தமிழில் பிறமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழில் பிறமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 8 மே, 2008

பிறமொழிச்சொற்கள் உரியபொருளில்தான் கலந்தெழுதப் படுகின்றனவா? - மற்றும் சில நெஞ்சறிந்த கூற்றுகள்!


தமிழில் கலந்து எழுதப்படும் அயன்மொழிச் சொற்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல் மனம்போனபோக்கில் எழுதப்படுகின்றன என்பதை மொழி ஆய்வாளர்கள், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதால் விளையும் கேடுகளில் ஒன்றாக மிகத்தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றனர்.

அறிஞர் மு.சண்முகம்(பிள்ளை) தமிழகராதி பற்றிய அறிமுகக் கட்டுரையில் தேவமைந்தன் என்னும் பேராசிரியர் பசுபதி ஐயா வடமொழிச் சொற்களின் உரியபொருள் அந்த அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளதையும் அதன்வழி அவ்வடசொற்கள் தொடர்பற்ற பொருளில் தமிழில் கலந்தெழுதும் போது பயன்படுத்தப் படுவதை அறிய முடிவதையும் எடுத்துக்காட்டி யிருந்தார்கள். இதைத் திண்ணையில் வந்த அக்கட்டுரையைப் படித்தவர் அறிவர்.

அவர் எங்களோடெல்லாம் சேரமாட்டார்; தனிஆவர்த்தனம் தான் - என்றால் தவறான பொருள்தரும். ஏனெனில், ஆவர்த்தனம் = மறுமணம். ஆவர்த்தித்தல் என்றால் மறுமணம் செய்து கொள்ளுதல்.
பிரமாதம் என்றால் தவறு, பேரிடர், அளவில்மிக்கது,விழிப்பின்மை என்பனவே பொருள்களாம். இச்சொல் எவ்வளவு தவறாகப் பயன்படுத்தப் படுகிறது!
உதாசீனம் என்பதற்கு விருப்பு வெறுப்பில்லா நடுநிலை என்று பொருள்.
அபிமான புத்திரன் என்பதற்கு வளர்ப்பு மகன், வைப்பாட்டி மகன் எனபனவே பொருள்களாம்.
பாமரன் என்றால் அறிவில்லாதவன் என்றே பொருள்.
பிதாமகன் என்றால் தந்தையைப் பெற்ற பாட்டன் என்பதே பொருளாம்.
மிகுதியாக, விருப்பத்தின்படி என்பவற்றையே பொருள்களாகக் கொண்ட யதேச்சை என்ற சொல், தற்செயல், தற்செயலாக என்ற பொருள்களில் எழுதப்படுகிறது.
சிரமம் என்றால் களைப்பு,, உழைப்பு, படைக்கலப் பயிற்சி என்பனவே பொருள்களாம். இப்படி நிறைய சொற்களை எடுத்துக்காட்டலாம்
இவற்றைப் போன்றே தமிழில் கலந்துள்ள ஆங்கிலம் உட்பட மற்றமொழிச் சொற்களுள்ளும் அவற்றிற்குரிய பொருள் தவிர்த்து விருப்பத்திற் கேற்ப வேறு பொருள்களில் கையாளப் படும் சொற்களும் உள்ளன.
அந்தஸ்து என்ற சொல் சமற்கிருதச்சொல்லே; உருதுச்சொல் அன்று என்றே அகராதிகள் சொல்கின்றன. ஆங்கிலத்தில் தகுதி-யை ‘fitness’ என்கிறார்கள் என்பது சரியன்று. ‘fitness’ என்பதன் முதற்பொருளாக பொருத்தம் என்பதையே தருகிறது சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி (பக்கம் 389). அந்தஸ்து என்பதை ஆங்கிலத்தில் ‘status’ என்று சொல்கிறார்கள் என்பதும் சரியன்று. ஏனெனில், மேற்குறித்த அகராதி ‘status’ என்பதற்கு முதற்பொருளாக சமுதாயப் படிநிலை என்றே குறிக்கின்றது. The Compact Oxford Reference Dictionary – யில் ‘status’ என்பதற்கு முதற்பொருளாக ‘a person’s social or professional position in relation to others’ –எனக் கொடுக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.


தமிழ்மொழியில் எழுதும்போதும் பேசும்போதும் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்பது எப்படி வேறுபாட்டை உண்டாக்கும்? இவ்வாறு கூறுவது ஆக்கிரமிப்பு என்பது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?

