வியாழன், 30 ஜூலை, 2009

நூல் எழுதுவோர், ‘பாயிரம்’ அறிவோம்!

      நூல் எழுதுவோர், பாயிரம் அறிவோம்!


பாயிரம் என்பது முகவுரை.  எந்த நூல் எழுதுவதாயினும் அந்த நூலுக்குப் பாயிரம் எழுத வேண்டுமென்பது மரபு. சிறந்த நூல்களுக்கு முகவுரை இன்றியமையாதது. அதனால் நூலை ஆராய்ந்து, அதன் முன்னதாக, அழகிய நுட்ப உரையாக, அணிந்துரையை, எந்த ஒரு நூற்கும் பெரிதும் இயைபுபட நந்தமிழ்ப் பெரியோர் வைத்தனர்.  
ஆயிரம் முகத்தான் அகன்றதாயினும் பாயிரம் இல்லது பனுவ லன்றே என்கிறது நன்னூல். ஆயிரம் முகத்தைப் பெற்றது போன்று பல்வேறு துறைச் செய்திகளை விரிவாகக் கூறினாலும், பாயிரம் இல்லையேல் அது சிறந்த நூலாக மதிக்கப் படாது என்பதே இதன் பொருளாகும்.

பாயிரத்தின் தேவை
பாயிரம், நூலிற்குப் புறத்தே உரைக்கப் படுவதால், புறவுரையாகும். கணவனுக்கு நல்ல மனைவி போல இன்றியமையாச் சிறப்பினதாகவும் அழகிய பெரிய நகரத்திற்கு வடிவமைந்த வாயில் மாடம் போல அழகியல் சிறப்பினதாகவும் அமைவது பாயிரம் என்பர்.
மேலும், பாயிரம் யானைக்குப் பாகன் போலவும், வானத்திற்கு விளக்கமாகிய நிலவும் கதிரவனும் போலவும் இன்றியமையாச் சிறப்புடையது என்றும் கூறுவர். பாயிரமின்றி நூல் படிப்பார், குன்று முட்டிய குருவியைப் போலவும் மலைப் பகுதிகளில் மாட்டிக் கொண்ட மான் போலவும் இடர்ப் படுவராம்.

பாயிரம்
பாய் என்ற சொல் பரந்து கிடப்பது என்று பொருளுடையது என்றும்  இதனை அடியாகக் கொண்டு பிறந்த பாயிரம் என்ற சொல், பரந்து விரிந்து செல்லும் நூலின் தொடக்கப் பகுதி என்று பொருள்படும் என்றும் அறிஞர்  கூறுவர். 
பாயிரத்திற்கு மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தரும் விளக்கத்தைக் காண்போம்: போர் மறவர் போர்க்களத்தில் முதலில் பகைவரை விளித்துக் கூறும் நெடுமொழி என்னும் மறவியல் முகவுரையைப் பாயிரம் குறித்தது. பின்பு பொருள் விரிவாக்கமாக நூலின் முகவுரையைக் குறித்தது என்கிறார். பயிர்தல் என்றால் ஊர்கின்ற விலங்குகளும் பறவைகளும் தமக்குள் ஒன்றை ஒன்று அழைத்தல்.
பயிர் > பயிரம் > பாயிரம் = அழைப்பு : போருக்கு அழைக்கும் முகவுரை, நூலின் முகவுரை.

பாயிரம், பொதுப் பாயிரம், சிறப்புப் பாயிரம் என இரண்டு வகையினதாகும்.

பொதுப் பாயிரம்
எல்லா நூல்களின் முன்பும் பொதுவாக உரைக்கப் படுவது பொதுப் பாயிரம். நூலுள் சொல்லும் பொருளல்லாத, நூலின் இயல்பு, நூலாசிரியனின் இயல்பு, கூறுகின்ற முறை, படிப்போர் இயல்பு, படிக்கும் முறை ஆகிய ஐந்தையும் கூறுவது பொதுப்பாயிரமாகும்.
( கற்பிக்கப்படும் நூலாயின், நூல், கற்பிக்கும் ஆசிரியன், கற்பிக்கும் முறை, கற்கும் மாணவன், கற்கும் முறை ஆகிய ஐந்தினையும் பொதுப் பாயிரம் விளக்கும்)

