ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

‘தாழி’யின் அழகிய அரியதொரு நாள்காட்டி.


 தாழியின் அழகிய அரியதொரு நாள்காட்டி.

     'அன்னை அருள்' வெளியீடான தாழி ஆய்வு நடுவத் திட்டத்தின் நாள்காட்டி கிடைக்கப் பெற்றேன். அதைப்பற்றி எழுத விரும்பியிருந்தும் பல காரணங்களால் காலந்தாழ்ந்தது. அந் நாட்காட்டியைப் பற்றிக் காலந்தாழ்ந்தாலும் எழுதவேண்டும் என்ற அழுத்தமான எண்ணம் இருந்தது.
     நாள்காட்டி 17 அகலமும் 24.5 அகலமுமாகப் பெரிய அளவில் எடுப்பாகத் தோன்றுகிறது. நாள்காட்டியின் முதல் தாளின் முதற் பக்கத்தில் ஆரியர் நாவலந்தீவு வருகையையும் பரவலையும் காட்டும் நாட்டுப்படம் இடம்பெற்றுள்ளது. அத்துடன், மொழியறிஞர் கிலபர்ட்டு சிலேட்டரின் தமிழ், தமிழர் தொடர்பான கருத்துக்கள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளன.
     கீழே, சிந்துசமவெளி பற்றியும் கடவுள் நம்பிக்கை பற்றியுமான செய்திகள் தரப்பட்டுள்ளன. மேலும், தமிழக ஊர்ப்பெயர்கள் சமற்கிருதம் ஆக்கப்பட்டதைக் குறிப்பிடுவதோடு, தமிழர் தம் அடையாளங்களைக் காக்க வேண்டுமென்ற வலியுறுத்தம் இடம்பெறுகின்றது. தெய்வம் குறித்த சித்தர் சிவ்வாக்கியர், பாரதியார், பாவேந்தர், திருமூலர் பாடல் வரிகள் தரப்பட்டுள்ளன.
     முதல் தாளின் இரண்டாம் பக்கத்தில், தென்னக வடவகக் கோயில்களின் அமைப்புகள் வரைபடத்துடனும் கலைச் சொற்களுடனும் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. தஞ்சைப் பெருவுடையார் கோயில் அமைப்பும் கலைச்சொற்களுடன் காட்டப்பட்டுள்ளது. நாட்காட்டியின் பெயரே கோயில்களின் தாய்நிலம் என்று குறிக்கப்பட்டுள்ளது. செய்திகள் தூய தமிழில் எழுதப்பட்டுள்ளன.
     அடுத்து, நாள்காட்டியின் 12 மாதங்களிலும் 12 அழகிய தமிழகக் கோயில்களின் படங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, தஞ்சைப் பெருவுடையார் கோயில், மதுரைக் கூடலழகர் கோயில், காஞ்சி ஓராடையுடையார் கோயில், திருச்சி அரங்கநம்பி கோயில், தில்லை நடவரசர் கோயில், திருவைகுண்டம் திருமாற்பெருமாள் கோயில், மாமல்லை கடற்கரைக் கோயில், உத்திரமேரூர் திருவழகுடை வரந்தருபெருமாள் கோயில், நெல்லை காந்திமதி-நெல்லையப்பர் கோயில், திருவில்லிப்புத்தூர் ஆண்டாள்-அழகர் கோயில், மதுரை அங்கயற்கண்ணி-அழகுடையார் கோயில், காஞ்சி வரந்தருங் கோப்பெருமாள் கோயில் ஆகியனவாகும்.
     ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் சுருக்கக் குறிப்பும், சிறப்பும் தரப்பட்டுள்ளன. கோயிற் படங்கள் மிக அழகாக அருமையாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. நாள்காட்டியில், தமிழ் பிரெஞ்சு ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாத கிழமைப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
     அன்னை அருள் மறுதோன்றி அச்சகமும் தாழி ஆய்வு நடுவமும் மிகவும் சிறந்த நாள்காட்டியைத் தந்துள்ளனர். அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஞாயிறு, 9 நவம்பர், 2014

                                                            இறப்பு அறிவிப்பு


     விழுப்புரம் அ.தெ. இரகோத்தமன் மலர்க்கொடி இணையரின் இளைய மகள், புதுச்சேரி நீடராசப்பர் தெரு வேதானந்தன் என்னும் கண்ணன் மனைவி அன்பு பாசம் அருளே உருவாகிய திருவாட்டி சுடர் பிரான்சு ‘LE VERT DE MAISONS‘-இல் 3-11-2014 அன்று காலமானார் என்பதை ஆழந்த வருத்தக் கலக்கத்துடன் தெரிவிக்கின்றோம்.

கையறு நிலையில் கலங்கும் உள்ளங்கள்:
     விழுப்புரம் அ.தெ.இரகோத்தமன் மலர்க்கொடி,                                        நெய்வேலி எழில் குமரன் கா.குமரன்,                                              விழுப்புரம் இர.கதிரவன் வனிதா                                                    மற்றுமுள்ள உறவினர்கள்