வெள்ளி, 28 டிசம்பர், 2012

தங்கப்பா ஐயாவுக்கு இரண்டாம் முறையாக இந்திய இலக்கிய அமைப்பின் பரிசு


தங்கப்பா ஐயாவின், “Love stands alone” நூலுக்கு இந்திய அரசு இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாதமி) பரிசு!

          இந்திய அரசின் இலக்கிய அமைப்பு (சாகித்திய அகதமி) 2012ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான பரிசுக்குரிய நூலாக, நம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வாழ்வியல் அறிஞர்,பாவலர் ம. இலெனின் தங்கப்பா ஐயா எழுதிய, “Love stands alone” என்னும் நூலைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.

இந்நூல், தேர்ந்தெடுத்த கழக(சங்க) இலக்கியப் பாடல்களின் அரிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூலாகும். இந்நூலை உலகப்புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

இப்பரிசு, ஐம்பதாயிரம் உருபாவுக்கான காசோலையும், ஒரு செதுக்கப்பட்ட செப்புப் பட்டயமும் கொண்டதாகும். சென்ற ஆண்டு தங்கப்பா ஐயாவின் சிறுவர் இலக்கிய நூலான சோளக் கொல்லைப் பொம்மைக்கு இந்த இலக்கிய அமைப்பின் பரிசு கிடைத்ததை முன்பே அறிவோம்.
    
நம் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு தங்கப்பா ஐயாவின் தகுதிக்குரிய பரிசுகள் இன்னும் அளிக்கப்பட வேண்டும் என்ற விழைவையும் குறிப்பிட விரும்புகிறோம்.  தங்கப்பா ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன் திகழ்ந்து இன்னும் பல அரிய ஆக்கங்களைத் தரவேண்டுமென்ற நம் அவாவையும் பணிவுடன் அறிவிக்கின்றோம்.

------------------------------------------------------------------------

இரட்டை நினைவேந்தல் நிகழ்ச்சி


   இரட்டை நினைவேந்தல் நிகழ்ச்சி

      தூயதமிழ்த் திங்களிதழ் தென்மொழியைத் தொடங்கி, அதன் ஆசிரியராக இருந்து அவ்விதழை மொழி, இன, நாட்டு உரிமை மீட்பு இயக்கமாக நடத்தியவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஐயா ஆவார். அஞ்சா நெஞ்சினரான அவர், தமிழ் தமிழர் தமிழ்நாட்டு நலன்களுக்காகப் பல்வேறு போராட்டங்கள் நடத்தியவர்; பிறர் முன்னெடுத்த போராட்டங்களில் பங்கு கொண்டவர். அவை காரணமாகப் பலமுறை சிறைப்படுத்தப்பட்டவர். ஈடெடுப்பற்ற தூயதமிழ்ப் பாவலர்; தமிழறிஞர்; இணையற்ற எழுத்தாளர்; எவரையும் ஈர்க்கும் ஒப்பற்ற சொற்பொழிவாளர்; எதற்கும் எள்ளளவும் அஞ்சாத போராளி!
      அவர் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அவருடைய துணைவியாரும் இலக்கக் கணக்கான தமிழுள்ளங்களின் இணையற்ற அன்புத் தாயுமான தாமரை அம்மையார் தம் 77ஆம் அகவையில் தி.பி2043 நளி22 * 07-12-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
      தூயதமிழ் நெஞ்சங்கள் அனைவரும் நன்கு அறிந்தவரும், தமிழிலக்கணப் பெரும்புலவரும், சென்னை மேடவாக்கம் தமிழ்க்களத்தில் தமிழ் இலக்கணம் இலக்கியம் தொடர்பாக தொடர்ந்து நடந்த கூட்டங்களில் விளக்கமளித்து வந்தவரும், மறைமலையடிகளார், பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார் வழியில் தொடர்ந்து தொண்டாற்றிவந்தவரும், இருபத்தொரு நூல்களின் ஆசிரியரும், இரண்டு தூயதமிழ் இதழ்களின் நிறுவுநரும் ஆசிரியருமாயிருந்து அரும்பணி யாற்றியவரும், சிறந்த பாவலருமாகிய திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் தம் 70ஆம் அகவையில் தி.பி 2043 நளி 8 23-11-2012 வெள்ளிக்கிழமையன்று மறைவுற்றார்.
      தி.பி 2043 சிலை(மார்கழி)7 * 22-12-2012 காரிக்கிழமை அன்று தாமரை அம்மையார், இறைக்குருவனார் ஐயா ஆகிய இருவரின் நினைவேந்தும் இரட்டை நினைவேந்தல் நிகழ்வு சென்னையில் அடையாறு இராசரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. 
     

