வியாழன், 4 பிப்ரவரி, 2010

கூட்டாகப் பொய்யுரைப்போர்!

* கூட்டாகப் பொய்யுரைப்போர்!


எக்கேடு வந்திடுமோ எந்தத் தீங்கு
     எந்தமிழ இனமுறுமோ என்றே தோன்றும்
இக்காலிச் சிவசங்கர் இங்கே ஆளும்
     இரண்டகரோ டுரையாடி இருப்ப தாலே!
அக்காலம் மேனனொடு அமுக்க மான
     அழிசூழ்ச்சி நாராயன் வந்து போனால்
மிக்கதாக் கீழத்தே நடக்கும்! ஒன்னார்
     மீமுயல்வால் பணிந்தார்கள் என்றே பொய்ப்பர்!

சென்னைக்கு வந்தவர்கள் செய்தி சொல்வார்
     சிங்களவர் போர்நிறுத்தம் செய்த தாக!
முன்னைவிட மேலதிக ஆய்தம் மற்றும்
     முனைந்துளவுச் செய்தியெலாம் அவர்க்க ளிப்பர்!
பின்னையுமே போர்நுட்ப ஆள னுப்பி
     பெருங்கப்பல் அவர்க்கீந்து துணையி ருப்பர்!     
தொன்னையிலே நெருப்பெடுத்து வந்த தாகத்
     துணிந்திங்கே கூட்டாகப் பொய்யு ரைப்பர்!

எனவேதான் இக்காலும் எத்தர் கூடி
     எந்தமிழர் அழிவிற்கே சூழ்ந்தார் என்றே
இனநலனை எண்ணிடுவோர் கவலு கின்றார்!
     ஏமாற்றுக் காரணங்கள் உண்மை யில்லை!
மனங்கனல நடப்பதெலாம் பார்த்தி ருக்கும்
     மறஞ்சான்ற இளந்தமிழர் மறக்க மாட்டார்!
சினமடக்கி வைத்தவர்கள் சீறும் நாளில்
     சீர்கெட்ட இவர்தப்ப வழியு முண்டோ?

--------------------------------------------------

சனி, 30 ஜனவரி, 2010

விழுப்புரத்தில் வீரவணக்கப் பொதுக்கூட்டம்




            விழுப்புரத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30-01-2010 காரி(சனி)க்கிழமை மாலை 06-30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
           
            விழுப்புரம் அஞ்சலகத்திற்கு அருகில் பெரியார் சிலைப் பக்கத்தில் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு திரு. சோதி நரசிம்மன் தலைமை ஏற்றார்.
*
            தொடக்கத்தில், வீரத் தமிழ்மகன் முத்துக்குமாருக்கும், ஈழமக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வற்புறுத்தித் தீக்குளித்து உயிர்நீத்த மற்ற ஈகிகளுக்கும் ஈகச்சுடர் ஏற்றிப் பெண்கள் வீரவணக்கம் செலுத்தினர். தொடர்ந்து பலரும் மெழுகுத்திரி ஏற்றி வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
*
            அதன்பின், சோதிநரசிம்மனும் இன்னொரு தோழரும் உரையாடல் வழியாகத் தமிழ் மொழி அழிப்பு, தமிழர் நிலம் பறிப்பு ஈழத்தமிழர் படுகொலைகள், தமிழக மீனவர் சிங்களக் கடற்படையிரால் தாக்கப்பட்டுக் கொல்லப்படுதல் ஆகியவற்றை விளக்கினர். இடையிடையே இசைக்குழுவினர் விளக்கம் தரும் பாடல்களைப் பாடினர்.
*
            சொற்பொழிவாளர்கள் எழில். இளங்கோவும் திருச்சி வேலுச்சாமியும் ஈழத்தமிழருக்குத் துணையிருக்க வேண்டுமெனவும் இந்திய அரசும் தமிழக அரசும் ஈழத்தமிழருக்கு எதிரான போக்கைக் கைவிட வேண்டுமெனவும் விளக்கிப் பேசினர்.
*
            பெருந்திரளான மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரவு பத்துமணி அளவில் திரு. கொ.ப.சிவராமன் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

------------------------------------------------------------------------------------------------------------

*

செவ்வாய், 26 ஜனவரி, 2010

இழிவொடு யாமுறைகின்றோம்!

