(ஆங்கிலமூலம் : ஆபிரகாம் தொ. கோவூர் - தமிழாக்கம் : தமிழநம்பி) நானியா நல்ல அழகி. பன்னிரண்டு அகவையினள். நல்ல உடலும் அறிவுக் கூரமையும்
கொண்டவள். கலகலப்பாகப் பழகும் மனஇயல்பும், மற்றக் குழந்தைகளுடன் விளையாட்டு, நடனம், பாடல்களில்
தயக்கமின்றிக் கலந்துகொள்ளும் திறமையும் பெற்றவள். அதனால் அவளைப் பள்ளிக்
கூடத்திலும் விளையாடுமிடத்திலும் பலரும் அறிந்திருந்தனர்.
அவள்
படிப்பிலும் கெட்டிக்காரி. ஆண்டு இறுதித் தேர்வில், 35 மாணவிகள்
உள்ள வகுப்பில் ஐந்தாவது மாணவியாக அவள் தேர்வு பெற்றாள். கணக்குப் பாடத்திலும்
பேச்சுப் போட்டியிலும் வகுப்பில் அவளே முதல் மாணவி.
கொழும்பு 'செய்தித்
தூதர் தெரு'விலுள்ளது நானியாவின் வீடு. 1964 சூலை31ஆம் நாள்வரை இன்பம் தவழும் இல்லமாகவே இருந்தது
அவ்வீடு. மறுநாளிலிருந்து நானியாவிடம் காணப்பட்ட திடீர் மாறுதல், குடும்பத்தினர்
அனைவரையும் மிகவும் கண்கலங்கச் செய்து விட்டது.
நானியா, முற்றிலும்
மாறுபட்ட ஒருத்தியைப் போல ஆகிவிட்டாள். மகிழ்ச்சியும் கலகலப்பும் அவளைவிட்டு
நீங்கிவிட்டன. அவளுடைய விழிகள் வழக்கத்தை விடப் பெரிதாகத் தெரிந்தன; முன்பிதுக்கமாகவும்
கசிவுற்ற வண்ணமும் காணப்பட்டன.
ஒவ்வொரு
நாளும் இரவு வந்ததும், கடுமையாக உடலை முறுக்கிக் கொண்டு உரக்கக்
கூச்சலிடத் தொடங்கினாள். அவளுடைய தாயும் தந்தையும் அவளைக் கட்டுப் படுத்துவதற்குப்
பெரும்பாடு பட்டனர். பலமுறை வீட்டைவிட்டு ஓடிப்போக அவள் முயற்சி செய்தாள். எதைச்
சொல்லியும் அவளை அமைதிப் படுத்தவே முடியவில்லை.
அவளுடைய
அலறலுக்குக் காரணத்தைக் கேட்டபோது, யாரோ அவள் மென்னியை நெறித்துக் கொல்வதாகக்
கூறினாள். அச்சம் மிகுந்த நிலையில் தொடர்பில்லாது பேசிக் கொண்டிருந்தாள்.
சில
நேரங்களில் தன் நினைவிழந்திருக்கும்போது, சில மாதங்களுக்கு முன்பு இறந்துபோன தன்
அத்தைமகள் சாரினாவைப் போலப் பேசத் தொடங்கினாள். களைத்துப்போய் சோர்வுற்ற பின்பே
தன்னிலைக்குத் திரும்பினாள்.
நானியாவின்
நடத்தை குடும்பத்தாரை மிகவும் நிலை குலையச் செய்த்து. நெருங்கிய உறவினர் சிலர்
இரக்கத்தோடும் இன்னும் சிலர் ஒருவகை ஆவலோடும் அடிக்கடி வந்து பார்த்துச் சென்றனர்.
அவர்களனைவரும் நானியா குணமடைய அவரவருக்குத் தோன்றிய 'சிறந்த
வழி'யை தயக்கமின்றிக் கூறிச் சென்றனர். பேரளவுக்கு மந்திரக்காரர் பேயோட்டிகளின்
பெயர்க ளெல்லாம் அவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.
இப்படிப்
பட்டக் கொடிய துன்பச் சூழலில் மக்கள் அறிவுநுட்ப முடையவர்களா யிருந்தாலுங் கூட
மந்திரக்காரர்களிடத்தும் பேயோட்டிகளிடத்தும் ஏமாந்து போவது புதுமையில்லை அல்லவா?
