திங்கள், 22 ஆகஸ்ட், 2016

தமிழ்நாட்டுப் பகுதிகள் - உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!

தமிழ்நாட்டுப் பகுதிகள் -
உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!

     தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும் தென்னெல்லை தென்குமரியென்றும் வழங்கும்.
     (வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று, பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி, வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத் தொடராகும்)

     வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டைநாடு என்றும்,

     தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதி நடுநாடு என்றும்,

     வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென் வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழநாடு என்றும்,

     இதன் தென்பகுதி பாண்டிநாடு என்றும் வழங்கும்.

     இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும், சேலம் மாவட்டமும் சேர்ந்த நிலப்பகுதி கொங்குநாடு ஆகும்.

     மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு.

     சைவ இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இந்நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.

     நடுநாடுமட்டில், திருமுனைப்பாடி நாடென்று சில காலங்களில் வழங்கிற்று. வேறு சில காலங்களில், வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி சோழநாட்டோடும் சேர்ந்து வழங்கியதுண்டு.

(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, பக்கம் 7,8. இனியமுது பதிப்பகம், சென்னை-17)
------------------------------------------------------------------
 
வியாழன், 11 ஆகஸ்ட், 2016

‘கல்வி’யின் தொடக்கம் – பாவாணர் விளக்கம்!

கல்வியின் தொடக்கம் பாவாணர் விளக்கம்!

      மக்கள் நாகரிகமில்லாத மாண்முது பழைமையிற் குறுந் தொகையராய்க் குறிஞ்சி நிலத்து வாழ்ந்தபோது காய்கனி கிழங்கு முதலிய இயற்கை விளைபொருள்களையே உண்டு வந்தனர். உண்பதும் உறங்குவதுமே அவர்க் கிருபெருந்தொழில். மக்கட் டொகை மிகமிக இயற்கை விளைவு போதாதாயிற்று.

     விதைகள் நிலைத்திணை வகையினின்றும் கீழே விழுந்து நிலத்தில் முளைப்பதை முன்னமே உற்று நோக்கி உன்னித்திருந்தனர். அஃதன்றி வள்ளிக்கிழங்கைப் பன்றிகள் உழுதவிடத்து விழுந்த விதைகள் விரைவில் முளைத்து, அடரந்தோங்கி, விழுமிய பலன்றந்ததையுங் கண்டிருந்தனர். ஆதலால் அவரே அத்தகை யிடங்களிற் செயற்கையிற் பயிர்பச்சைகளை விளைக்கத் தொடங்கினர்.

  பன்றியுழுதவிடத்துப் பயிர் விளைப்பதை...
     அருவி யார்க்குங் கழையி ன்னந்தலைக்
     கறிவள ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
     கொடுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு
     கடுங்கட் கேழ லுழுத பூழி
     நன்னாள் வருபத நோக்கிக் குறவ
     ருழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை  -(புறம்.168) என்பதாற் காண்க.

     ஆகவே, முதன்முதல் மக்கள் கற்ற கல்வி உழவுத்தொழில் என்பதே புலனாகின்றது. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு அதனாற் பெறப்படுதலின், கல்வி என்னும் சொல்லும் உழவுத்தொழிலையே முதன்முதன் குறித்தது.....

     உழவாவது நிலத்தை அகழ்தலும் நிலைபெயர்த்தலும் பூழியாக்கலும் ஏருமெருதுங்கொண்டுழவறியாத பழங்காலத்துக் கல்லுங் கழியுங் கருவியாக நிலத்தை அகழ்தலே உழவாயிற்று.  அக்காலத்தும் குறிஞ்சிநிலத்தும் மழைக்குக் குறையின்மையின் நீர்பாய்ச்சவும் வேண்டாதாயிற்று.

     கல்லல், தோண்டல், உழுதல் என்பன ஒருவினை குறித்தலின் ஒருபொருட் கிளவி. ஆகவே கல்வி என்பது முதன்முதல் உழவு குறித்த கிளவியே யென்பது பெற்றாம்.
 (பண்பாட்டுக் கட்டுரைகள் பாவாணர், தமிழ்மண், பக். 96,97)
---------------------------------------------------------------------

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

‘காதற் காமம்’ – மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார்!

காதற் காமம் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார்!

தமிழ்த்திணை எனத்தகும் அகத்திணைக்கு வெறும் உள்ளக்காதலும் பொருளன்று., வெறும் மெய்க் காம்மும் பொருளன்று. உள்ளம் இயைந்த உடலுறவும், உடல் இயைந்த உள்ள உறவும், சுருங்கக்கூறின் உயிர்மெய்ப் புணர்ச்சியே அதன் பாடுபொருளாம்.

     ஆண்டாள் காதல் அகத்திணையாகாது, மெய்யுறல் இன்மையின். மாருத வேகன் சுதமதியைக் கூடியதும் அகத்திணையாகாது, உள்ளிசைவு இன்மையின். மெய்யாக நோக்கின் காதல் என்பதனுள் உடற்கலப்பும் அடங்கும்.

உடற்கலவியின்றிக் காதற்றன்மை செவ்வுறாது. பாலுறவுதான் காதல் என்னும் தகுதிக்கு உரியது. காதல் என்ற பெயர் மேலிட்டுப் பிறவாறு சொல்லுவன வெல்லாம்  அரைகுறையான உருவகமாவன என்பர் ஆசுவால் சார்ச்சு.(The psychology of sex. P.105)

காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி            -(பரிபாடல்.9.)  என்று இருசொற்களையும் இயைத்தார் குன்றம் பூதனார்.

பொதுவான மொழி வழக்கில் காதல் என்பது உள்ளப பற்றையும், காமம் உடற்பற்றையும் குறிக்கும் என முன்னர்க் கண்டோம். இரு சொல்லையும் ஒருங்கு காட்டும் ஒரு தமிழ்ச்சொல் உண்டா? உண்டு. அதுவே அகம் என்னும் சொல். எனினும் முன்னிலைப் படுத்திக் கூறும் நான்மறையாளர்க்கு விளங்கவேண்டி, குன்றம் பூதனார் காதற்காமம் (காதலங்காமம் - பரி.6, அன்புறு காமம் - நற்.389) என்ற ஒரு புதுத்தொடரை ஆக்கினார். ஆக்கி, விருப்பு ஓரொத்து மெய்யுறு புணர்ச்சி எனப் பொருளும் நிரல்பட விரித்துக் காட்டினார்.

இக் காதற்காமந்தான் அகத்திணை. அகத்திணை தலைமக்கள் உள்ளங்கூடிய உடற்கூட்டாளிகள். உடல்மட்டும் கலந்ததா, உள்ளம் கலந்ததா? என்ற வினாவிற்கு இவர்பால் விடையில்லை. ஆதலின் அகப்பாட்டின்கண் காதல் என்ற சொல் வருமிடத்துக் காமப் பொருளும் உண்டெனக் கொள்க. காமச்சொல் வந்த இடத்துக் காதற் பொருளும் உண்டெனக்கொள்க.

(தமிழ்க்காதல் வ.சுப.மாணிக்கம், இயல், தஞ்சாவூர். பக்.402,403.) 
----------------------------------------------------------------------