தாமரை அம்மையார் தென்மொழி அன்பர் ஒவ்வொருவரையும் தனிப்பட்டவகையில் நன்கு அறிந்தவராவார். அவர்கள் அனைவரிடத்தும்
அன்பும் பாசமும் கொண்ட இணையற்ற தாயாவார். அவர்கள் ஒவ்வொருவரையும் காணுந்தொறும் உளமார்ந்த அன்பும் பாசமும் செறிந்த உசாவல்களால் திணறச் செய்யும் அன்னையாகத் திகழ்ந்தவராவார்.
      யான் தாமரையன்னையாரைக் கடந்த நாற்பத்தொன்பது ஆண்டுகளாக அறிவேன்! கடலூரிலிருந்து தென்மொழி இயங்கியபோது ஞாயிற்றுக்கிழமை தோறும் பாவலரேறு ஐயாவுடன் தென்மொழிக் குடும்பத்துடன் - இருந்திருக்கின்றேன். தென்மொழி சென்னையிலிருந்து வெளிவரத் தொடங்கிய பின்னர் அடிக்கடி சென்னை செல்ல இயலாவிட்டாலும் வாய்ப்பு நேரும் போதெல்லாம் ஐயாவையும் அம்மாவையும் கண்டு பேசி அவர்கள் அன்பில் திளைத்திருக்கிறேன்.
      புறநானூற்றில் அதியமான் நெடுமானஞ்சியைக் குறித்து ஒளவையார் பாடிய பாடல் ஒன்றின் முதல் மூன்று வரிகள் இவை:
ஒருநாள் செல்லலம்; இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று, பலரொடு செல்லினும்
தலைநாள் பொன்ற விருப்பின்ன் மாதோ!
இவ்வரிகள் பாவலரேறு ஐயா, தாமரையம்மையாருக்கும் மிகவும் பொருந்துவனவாகும்.
      பாவலரேறு ஐயாவின் மறைவிற்குப்பின், சென்னைப் பாவலரேறு தமிழ்க்களத்தில் தி.பி.2033 சுறவம்6 * 19-1-2002 அன்றி நடைபெற்ற விழாவில், உலகப் பெருந்தமிழர் ஐயா பெருஞ்சித்திரனார் அவர்களின் தமிழ்மொழி, இன, நாட்டு உரிமைநலச் செயற்பாடுகளுக்கு நலம் புரக்குநராகத் தொண்டுள்ளத்தோடு துணைநின்றமையைப் பாராட்டிச் சிறப்பித்து அம்மா அவர்கள் தம் கையால் எனக்குப் பாராட்டுப் பட்டயம் அளிக்க யான் பெற்றதை நினைவு கூர்கையில் கணகள் கலங்குகின்றன. தமிழ்நெஞ்சங் கொண்ட அன்பர்களை எந்த வேறுபாடுமின்றி நடத்தும் ஈடற்ற அன்புள்ளம் பெற்றவராக அம்மா இருந்தார்; இவ்வகையில் அவருக்கு இணை வேறெவருமிலர்.
      சென்ற ஆண்டு சென்னை மேடவாக்கம் தமிழ்க்களத்தில் நடைபெற்ற ஐயாவின் நினைவேந்தல் கூட்டத்தில், ஐயாவுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ள என்னை அழைத்திருந்தனர். அங்கு ஐயாவைப் பற்றிய நினைவுகள் சிலவற்றைப் பற்றி அவர் எழுதிய பாடல்களுடன் உணர்வெழுச்சியுடன் குறிப்பிட்டு உரையாற்றினேன்.
அம்மா பழைய நினைவுகளில் ஆழ்ந்ததோடு, நான் பேசியபோது உணர்வுப் பெருக்கில் தட்டுத்தடுமாறிய நிலைகண்டு, என் உடல்நிலை குறித்து மிகவும் கவலைப்பட்டார்கள்.
      அம்மாவின் நல்லனபுப் பணபுகள் பற்றிப் பல செய்திகளைக் கூறலாம். பாவலரேறு சிறை சென்ற போதெல்லாம் குடும்பத்தையும் தென்மொழியையும் கட்டிக்காத்துவர அவர் பட்ட துன்பங்கள் கொஞ்சநஞ்சமல்ல. ஐயாவின் போராட்டங்கள் பலவற்றுள் அம்மாவும் பங்கேற்றிருக்கிறார்கள்; சிறைக்கும் சென்றிருக்கிறார்கள். ஐயாவைப் பற்றி யான் எழுதும் நூல் முழுமையுற்று வெளிவருமாயின், அம்மாவைப் பற்றி மேலும் செய்திகளை நினைவுகூர்வேன். அம்மா மறைவுற்றபோது யான் எழுதிய கையறுநிலைப் பாடல் இது:   

