‘தினமணி’ நாளிதழுக்கு…
அண்மைக் காலமாகத் ‘தினமணி’ நாளிதழில் வரும் கட்டுரைகளைப் படிக்கும்போது,
‘ஐயோ, தினமணியே! உன்நிலை இப்படி ஆகிவிட்டதே! என அந்த நாளிதழின்பால் இரக்கம்கொள்ளச்
செய்கின்றன. சிலநாட்களுக்குமுன் வந்த அகத்தியர் பற்றிய நடுப்பக்கக் கட்டுரை உண்மைத்
தொடர்பற்ற அறிவுச்சாரம் அறவே அற்ற மூடநம்பிக்கை பொதுளிய பேதையின் பிதற்றல்களாகவே இருக்கக்
கண்டோம்! அதனினும் 20-2-2025இல் அவ்விதழில் ‘மும்மொழிக் கொள்கை அவசியம்’ எனுந் தலைப்பில்
கட்டுரை வடிவில் தந்துள்ளதைப் பொருளற்ற சொற்குவியலாகக் காண்கின்றோம்.
மதிப்புமிக்க பெரியோரான அறிஞர் பெருமக்கள் சொக்கலிங்கம், சிவராமன், ஐராவதம்
மகாதேவன், இராம திரு.சம்பந்தம் முதலானோர் ஆசிரியர்களாக இருந்து அரிய விருந்தளித்த நாளிதழின்
இற்றை நிலை இப்படி ஆகிவிட்டதை எண்ணி வருந்துகின்றோம். இக்கால், அவ்விதழில் பேதைப் பிதற்றல்கள்
கட்டுரைகளாக வருகின்றன.
‘தினமணி’யில் மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் அம்மையார் ஒருவர், ஒரு
மொழியை, விரும்பிப் படித்தறிந்து கொள்வதற்கும் அதையே கட்டாயமாகத் திணித்துப் படித்தாகவேண்டும்
என்று ஆணையிடுவதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருக்கவில்லை.
நாட்டிலுள்ள குடிகள் தம் தாய்மொழியைக் கட்டாயம் படித்தாக வேண்டும். அது
இன்றியமையாதது; மக்கள் அனைவர்க்குமானது.
இரண்டாவதாக ஒரு மொழியைப் படிக்க வேண்டிய நிலை அனைவருக்குமானதன்று. மக்கள்
எல்லோருக்கும் இரண்டாம் மொழி தேவையில்லை என்ற போதும், உலகளாவிய ஒரு மொழியை, அண்மைக்கால
அறிவியல் முன்னேற்றம்வரை அறிந்துகொள்ள உதவும் ஒரு மொழியை, உலக இலக்கியங்களில் பெரும்பாலனவற்றை
அறிய உதவும் ஓரு மொழியை, உலக மக்களில் பெரும்பாலாரோடு தொடர்பு கொள்ள உதவும் ஒரு மொழியை
இரண்டாம் மொழியாகப் படிக்கலாம் என்று மக்கள் நலம்நாடும் நல்லறிஞர்கள் முடிவுசெய்ததின்
அடிப்படையிலேயை தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகின்றது.
இனி, மூன்றாம் மொழி படிக்கவேண்டும் என்பது அவரவர் விருப்பத்தையும் தேவையையும்
பொருத்ததாகும். மூன்றாவதாக ஒரு மொழியைப் படிக்க விரும்புவோர், மூன்றாம் மொழி மட்டுமன்றி
இன்னும் எத்தனை மொழிகளும் கற்கலாம். அதனை யாரும் தடைசெய்யவில்லை. தமிழ்நாட்டு இந்திப்
பரப்புரை அவையில் விரும்புவோர் தடையின்றி இந்தி படிப்பதைப் பார்க்கின்றோம்.
இன்னொரு மொழியைப் படிப்பது தேவை
என்ற நிலையினரும் அவரவருக்குத் தேவையான மொழியைத் தேர்ந்து படிப்பதில் தவறில்லை. அப்படித்தான்
மொழிஞாயிறு தேவநேயப்பாவாணரும் அப்பாத்துரையாரும் சோமசுந்தர பாரதியாரும் மறைமலையடிகளும்
பூரணலிங்கமும் தினமணிக் கட்டுரையார் குறிப்பிடும் பிறரும் இரண்டுக்கும் மேற்பட்ட மொழிகளைக்
கற்றனர். யாரும் அதைத் தடைசெய்யவில்லை. தடைசெய்யப் போவதும் இல்லை.
ஆனால், ஒட்டுமொத்தமாக எல்லாரும் மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்கவேண்டுமென்று
வலியுறுத்துவது, கட்டாயப்படுத்துவது, மாந்த உரிமைகளை மதிக்காத போக்காகும். இவ்வுலகிகில்
அறிந்துகொள்ள வேண்டிய பல்வேறு அறிவுநிலைகள் இருக்க, குறுகிய வாணாள் கொண்ட மாந்தருக்குத்
தேவையற்ற நிலையில் மூன்றாவதாக, நான்காவதாக பிற மொழிகளைக் கற்க வேண்டுமெனக் கட்டாயப்
படுத்துதலை அவர்கள்மேல் ஏற்றும் கூடுதல் சுமையேன்பதே சரியாகும்.