*                    (எழுசீர் மண்டிலம்) * 

மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!
          மாநிலம் பாடுமுன் புகழே! 
குக்கலை இங்கே ஆட்சியில் அமர்த்திக் 
          குறுகினம் இரண்டகம் கண்டே! 
அக்கரைப் பேயித் தாலியை விட்டே 
          அழிவினைக் கிங்குவந் ததுவே! 
இக்கண முயிரோ டுள்ளையோ யிலையோ 
          இழிவொடு யாமுறை கின்றோம்! 

--------------------------------------------------------------------------
\

புதன், 13 ஜனவரி, 2010

ஈராயிர மாண்டில் வாராது வந்தவனே!

(எழுசீர் ம(எழுசீர் மண்டிலம்) 

செந்தமி ழினமீ ராயிர மாண்டில்  
    செறிந்தெழ வந்தவெந் தலைவா!
இந்தநாள் ஈடில் மறவநீ உளதும்  
    இலாததும் அறிந்திட ஒல்லேம்!
உந்திடு முணர்வில் ஒடுக்கலை எதிர்ப்போம்; - 
    உறுபகை இரண்டகம் சாய்ப்போம்!
சொந்தமே! உயிரில் தோய்ந்தநல் லுறவே!  
    சூளென உரைத்தனம் ஐயா! 

---------------------------------------------------------------------------------

திங்கள், 28 டிசம்பர், 2009

மலையமான் திருமுடிக்காரி


            இன்றைய விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி இரு நாடுகளாக இருந்துள்ளது. அவற்றுள் ஒன்று, மலையமான் நாடு என்ற மலாடுஎன்னும் பெயர் கொண்டிருந்த பெண்ணையம் படப்பை நாடு’; இன்னொன்று ஓவியர்மா நாடு என்ற ஓய்மாநாடுஆகும். 

மலையமான் நாடு : 
            மலாடு, இன்றைய கள்ளக்குறிச்சி, திருக்கோயிலூர், சங்கராபுரம், விழுப்புரம், உளுந்தூர் பேட்டை பகுதிகளையும் கல்வராயன் மலைப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்திருக்கிறது எனலாம். ஓய்மாநாடு கடற்கரைப்பகுதியை அடுத்த புதுச்சேரி, திண்டிவனம், செஞ்சி ஆகிய பகுதிகளைத் தன்னகத்தே கொண்டிருந்திருக்கிறது என்று கூறலாம்*.
            மலையமான் நாட்டின் தலைநகராக திருக்கோவலூர் இருந்திருக்கிறது. இப்போது, திருக்கோயிலூர் என்றும் திருக்கோவிலூர் என்றும் அழைக்கப்படும் இவ் ஊர், கழக இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பதிகங்களிலும் திருக்கோவலூர், கோவல் நகர், கோவல் என்று குறிக்கப் பட்டுள்ளதைக் காண்கிறோம். மலையமான் நாட்டில் பல ஊர்கள் சிறப்புடையனவாக இருந்தன. கோவலூர்த் தென்பெண்ணை யாற்றின் தென்மேற்கில் இருந்ததாகக் கருதப்படும் பாதுகாப்பான முள்ளூர்க்குத் தலைவர் மலையமான் திருமுடிக்காரியாவார். 

மலையமான் திருமுடிக்காரி : 
            மலாட்டை ஆண்ட சிறந்த மன்னர்களுள் மலையமான் திருமுடிக்காரி முகன்மையான அரசர் ஆவார். இவர் மலையமான் திருமுடிக்காரி என்றும், மலையமான் என்றும், கோவற் கோமான் என்றும் காரி என்றும் அழைக்கப் படுபவர் ஆவார். காரி, சிறந்த வீரராகவும் உயர்ந்த வள்ளலாகவும் விளங்கியவர். இவ் அரசரைப் பற்றிய செய்திகளைக் கூறும் பல பாடல்களைக் கழக (சங்க) இலக்கியங்களில் காண்கிறோம். 