அன்பின் அடையாளம்; அஃகலிலா பாசத்தின்
இன்னுருவம்; ஈடில்லா நற்றாயே!  என்றும்
தமிழ்நெஞ்சர் ஏற்றுகின்ற தாமரை அன்னாய்!
அமிழாப் புகழ்சேர் அருளே!  இமிழுலகின்
துன்பங்கள் போதுமெனத் தூங்கினிரோ? அன்றியின்றே
அன்பழைப்பு ஐயா விடுத்தாரா?  என்செய்வோம்
எங்களுக் கிங்கார் இனி?      

     


1965-ஆம் ஆண்டு. மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய நேரம். சென்னையில், நடுவண் தொடர்வண்டி நிலையத்திற் கருகிலிருந்த ஒற்ற்றைவாடை அரங்கில் மறுநாள் நடக்க இருக்கும் தொடர்வண்டி மறியல் தொடர்பாக மாணவர்களின் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்து கலந்துகொண்டிருந்தனர். ஒவ்வொரு கல்வி நிலையம் சார்ந்த மாணவரும் உணர்வுக் கொதிப்போடு போராட்டத்தை அரசு அஞ்சித் திகைக்க மேலெடுத்துச் செல்வதைப்பற்றி உரையாற்றிச் செல்கின்றனர்.
      கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மாணவர், அடுத்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்துள்ள மாணவர் பேசுவார் என்று அறிவித்தார். மேடைக்கு வந்த அந்த நெடிய அடர்ந்த மீசை தாடியோடிருந்த மாணவர், பேசத்தொடங்கினார். கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்த குரலோடு உணர்வுப் பொறி பறக்கப் பேசிக்கொண்டிருந்த போது, அந்த ஒலிவாங்கிப் பழுதாகிக் கரமுர என ஒலி எழுப்பித் தொல்லை கொடுக்க, அதைத் தம் கையால் ஓங்கி அடித்துக் கீழே தள்ளிவிட்டு ஒலிவாங்கி இல்லாமலே ஓங்கி உயர்ந்த குரலெடுத்துப் பேசத் தலைப்பட்டார் அவர்! அவர் தாம் தமிழிலக்கணப் பெரும்புலவர், திருக்குறள்மணி ஐயா இறைக்குருவனார் அவர்கள். 
     அவரைப் பற்றிய பல செய்திகள் நினைவுக்கு வருகின்றன. அவர் மதுரையில் இருந்து இதழ்கள் நடத்தியமை, அவருக்கும் பாவலரேற்றின் மூத்த மகள் பொற்கொடியாருக்கும் திருமணம் நிகழ்த்த - பாவலரேறு ஐயா எனக்களித்த சிறுபணியை நான் ஐயா கூறியவாறே நிறைவேற்றி ஒரு சிறிய பங்காற்றியது, உலகத் தமிழ்க் கழகத்தில் அவர் ஈடுபாட்டோடு ஆற்றிய பணி, உலகத் தமிழின முன்னேற்றக் கழகத்தில் அவருடை உழைப்பு போன்றவை பற்றியெல்லாம் நிறைய செய்திகள் உண்டு.
      தூய உணர்வாளரான அவர் இந்தி எதிர்ப்பு, மனு எதிர்ப்பு, ஈழ விடுதலை துணைதரவுப் போராட்டங்கள் பலவற்றில் கலந்துகொண்டு சிறை
சென்றிருக்கிறார். தமிழுலகில் அவர் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்.
      இவ்விருவரின் சிறப்பைப் போற்றும் நிகழ்வாக நடந்த இரட்டை நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்களும், பேராசிரியர்களும், தமிழறிஞர்களும், ஆய்வாளரும் உரையாற்றினர். அரங்கில் தென்மொழி அன்பர்கள் உள்ளிட்ட தமிழுள்ளங்கள் நிறைந்திருந்தனர்.

----------------------------------------------------------------------