முதலமுதலாகப்
பேயோட்ட வந்தவர் 'வெள்ளைக் குருவி' என்ற பகடிப் பெயரால் அழைக்கப்பட்டு வந்த ஒரு
நாட்டுமருத்துவர் ஆவார். நெடுநேரம் மந்திரம் ஓதியபின் நானியாவின் தலைமயிரில் ஐந்து
முடிச்சுகளைப் போட்டுவிட்டு, வலக்கைத் தோள் தசையில் ஒரு காவி வண்ணக்
கயிற்றைக் கட்டிவிட்டார். இனி எந்தத் தொல்லையும் இருக்காது என்று கூறிவிட்டுத் தன்
கூலியைப் பெற்றுக் கொண்டு 'வெள்ளைக் குருவி' பறந்து சென்றது. ஆனால், அடுத்தநாள்
காலையிலேயே அப்பெண் வழக்கம் போலக் கூச்சலிடத் தொடங்கினாள்.
இரண்டு
நாட்களுக்குப் பின்னர்ப் பக்கத்து வீட்டுக்காரரின் பரிந்துரையின்படி மலாயா
மந்திரக்காரர் ஒருவர் அழைத்துவரப்பட்டார். இவர், ஒரு
துண்டுத்தாளில் சில குரான் வரிகளை அரபியில் எழுதினார். அத்தாளை உருளையாகச்
சுருட்டிக் கருப்பு நூலினால் கட்டினார். பிறகு, நீரில் நனைந்து விடாதிருக்க அதை உருக்கிய
மெழுகில் மூழ்க்கி எடுத்தார். இருபத்தொரு முடிச்சுகள் போடப்பட்ட கருப்புக்
கயிற்றில் அதைக் கட்டினார். அக்கயிற்றை நானியாவின் கழுத்தில் கட்டிவிட்டுத் தன்
கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு போய்ச் சேர்ந்தார்! அப்பெண்ணின் அவலக் கூச்சல்
மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது!
மூன்றாவதாக
அழைத்து வரப்பட்டவர் கொழும்பு 'ஒன்றியநகரை'ச் சேரந்த முதிய முசுலிம் மந்திரக்காரர். இவர், புகைபோட்டு
எலிகள் பாம்புகளை வளையிலிருந்து வெளியேற்றுவதைப் போன்று கெட்ட ஆவியையும் விரட்டி
ஓட்டுகிறவராம்! ஒருகலத்தில் உலர்ந்த கழுதைச் சாணத்தைப் போட்டு அதில் நெருப்பு
வைத்தார். அச்சாணத்திலிருந்து அடர்ந்த புகை எழுந்ததும், அரபியில்
மந்திரங்களை ஓதிக்கொண்டே நானியாவின் உடலைச் சுற்றிலும் பலமுறை அப்புகையைச்
செலுத்தினார். அவரும் தன் கூலியை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார்! ஆனால் பயன்
ஏதும் ஏற்பட்ட பாடில்லை!
நானியா, சமையலறைக்கு
அருகிலுள்ள குளிப்பறைக்குச் செல்லும் போதெல்லாம் அவளுடைய அச்சமும் கூச்சலும்
அதிகமாயின. சில குடும்ப நண்பர்கள் அவளை வேறிடத்தில் சிலநாட்கள் வைத்திருப்பது
நல்லதெனக் கூறினர். அவ்வாறே, நானியா அவளுடைய அத்தையின் வீட்டிற்கு அனுப்பப்
பட்டாள். அங்கு தங்கிய சில நாட்களில், அவள் நிலையில் முன்னேற்றம் இருந்தது. நானியா
வீட்டிற்குத் திரும்ப விரும்பினாள்.
வீட்டிற்குத்
திரும்ப அழைத்து வரப்பட்டதும், மறுபடியும் அதே தொல்லை முன்பைவிடக் கடுமையாக
நிகழத் தொடங்கியது. இறந்துபோன அத்தை மகளின் பேய், அதனுடன் வருமாறு தன்னை அழைத்துக்
கொண்டிருப்பதாக நானியா கூறினாள்.
பேயைப்
பற்றிக் கூறியதால் பெற்றோர் மிகவும் அச்சமுற்றனர். ஆற்றல் மிகுந்த பெரிய மந்திரக்
காரர்களின் துணையைப் பெறுவதென அவர்கள் முடிவு செய்தனர்.
