திங்கள், 17 டிசம்பர், 2007

ஒரு தமிழ்ச்செல்வன் உயிர் பறித்தாலென்?



 அருந்தமிழ் வுணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
திருந்திடாச் சிங்களர் தீமையின் உருவினர்
போர்நெறி மதியாப் பார்பழி கொடுமையர்
சீரார் அமைதிச் சிரிப்பின் நல்லெழிற்
செந்தமிழ்ச் செல்வனைச் செகுத்தனர்! அட,ஓ!
முந்தும் அதிர்ச்சி! நொந்திடும் சிந்தை!

ஈழத் தேசிய எழுச்சித் தலைவரின்
ஆழன் பேந்திய அணுக்கத் தம்பி!
ஒப்பிலாத் தோழன்! உயர்மறப் பொருநன்!
செப்புரை தேர்ந்த செஞ்சொலன், இன்சொலன்!


அமைதிகாண் பேச்சுக்(கு) ஆண்டனார்க் குப்பின்
சமைவுறப் பொருந்திய அமைதிப் புறவவன்!  
நார்வே பவ்வர்  நனிபுகழ்ந் தேற்றும்
சீர்மையன், கூர்மையன், செழும்பொறை நோன்றவன்!

களம்பல வென்றவன்; காலிழந் திடினும்
உளவலி தாழா உறுதித் திண்ணியன்!
குறியின் மாறாக் கொள்கை நெறியினன்!
பெறற்கரு மாற்றலன், பெருவலி நெருப்பனான்!

இனவெறிச் சிங்களர் தனிக்கொடுங் கொடுமையர் மனச்சான் றழித்தே மாரியாய்க் குண்டுகள்
முழக்கொடு தொடர்ச்சியாய் இலக்குகொண் டழிப்பதோ குழந்தைகள் பெண்கள் குடுகுடு முதியோர்!
இன்றோ, அமைதிக் கென்றே உழைக்கையில்
கொன்றனர் எந்தமிழ்ச் செல்வனை, அன்றோ?

போர்தீர் வென்றிடும் புன்மதி யாளர்
தேர்பு, தமிழினம் தீர அழிப்பதே!
செருநெறி கருதார் சீரறம் பிழைத்தே
ஒருதமிழ்ச் செல்வன் உயிர்பறித் தாலென்?
ஓரா யிரந்தமிழ்ச் செல்வர் வருவர்
தீராக் கொடும்பகை தீர்கணக் காற்றுவர்!
ஈழ விடுதலை ஈட்டிப்
பீழை துடைத்தே பெருநலஞ் சேர்ப்பரே!

- த.ந. (05-11-2007)