சிறப்புப் பாயிரம்
பொதுப்பாயிரத்தின் ஐந்து கூறுகளும் எல்லா நூல்களுக்கும் பொதுவாய் கூறப்படுவதாகும். அவையெல்லாம் நூலுள் சொல்லும் பொருளல்லாத புறப்பொருளைக் கூறுவன.
அப் பொதுப் பாயிரம் போலன்றி நூலிற் சொல்லப் படுகின்ற பொருள் முதலிய உணர்த்துவது சிறப்புப் பாயிரமாகும். இப் பாயிரம், நூலுக்கு இன்றியமையாததாகும். அணியிழை மகளிர்க்கு, அணிகளில் சிறந்த ஆடை போல நூலுக்குச் சிறப்பானது சிறப்புப் பாயிரம் என்பர்.

சிறப்புப்பாயிரத்தில் கூறுவன
     நூலாசிரியர் பெயர், நூல் வந்த வழி, தமிழகம் முதலாக நூல் வழங்கப்படும் நிலப்பரப்பு, நூலின் பெயர், நூலின் வகை அல்லது கட்டமைப்பு, நூலிற் கூறப்பட்டுள்ள பொருள், நூல் யாருக்காக எழுதப்படுகிறது என்ற குறிப்பு, நூலால் பெறக்கூடிய பயன் ஆகிய எட்டுச் செய்திகளையும் சிறப்புப் பாயிரம் செப்பமாகக் கூறும்.
      இவற்றுடன் நூல் எப்பொழுது, எவ்விடத்தில், எக்காரணம் பற்றி எழுதப்பட்டது என்பனவும் கூறப்படும்.
      மேற்கண்ட பதினொரு குறிப்பையும் ஒருங்கேயேனும் ஒன்றிரண்டு குறைவாகவேனும் கூறி, அந்நூலைச் சிறப்பிப்பதும் மதிப்புரையும் சிறப்புப் பாயிரமே. 

சிறப்புப்பாயிரத்தை எழுதத் தகுந்தோர்
     நூலாசிரியரின் ஆசிரியர், நூலாசிரியரோடு உடன் பயின்றவர், நூலாசிரியரின் மாணவர், நூலின் உரை ஆசிரியர் சிறப்புப் பாயிரம் எழுதுதற்கு உரியோர் ஆவர்.
      இதுகாறும் தோன்றாத சிறந்த நூல்களைப் படைத்து, பல துறைகளிலும் நிறைவான புலமையைப் பெற்றிருந்தாலும் ஒருவர் தம்மைத்தாமே புகழ்ந்து தம் நூலில் தாமே சிறப்புப் பாயிரம் எழுதிக் கொள்ளுதல் பெருமைக்குரிய தகுதி ஆகாது.
      ஆயினும் கடவுள் வணக்கம், அவையடக்கம்,  நூற் பொருள், நூல் வந்த வழி, நூற் பெயர் முதலியவற்றை நூலாசிரியர் கூறுவதே பொருத்தம் ஆகையானும் அவை எவ்வகையினும் தற்புகழ்ச்சிக்கு இடந் தராமையானும் அவற்றை நூலாசிரியர் கூறுவது தக்கது என்று கொள்ளப்படும். அவ்வாறு கூறுவது தற் சிறப்புப் பாயிரம் என்று பெயர் பெறும்.

பாயிரத்தின் பெயர்கள்
     மேற்கூறிய பொதுப்பாயிரம் சிறப்புப்பாயிரம் இருவகைக்கும் பொதுவாகவும் சிறப்பாகவும்பல பெயர்கள் உள்ளன. அவை, முகவுரை, பதிகம், அணிந்துரை, நூன்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை, பாயிரம் என்னும் எட்டாம். இவற்றின் பொருள் விளக்கம் வருமாறு:

  1. முகவுரை : இது நூலுக்கு முகத்தைப் போன்று இருப்பது. பெரும்பாலும்       நூல், ஆசிரியன், பதிப்பு முதலியவற்றின் வரலாற்றைக் கூறுவது.

  1. பதிகம் : இது நூலாசிரியனின் பெயர், நூல் வந்த வழி முதலிய பத்து அல்லது பதினொரு குறிப்புகளைத் தருவது.

  1. அணிந்துரை : நூலுக்கு அணியாக (அழகாக) அமைவது.

  1. நூன்முகம் : இது நூல் முகத்து உரைக்கப் படுவது.