சான்றுகள் :
            மலையமான் நாட்டை அடுத்துள்ள வேணாட்டு(வேளிர் நாடு)ப் பகுதியில் ஆனிரை கோடலிலும் மீட்டலிலும் ஈடுபட்டு இறந்த வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் மிகுதியாக கிடைத்துள்ளன. அவற்றில் சில நடுகற்கள், கோவல் (கோவலூர்) மறவர்கள் போரில் ஈடுபட்டுள்ளனர் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன*
            கோவல் பண்டைக்காலத்தில் பெருவழியில் அமைந்திருந்திருக்கிறது; வணிகத்திலும் சிறந்து விளங்கி இருந்திருக்கிறது. இப்பகுதியில் அகழ்வில் இப்போது கிடைக்கும் பலவகையான காசுகளில் கழகக்கால சேரர் காசுகளும், பாண்டியர் காசுகளும், சோழர் காலத்தைச் சேர்ந்த முத்திரை குத்தப்பட்ட காசுகளும், குசானர், சாதவாகனர்காலக் காசுகளும் கிடைக்கின்றன.    கோவலூருக்கு அருகிலுள்ள கரையப்பட்டு என்ற இடத்தில் இருநூறு (200) உரோமானியத் தங்கக் காசுகள் கிடைத்துள்ளதிலிருந்து கோவல், உரோமானியர்களோடு வணிகத் தொடர்பு கொண்டிருந்தமை தெரிகிறது. இங்குக் கிடைத்துள்ள மலையமான் காசுகளைப் பற்றிய ஆய்வு நூல்களும் வெளிவந்துள்ளன*. 

பாடியோர் : 
            மலையமான் திருமுடிக்காரியின் சிறப்புகளைப் போற்றிப் பல புலவர்கள் பாடியுள்ளனர். அவர்களுள், இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார், கபிலர், குடவாயிற் கீரத்தனார், பரணர், கல்லாடனார், வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், மாறோக்கத்து நப்பசலையார், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முதன்மையர் ஆவர். 

காரியும் கொல்லியும் : 
            மலையமான் நாடான மலாட்டில் கொடுங்கால் என்ற நகரம் சிறந்து விளங்கியிருந்திருக்கிறது. திருமுடிக்காரி, கொல்லிமலையை ஆண்ட மன்னன் ஓரியைப் போரில் கொன்று, கொல்லிக் கூற்றத்தைச் சேரனுக்குத் தந்ததை அறிய முடிகின்றது.
            வளம் மிக்க மலாட்டுப் பகுதியினைக் கைப்பற்றவும், ஓரியைத் திருமுடிக்காரி போரில் கொன்றதற்குப் பழி தீர்க்கவும் அதிகமான் நெடுமான் அஞ்சி கோவலூரை முற்றுகையிட்டு வெற்றி கொண்டார். மலையமான் திருமுடிக்காரி கொடைத் திறன் மிக்கவர்; கடையெழு வள்ளல்களுள் ஒருவர். இவருக்குப் பின், இவர் மகன் சோழிய ஏனாதி திருக்கண்ணன் ஆட்சிக்கு வந்தார். இவர் காலத்தில் மலாடு சோழர்களின் ஆட்சிக்கு உடபட்டிருந்தது. புறநானூற்றுப் பாடல், சோழ மன்னன் முள்ளூர் மலையில் படையுடன் தங்கியிருந்ததைக் கூறுவதைக் கொண்டு, வரலாற்றுப் புதின எழுத்தாளர் கல்கிஅவருடைய பொன்னியின் செல்வன்புதினத்தில் சில கதை நிகழ்வுகளை எழுதியுள்ளார். 