நான்காவதாக
அழைத்து வரப்பட்ட பேயோட்டி, கொழும்பு சிரிபினா சந்திலிருந்த மற்றொரு முதிய
முசுலிம் மந்திரக்காரர். முன்பு வந்தவர்களைப போலவே, இவரும் சில மந்திரக் கயிறுகளை அப்பெண்ணின்
மணிக்கட்டிலும் கழுத்திலும் கட்டினார். கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றார். ஆனால், பயனேதும்
விளையவில்லை!
அடுத்து வந்த
ஆள், கொழும்பு மஞ்சிகர் தெருவிலிருந்த குருனான்சி என்ற சிங்கள மந்திரக்காரன். குடும்ப
எதிரிகளால் வைக்கப்பட்ட 'வைப்பு'தான் நானியாவின் துன்பத்திற்குக் காரணமென்றான்.
எலுமிச்சை வெட்டுஞ் சடங்கு செய்து அந்த 'வைப்பை' எடுத்தால்தான் துன்பங்கள் தொலையும் என்று
கூறினான். அவ்வாறே,
பெருஞ்செலவு செய்து அச்சடங்கு நடத்தப்பட்டது. நானியாவின்
கழுத்தில் ஒரு சுருட்டகடு (தாயத்து) கட்டப் பட்டது.
எலுமிச்சை
வெட்டுஞ் சடங்கும் பயனளிக்காமற் போன பின்னால், மாசுகேலியாவிலிருந்து
ஒரு பெயர் பெற்ற மலையாள முசுலிம் மதகுருவை அழைத்து வந்தனர். அந்த ஆள் இரண்டு நாள்
மந்திரம் ஓதி இறை வழிபாடு செய்து, கடைசியில் ஒரு சுருட்டகடை நானியாவின்
தந்தையிடம் கொடுத்து, அதனை அவள் தூங்கும்போது அவளுக்குத் தெரியாமல்
தலையணைக்குள் வைக்க வேண்டுமெனக் கூறிச் சென்றான். இதுவுங்கூட எந்த நன்மையுந்
தந்திடவில்லை!
ஆறு
பேயோட்டிகளை அழைத்து வந்தும் பெரும் பொருளைச் செலவழித்தும் ஏமாறிப் போனபிறகு, அப்பெண்ணின்
மன நோய்க்குப் பேயோட்டிகளின் உதவியை நாடியதைத் தொடக்கத்திலிருந்தேக் கண்டித்து
வந்த கற்ற்றிந்த நண்பர் ஒருவரின் கருத்தைக் கேட்க இசைந்தனர்.
1964 ஆகத்து 20ஆம்
நாள் நானியாவின் தந்தை அகமதும் மாமன் அமீதும் என்னிடம் வந்தனர். ஆங்கிலச்செய்தித்தாள்
ஒன்றின் துணை யாசிரியரான திரு. தவ்பீக் தந்திருந்த அறிமுகக் கடிதத்தைக் கொடுத்தனர்.
அவர்கள் வீட்டில் நடந்தவை எல்லாவற்றையும் தெளிவாகக் கூறினர். முழுவதும் கேட்டபிறகு
அப்பெண்ணை ஆகத்து 24ஆம் நாள் பகல் 2-30 மணிக்கு அழைத்து வருமாறு அவர்களிடம் கூறினேன்.
குறித்த
நாளில், நான்கு ஆண்கள் மூன்று பெண்கள் இரண்டு பையன்கள் அடங்கிய கூட்டம் நானியாவுடன்
வந்தது. நானியா நினைவு இழந்தவளைப் போலக் காணப் பட்டாள். இரு பெண்கள் அவளைத்
தாங்கியவாறு அழைத்து வர வேண்டியிருந்தது.
அக்கூட்டத்தை
வரவேற்பறையிலேயே இருக்கச் சொல்விட்டு, நானியாவை மட்டும் மாடியிலிருந்த என் தீராய்வு
அறைக்கு வருமாறு அழைத்தார் என் மனைவி. நானியா மேலே வர விரும்பவில்லை. கொஞ்ச நேரம்
அவளிடம் அன்போடும் இனிமையோடும் பேசி ஒப்புக்கொள்ள வைத்து தன்னுடன் அழைத்து வந்தார்.
