வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

இரண்டகரின் முழு உருவம்!

இரண்டகரின் முழு உருவம்!
 
           
ஈழத்தார்க் கிழைத்திட்ட இரண்டகத்தை மக்களிடம்
எடுத்துச் சொன்னால்
ஆழத்தான் பதறுகிறார் அடக்குமுறைச் சட்டத்தை
அழைக்கின் றாரே!
ஊழலுறை இரண்டகத்தை உண்மையினை மிகவிளக்கி
உரைப்போர் தம்மைத்
தோழமெனும் சிறையிட்டே தொடுக்கின்றார் பொய்வழக்கு
தொல்லை தோய்த்தே!

பாட்டன்பூட் டன்சேயோன் பழந்தமிழோட் டன்மார்கள்
பரவர் என்றே
வேட்டாழி தனிலோடி விருப்பமுடன் மீன்பிடித்தார்
விளக்கி ஓங்கும்
பாட்டாலே முழக்கமிடும் பழந்தமிழர் இலக்கியங்கள்
படித்தீர்! இன்றே
வேட்டையெனக் கொல்கின்றார் வெறியர்நம் மீனவரை
வீணில் பார்ப்பீர்!

எம்மீழ உறவுகட்கே இழைத்தயிரண் டகஞ்சொன்னால்
எழுந்து வந்தே
வெம்பலுடன் உறுமுகிறார் வீணிலுறை ஓரமைச்சர்
விரைவில் இங்கே
தும்முதற்கும் தடைசெய்தோர் துடைமாறு புதுச்சட்டம்
தொடுப்போம் என்றே!
மொய்ம்புறவே முழங்கிடுவோம்! முழுஉருவம் வெளித்தெரியும்
முனைந்து செய்வீர்!


-----------------------------------------------------

வெள்ளி, 23 ஜூலை, 2010

செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!

* செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!

செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!
முந்து தமிழும் முதனா கரிகமும்
இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும்
துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும்
நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல்
கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும்
மிகையுங் கொளாது குறையுங் கொடாது
தகைமிகு வணிகம் தரைகட லோடி
நுண்கலை வானியல் நுட்ப அறிவியல்
எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும்             
செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே!

அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே
இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி!
திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!
இன்மொழி நாட்டொடு  இன்னினந் தொழும்புறத் 
தன்னலத் தமிழரே முன்னின் றனரே!

இளந்தமி ழுளங்காள்! எண்ணுக இதனை!
துளக்கறு மறிவில் துளங்கலில் விளங்கி
நம்மொழி நம்மினம் நம்நா டுற்ற
நம்பறு மடிமை விம்முறு விலங்கு                        
ஒடித்து நொறுக்கிப் பொடித்திடு நோக்கில்
அடிப்படைத் திட்டம் ஆய்ந்து துணிந்து
என்றுங் கண்டிலா எழுச்சியோ டெழுக!

முன்னைப் பிழையும் உன்னித் தவிர்த்துத்
தகவில் இரண்டகம் தக்காங் கொறுத்து
இகலறுத் தினத்தார் இணைவுற எழுந்து
ஈட்டுக மீட்சி! இத்தரை
காட்டுக நந்தழிழ் கணிக்கருந் திறமே!                       

திங்கள், 28 ஜூன், 2010

குமுறலில் எழுந்த பா மூன்று!

*
1. பஃறொடை வெண்பா

எத்தனென நன்னடிப்பால் இன்னினத்தைக் கொன்றொழிக்க
மொத்தமுமாய் உன்துணையை முன்னளித்தாய் ஒத்தாரே
இல்லா இழிஞா! இரண்டகனே!   – புல்லுருவே!
பொல்லாப் பழிமாற்ற பொய்ம்முகத்தில் செம்மொழிக்கே
மாநாடென் றேய்ப்பதுமேன்? மாசு.


2. நேரிசை வெண்பா

அரிய திறத்தோடே ஆற்றல் முனைப்பில்


எரியும் உணர்வோ டெழுந்தார்! – உரியமண்



மீட்க முயன்றாரை மீளா அடக்குமுறைக்



கோட்டிய தன்னலத்தை ஓர்.



3. நேரிசை வெண்பா

செம்மொழிமா நாடாம்! சிறப்பாம்! நடத்தினவர்

நம்பக் கழுத்தறுக்கும் நன்னடிகர்! – விம்மலுறும்

ஈழத் தமிழன் இழிவழிவுக் காளாகக்

கீழ ரிவர்துணையர், கேள்.
*
*