காரியும் கபிலரும் கல்வெட்டும் : 
            கபிலருக்கு மலையமான் திருமுடிக்காரியுடன் நற்றொடர்பு இருந்தது. பறம்புமலை மன்னனான வள்ளல் பாரி மூவேந்தருடனான போரில் இறந்த பிறகு, பாரி மளரிர்க்கு மணமுடிக்கும் பொறுப்பைப் புலவர் கபிலர் ஏற்கிறார். ஆனால், மூவேந்தர்க்கும் அஞ்சி, பாரிமகளிரைச் சிற்றரசர் யாரும் மணம் புரிந்து கொள்ள முன்வரவில்லை.
            திருக்கோவலூர்த் தெய்வீகன் பாரிமகளிரை மணந்ததாக மரபுவழிக் கதைகள் கூறப்படுவதால், கபிலர் காலத்தவரான மலையமான் திருமுடிக்காரி இதற்கு துணையிருந்திருப்பதாக எண்ணலாம். பாரி மகளிரை ஒளவையாரோடு தொடர்பு படுத்திச் சொல்வதற்கும், திருமுடிக்காரியே பாரிமகளிரை மணந்ததாகச் சொல்வதற்கும் அடிப்படைச் சான்றெதுவும் இல்லை என்க.          திருக்கோவலூரில் உள்ள கீழையூர் வீரட்டானேசுவரர் கோயிலில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முதலாம் இராசராசனின் கல்வெட்டு உள்ளது. அதில், கபிலர் அங்கு வந்து மலையமானிடம் பாரியின் பெண்களை அடைக்கலப் படுத்திவிட்டு, அங்கு (கீழையூர் பெண்ணையாற்றுத் துறைக் கருகில் ஆற்றிலுள்ள) கல்லொன்றில் தீ வளர்த்து உயிர் நீத்தார் என்ற செய்தி கீழ்க்காணுமாறு குறிக்கப்பட்டுள்ளது : 
            தெய்வக் கவிதைச் செஞ்சொற் கபிலன் 
            மூரிவண் தடக்கை பாரிதன டைக்கலப்
            பெண்ணை மலையற் குதவிப் பெண்ணை 
            அலைபுனல் அழுவத்து அந்தரிட்சம்செல 
            மினல்புகும் விசும்பின் வீடு பேறெண்ணி 
            கனல்புகும் கபிலக் கல்லது*. 
            இன்றும் அங்குப் பெண்ணையாற்றில் ஒரு சிறு குன்றும், குன்றின்மேல் ஏறிச் செல்ல படிக்கட்டுகளும் குன்றின் மேலே, கோயில் போன்ற அமைப்பும் அக் கோயிலைச் சுற்றிவர வழியும் உள்ளதைக் காணலாம். இதனை ஊர் மக்கள் கபிலர் குன்றுஎன்றும் கபிலக் கல்என்றும் கூறுகின்றனர். இக் குன்றை இடைச்சி ஒருவரின் கதையோடு தொடர்பு படுத்தி, ‘இடைச்சிக் குன்றுஎன்றும் அழைக்கின்றனர். 

கழக இலக்கியங்கள் காட்டும் திருமுடிக்காரி : கழக இலக்கியங்களில் திருமுடிக்காரி பற்றிக் கூறப்பட்டுள்ள சில முகன்மையான செய்திகளை ஒவ்வொன்றாய்க் காணலாம். 

அ. சிறுபாணாற்றுப் படை.
ஆசிரியர்: இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். 
  1. அடி 91 – 95
 ....................   …….........  ………......... கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
ஈர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகைந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கை காரி............ 

இதன் பொருள் : மணியையும் தலையாட்டத்தினையும் ( தலையாட்டம் என்பது குதிரைக்கான ஓர் அணி) உடைய குதிரையோடு அருள் நிறைந்த சொற்களையும் உலகத்தவர் கேட்டு வியக்குமாறு இரவலர்க்குக் கொடுத்த பிறர் அஞ்சும்படியான நீண்ட வேலையும், சுழலும் தொடியணிந்த கையினையும் உடைய காரி என்னும் வள்ளல்......

