வியாழன், 25 ஆகஸ்ட், 2016

சங்கப் பாடல்கள் தொகுப்பு - இரா. இளங்குமரனார் ஐயா விளக்குகிறார்.



சங்கப் பாடல்கள் தொகுப்பு -            இரா. இளங்குமரனார் ஐயா விளக்குகிறார்.
-------------------------------------------------------------------

பாட்டுந் தொகையும் பாடினோர் சங்க காலத்தவர். பாடப்பெற்றோரும் சங்க காலத்தவர். பெரும்பாலனவும் தனிப்பாடல்கள்.....

பாட்டு தொகைகளை நோக்க அவற்றுள் மூவகைப் பாடல்கள் அமைந்திருத்தல் கண்கூடு. அவை, அகவற்பா, கலிப்பா, பரிபாடல் என்பவை.

பாவகைப்படி தொகுத்தால், தொகையை மூன்றாக்கிவிடலாம். அதற்குத்துணை நிற்பவை கலிப்பாவும் பரிபாடலுமே. கலிப்பாவாகத் தேர்ந்து தொகுத்தவை 150 பாடல்கள். பரிபாடலாகத் தொகுத்தவை 70 பாடல்கள். இவற்றைத் தனித்தனி நூலாக்குதல் எளிதாயிற்று!

கலிப்பா ஐம்பெரும் புலர்களால் ஐந்திணை குறித்துப் பாடப்பெற்றவை. ஆகவே திணை வரிசையில் வரன்முறை செய்து கலித்தொகை என்னும் பெயர் சூட்டப்பெற்றது.

பரிபாடல்கள் எழுபதும் திருமால், செவ்வேள், வையை என்னும் முப்பொருள் பற்றியவையாக இருந்தன. இவற்றை அடைவு செய்வதற்கு முன்னின்றது பண்! ஆகவே பாலை, நோதிறம், காந்தாரம் முதலியவாகப் பண்ண்டைவில் அவற்றை ஒழுங்கு செய்து பரிபாடல் எனப் பெயர் சூட்டினர்.

எஞ்சிய அகவற்பாக்களே மிக்கிருந்தன. அவற்றை அகம் புறம் எனத் திணை குறித்து இருபாற் படுத்தலாம்! இவ் வெண்ணத்தால் பார்ப்பினும் அகப்பாடல்கள் எண்ணிக்கை ஒருநூற்குட்படுவதாக இல்லை.

அப்பொழுது நல்லிசைப் புலவர் நெஞ்சத்தே அடியளவு என்னும் ஓர் அளவுகோல் கிடைத்தது. அன்றியும் ஒரு திணை பற்றியோ, ஒருவரைப் பற்றியோ தொகையாகப் பாடிய பாடல்களை தனியே நூறு பாட்டாய் ஐந்திணைக்கும் ஐந்நூறு பாடல்களைக் கொண்ட ஐங்குறு நூற்றை அடியளவைக்கோல் இன்றி ஒதுக்கவும், பத்துப் புலவர்கள் பத்துச்சேர வேந்தர்களைப் பாடிய பதிற்றுப்பத்தை ஒதுக்கவும் அவற்றைத் தனித்தனி நூலாக்கவும் வாய்ப்பாயிற்று.

இன்னும் எஞ்சி இருப்பவற்றுள் புறப்பாடல்கள் நானூறு இருந்தன. அவற்றைப் புறநானூறு என்னும் பெயரால் தொகையாக்கினர். இன்னும் எஞ்சிய பாடல்கள் அடியளவு கருதித் தொகுக்கப் பெற்றன.

நான்கு முதல் எட்டடியீறான பாடல்கள் நானூறும், ஒன்பதடி முதல் பன்னீரடியீறான பாடல்கள் நானூறும், பதின்மூன்றடி முதல் முப்பத்தோரடியீறான பாடல்கள் நானூறும் ஆக 1200 பாடல்கள் இருக்கக்கண்டு அவற்றை முறையே குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, நெடுந்தொகை அல்லது அகநானூறு எனப் பெயர் சூட்டினர்.
 
இவ்வளவுடன் சங்கப்பாடல்களின் தொகுப்பு முடிந்துவிடவில்லை. பத்து நெடும் பாட்டுக்கள் எஞ்சி நின்றன. அவற்றை அகம் புறம் என்னும் பொருள் கருதாமல் பாடல் நெடுமைகருதி ஒரு தொகையாக்கிப் பத்துப்பாட்டெனப் பெயர் சூட்டினர்.

(இளங்குமரனார் தமிழ்வளம் 17, புறத்திரட்டு, பதிப்பாசிரியர் முன்னுரை பக்கம் 10,11., வளவன் பதிப்பகம், சென்னை.17)
 ----------------------------------------------------------------------------------