நானியாவின்
உடலெங்கும் மந்திரக் கயிறுகளும் சுருட்டகடுகளுமாகக் காணப்பட்டன! முதலில்
கத்தரிக்கோலை எடுத்து அவற்றையெல்லாம் வெட்டி எறிந்தேன். அவளை ஒரு மென் படுக்கையில்
படுக்கச்செய்து ஓய்வு கொள்ளுமாறு கூறினேன்.
அறிதுயில் (hypnosis) முறையில் உள் மனத்தைத் திறக்கச் செய்ததும், நானியா தடையின்றி பேசத் தொடங்கினாள். அவளிடமிருந்த
நான் தெரிந்து கொண்ட செய்தியைக் கீழே தருகிறேன்.
நானியா அவள்
அத்தைமகள் சாரினாவிடம் மிக அதிகமான அன்பு கொண்டிருந்தாள். 1964 மே 14ஆம்நாள்
முழுவதும் நானியா வீட்டில் அவளோடு சாரினா இருந்தாள். அவர்கள் இருவரும் பகல்
முழுவதையும் விளையாட்டிலும் மகிழ்ச்சியான பேச்சுகளிலுமாகக் கழித்தனர். மாலையில்
சாரினா கடுமையாகத் தலைவலிப்பதாகக் கூறினாள்.
மறுநாள்
சாரினாவைக் குடும்ப மருத்துவரிடம் காட்டினர். அவர் மூளை வல்லுநர்களிடம்
காட்டவேண்டுமெனக் கூறினார். இலங்கையின் புகழ்பெற்ற நரம்பு மருத்துவர்கள் இருவர்
சாரினாவை ஆய்வு செய்து, அவளுடைய மூளையில் கட்டி இருப்பதாகவும் உடனே
அறுவை செய்யப்பட வேண்டு மெனவும் கூறினர். அறுவையின் பயன் மருத்துவர்கள்
மகிழும்படியாக அமையவில்லை. சாரினா இரண்டு நாள்கள் நினைவிழந்தவாறே இருந்தபின் மே 18ஆம்
நாள் இறந்து போனாள்.
சாரினாவின்
சாவு அவளுடைய உறவினர்கள் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்த்து. குறிப்பாக அவளுடைய
அணுக்கத்தோழி நானியா கடுமையான அதிர்ச்சி அடைந்தாள்!
சாரினாவின்
உடல் மருத்துவமனையி லிருந்து வீட்டிற்குக் கொண்டு வரப்பட்டு, மறுநாள்
அடக்கம் செய்யப் பட்டது. குழந்தைகள் அப்பிணத்தைப் பார்க்கா வகையில்
தடுக்கப்பட்டனர். நானியா தன் அன்புத் தோழியைக் கடைசியாகப் பார்க்க வேண்டுமென்ற
ஆவலில் பெரியவர்களின் கால் இடைவெளி வழியே நுழைந்து எட்டிப் பார்த்தாள். முகத்தைத்
தவிர உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடி வைக்கப் பட்டிருந்தது.
நாள்கள்
செல்லச் செல்ல குடும்பப் பெரியவர்கள் மனத்திலிருந்து சாரினாவின் சாவு மறைந்து
போயிற்று. ஆனால் குழந்தைகளின் இளம் நெஞ்சங்களிலிருந்து அவ்வளவு எளிதில் மறையவில்லை.
நானியாவும் அவள் தம்பிகளும் சாரினாவுடன் விளையாடி மகிழ்ந்த இன்ப நாள்களைப் பற்றியே
தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
1964 சூலை 15ஆம்
நாள் இரவு எல்லாரும் தூங்கிக் கொண்டிருக்கும் போது, நானியாவின் சிறிய தம்பி படுக்கையிலிருந்து
எழுந்துத் தாயிடம் ஓடிப்போய் அறையின் மூலையில் சாரினாவின் பேயுருவைப் பார்த்ததாகக்
கூறினான். திடுக்கிட்ட அம்மா விளக்கைப் போட்டுவிட்டு, அவன்
காட்டிய மூலையைப் பார்த்தாள். அங்கே ஒரு பாவாடை கொடியில் தொங்கிக் கொண்டிருந்தது. அவன்
பாவாடையையே பேயாக நினைத்து விட்டதைப் புரிந்து கொண்டாள்.