பிறமொழி இலக்கிங்களை இலக்கணங்களை அறிய விரும்பும். மொழி ஆய்வாளர்கள் அவர்களுக்கு
வேண்டும் மொழிகளைப் படித்தறிந்து கொள்ளலாம். எத்தனை மொழியும் அறிந்து ஆய்வு செய்யலாம்.
ஆனால், எல்லாரும் இந்தியை சமற்கிருதத்தைதப் படிக்கவேண்டும் என்று தந்திரமான கல்விக்
கொள்கையால் கட்டாயப் படுத்துவது மாந்த உரிமை மீறும் செயலாகும். தமிழ்நாட்டுச் சிற்றூரிலுள்ள
சிறுநில உழவர் இரண்டாம் மொழி ஆங்கிலம் படிப்பதே அதிகம்.
இனி, இந்த இந்திய நாட்டில் ஒற்றுமை ஒரேநிலை என வலியுறுத்தி ஏமாற்றுவோர்
அப்படி உண்மையிலேயே ஒரே நிலையைக் கடைப்பிடிக்கின்றனரா? தமிழரை மூன்று மொழி படிக்க வேண்டுமென்று
வலியுறுத்தும் தினமணி வகையினர்க்கு உத்தரப்பிரதேசம், பீகார் முதலிய மாநிலங்களில் கடைப்பிடிக்கும்
நிலை தெரியாது என்று சொல்லமுடியாது. அங்கெல்லாம் இரண்டாம் மொழியே படிக்கும் நிலை இல்லை.
இரண்டாம் மொழி சொல்லிக் கொடுக்கவே மிகப்பல இடங்களில் ஆசிரியர்களே இல்லை என்றார்கள்.
இஃது ஒரே நிலை வற்புறுத்துவோரின் ஏமாற்றுச் செயலன்றோ? அவர்களுக்கு ஒருமொழிக் கொள்கைதான்
நடைமுறையில் இருக்கின்றது. இது நாமே வலிந்து கூறும் செய்தியன்று. முன்னாள் இந்திய ஒன்றிய
அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் தெளிவுபடுத்திய நிலையாகும்.
இந்திய அரசின் அமைச்சர், புதிய கல்விக் கொள்கையை ஏற்க வில்லையென்றால் தமிழகத்திற்குத்
தரவேண்டிய நிதியைத் தரமுடியாது என்று செருக்குப் போக்கில் பேசியிருக்கின்றார். அக்
கல்விக் கொள்கை தமதிரமாகச் சமற்கிருதத் திணிப்பு செய்வது வெளிப்படையாகத் தெரிகிறது.
‘ஒரே இந்தியா ஒரே மொழி’ என்ற கூச்சல் கூற்றும் எங்கள் தாய்த் தமிழை அழிக்கும் போக்காகும்
என்ற அச்சம், வடஇந்திய அரசியலாரைச் சரியாகப் புரிந்துகொண்டவர்களுக்கு ஏற்படுவது இயல்பானதாகும்.
அஞ்சுவது ஆஞ்சாமை பேதைமை என்பார் தமிழ் இறைவனார்.
வடநாட்டு இந்தி மாநிலங்களில் ஒரு மொழிக்கொள்கையே நடைமுறையில் உள்ளது. அவர்கள்
வேறு எந்த மொழியும் படிக்காத நிலையில் அவர்களிடம் போய் எந்த மேதையும், பேதையும் கோதையும்
பல மொழிகள் கற்பதே நல்லதென்று கொள்கை பரப்புரை செய்வதில்லை. அரசியல் ஏமாற்றுக்காரர்களும்
அவர்களுக்குத் துணைபோவாரும் தமிழ்நாட்டில்தான் பல மொழி படிக்கப் பரப்புரை செய்கின்றனர்.
1960இன் மொழிக்கொள்கையை இப்போதும் பின்பற்றக் கூடாதாம்! சரியாக வரலாறு
தெரிந்து கொள்ளவில்லை. 1965இல் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தி எதிர்ப்புப்
போர் அப்போது ஆட்சியில் இருந்தோர் அளித்த உறுதிமொழிக்குப் பின்தான் முடிவுக்கு வந்தது.
தாய்மொழி காக்க நூற்றுக் கண்ணக்கானவர் உயிர் ஈகம் செய்ததை உலகம் பார்த்து வியந்தது.
இப்போது தந்திரமான முறையில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மும்மொழித் திட்டம் என்று
தமிழகத்தில் திணிக்கப்பட்டால் தமிழகம் எழும், போராடும்! பல்லாயிரம் உயிர்ளை ஈகம் செய்தாவது
தாய்த்தமிழைக் காக்கும்! இஃது உறுதி! என்பதை இந்திய அரசியலாருடன் தினமணி வகையினரும்
அறிந்து கொள்ள வேண்டும்!
---------------------------------------------------------------------------------------------------------------