நூலகப்பயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூலகப்பயன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 டிசம்பர், 2011

நூலகம்


நூலகம்

(அண்மையில் நடைபெற்ற நூலக விழாவில் பாடியது)

அனைவர்க்கு மென்றன் அன்பு வணக்கம்!
முனைதமிழ் மொழியில் நினைவறா வழக்குறும்

ஆலகம் என்பது ஆலடி நிழலாம்!
ஏலகம் என்பது எளிதிலொப் புளமாம்!
ஓலகம் என்பது ஒலிசெயும் கடலாம்!
காலகம் என்பது காற்றுசேர் நீராம்!

கீலகம் என்பது கேடுசெய் தந்திரம்!
கூலகம் என்பது குதிர்க ளஞ்சியம்!
சாலகம் என்பது சாளரம் பலகணி!
சூலகம் என்பது சூலுறு கருப்பை!
சேலகம் என்பது செறிகயல் சேரிடம்!
தாலகம் என்பது தாலாட்டு நா,வாய்!

கோலகம் என்பது குழகழகு வீடாம்!
தோலகம் என்பது தோற்பொருட் கடையாம்!
நீலகம் என்பது நெடுங்காழ் இருளாம்!
நோலகம் என்பது நோன்பிரு இடமாம்!

பேலகம் என்பது பெரும்புணை தெப்பம்!
போலகம் என்பது புகலுமகத் துவமை!
மேலகம் என்பது மேலுள்ள இல்லம்!
வாலகம் என்பது வயங்கொளி மாடம்!
மாலகம் என்பது மருந்தெனும் வேம்பாம்!
மூலகம் என்பது முழுத்தனி அணுவாம்!

நூலகம் என்பதோ நுவன்றிடின் பற்பல
சாலத் திரட்டிய நூலுள அகமாம்!

அறிவுக் கருவூலம், அறிவியல் திரட்டு,
செறிமொழி காக்கும் சிறந்த காப்பகம்!
இலக்கியப் பெட்டகம், துலக்க விளக்கமாய்ப்
பலவர லாறுகள் பாங்குறக் கூறகம்!

உளத்தியல் சமயம் உருளுகோள் கணியம்
புலன்கவர் விளக்கப் புத்தாய் வுரைகள்!
நெறியுற மாந்தனை நேர்பண் புறுத்தி
அறிவுத்திறனைச் செறிவுற அளிக்கும்!
நலவள உடலும் ஞானமும் முயன்றால்
செலவில் லாமல் சேர்ந்திட உதவிடும்!

மருத்துவ நூல்கள் மருந்துகள் இன்னும்
திருத்தமாய்க் கட்டுரை தேர்ந்த படங்கள்
விளக்கக் காணொளி துளக்கறும் காட்சிகள்!
துலக்க விளக்கமாய் அறுவை மருத்துவம்!

குழந்தைகள் அறிவைக் கூட்டி வளர்த்திடும்
கழிபெருந் திரட்சி! கல்விசேர் மாந்தனை
மாந்த னாகவும் மீமாந்த னாகவும்
ஏழ்ந்திட மாறி வாழ்ந்திட வழிதரும்!

இத்தகை நூலகம் ஏறிப் படித்தே
முத்தென ஒளிர்ந்தோர் எத்தனை யோபேர்!

கல்வெட் டெழுதியும் பல்வகை ஓவியம்
கல்லில் பாறையில் கவினுறத் தீட்டியும்
பதிவுசெய் தனர்நம் பழந்தமிழ் மக்கள்!

இதுநாம் அறிந்ததே! புதிதாய்க் குழைத்த
களிமண் தட்டினில் தெளிவுற எழுதி
வளிகுறை சூளையில் வகையுறச் சுட்டு
தனித்தனி ஏட்டைத் தகுதுறை பிரித்தே
இனிதுறுங் கோயிலில், நனிகாப் பரசிலில்
வைத்துப் போற்றி வந்தனர் அந்நாள்
மொய்ப்புகழ் மொசப்பத் தோமியோ மக்கள்!

நூலகத் தோற்ற நுனைமுன் முயற்சியிஞ்
ஞாலத் திவையென ஏல உரைக்கலாம்!

திறப்பீர் சிறந்தவோர் நூலகந் தன்னை!
திடமுடன் மூடுவீர் சிறைஒரு நூற்றினை!
என்ப தறிஞர் இயம்பிய பொன்மொழி!
என்றும் மாறா இலக்கணப் புதுமொழி!

நூறா யிரம்நூல் நூலக மொன்று
தீராச் சிறப்பின் தெற்கா சியாவில்
பெரிதென யாழ்நகர் பிறங்கி யிருந்ததைச்
சிறியர் சிங்களர் தீயிட் டழித்த
நெறியற் றசெயல் நீளுல கறிந்து
வெறிய ரவறின் வறிதறி விகழ்ந்தது!

புதிது பிதிதாய்ப் பொலிவுற வீடுகள்
இதுயெமக் குரியதென் றெழுச்சியில் கட்டுவோம்!
எதுஎதற் கெலாமோ எழிலுற அறைகள்
புதுவீட் டினிலே புழங்க அமைக்கிறோம்!
படித்தற் கென்றோர் படிப்பறை நூலகம்
எடுப்புற அமைக்க ஏனோ மறக்கிறோம்!

இக்கால் நூலகம் இனிது திரட்டிடும்
எக்கா லும்கெடா ஒலிஒளிப் பேழைகள்!
குறுவட் டுடன்நுண் படலந் தன்னில்
சிறுபெரு படங்கள் சிறப்பா வணங்கள்!

ஒலிநூ லகமொன் றுண்டமரிக் காவில்!
ஒலிஓ ரிலக்கம் ஒப்பிலாப் பதிவில்
இசையமைப் பாளர் இயைபில் பதிந்தவை
இசையும் பல்வேறு இயக்க ஒலிகளும்!

இணையநூ லகத்தினில் எண்மிய ஊடகம்
இணையிலா தியங்கும், எடுக்கலாம் பதிவுகள்!
எல்லாச் செய்தியும் இருக்கிற திங்கே
பொல்லாப் பழுதுறா தெல்லாக் காப்புடன்!
அரிய காட்சிகள் அழகுப் படங்கள்
உரிய ஓசைகள் உண்டே பிறவும்!

இறுதியாய், இளைஞரே, இங்குமக் கொருசொல்
உறுதியாய் ஏற்க உமைவேண் டிடுவேன்!
நூலகம் செல்லுதல் சாலவும் நன்று!
மேலும் வளர்க்கும் ஏலும் வகையெலாம்!
அதனாற் பயனுற அழைக்கிறேன்
எதனா லுயரலாம் எனவேங் கிளையரே!