நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 7 அக்டோபர், 2008

கழுதை ஏர் உழவு!


காளைமாடுகள் ஏர் உழுவதைப் பார்த்திருக்கின்றோம். எருமைகள் ஏர் உழுவதும் சில இடங்களில் உண்டு. இப்போது சில இடங்களில் பால் மறுத்த ஆக்களையும் கூட ஏர் உழப் பயன்படுத்துவதையும் பார்த்து வருகிறோம். ஆனால், கழுதை ஏர் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? 
இப்போது எங்கேனும் கழுதையைக் கொண்டு ஏர் ஓட்டுகிறார்களா என்று தெரியவில்லை. ஆனால், ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஏரில் கழுதையைப் பூட்டி உழும் வழக்கம் இருந்திருக்கின்றது.
தமிழரின் பழந்தமிழ் இலக்கண இலக்கியமாக இருப்பது தொல்காப்பியம். இதில் நேரடியாகக் கழுதை ஏர் பற்றி ஏதும் கூறப்படவில்லை. தொல்காப்பிய நூற்பா எண் 1037-இல், 12ஆம் அடியாக "மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும்" என்று உள்ளது. இதற்கு, 'நிலைபெற்ற மதிலை அழித்த மகிழ்ச்சி விழாவும்' என்பதே பொருளாகும். (மன் எயில் = நிலைபெற்ற மதில்).
 "மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும்" என்பதற்குப் பொருள் எழுதிய உரை ஆசிரியர் நச்சினார்க்கினியர், "மாற்றரசன் வாழ்ந்த மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தி மங்கல மல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடு மங்கலமும்" என்று கூறுகின்றார்.
போரிட்ட இரண்டு அரசர்களில், வெற்றி பெற்ற அரசன், பகையரசனின் கோட்டை மதிலை அழித்து, கழுதையை ஏரில் பூட்டி, அவ்விடத்தை உழுது, வெள்ளை வரகும் கொள்ளும் விதைப்பானாம். கழுதை ஏரால் உழுவதும், வெள்ளைவரகு கொள் விதைப்பதும் மங்கலமில்லாச் செயல்களாக நம்பப் பட்டிருந் திருக்கின்றன. அம் மங்கல மல்லாச் செயல்களைச் செய்தபின் , அந்த வெற்றி பெற்ற அரசன், நீராடுவானாம்.
நச்சினார்க்கினியர் கூறிய விளக்கத்திற்குக் கழக (சங்க) இலக்கியமாகிய புறநானூற்றில் சான்றுகள் கிடைக்கின்றன.புறநானூற்றுப் பாடல் 15இல், முதல் மூன்று வரிகள்,
"கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்" - என்பன.
நெட்டிமையார் என்ற புலவர், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழு்தியைப் புகழ்ந்து பாடியுள்ள வரிகளாக இவை உள்ளன.
இவ்வரிகள் உணர்த்தும் பொருள், "உன் பகைவருடைய பெரிய மதில்சூழ்ந்த அகன்ற இடங்க ளை, தேர்கள் விரைந்து சென்றதனால் குழிவாகிப் போன தெருக்களை, வெண்மையான வாயையுடைய புன்மையான விலங்கினமாகிய கழுதைகளைப் பூட்டி உழுது பாழாக்கினாய்!" எனபதாகும்.
அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் பொகுட்டெழினி. ஒளவையார், அவன் புகழைப் பாடுகின்ற புறநானூற்றின் 392-ஆம் பாடலில் 6,7, 8,9,10,11 ஆம் வரிகள் கீழ்க் காணுமாறு உள்ளன:
"உருகெழு மன்ன ராரெயில் கடந்து
நிணம்படு குருதி பெரும்பாட் டீரத்
தணங்குடை மரபி னிருங்களந் தோறும்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி
வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும்
வைக லுழவ வாழிய பெரிது"...  
