தமிழ்நாட்டுப் பகுதிகள் -
உரைவேந்தர் ஒளவை. சு.துரைசாமியார் விளக்கம்!
தமிழகத்தின் வடவெல்லை வேங்கடமென்றும் தென்னெல்லை
தென்குமரியென்றும் வழங்கும்.
(வேங்கடமலை சித்தூர் மாவட்டத்தின் வடவெல்லையாய் நின்று,
பின் நெல்லூர் மாவட்டத்தின் மேற்கெல்லையாகி, வடபெண்ணைக் கரைவரையிற் செல்லும் மலைத்
தொடராகும்)
வடபெண்ணைக்கும் தென்பெண்ணைக்கும் இடைப்பட்ட பகுதி தொண்டைநாடு
என்றும்,
தென்பெண்ணைக்கும் தென்னார்க்காடு மாவட்டத்திலோடும் வடவெள்ளாற்றுக்கும்
இடைப்பட்ட பகுதி நடுநாடு என்றும்,
வடவெள்ளாற்றுக்கும் புதுக்கோட்டைக்கருகிலோடும் தென்
வெள்ளாற்றுக்கும் இடைப்பகுதி சோழநாடு என்றும்,
இதன் தென்பகுதி பாண்டிநாடு என்றும் வழங்கும்.
இக்காலத்துக் கோயம்புத்தூர் மாவட்டமும், சேலம் மாவட்டமும்
சேர்ந்த நிலப்பகுதி கொங்குநாடு ஆகும்.
மேலைக் கடற்கரைப் பகுதி சேரநாடு.
சைவ
இலக்கியத்தின் தோற்றக் காலத்தில் இந்நாட்டுப் பிரிவுகள் இருந்து வந்தன.
நடுநாடுமட்டில், திருமுனைப்பாடி நாடென்று சில
காலங்களில் வழங்கிற்று. வேறு சில காலங்களில், வடபகுதி தொண்டை நாட்டோடும் தென்பகுதி
சோழநாட்டோடும் சேர்ந்து வழங்கியதுண்டு.
(உரைவேந்தர் தமிழ்த்தொகை-10, பக்கம் 7,8. இனியமுது
பதிப்பகம், சென்னை-17)
------------------------------------------------------------------