‘Minor irrigation’ என்பதை ‘Small irrigation system’ என மாற்றி எழுதி, அதைத் தமிழில், சிறுநீர்ப் பாசனம் என எள்ளல் மொழிபெயர்ப்பு செய்துகொண்டு, அதுவே மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்று தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டு, சிறுநீர்ப் பாசனம் என்பது சங்கடப் படுத்துகிறது என்று எழுதி உலகின் முதற்றாய்மொழி என்றும் உயர்தனிச் செம்மொழி என்றும் போற்றப்படும் தமிழ்மொழியை இழிவுறுத்த முயல்வது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும் என்பார் ஒருதனிப் பேராசானான வள்ளுவப் பெருந்தகை.

தாம் ஏற்க விரும்பாத கருத்தை ஒருவர் கூறினால், அதை வெறி என்பதையும், அதனால் தமிழ் அழிவை நோக்கியே போகும் எனச் சாவமிடுவதையும் எடுத்துக் காட்டுவதைப் பொய்யுரைப்பதாகக் கூறுவது நெஞ்சறிய உண்மை உரைப்பதாகுமா?

முரண்படும் கருத்துக்களை முறையாக மறுக்காமல், மேலாளுமை மனவுணர்வோடு சொற்களால் இழிவுசெய்ய முனையும் போக்கை இருபத் தொன்றாம் நூற்றாண்டில் ஏற்கமுடியுமா?

கார்கிலைப் பெயரில் கொண்டவர் என்பது சுட்டும் முறைகளில்  ஒன்றுதானே? அங்ஙனம் சுட்டுவதைக் கார்கில் மேல் எரிச்சல் என இட்டுக் கட்டி ஏற்றிக் கூறுவது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?

செத்தமொழி தாங்கிகள் எனக் குறிப்பிட்டது அறச்சினத்தின் வெளிப்பாடே. அவ்வறச்சினத்திற்குப் பல்வேறு தமிழறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ள நயன்மையான பல மறுக்க வியலாக் காரணங்களும், அவற்றிற்கான சான்றுகளும் உள. ஒரு சான்றாக, பரிதிமாற்கலைஞரின் தமிழ்மொழியின் வரலாறு என்ற நூலில் வடமொழியர் தமிழுக்கு எதிராகச் செய்த கெடுங்கேட்டுச் சூழ்ச்சி வினைப்பாடுகள் விளக்கப்பட் டுள்ளதைக் காட்டலாம்.

மொழி தொடர்பான செய்தியில், எவ்வகைத் தொடர்பும் இன்றித் திடுமென இந்து மதத்தின்மேல் காழ்ப்புணர்ச்சி எனப் பொருத்தமும் பொருளுமற்ற ஒன்றைக் கூறித் துணைதேட முயலும் போக்கை நெஞ்சறிய உண்மை கூறுவதாகச்சொல்லமுடியுமா?

அபத்தமான உச்சரிப்புக்கு அடிகோலக்கூடிய தனித்தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று அபத்த மாற்றங்களில் ஈடுபட்டு.. என்ற சொற்றொடர் தனித்தமிழை இழிவு படுத்தவில்லை என்ற கூற்று நெஞ்சறிய உண்மையைச் சொல்வதாகுமா?

முறையான தக்க பொருந்திய மறுமொழி கூற இயலாத நிலையில், உங்களால்தான் தமிழுக்கும் பெருஞ்சித்திரனாருக்கும் இழுக்கு எனக்கூறும் எரிச்சல் கூற்றால், ஆழ்மனத்தில் மூவர்மாட்டும் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சிதானே வெளிப்படுகிறது.

கருத்துக்களைக் கருத்துக்களால் நேர்கொள்ள வேண்டும் தானே? அதை விடுத்து, தான் விடைகூறுவது ஏதோ அருட்கொடை புரிவதாக  மேலாளுமை மனவுணர்வில் தருக்கிக் கொள்வதும் தொடர்பே இல்லாமல் மதவுணர்வை எழுப்பிக் குளிர்காய முயல்வதும் வேறுபாட்டை விளைவிக்கும் முயற்சிகளாக அமைகின்றனவே யன்றி முன்னேற்றமான போக்கைக் காட்டுவனவாக இல்லையே!

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. என்பார் பொதுமறை ஆசான்.                                                    -----------------------------------------------------------------------

ஞாயிறு, 13 ஏப்ரல், 2008

ஏமாற்றுத் தமிழ்ப்பற்று!