இவ்வரிகள் கூறும் பொருள்,  "திறை கொடாத அச்சம் பொருந்திய மன்னருடைய அரிய மதிலைக் கடந்து, வஞ்சியாது சண்டையிட்டு அழித்து, தசையும் குருதியும் தோய்ந்த, குருதிப் பெருக்கால் உண்டாகிய ஈரத்தை உடைய துனபந்தரும் தெய்வங்க ளுறையும் முறைமையினை யுடைய பெரிய போர்க்களந் தோறும் வெண்மைநிற வாயையுடைய கழுதையாகிய புல்லிய விலங்கினைப் பூட்டி உழுது, வெள்ளை வரகும் கொள்ளும் விதைக்கும் இடையறாத போராகிய உழவைச்செய்யும் வேந்தனே! நீ நெடிது வாழ்வாயாக!" என்பதாகும்.
எட்டுத்தொகையுள், புறப்பொருள் வகையில் அமைந்த இன்னொரு நூல் பதிற்றுப்பத்து ஆகும். பதிற்றுப்பத்தில் 25ஆம் பாடலின் நான்காம் வரி,
"நின் படைஞர், சேர்ந்த மன்றம் கழுதை போகி" - என்றுள்ளது. 
பதிற்றுப்பத்தின் மூன்றாம் பத்தைப் பாடிய புலவர் பாலைக் கவுதமனார், இமயவரம்பனின் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் சிறப்புகளைக் கூறுகையில், "நின் காலாட் படையிலுள்ள போர் வீரர்கள் சென்று போர்புரிந்த ஊர் மன்றங்கள் கழுதை ஏர் பூட்டி உழுது பாழாக்கப் பட்டன" என்று கூறியதையே மேற்கண்ட பாடல் வரி உணர்த்துகிறது.
கழக இலக்கியங்கள், வெற்றிபெற்ற அரசன் பகையரசனி்ன் கோட்டைகளை அழித்துக் கழுதையினால் ஏர் உழுத செய்தியை இவ்வாறு தெரிவிக்கின்றன. 
இரட்டைப் பாவியங்களான சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் கூட கழுதை ஏர் உழுத கதை காணக் கிடைக்கின்றது.
சிலம்பில், நீர்ப்படைக் காதையில், 225,226, 227ஆம் அடிகள் கீழ்க் காணுமாறு உள்ளன:
"வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக்
கவடி வித்திய கழுதையே ருழவன் 
குடவர் கோமான் வந்தான்"...  
சேரன் செங்குட்டுவன், வடதிசை சென்று எதிர்த்தாரை எல்லாம் வீழத்தி வெற்றி யீட்டி, தமிழர் வீரத்தை இகழ்ந்தார் செருக்கடக்கி, கண்ணகிக்குச் சிலை அமைக்க இமயத்திலிருந்து கல்லெடுத்துக் கொண்டு திரும்புகிறான். அந்த வீரத்திருமகன் வஞ்சிநகர் வருவதை இளங்கோவடிகள் கூறுகின்ற போது, "வடநாட்டு அரசர்களின் நிலைபெற்ற மதிலை அழித்து, கழுதை ஏருழுது, வெள்ளை வரகு விதைத்த உழவனாகிய குடநாட்டினர் தலைவன் வந்தனன்" எனச் சொல்வதையே மேற்கண்ட வரிகள் உணர்த்துகின்றன.
இந்தக் கழுதை ஏர் உழவு வழக்கம், வடநாட்டிலும் இருந்திருக்கிறது. காரவேலன் என்ற கலிங்க நாட்டு அரசன், (கி.மு.2-ஆம் நூற்றாண்டு) அத்திக்கும்பா குகைக் கோயிலில் பிராகிருத மொழியில் எழுதி வைத்திருக்கிற கட்டளையாவணத்தில் (சாசனத்தில்) இச் செய்தியைக் கூறியுள்ளான். காரவேலன் பிதுண்ட நகரத்தை அழித்துக் கழுதை பூட்டிய ஏரினால் உழுத செய்தியை அக் கட்டளையாவணம் கூறுகிறது.
அரிபத்ரீ என்பவர் எழுதிய ஆவசியக விருத்தி என்னும் நூலிலும் ஏமசந்திரர் எழுதிய வீரசரித்திரத்திலும் இச்செய்தி கூறப்பட்டுள்ளதாம்.
இப்படியாக, கழுதை ஏர் உழும் வழக்கம் நாவலந்தீவு முழுமையும் இருந்திருப்பது தெரிகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------
நன்றியுரைப்பு:

  1. புறநானூறு அவ்வை சு.துரைசாமியார் உரை.
  2. பதிற்றுப்பத்து - அவ்வை சு.துரைசாமியார் உரை.
  3. சிலப்பதிகாரம் நாவலர் ந.மு.வேங்கடசாமியார் உரை.
  4. சங்ககால வரலாற்று ஆய்வுகள் மயிலை சீனி.வேங்கடசாமியார்.
  5. தொல்காப்பியம் ச.வே.சு. உரை.
************************************************************************************