  1. புறவுரை : நூலின் கருத்து அல்லாமல் நூலோடு தொடர்புடைய செய்திகளை வரலாற்றை எடுத்துரைப்பது.

  1. தந்துரை : இது நூலிற் சொல்லப்படாத பொருளைத் தந்துரைப்பது. பேரறிஞர்களின் முன்னுரை பெரும்பாலும் தந்துரையாக இருக்கும்.

  1. புனைந்துரை : இது நூலின் சிறந்த கூறுகளை எடுத்துரைத்துப் போற்றுவது. ( புனைதல் = சிறப்பித்தல், புகழ்தல்)

  1. பாயிரம் : இது முதன்முதல் பொருகளத்துப் போர் முகவுரையாகப் பகைவரை விளித்துத் தம் வலிமைச் சிறப்பைக் கூறும் நெடுமொழியைக் குறித்தது. பின்பு நூல் முகவுரைக்கும் வழங்கத் தலைப்பட்டது.

இக் கால நூல் வழக்கில், புறவுரை, பாயிரம் என்னும் இரண்டு பெயர்களும் பொதுப் பாயிரத்திற்கும் சிறப்புப் பாயிரத்திற்கும் பொதுவாக உள்ளன. மற்றவை சிறப்புப் பாயிரத்திற்கே சிறப்பாக உள்ளன்.

      உரைமுகம், தோற்றுவாய், முன்னுரை, பதிப்புரை, மதிப்புரை, சாத்துப்பா (சார்த்துப்பா) முதலிய பெயர்கள் இக்காலத்து எழுந்த புது வழக்கு. இவற்றுள் முன்னிரண்டும் தற்சிறப்புப் பாயிரத்தையும் பின் மூன்றும் சிறப்புப் பாயிரத்தையும், இடையொன்றும் அவ்விரண்டையும் சாரும். சாத்துப்பா என்பது செய்யுள். ஏனைய உரைநடை. என்று மொழிநூற் கதிரவன் பாவாணர் விளக்கிக் கூறுகிறார்.  
....................................................................................................................................................
உதவிய நூல்களும் இயற்றியோரும்:
1, தொல்காப்பியம் -  எழுத்ததிகாரம் இளம்பூரணர் உரை.
2. நன்னூல் எழத்ததிகாரம்  தமிழண்ணல் உரை.
3. தேவநேயம் -10 தொகுப்பாசிரியர் : புலவர் இரா.இளங்குமரன்.
உதவியோர்க்கு உளமார்ந்த நன்றி.



                                     

வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்!

வள்ளல்கள் எழுவரும் அவர்தம் சிறப்பும்!

பள்ளிப் படிப்பின்போது, கடையெழு வள்ளல்கள் என்று படித்த நினைவு பலருக்கும் இருக்கும். அந்த ஏழு வள்ளல்கள் யார் யார்? என்று கேட்டால், பெரும்பாலோர் பாரி என்று உடனே தொடங்கி, அங்கேயே நிற்பதைக் காணலாம். சிலர் பாரி, காரி, ஓரி வரை வந்து நின்று போவதைக் காணலாம். தமிழ்மொழி சார்ந்த அலுவலில் இருக்கும் பலரே உடனே விடை சொல்ல முடியாத நிலையில் இருக்கும் போது நாம் இதைப் பெரிய குறையாக எண்ண வேண்டியது இல்லைதான்!
கழக(சங்க) இலக்கியமான பத்துப்பாட்டில் மூன்றாம் பாடல் சிறு பாணாற்றுப் படை ஆகும். இந்தச் சிறுபாணாற்றுப் படையைப் பாடிய நல்லூர் நத்தத்தனார், ஏழு வள்ளல்கள் பற்றியும் அவர்களின் கொடைமடச் செயல்கள் பற்றியும் கூறியுள்ளார்.
கொடைமடச் செயல்கள் என்றால், பகுத்தறியாது மடமையோடு கொடையளித்த செயல்கள் என்று கூறலாம். இத்தகைய செயல்களே அவ் வள்ளல்களுக்குச் சிறப்பைச் சேர்த்தன என்பது உண்மையாகும்.
இந்த வள்ளல்களைப் பற்றிய செய்திகளை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுப் பாடல்களும் கூறுகின்றன.
இனி, அந்த ஏழு வள்ளல்களின் பெயரையும் அவர்களின் சிறப்பையும் காண்போம்:
பேகன், பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி ஆகியோரே அவர்களாவர்.