காலஞ்சென்ற மதிப்பிறகுரிய திரு. இராம சம்பந்தம் ஐயா 'தினமணி'யின் ஆசிரியர் பொறுப்பினின்றும் நீங்கிய பின்னர், அந்நாளேட்டின் போக்கை நடுவுநிலைத் தமிழர்கள் கவனித்து வருகின்றனர்.
7-7-2007ஆம் நாள் தினமணியின் ஆசிரியருரை தமிழில் ஆங்கிலம் கலக்கப் படுவதைப் பற்றி மிகவும் கவலை தெரிவித்தது. ஊடகங்களும் இதழ்களும் தமிழ்மொழியின் அழிவிற்கு வழிகோலுவதாகக் கூறியது. தமிழைக் காப்பாற்ற வேண்டுமெனக் கவலைப்பட்டது. ஆனால், அன்றைய தினமணியிலும் அதற்குப்பின் வந்தவற்றிலும் தங்கு தடை தயக்கமின்றி ஆங்கிலச் சொற்கள் கலந்தெழுதியதை - எழுதிவருவதை - எவரும் இல்லையென மறுக்க இயலாது. இப்போக்கே, அந்த ஆசிரியருரைப் போலித் தனமாகவும் ஏமாற்றுத் தனமாகவும் எழுதப் பட்டுள்ளது என்பதைத் தெளிவாக்குகின்றது. துணுக்கத் துணுக்கான குற்றச் செய்திகளைத் தொகுத்து அதற்குக் 'கிரைம் செய்திகள்' என்று தினமணி தலைப்பிட்டதும் கூட அந்த ஆசிரியருரை எழுதப் பட்டதற்குப் பின்னர்தான்!
இவையிருக்க, 18-3-2008ஆம் நாள் தினமணியில் "தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்" என்ற தலைப்பில் ஓர் கட்டுரை வந்தது. ஈர்ப்பான தலைப்பில் எழுதப்பட்ட அக்கட்டுரையில், தமிழ் சீரழிக்கப் படுவதற்குக் கவலைப்பட்டு எழுதுகின்ற ஏடுகளில் காணப்படும் பல்வேறு பிழைகள் சிரிப்பை வரவழைப் பதாகக் கூறப்பட்டிருந்தது. அக்கூற்று ஓரளவு உண்மையே! ஆனால், அக்கட்டுரையாசிரியை, தமிழ்காக்கும் நோக்கில் எழுதுகின்ற எல்லா ஏடுகளையும் ஒட்டுமொத்தமாக அங்ஙனம் கூறுவது அவரின் அறியாப் போக்கையே காட்டுகின்ற தெனலாம்.
ஒவ்வொரு நாளேடும் இதழும் தமிழை முறையாகப் பயின்றவரைக் கொண்டு பிழைதிருத்தம் செய்தால் பல்வேறுவகைப் பிழைகளைக் களையலாம் எனக்கட்டுரையாசிரியர் கூறுவது நற்றமிழ் நலம்நாடும் நல்லறிஞர் நெடுங்காலமாக வலியுறுத்திவரும் கருத்தே.
இந்திமொழிப் பாடலை இந்திப்பாடகர் பாடும்போது இருக்கும் இனிமை தமிழ்ப்பாடகர் பாடும்போது இல்லை என யாரோ ஒரு பாடகி கூறியதாக இந்தக் கட்டுரையாசிரியை எடுத்துக் காட்டியிருக்கிறார். தமிழ்ப்பாடலைத் தமிழ்ப் பாடகர் பாடும்போது இருக்கும் இனிமை ஓர் இந்திப்பாடகர் அத்தமிழ்ப்பாடலைப் பாடும்போது இருக்க இயலாது என்ற உண்மையை எண்ணிப்பார்க்க வேண்டாவா?

அடுத்து, எம்மொழியும் எல்லாவகை எழுத்துக்களையும் பெற்றிருக்க இயலாது. ஒவ்வொரு மொழியும், அம்மொழி பேசும் மக்கள் வாழும் இடத்தின் தட்பவெப்ப நிலைகளைப் பொருத்தும் அவர்களின் உணர்வு உணவுகளைப் பொருத்தும் ஒலிகளையும் அவற்றிற்கான எழுத்துக்களையும் பெற்றிருக்கின்றன. சீன எழுத்தின் ஒலிப்பை வேறு எந்த மொழி பெற்றுள்ளது?