  1. அடி 107 – 110 
.....................  ................... ...................... நளிசினை
நறும்போது கஞலிய நாகுமுதிர் நாகத்து
குறும்பொறை நல்நாடு கோடியர்க்கு ஈந்த
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த 

இ-ள் : செறிந்த கொம்புகளில் நறுமணம் மிக்க பூக்கள் நிறைந்த சுரபுன்னை யும், குறிய மலைகளையும் உடைய நல்ல நாடுகளைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்த, காரி என்னும் பெயர் பெற்ற குதிரையை உடைய காரி... 

ஆ. குறுந்தொகை
1. பாடல் – 198                    ஆசிரியர்: கபிலர்           அடி : 5-7                ............ .................. ................. அடுபோர்
எஃகுவிளங்கு தடக்கை மலையன் கானத்து
ஆரம் நாறும் ............ 

இ-ள் : பகைவரைக் கொல்லும் வேல் திகழும்படி நின்ற பெரிய கையையுடைய மலையனது காட்டின் கண்ணதாகிய சந்தனம் மணக்கும்.....

  1. பாடல் – 312         ஆசிரியர்: கபிலர்              அடி : 2-3 
முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கானம் நாற ........ 

இ-ள் : மாறுபாட்டைக் கொண்ட வலியை உடையவனும் சிவந்த வேலினை ஏந்தியோனுமாகிய மலையமான் திருமுடிக்காரியினது முள்ளூர் மலைக் காட்டிலுள்ள நறுமணம் மணக்க..... 

இ. நற்றிணை 
1. பாடல் – 100                 ஆசிரியர் : பரணர்          அடி : 7-11
 .............. ........... ................. முனையூர்ப்
பல்லா நெடுதிரை வில்லின் ஒய்யும்
தேர்வண் மலையன் முந்தைப் பேரிசைப்
புலம்புரி வயிரியர் நலம்புரி முழவின்
மண்ணார் கண்ணின் அதிரும் 

இ-ள் : ஊர் முனையிலுள்ள பல நெடிய ஆனிரைகளை விற்போரால் வென்று செலுத்திக்கொண்டு வருகின்ற, இரவலர்க்குத் தேர் கொடுக்கும் கை வண்மை உடைய மலையமான் திருவோலக்கத்தின் முன்பு வேற்று நாட்டிலிருந்து வந்த பெரிய இசையை உடைய கூத்தர் நன்மையை விரும்பி முழக்குகின்ற மத்தளத்தின் மார்ச்சனை வைத்த பக்கம் அதிரும்

2.  பாடல் – 170    ஆசிரியர் : பெயர் தெரியவில்லை   அடி : 6-8
ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப்
பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது
ஒருவேற்கு ஓடி யாங்கு... 

இ-ள் : ஆரியர் நெருங்கிச் செய்த போரின் கண்ணே, பெரிய புகழையுடைய முள்ளூர்ப் போர்க்களத்துப் பலருடன் சென்று, உறையினின்று உருவிய ஒள்ளிய வாட்படையை உடைய மலையனது ஒப்பற்ற வேற்படையை அஞ்சி அவ் ஆரியப்படை ஓடியதைப்போல...

  1. பாடல் – 320      ஆசிரியர் :கபிலர்                         அடி : 4-6 
................ .............. ............. பழவிறல்
ஓரிக் கொன்ற ஒருபெருந் தெருவில்
காரி புக்க நேரார் புலம்போல்

இ-ள் : பழைமை சிறப்புடைய கொல்லிமலைத் தலைவனாகிய வல்வில் ஓரியைக் கொன்ற மலையமான் திருமுடிக்காரி என்பான், உடனே அவ் ஓரியினது ஒப்பற்ற பெரிய தெருவிலே புகுந்ததைக் கண்ட காரியின் பகைவராகிய ஓரியைச் சார்ந்த யாவரும் ஒருசேர நின்று பேரிரைச்சல் இட்டாற் போல 

ஈ. அகநானூறு 
1. பாடல் – 35       பாடியவர் : குடவாயிற் கீரத்தனார் அடி : 14-16 
துஞ்சா முழவின் கோவற் கோமான்
நெடுந்தேர்க் காரி கொடுங்கால் முன்துறை
பெண்ணையம் பேரியாற்று நுண்மணல் கடுக்கும்  

