‘கல்வி’யின் தொடக்கம் – பாவாணர் விளக்கம்!
மக்கள் நாகரிகமில்லாத மாண்முது பழைமையிற் குறுந்
தொகையராய்க் குறிஞ்சி நிலத்து வாழ்ந்தபோது காய்கனி கிழங்கு முதலிய இயற்கை
விளைபொருள்களையே உண்டு வந்தனர். உண்பதும் உறங்குவதுமே அவர்க் கிருபெருந்தொழில்.
மக்கட் டொகை மிகமிக இயற்கை விளைவு போதாதாயிற்று.
விதைகள் நிலைத்திணை வகையினின்றும் கீழே விழுந்து நிலத்தில்
முளைப்பதை முன்னமே உற்று நோக்கி உன்னித்திருந்தனர். அஃதன்றி வள்ளிக்கிழங்கைப்
பன்றிகள் உழுதவிடத்து விழுந்த விதைகள் விரைவில் முளைத்து, அடரந்தோங்கி, விழுமிய
பலன்றந்ததையுங் கண்டிருந்தனர். ஆதலால் அவரே அத்தகை யிடங்களிற் செயற்கையிற்
பயிர்பச்சைகளை விளைக்கத் தொடங்கினர்.
பன்றியுழுதவிடத்துப் பயிர் விளைப்பதை...
“அருவி
யார்க்குங் கழையி ன்னந்தலைக்
கறிவள
ரடுக்கத்து மலர்ந்த காந்தட்
கொடுங்கிழங்கு
மிளிரக் கிண்டிக் கிளையொடு
கடுங்கட் கேழ லுழுத
பூழி
நன்னாள் வருபத
நோக்கிக் குறவ
ருழாஅது வித்திய
பரூஉக்குரற் சிறுதினை” -(புறம்.168) என்பதாற் காண்க.
ஆகவே, முதன்முதல் மக்கள் கற்ற கல்வி உழவுத்தொழில் என்பதே
புலனாகின்றது. உயிர்வாழ்க்கைக்கு இன்றியமையாத உணவு அதனாற் பெறப்படுதலின், கல்வி என்னும்
சொல்லும் உழவுத்தொழிலையே முதன்முதன் குறித்தது.....
உழவாவது நிலத்தை அகழ்தலும் நிலைபெயர்த்தலும் பூழியாக்கலும்
ஏருமெருதுங்கொண்டுழவறியாத பழங்காலத்துக் கல்லுங் கழியுங் கருவியாக நிலத்தை அகழ்தலே
உழவாயிற்று. அக்காலத்தும்
குறிஞ்சிநிலத்தும் மழைக்குக் குறையின்மையின் நீர்பாய்ச்சவும் வேண்டாதாயிற்று.
கல்லல், தோண்டல், உழுதல் என்பன ஒருவினை குறித்தலின்
ஒருபொருட் கிளவி. ஆகவே கல்வி என்பது முதன்முதல் உழவு குறித்த கிளவியே யென்பது
பெற்றாம்.
(பண்பாட்டுக் கட்டுரைகள் – பாவாணர், தமிழ்மண், பக். 96,97)
---------------------------------------------------------------------