பேகன் பொதினி(பழனி) மலைக்குத் தலைவர். மழைவளம் மிக்க அம்மலையின் காட்டில் மயில்கள் திரிந்து கொண்டிருக்கும். ஒருநாள் அப்படித் திரிந்து கொண்டிருந்த ஒரு மயில் அகவியதைக் கேட்டு, அது குளிரால் நடுங்கி அகவியது என்று நினைத்தார். அவரகத்தே அருள் உணர்ச்சி பெருகவே, தமது போர்வையை அம் மயிலுக்குக் கொடுத்தார் - அம்மயிலுக்குப் போர்த்தினார்.
 மயில் போர்வையைப் பயன்படுத்திக் கொள்ளுமா? கொள்ளாதா? எனச் சிறிதும் எண்ணிப் பாராமல் இத்தகைய செயல் செய்தார். இதனையே கொடைமடம் எனச் சான்றோர் போற்றிக் கூறினர்.
      புறநானூற்றுப் பாடல் 142இல் புலவர் பரணர், கழற்கால் பேகன், வரையாது (அளவில்லாது) வழங்குவதில் மழைபோலக் கொடைமடம் படுவதன்றி, வேந்தரது படை மயங்கும் போரில் மடம்படான் என்ற கருத்தமைத்துப் பாடியுள்ளார்.


பாரி பறம்பு மலையை ஆண்ட குறுநில மன்னர். வேள்பாரி என்றும் வழங்கப்படுகிறார். இவர், தாம் சென்ற வழியில், தம் தேரைத் தடுத்த முல்லைக் கொடி, தேரை விரும்பியதாகக் கருதி, அதற்குத் தனது பெரிய தேரையே அளித்தார்.
      பாரியின் வள்ளன்மையைக் கபிலர் பல புறநானூற்றுப் பாடல்களில் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், உரை விளக்கம் தேவைப் படாத ஒரு பாடல் இது:
            பாரி பாரி என்று பல ஏத்தி
            ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
            பாரி ஒருவனும் அல்லன்
            மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.   - (புறம். 107)


காரி, திருக்கோயிலூரைத் தலைநகராகக் கொண்டு மலாட்டை ஆட்சி புரிந்தவர். திருக்கோயிலூர்க்கு மேற்கே தென்பெண்ணையாற்றின் தென்கரை அடங்கிய பகுதியே மலாடு ஆகும். இவர் மலையமான் திருமுடிக் காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் அழைக்கப்படும் வள்ளலாவார்.
இரவலரிடம் எப்போதும் அருள் நிறைந்த சொற்களைப் பேசும் இயல்பினர். உலகத்தார் கேட்டு வியக்கும் வகையில் இவர் கொடுத்த கொடை இதுதான்:  ஒலிக்கும் மணியைக் கழுத்திலும் ஆடுகின்ற அழகிய தலையாட்டம் என்ற அணியைத் தலையிலும் அணிந்த குதிரையை இரவலர்க்கு அளித்தார்!
காரியைப் போற்றிப் பாராட்டிப் புலவர்களான கபிலர், பெருஞ்சாத்தனார், நப்பசலையார் ஆகியோர் பாடிய பாடல்கள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.


ஆய், பொதியமலைச் சாரலில் உள்ள ஆய்குடியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர். இவரை வேள் ஆய் என்றும் ஆய் ஆண்டிரன் என்றும் வழங்குவர். இவர் நாகம் நல்கிய ஒளிமிக்க நீல மணியினையும் கலிங்கத்தையும் ஆலமரத்தின் கீழிருந்த செல்வராகிய சிவபெருமானுக்கு அளித்தவராம்!
      வேள்ஆயைப் போற்றி ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்களும், துறையூர் ஓடைகிழார் பாடிய பாடலும் புறநானூற்றில் உள்ளன.


