வியாழன், 10 மார்ச், 2016

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!

பாவலரேறு பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் இன்று!
(10-3-1933)


இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்!                                                                     

தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி, ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்!                                                                                    

மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்!           

செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்!                                                      

ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்!                                                                  

சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்!                                                                             

ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்!                                                                             

தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்!                                                                                                         

சிறந்த இலக்கியப் புலமையாளர்!  அரிய மொழிபெயர்ப்பாளர்!

நல்ல ஓவியர்!    திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்!                                                      

தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி!                                                                                                                    

மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்!                                                                                                 

தமிழ்மொழி,  தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்!                                                                                          

சலுகை பெறவும் சாதிகூடாதென வாழ்ந்த சாதிமறுப்பாளர்!

சாதிமறுத்து மணம்புரிந்து கொண்டவர்!  தம் மக்களுக்கும் அவ்வாறே மணம் செய்வித்தவர்!

- இவ்வாறு பல்வேறு சிற்ப்புக்களுக்கு உரியவரே துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.

அவர் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அணுக்கத் தொண்டனாக இருந்த காலத்தை எண்ணிப் பெருமிதம் கொள்கின்றேன்!

இன்றைக்கும் தேவைப்படும் பாவலரேறு ஐயாவின் பா முழக்கம்:

ஆண்டுநூ றானாலும் அன்னைத் தமிழ்நாடு
வேண்டும் விடுதலை; எண்ணம் விலக்கோம் யாம்;
பூண்டோம் உறுதி! புறப்பட்டோம்! என்றேநீ
மூண்ட இடியாய் முழங்காய் தமிழ்மகனே!

தமிழ்மண் விடுதலை பெறும்வரை அம்முழக்கம் ஓயாது!


--------------------------------------------------------------  

வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

தமிழர்

தமிழர்!                               

உலகமுதன் மொழியென்றே ஓர்ந்தாய்ந்தோர் தமிழினுயர் 
வுரைக்க்க் கண்டோம்!
உலகமுதல் நாகரிகம் ஒள்ளாய்வால் தமிழரதென் 
றுறுதி செய்யும்!
உலகுயிர்பால் அன்பருளும் உயர்மானம் கொடைவீரம் 
ஓம்பும் பண்பும்
உலகினிலே இயல்பாகக் கொண்டிருந்த இனமிதென 
உரைக்கும் நூல்கள்!

பெருமையெலாம் மிகஅடுக்கிப் பேச்சாலே கவர்ந்தவர்கள் 
பெற்ற ஆட்சி 
திருடுதற்கும் கொள்ளைக்கும் திகழ்வாய்ப்பாய்க் கொண்டிங்கே 
தீமை எல்லாம்
பெருகிடவே செய்தனரே! பிறங்கடைகள் தாய்மொழியைப் 
பேணாப் போக்கில்
கருகிடவே விட்டனரே கறையற்ற சிறப்பெல்லாம் 
கரைய விட்டே!

இன்றுள்ள தமிழர்நிலை எண்ணிடுவீர்! இயல்பாக 
இவர்கள் பேச்சில்
ஒன்றலுறப் பிறமொழிகள்! ஒழிந்ததுதாய் மொழிவழியே 
ஓதும் வாயப்பும்!
சென்றுதொழுங் கோவில்கள், செப்பிவழக் காடுமன்றம் 
சேர எல்லாத் 
துன்றாட்சித் துறைகளிலும் தொகுப்பாகத் தமிழிலையே, 
தொலைந்த தந்தோ!

பண்பாடும் நல்லொழுங்கும் பார்போற்றும் நல்லறங்கள் 
பலவும் சொன்ன 
மண்ணிற்கே உரியவுயர் மாண்பெல்லாம் படிப்படியாய் 
மறையச் செய்தே 
கண்கெடுக்கும் இருதிரையின் காட்சியெலாம் தமிழர்தம் 
கருத்தில் மாசு
மண்டிடவே புகுத்துநிலை மட்டின்றி நடக்கிறதே 
மயக்கத் தாழ்த்தி!

ஆற்றுரிமை நெகிழ்ந்ததுவே! அணுத்தீமை கொடுவுலைகள் 
அமைத்த தோடே
ஊற்றுநீர் நிலவளத்தை உறிஞ்சிடலும் நடக்கிறதே 
ஊக்கத் தோடே!
மாற்றமிலா ஒட்டார மனத்திலிந்தி சமற்கிருதம் 
வளர்த்தற் கென்றே 
தேற்றமுறச் செயற்பாடு! தீந்தமிழை அழிப்பதற்கும் 
திட்டம் உண்டே!

எந்தநிலை யானாலும் எல்லாரும் சமமென்றே 
இங்கே வாழ
செந்நெறியில் அமைவிலையால் சீறியெழுந் துரிமைபெறச் 
சிறந்த ஈகச்
செந்தமிழ இளையோரின் செழும்படையொன் றமைத்திடுக 
செப்ப மாக!
அந்தநாள் விரைந்திடுக! அந்தமிழர் அரசமைக! 
ஆக்கம் சேர்க!
                                                                                                              (திருவெண்ணெய் நல்லூர்ப் புலவர் க.கதிர்வேலு தம் தமிழ்ச்சோலை’ என்னும் இதழுக்குப் பாடல் கேட்டபோது, அவர் தந்த தலைப்பில் எழுதித்தந்த பாடல் இது)                                                                                                                              
----------------------------------------------------------------------------------------------------

புதன், 2 டிசம்பர், 2015

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!

அனைவர்க்குமான ஓர் அன்பு வேண்டுகோள்!   

     தமழ்நாட்டில் குறிப்பாகத் தலைநகர் சென்னையில் இக்கால் இயல்பிகந்த நிலையில் மக்கள் பெருந்துன்பத்திற் காளாகியுள்ளனர். இந்நிலைக்குக் காரணமானவர்கள் யார் யார்? எவரெவருக்கு எவ்வளவு பங்கு? என்ற ஆய்வுகளும் கருத்தாடல்களும் இப்பொழுது, இந்த நேரத்தில் எண்ணவோ பேசவோ கூடாதவை மட்டுமல்ல, இந்த நேர மீட்சிப் பணிக்குக் கேடு விளைவிப்பவை; நேரத்தை வீண்டிப்பவை.
    
     இக்கால் உடனடித் தேவை மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவதும் அவர்களுக்கு உணவும் உறைவிடமும் தந்து ஆறுதல் அளிப்பதுமே ஆகும். இந்த நோக்கத்திலேயே அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். இவையே இக்கால் இன்றியமையாது தேவைப்படுவனவாம்..
    
     இவற்றையே கருத்தில் கொண்டு எவ்வகை வேற்றுமையும் கருதாது ஒவ்வொருவரும் இயங்க வேண்டுமெனப் பணிவுடன் வேண்டுகிறேன். எவ்வெவ் வகையில் உதவ முடியுமோ அவ்வவ் வகையில் அவரவரும் இடர்ப்பாட்டி லுள்ளோருக்கு உதவுதல் இந்த நேரத் தேவையாக உள்ளது.
    
     மீட்புப் பணியிலுள்ளோரைப் பாராட்டுவோம்; மக்களுக்கு உதவுவோர்க்கு நன்றி சொல்வோம். பிறவனைத்தும் பிறகு பேசலாம்!
     செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
     செய்யாமை யானும் கெடும்.

-----------------------------------------------------------------------