மறுநாள்
அம்மாவும் அவனும் அந்நிகழ்ச்சியை எல்லாரிடமும் கூறிச் சிரித்துக் கொண்டனர். அனைவருக்கும்
நகைக்கத் தக்கதாக இருந்த அந்த நிகழ்ச்சி, நுட்பம் மிகுந்த நானியாவை அன்றிலிருந்து
மிகவும் மனச்சோர்வு கொள்ளச் செய்த்து.
1964 சூலை 31ஆம்
நாள் நானியா சமையலறையில் இருந்து இருண்ட இடைவெளி வழியே குளியலறைக்குச் சென்ன்றாள்.
இருள் மிகுந்த குளியலறையில் உடல் முழுவதும் வெள்ளைத் துணியால் மூடப் பட்டிருந்த சாரினாவின்
பேய்முகத்தைப் பார்த்தாள்! பெரும் அலறலுடன் வெளியே ஓடி வந்துவிட்டாள். அன்றிரவு
தனியே படுக்க அஞ்சித் தாயுடன் உறங்கினாள். தூங்கிக் கொண்டிருக்கும் போதே பெருங்
கூச்சலுடன் எழுந்து விட்டாள்.
சாரினாவின்
பேய் நானியாவைத் தன்னுடன் வருமாறு அழைத்த தாகவும் அவள் வரமாட்டேன் என்றதும், அப்பேய்
அவளுடைய கழுத்தை நெறிக்க முயற்சி செய்த்தாகவும் கூறினாள். அதற்குப் பிறகு, நானியா, வீட்டின்
இருண்ட மூலைகளைப் பார்க்கும் போதெல்லாம் பல தடவைகள் சாரினாவின் முகத்தைப்
பார்த்தாள்!
நீண்ட நேர
அறிதுயில் அறிவுரைகளால், இல்லாத சாரினாப் பேயை நானியாவின் உள்
மனத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டேன். செயற்கையாக உருவாக்கப் பட்ட
பேயைப்பற்றிய அச்சங்கள் அறிதுயில் அறிவுரைகளால் நானியாவின் உள்ளத்திலிருந்தும்
நீக்கப்பட்டதும்,
அவள் தன் இயல்பான நிலைக்கு மீண்டு வந்தாள்.
அறிதுயில்
உறக்கத்திலிருந்து மகிழ்ச்சிப் புன்னகையுடன் விழித் தெழுந்தாள் நானியா. களிப்போடு
படிக்கட்டுகளில் இறங்கி ஓடினாள், தம் உறவினர்களைக் காண்பதற்காக!
கடந்த 24 நாள்களாக
நானியாவிடம் காணப்பாத புன்னகையைக் கண்டதும் பெற்றோரும் மற்ற உறவினரும்
மகிழ்ச்சியில் பூரித்து மயிர்சிலிர்த்துப் போனார்கள். மிகுந்த மனத்துன்பத் தோடும்
கனத்த நெஞ்சோடும் வந்த அக்கூட்டத்தினர் பெரு மகிழ்ச்சியோடு எனக்கும் என்
மனைவிக்கும் நன்றி கூறிச் சென்றனர். நானியா போகும்போது தன் வீட்டிற்கு வரவேண்டுமென
எங்களுக்கு அழைப்பு விடுத்துச் சென்றாள்.
ஒரு மாதம்
கழிந்தபின் நானியாவின் வீட்டிற்குச் சென்றிருந்தோம். பள்ளிக்குச் சென்றிருந்த
நானியாவுக்குச் செய்தி தெரிவிக்கப் பட்டதும் பத்தே நிமையத்தில் பறந்தோடி வந்தாள், கலகலப்பும்
மகிழ்ச்சியும் மிக்கவளாக!
அரைமணி நேரம்
அக்குடும்பத்துடன் இருந்துவிட்டுக் கிளம்பினோம்! வரும்போது, பெற்றோரின்
மூட நம்பிக்கையால் ஓர் அறிவு மிகுந்த பெண் தீராத நரம்புக் கோளாற்றுக்கு ஆளாகி
விடாமல் காப்பாற்றிய மகிழ்ச்சி எங்கள் நெஞ்சை நிறைத்திருந்தது.
குறிப்பு : அறிவியல் ஆய்வறிஞரான ஆபிரகாம் தொ. கோவூர்
அவர்கள் தம்முடைய நிகழ்வாய்வு(case study)களைக் கொண்டு எழுதிய 'கடவுளர், பேய்கள், ஆவிகள்' (Gods Demons and Spirits) என்ற நூலில் இந்த உண்மைக் கதை உள்ளது.