப்போகுமா? என்று கவலைப்பட்டுக் கொள்கிறார்!



இந்து மதவெறிக் கூட்டத்திற்கு, அக்கூட்டத்தின் பலவகைப்பட்ட வெளிப்படையான, முக்காடுபோட்ட, ஒப்பனை செய்யப்பட்ட முகங்களுக்கும் உள்ளங்களுக்கும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றாலே பொறுத்துக்கொள்ள முடியாத ஒரு வசதியின்மையின் எரிச்சல் பாடாய்ப் படுத்துபகிறது!



இந்து மதவெறியை எதிர்க்கிறார்கள்!

சமற்கிருதத் திணிப்பை எதிர்க்கிறார்கள்!

இந்ந்தித் திணிப்பை எதிர்க்கிறார்கள்!



தங்கள் பண்பாட்டு அடையாளங்களை விட்டுக்கொடுக்காமல் போராடுகிறார்கள்!



கீதையைப் போற்றமாடேன் எனகிறார்கள்! திருக்குறளை தலைமேல் வைத்துக்கொண்டாடுகிறார்கள்!



தமிழ்நாட்டின் வளத்தைச் சுரண்டவும், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான பகுதிகளைப் பாலையாக்கிப் பாழாக்கிச் சுடுகாடாக்கத் தியாகம் செய்ய மறுக்கிறார்கள்!  



மருத்துவமனை அமைக்கத் தமிழ்நாட்டில் இடமில்லை என்பதற்கும் அணுஉலைகளை அடுக்கடுக்காய் அமைப்பதையும் கூட எதிர்க்கிறார்கள்!



வரலாற்றில் பலகாலமாக உரிமையோடிருந்த பல்வேறு ஆற்றுநீர் உரிமைகளை விடமாட்டேன் எனகிறார்கள்!



இன்னும் இதைப்போன்றே பெரும்பான்மையானவற்றில் வடவரின் விருப்பங்களுக்கு எதிராக இருக்கின்றார்கள்!  



எனவே, இவர்களை அடையாளம் தெரியாமல் அழித்தொழித்துவிட வேண்டும்!

மொழி, இனம், வரலாறு, பண்பாடு, நாகரிகம் என்ற கூறுகளையெல்லாம் அழித்துவிட்டு வடநாட்டாராக்கி அடியோடு தமிழர்கள் என்ற அடையாளமே இல்லாதாக்கிவிடவேண்டும் - என்று மிகமிக முனைப்பில் இருக்கிறார்கள் என்ற நிலையின் வெளிப்பாடே இந்தத் தினமணி கட்டுரையின் நச்சுக் கருத்தாகும்!



உ.பி.யில் 2014-இல் 42.6% ஒப்போலை பெற்ற கட்சி, 2017 ச.ம தேர்தலில் 39.6% ஒப்போலை பெற்றுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இந்த நிலையிலேயே தலைகால் தெரியாது ஆடுகிறார்ர்கள்!



இவர்கள் உலக நிலையைப்பற்றிக் கூறும் கருத்துக்களில் உண்மையின் விழுக்காட்டு அளவும் இரங்கத்தக்கதே!



இக்கால், விழிப்புற்றிருக்கும் தமிழ் இளையோர் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்!

இந்தத் தமிழினம் பெரு நெருக்கடியில் உள்ள நிலையைப் புரிந்து அறிவாற்றலோடு செயலாற்றவேண்டும்!

---------------------------------------------------------------------



 

வெள்ளி, 3 மார்ச், 2017

'நெடுவாசல் போராட்டம்' - பாட்டரங்கப் பாட்டு!



நீரியக்கரியம் (Hydrocarbon) எடுக்கும் திட்டத்திற்காக வேளாண் நிலங்கள் அழிக்கப்படுவதை எதிர்த்து, நெடுவாசல் உழவர்களின் போராட்டத்திற்குத் துணைதரும் வகையில், விழுப்புரம் தமிழ் இலக்கிய அமைப்புகள் திருவள்ளுவர் சிலையருகில் 3-3-2017 வெள்ளி மாலை 5-00 மணியளவில் நடத்திய பாட்டரங்கில் தநத பாட்டு:
--------------------------------------------------------------------------

அன்பார்ந்த பெரியோரே, அறிவார்ந்த இளையோரே அன்பின் ஊற்றாய்
நின்றுதிகழ் தாய்மாரே, நெஞ்சார்ந்த நல்வணக்கம்! நெருங்கி வாரீர்!
இன்றிங்கு எடுத்துரைக்கும் இந்தியத்தை ஆள்வோர்செய் இழிவைக் கேட்பீர்!
என்றென்றும் தமிழர்க்கே எதிராக இயங்குகின்ற இயல்பைச் சொல்வோம்!