அதிகன், அதியமான் நெடுமான் அஞ்சி, அதியமான், அதிகைமான், அஞ்சி எனப் பல பெயர்களில் வழங்கப் படுகிறார். இவர் தகடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட குறுநில மன்னர்.
      இவர் ஒருகால் தன் நாட்டு மலையொன்றின் உச்சிப் பிளவின் சரிவில் நின்ற அருநெல்லி மரத்தின் அருங்கனி ஒன்றைப் பெற்றார். அக் கனி, தன்னை உண்டாரை நரை, திரை, மூப்பு இன்றி நீண்ட நாள் வாழவைக்கும் வலியுடையது. அக் கனியைத் தாமே உண்ணாமல் வைத்திருந்து தம்மைக் காண வந்த நல்லிசைப் புலமை சான்ற ஒளவையார்க்கு ஈந்து அழியா அறப்புகழ் பெற்றார்.
      அதியமான் நெடுமான் அஞ்சியைப் போற்றிப் புகழ்ந்து ஒளவையார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் காணப்படுகின்றன.


நள்ளி மலைவளஞ் செறிந்த கண்டீர நாட்டினர். இவரை நளிமலை நாடன் என்றும், கண்டீரக் கோப்பெரு நள்ளி என்றும், பெரு நள்ளி என்றும் வழங்கினர்.
நள்ளி, தம் பால் வந்தவர்க்கு நல்குரவால் பின்னர் நலியாத
வாறும், வேறோருவர் பால் சென்று இரவாதவாறும் நிரம்ப நல்கும் இயல்பினர். 
      நள்ளியைப் போற்றிப் பாராட்டி வன்பரணர் பாடிய பாடல்களைப் புறநானூற்றில் காணலாம்.


ஓரி சிறிய மலைகள உடைய நல்ல நாட்டிற்குத் தலைவராவார். இவர் விற்போரில் வல்லாராதலின், இவ் வள்ளலை வல்வில் ஓரி என்றும் அழைப்பர்.
      ஓரியிடம் பெருவளத்தைக் கொடையாகப் பெற்றதால், புலவர் வன்பரணரைத் தலைவராகக் கொண்ட பாணர் சுற்றம் தமக்குரிய பாடுதலும் ஆடுதலும் ஆகிய தொழில்களைச் செய்யாது சோம்பியிருந்து, அவற்றை மறந்து போயினராம்!
      ஓரியின் சிறப்பைக் கூறும் வன்பரணரின் பாடல்களைப் புறநானூற்றில் காண்கிறோம்.
      வள்ளல்களின் சிறப்பை,  புறநானூற்றுப் பாடல்களில் மட்டுமின்றி நற்றிணை, அகநானூறு போன்ற பிற கழக இலக்கியங்களிலும் கூட காணலாம்.


------------------------------------------------------------------------

   
     

      
        
      

செவ்வாய், 28 ஜூலை, 2009

தெய்வங்கள் தந்த விடை!




          ‘இரட்டைப் புலவர்கள்என்று அழைக்கப் பட்டவர்கள் இரண்டு அறிவார்ந்த பாவலர்களாவர். அவர்களில் ஒருவர் கால் முடமானவர்; இன்னொருவர் கண் பார்வை இல்லாதவர். கண்பார்வை இல்லாதவர் முடமானவரைத் தோளில் சுமந்து செல்வாராம். முடமானவர், பார்வையற்றவரின் தோளில் அமர்ந்தபடியே வழிசொல்லிச் செல்வாராம்!

          இந்த இரு பாவலர்களும் சரியான நகைச்சுவைக் குறும்பர்கள்! இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்தே பாடலைப் பாடுவார்கள் இயற்றுவார்கள்! இவர்கள் பாடல் வெணபாவாக இருக்கும். இவர்களின் வெண்பா மிக எளிமையாக அமைந்திருக்கும். பாடல் எளிதில் விளங்கும். அகராதியின் துணை தேடவேண்டிய தேவையே இருக்காது.

          (வெண்பா நான்கடிப்பாடல் என்பது பலரும் அறிந்ததே. முதல் மூன்றடிகள் நான்கு சீர்களும் நான்காம்அடி மூன்று சீர்களும் உடையதாக இருக்கும். நேரிசை வெண்பா என்றால் இரண்டாம் அடியின் மூன்றாம் சீருக்கும் நான்காம் சீருக்கும் இடையில் சிறு கோடு இருக்கும்; அவ்வாறு வரும் அந்த நான்காம் சீரைத் தனிச்சீர் என்பார்கள்.)