இ-ள்: முழவின் ஒலி இடைவிடாது ஒலிக்கும் திருக்கோவலூர்க்குத் தலைவனாகிய நீண்ட தோளினை உடைய காரியின் கொடுங்கால் என்னும் ஊரின்கண்ணதாகிய அழகிய பெரிய பெண்ணையாற்றின் முன்துறையில் உள்ள நுண்ணிய கருமணலை ஒத்த

2. பாடல் – 209 பாடியவர் : கல்லாடனார் அடி : 11-17 
............... ................ ............. செவ்வேல்
முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த
செவ்வேர்ப் பலவின் பயன்கெழு கொல்லி
நிலைபெறு கடவுள் ஆக்கிய
பல்புகழ் பாவை ............ ............... 

இ-ள் : சிவந்த வேலினையும் சுழலும்படி இடப்பட்ட வீர வளையினையும் உடைய முள்ளூர்க்குத் தலைவனாகிய காரி என்பான், கெடாத நல்ல புகழை இவ்வலகத்தே நிலைநிறுத்திய வலிய வில்லையுடைய ஓரியைக் கொன்று, சேரமன்னர்க்கு மீட்டுக் கொடுத்து உரிமையாக்கிய, வேர்ப்பலவின் பழங்கள் மிகுந்த கொல்லிமலையில் தெய்வத் தச்சனால் செய்யப்பட்ட அழிவின்றி நிலைபெற்றிருக்கும் பலரும் புகழும் பாவை.... 

உ. புறநானூறு 
புறநானூற்றில் பாடல் 121முதல் 124 வரை நான்கு பாடல்களில் புலவர் கபிலரும்125ஆம் பாடலில் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனாரும்126ஆம் பாடலில் மாறோக்கத்து நப்பசலையாரும் முழுப்பாடல்களில் காரியின் சிறப்புகளைப் போற்றிப் புகழ்கின்றனர். 158ஆம் பாடலில் இரு வரிகளில் புலவர்பெருஞ்சித்திரனார் காரியைப் போற்றுகிறார் 