இந்திமொழி திணித்திடுவார்! இறந்தசமற் கிருத்த்தை எழுப்பு தற்கே
முந்திவந்து பலகோடி முக்காலும் செலவிடுவார், முழுதும் தோற்பார்!
நந்தமிழர் நலங்கெடுக்க நாளெல்லாம் எண்ணிடுவார்! நமைய ழிக்க
வந்திடுமிங் கணுவுலைகள் வாழ்வழிக்கும் ஆய்வுகளும்! வழக்கம் ஈதே!

ஈரவளி மீத்தேனை எடுப்பதைநாம் எதிர்த்திட்டோம் என்ப தாலே
ஊரறியா வேறுபெயர் உரைத்துவளம் உறிஞ்சிடவே ஒளிந்தே வந்தார்!
பேரதுவும் வேறெனினும் பெருங்கேடாய் நெடுவாசல் பிழைப்ப ழித்தும்
சீரழித்தும் வேளாண்மை செய்யவொணா நிலைக்காக்கிச் செல்ல வந்தார்!

பாரிலுள பிறநாட்டார் பாலைநிலம் கடலடியில் பார்க்கும் வேலை!
ஆரப்பல் லாயிரமாம் அடியாழம் வேதிகளை அனுப்பி வைப்பார்!
வேரான வளத்தையெலாம் விரைந்துறிஞ்சி நிலங்கெடுத்து விட்டே போவார்!         
நீரெல்லாம் அற்றுப்போம்! நிலஞ்சரியும்! சூழலெலாம் நிலைகெட் டுப்போம்!

இந்தத்தீச் செயலெதிர்க்கும் எம்மவரைத் தியாகஞ்செய் என்னும் சொல்லும்
எந்தவகை யும்பொருந்தா தெமக்குரைக்கும் தேசப்பற் றென்னும் சொல்லும்
இந்தியவாட் சியர்நம்மை ஏமாற்றி முதலாளிக் கேற்றம் செய்யத்
தந்திரமாய்க் கூறுகின்ற தகுதிகெட்ட சொல்லென்றே தகைமை தேர்வோம்!

எங்கள்கச் சத்தீவை யாமறியா தெடுத்தளிப்பீர் இலங்கை யர்க்கே!
எங்கள்பண் பாடுகலைக் கெதிராகச் செயற்படுவீர்1 இப்போ திங்கே
எங்கள்மண் வளங்கெடுக்க ஏதோபேர் மாற்றிகுழாய் இறக்கு கின்றீர்!
எங்கள்வாழ் வழிப்பதற்கோ இந்தியத்தில் இணைத்தீர்கள்! ஏய்க்கின் றீர்கள்!

எம்மினத்தைக் கொன்றழிக்க எதிரிக்கே துணைநின்றீர்! இன்றோ எங்கள்
செம்மைசேர் வளநிலத்தை செய்தொழிலை அழித்தொழிக்கச் சிந்தை கொண்டீர்!
அம்மவோ! வல்லாண்மை அரசினரே! அழிப்புவினை அடங்கா தென்றால்
உம்முறவை அறுத்தெறிவோம்! உரிமைதமிழ் நாடமைக்க உறுதி கொள்வோம்!

இருநிலைகள் கொண்டியங்கும் இந்தியமே இந்நிலையே இனிதொ டர்ந்தால்    
வெருவந்த செய்தொழுகும் வெங்கோலர் ஆட்சியினை வீழ்த்தி யிங்கே
தெருவெல்லாம் ஊரெல்லாம் தெளிவாக அறிவிப்போம், தீந்த மிழ்நா(டு)
ஒருதனிநா டாகுமென ஓங்குமுழக் கெழுப்பிடுவோம்! உழைப்போம் என்றே!

வாய்ப்புக்கு நன்றி!                        
  ----------------------------------------------------------------------------------------------------------