ஒருமொழி தன் இயல்பிற்கேற்காத ஒலியினை ஏற்பின் நாளடைவில் தனக்குறிய சீர்சிறப்புத் தன்மைகளை இழந்து, சிதைந்து வேறோர் கலவை மொழியாகிப்போகும். இதுவேநடைமுறை உண்மையென மொழியறிஞர்கள் விளக்குகின்றனர்.
'' என்ற எழுத்து தமிழ் எழுத்தில்லை என்று புறக்கணிக்கும் தமிழ்வெறியால் தமிழுக்குப் பேரிழப்பு என்று கட்டுரையாசிரியை சீறுகிறார்! உண்மை அறியாமல் உணராமல் வரம்பு கடந்து வாயவிழ்க்கும் கூற்றே இது! தமிழ் என்பதை ஆங்கிலத்தில், "டாமில், டமில், டாமிள், தமில், தமிள், தமிஷ், தமிஸ்..." -என்றெல்லாம் தானே எழுதுகின்றனர்! பலுக்குகின்றனர்! '' என்னும் தமிழ் எழுத்தைப் புறக்கணிக்கும் ஆங்கில வெறியால், ஆங்கிலத்திற்குப் பேரிழப்பு என அம்மையார் கூறுவாரா? ', , ன..' போன்ற எழுத்துக்களைப்புறக்கணிக்கும் சமற்கிருத வெறியால், சமற்கிருதத்திற்குப் பேரிழப்பு என அந்த அம்மையார் எழுதிவிடுவாரா?

பிற மொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழிபெயர்த்துத் தமிழை வளப்படுத்த வேண்டும் என்று கூறுவதுதானே சரி. அவ்வாறின்றி, பிறமொழி எழுத்துக்களையும் பிறமொழிச் சொற்களையும் தமிழ் ஏற்றுக்கொள்ள வேண்டுவென வற்புறுத்துவது எவ்வாறு சரியாகும்? அவ்வாறு அயல் எழுத்தும் அயற்சொற்களும் கலந்தால், தமிழ் தன் இயல்பு கெடும்; சீர்மை குன்றும்! தமிழை அடையாளந் தெரியாத மொழியாக்கி அழித்தொழிக்கும் செயலாகவே அம்முயற்சி அமையும் அன்றோ?
"பற்றுதலுக்குப் பதிலாய் வெறியை மேற்கொண்டால் தமிழ் அழியும்" என்று சாவமிடும் கட்டுரையாசிரியை, 'பற்று'க்கும் 'வெறி'க்கும் என்ன விளக்கங்களை வைத்திருக்கின்றார் என்பதையும், அவற்றை அளந்து காட்ட வைத்திருக்கும் அளவுகோல் என்ன என்பதையும் வெளிப்படுத்தாமல் கமுக்கமாக வைத்துக்கொண்டு விட்டார்.
"தகுதி" என்ற தகைசான்ற சொல்லிருக்க, "அந்தஸ்து" என்ற அயற்சொல்லைத்தான் எழுதுவேன் - என்று அடம்பிடிக்கும் கட்டுரையாசிரியை தமிழை வளர்த்து உலகம் முழுதும் பரப்ப விரும்புவதாகக் கூறுவதைப் படிக்கையில் சிரிப்புமட்டுமா வரும்? உணர்வுமிக்க தமிழர்க்குச் சீற்றமும் வருவது இயல்பே யன்றோ?
தமிழை முறையாக அறிந்துணரவில்லையெனக் கூறிக்கொண்டே, தமிழில் பிறமொழி எழுத்துக்களையெல்லாம் கலந்தெழுத வேண்டுமென வற்புறுத்துவதற்கும், அவ்வெழுத்துக்களை எப்படியெல்லாம் ஒலிக்கவேண்டுமென வலிந்த ஆய்வு(?) மேற்கொண்டு வழிவகை கண்டு வலியுறுத்துவதற்கும் இம்மண்ணில் யாருக்கும் எந்தத் தடையுமில்லையே!
இவர்கள், சமற்கிருதத்தில், உலகிலுள்ள எல்லா ஒலிகளுக்குமான பல்வேறு மொழி எழுத்துக்களையும் சேர்த்துக்கொள்ள வலியுறுத்தியும், அவற்றை ஒலிப்பதற்கான வழிமுறைகளை ஆய்வு செய்து கண்டுபிடித்துக் கூறியும் தொண்டாற்றலாமே! இவற்றை விளக்கி, "சத்தான சமற்கிருதம் சகமுழுதும் பரவட்டும்" என்ற தலைப்பில் 'தினமணி'யில் கட்டுரை எழுதித் தெளிவுறுத்தலாமே? விரைவில் செய்வார்கள் என்று நம்புவோம்!
---------------------------------------------------------------------