          இரட்டைப் புலவர்கள், ஏதாவது ஒரு செய்தியைப் பற்றியோ, ஆளைப் பற்றியோ, காட்சியைப் பற்றியோ, நிகழ்ச்சியைப் பற்றியோ அவர்களுக்கே உரிய குறும்புத் தனத்துடன் பாடுவார்கள். இருவருள் ஒருவர் முதலில், வெண்பாவின் (முதல் ஏழுசீர் அல்லது எட்டுச்சீர் கொண்ட) முதல் இரண்டடிகளைப் பாடுவார். பெரும்பாலும் அந்த இரண்டடிகளும் கேள்வி கேட்பது போலவோ, ஐயமாக வினவுவது போலவோ இருக்கும்.

          தொடர்ந்து இரண்டாமவர், அடுத்த (எட்டு அல்லது ஏழுசீர் கொண்ட) எஞ்சிய இரண்டடிகளைப் பாடுவார். இரண்டாவதாகப் பாடுகின்றவர், முதலில் பாடியவரின் கேள்விக்கு விடையளிக்கும் வகையிலோ அல்லது அவர் எழுப்பிய ஐயத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையிலோ கருத்தமைத்துப் பாடுவார்.

          இவ்வாறு அவர்களால் பாடப்படும் வெண்பா, மிக நகைச்சுவை யோடும், சிந்தனையைத் தூண்டும் வகையிலும் அமைந்து கேட்போரைச் சுவைத்து மகிழவும் ஆழச் சிந்திக்கவும் வைக்கும்.

          ஒருமுறை, நம் இரட்டைப் புலவர்கள், ஈழத்தில் நிகழ்ந்தது போன்ற ஏதோ பெரும் பேரழிவையோ, அறங்கொன்ற கொடுங் கொடுமையையோ அறிந்திருக்கிறார்கள். மனம் ஆறாத நிலையில், அவர்கள் அப்போதிருந்த உணர்வுநிலையில், தெய்வங்களை நோக்கிக் கேள்வி கேட்பது போலவும்,  அதற்குத் தெய்வங்கள் விடையளிப்பது போலவும் பாடிய ஒரு சுவைமிக்க பாடலை இப்போது பார்ப்போம்.

          முதலில் ஒருவர் பாடிய இரண்டடிகள்: 
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்
கூட்டோடே எங்கே குடிபோனீர் ?”
           இந்த இரண்டடிகளின் பொருள் நமக்கு எளிதில் புரிகிறது. கீர்த்தி என்றால் மிகுந்த புகழ். மிகுந்த புகழை உடைய, கேட்ட வரத்தை அளிக்கும் ஆற்றல் மிக்க தெய்வங்களே! இங்கிருந்து நீங்கி, எல்லோருமாக எங்கே போய்க் குடியேறி விட்டீர்கள்?” என்று கேள்வி எழுப்புகிறார். 

          இதற்கு விடையளிக்கும் வகையில் இரட்டைப் புலவர்களில் இரண்டாமவர் பாடிய பகுதி இதுதான்: . .
__________________________           _- பாட்டாய்க்கேள்! செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண். 

    இந்த அடிகளின் பொருளைப்புரிந்து கொள்வதும் எளிதே! பாடுகின்றவனே! உன் கேள்விக்கு விடை கூறுகிறேன் கேட்டுக்கொள்! எங்கள் ஆற்றல் செல்லுபடியாகின்ற காலமெல்லாம் ஆளுமையை, அதிகாரத்தைச் செலுத்தினாம்! இப்போது இருளான கெட்டகாலம்; எங்கள் ஆற்றலெல்லாம் இழந்து, கல்லாலும் செம்பாலும் செய்த சிலைகளாகி விட்டதைப் பார்த்திடுக!” - என்று தெய்வங்கள் முதலில் பாடிய பாவலருக்கு விடையளிப்பதாகக் கருத்தமைத்து, இரண்டாமவர் பாடிவிட்டார்.

    முழுப் பாடலையும் இப்போது பார்ப்போம்:
கேட்ட வரமளிக்கும் கீர்த்தியுள்ள தெய்வங்காள்
கூட்டோடே எங்கே குடிபோனீர்? - பாட்டாய்க்கேள்!
செல்கால மெல்லாம் செலுத்தினோம் அல்காலம்
கல்லானோம் செம்பானோம் காண். 
   
    இரட்டைப் புலவர்களின் பாடல் எப்படி உள்ளது? ஈழக் கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டுத் தெயவங்களை நோக்கி வினா எழுப்பி, விடை கூறியவாறு இக்காலத்தில் தோன்றுகிறது அல்லவா?

---------------------------------------------------------