பாடல் 121இல்,  ‘வேந்தே, ஈதல் எளிது; ஆயினும் ஈத்தது கொள்ளும் பரிசிலரது வரிசையறிதலே அரிது. ஆதலால் புலவர்பால் வரிசை நோக்காது பொதுவாக நோக்குதலை ஒழிகஎன்று வலியுறுத்துகிறார்         கபிலர். பாடல் 122இல், ‘திருமுடிக்காரி, நின்நாடு கடலாலும் கொள்ளப் படாது; பகை வேந்தராலும் கைக்கொள்ள நினைக்கப்படாது; ஆயினும் அது அந்தணர்க்குக் கொடைப் பொருளாயிற்று. மூவேந்தருள் ஒருவர் தமக்குத் துணையாதலை வேண்டி விடுக்கும் பொருள் இரவலர்க் குரித்தாயிற்று; நின் ஈகைக் ககப்படாது நிற்பது நின் மனைவியின் தோளல்லது பிறிதில்லை; அவ்வாறிருக்க நின்பாற் காணப்படும் பெருமிதத்திற்குக் காரணம் அறியேன்என்று கூறுகிறார். 
      பாடல் 123இல், ‘அன்றன்றிறக்கிய கள்ளுண்டு களிக்குங்கால், இரவலர் புகழுரை கேட்டுஅவர்க்குத் தேர்கள் பலவற்றை வழங்குவது எத்தகைய வள்ளல்கட்கும் எளிதில் இயல்வதாம்;எனவே, அவரது கொடை, கள் மகிழ்ச்சியில் நிகழ்வதால் செயற்கையாம். மலையமான் திருமுடிக்காரி களியாப் போழ்தில் வழங்கும் தேர்களை நோக்கின், அவை அவனது முள்ளூர் மலையிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகும். எனவே, இஃது இயற்கைக் கொடையெனத் தெளிமின்என்கிறார். 
      பாடல் 124இல், மலையன் திருமுடிக்காரியைக்காணச்செல்லும் இரவலர் நாளும் புள்ளும் நோக்கவேண்டுவதிலர்; அவன்பால் அடையினும், செவ்வி நோக்குதலும், கூறத்தகுவன இவையென முன்னரே தம்முள் ஆராய்ந்து கோடலும் வேண்டா; அவனைப்பாடிச்சென்றார் வறிது பெயர்வதில்லைஎன்று கூறுகிறார். பாடல்
      125இல் வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார், ‘வேந்தே, நீ துணை செய்த போரின்கண் வென்றியெய்திய சோழனும் யான் வெற்றிபெற உதவியவன் இவனேயென நின்னைப் பாராட்டிக் கூறுவன்; தோல்வியெய்திய சேரமானும், வல்வேல் மலையன் துணைபுரியா திருப்பனேல், இப்போரை வெல்லுதல் நமக்கு எளிதாயிருக்கும் என்று வியந்து கூறுவன். இரு திறத்தாரும் பாராட்டும் ஒருவனாய் விளங்குகின்றனை. நின் செல்வ மிகுதியைக் காணப் போந்த யாமும் ஊனும் கள்ளும் மாறிமாறி உண்பேமாயினேம்; முயன்று ஈட்டிய பொருள் கொண்டு நீ உண்ணும் உணவு அமிழ்தாய் நீண்ட வாழ்நாளை நினக்கு நல்குவதாகஎனப் போற்றுகிறார்.
       பாடல் 126இல்,மாறோக்கத்து நப்பசலையார், ‘பெண்ணையாறு பாயும் நாடுடைய வேந்தே, முள்ளூர்க்குத்தலைவ, நுன் குடிப்பெருமையும் நின் புகழும் யாம் கூற வல்லேமல்லேம். ஆயினும் இயன்ற அளவிற் கூறுவேம்; அன்றியும்; சேரர் கலஞ்சென்ற குடகடலில் பிறருடைய கலம் செல்லமாட்டாத்து போலக்கபிலர் பாடியபின் எம் போல்வார் பாடல் செல்லாது; எனினும், எம்மை இன்மையானது துரப்ப நின் வள்ளன்மை மின்னின்று ஈர்ப்ப வந்து சில பாடுவேமாயினம்எனப் புகழ்கிறார். 

      பாடல் 158இல், புலவர் பெருஞ்சித்திரனார், 
காரி ஊர்ந்து பேரமர்க் கிடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும் 
- என்று திருமுடிக்காரியைப் புகழ்கின்றார். 

இ-ள் : காரியென்னும் பெயரையுடைய குதிரையைச் செலுத்திப் பெரிய போரைவென்ற மாரிபோலும் வள்ளன்மையுடைய மறப்போர் மலையன். 

முடிவாக... 
      இக்கால், விழுப்புரம் மாவட்டமாக இருக்கும் பகுதி, மலையமான் நாடு ஓய்மாநாடு என்ற இரு நாடுகளாகக் கழகக் காலத்தில் இருந்தது என்றும், மலையமான் திருமுடிக்காரி மலாட்டை ஆண்ட சிறந்த மன்னனாகவும் உயர்ந்த வீரனாகவும் மாபெரு வள்ளலாகவும் விளங்கினான் எனவும், கபிலர் தொடக்கம் பல பெரும் புலவர்கள் அவனுடைய உயர்வைப் பலவாறாகப் போற்றிப் பாடிப் புகழ்ந்துள்ளனர் என்றும் அறிகிறோம். ___________________________________________________________________ நன்றியுரைப்பு: 
1. விழுப்புரம் இராமசாமிப்படையாட்சியார் மாவட்ட வரலாறு ஆசிரியர் : கு. தாமோதரன், துணை இயக்குநர், தொல்பொருள் ஆய்வுத்துறை வெளியீடு : தமிழ்நாட்டரசின் தொல் பொருள் ஆய்வுத்துறை.
* இக் குறியிட்ட செய்திகள் இந் நூலிலிருந்தே பெறப்பட்டவை.
2. கழக இலக்கியங்கள் உரைகள் உதவியவர்க்கு நெஞ்சார்ந்த நன்றி.