‘அன்னை அருள் அறக்கட்டளை’யின் அருமையான ‘அருங்காட்சியகம்’ நாள்காட்டி!
--------------------------------------------------------------
‘தேசிய மரபு அறக்கட்டளை’யின்
திட்டத்தின்படி, புதுச்சேரி ‘அன்னை மறுதோன்றி அச்சகம்’ அச்சிட, ‘அன்னை அருள்
அறக்கட்டளை’ வெளியிட்டுள்ள ‘அருங்காட்சியகம்’ நாள்காட்டி
ஏறத்தாழ 61 நூ.மா. நீளமும் 43 நூ.மா. அகலமும் கொண்டு பெரிய அளவில் அமைந்ததாகும். (நூ.மா.-
நூற்றுமாத்திரி அல்லது நூற்றிலொரு மாத்திரி- centimeter – c.m.)
நாள்காட்டியின் முதல் மாதத் தாளுக்கும் முன்னால், முதல்
தாளின் இருபக்கங்களிலும் நடுப்பகுதியில் செய்திகள் எழுதப்ப்பட்டுள்ளன. இருபக்கங்களிலும்
ஓரங்களில் படப் பகுதிகளும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. ‘தேசிய மரபு
அறக்கட்டளை’யின் தலைவரும், இந்திய-பிரெஞ்சு
அருங்காட்சியகத் திட்ட நிறுவுநருமான திரு.அ.அறிவன், ‘அருங்காட்சியகம்
பார்வை! வேண்டுகை! தேவை!’ என்ற தலைப்பிட்டு அந்த உரையை
எழுதியிருக்கிறார்.
இயல்பான அருங்காட்சியகம், சாதி அருங்காட்சியகம், அணிகலன்
அருங்காட்சியகம், போர்க்கருவி அருங்காட்சியகம் என்ற பிரிவுகளாக உரை
எழுதப்பட்டுள்ளது.
முதல் பிரிவான அருங்காட்சியகத்தில் அருங்காட்சிகம் பற்றிய
பொதுவான கருத்தும், இந்திய அருங்காட்சியகக் கழகம் ஒன்பது கூறுகளில் தரும்
விளக்கமும், ‘அனைத்துலக நாடுகளின் கல்வி அறிவியல்
பண்பாட்டுக் கழகம்’ (UNESCO) பதிவு செய்துள்ள
விளக்கமும் உள்ளன. இரிச்சர்டு குரூவு, ‘மக்களின் கல்வி,
ஆய்வு, மகிழ்ச்சி போன்றவற்றிற்காக மாந்த இனத்தின் அரும் பொருட்களையும், இயற்கையின்
செல்வங்களையும் தொகுத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள் அருங்காட்சியகங்கள் ஆகும்’ என்றவாறு
அளித்த விளக்கமும் காணப்படுகிறது.
தொடர்ந்து, அருங்காட்சியகத்தின் நோக்கு, செயல்பாடு, பணிகள்,
பதினொரு வகை அருங்காட்சியகங்கள், ஐந்து வகையாக நடத்தப்படும் அருங்காட்சியகங்கள்
பற்றிய செய்திகள் உள்ளன.
அடுத்து, தொல்பொருள் ஆய்வர்கள் பற்றியும், தஞ்சையில் ‘நீரடித்
தொல்லியல் நிறுவனம்’ அமைந்துள்ள செய்தியும், அருங்காட்சியகங்கள்
பற்றிய சுருக்க வரலாறும் உள்ளன. இந்தியாவில் நூற்றுக் கணக்கிலேயே அருங்காட்சியகங்கள்
உள்ளன; ஆனால், ‘ஒன்றிய அரசிய’த்தில் (UK) 2500க்கு
மேலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளில் (USA) 5500க்கும் மேலும் உள்ளன என்ற செய்தி
தரப்பட்டுள்ளது.
Museum - அருங்காட்சியகம், Museology –
அருங்காட்சியகவியல், museologist -
அருங்காட்சிகவியலர், Archeo - தொன்மை, Antique
- தொல்பொருள், Ancient quarianism - தொல்பொருளாய்வினை, Ancient
science - தொல்லறிவியல் போன்ற பெயர்ப்புகள் அருமை!
அடுத்து, சாதி என்ற தலைப்பில் உள்ள செய்திகளில், 1901-ஆம்
ஆண்டில் இந்தியாவில் 2378 சாதிகள் இருந்த செய்தியை அறிகிறோம். ‘சாதி
அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் தந்துள்ள தமிழக அரசின்
சாதிப்பட்டியலில் ஏறத்தாழ 380 சாதிகளின் பெயர்கள் உள்ளன. (சாதி ‘அருங்காட்சி’ அல்லவே!
காலந்தோறும் சாதிக்கொடுமைகள் இருந்துவருகின்றனவே! இன்றும் ‘செருக்குக்
கொலைக’களும் பிற கொடுங்கொடிய சாதிய ஒடுக்குமுறைகளும் இருக்கின்றனவே! எல்லா சாதிப் பெயர்களையும் ஒரே இடத்தில் குவித்துக் காட்டுவால் 'அருங்காட்சி' எனலாம்)
அடுத்து ‘அணிகலன் அருங்காட்சியக’மென ஏறத்தாழ
150 அணிகலன்களின் பெயர்கள் தொகுத் தளிக்கப்பட்டுள்ளன. தெடர்ந்து, ‘போர்க்கருவிகளின்
அருங்காட்சியக’மென ஏறத்தாழ 80 போர்க்கருவிகளின் பெயர்கள்
தரப்பட்டுள்ளன. கட்டுரையாளரின் ‘இந்திய-பிரெஞ்சு அருங்காட்சியம்’ அமைக்கும்
முயற்சி வெற்றிபெற வேண்டுமென்று வாழ்த்துவம்.
* - * - * - * - * - * -
ஒவ்வொரு மாத்த்திற்கும் ஒருபக்கம் என 12 பக்கங்களில்
நாள்காட்டி அமைந்துள்ளது. ஒவ்வொரு பக்கத்திலும் மேல்பாதியில் படமும் கீழ்பாதியில்
நாள்காட்டியும் உள்ளன. முதல் மாதத்தில் உள்ள படத்தில் மண்கலங்கள் சிறிதும்
பெரிதுமாகவும், உடைந்தவை உடையாதவையாகவும் நாற்பது தொன்மை மண்கலன்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் மாத்த்தில் தொல் மாழைக்கருவிகள் ஏறத்தாழ நாற்பது
முழு உருவத்துடனும், உடைந்தகருவிப் படங்ககளும் உள்ளன
மூன்றாம் மாத்தப் படத்தில் சிறியதும் பெரியதுமான பண்டை
மாழைக்கலன்கள் உள்ளன. நான்காம் மாதப் படத்தில், அழகழகான பண்டைக் கற்சிலைகளைத்
தந்திருக்கிறார்கள். ஐந்தாம் மாதத்தில், நுடபமான வேலைத்திறன் கொண்ட மரச்சிலைகளின்
படங்கள் இருபத்தாறு இருக்கின்றன.
ஆறாம் மாதப் படத்தில் இருபத்தாறு அழகிய மாழைச்சிலைகள்
உள்ளன. ஏழாம்மாதப் படத்தில், பழைய மாழைப் போர்க்கருவிள் அழகுற காட்சிப்
படுத்தப்பட்டுள்ளன. எட்டாம்மாதப் படத்தில், பழைய உயர்மதிப்பு அணிகலன்கள் 32 உள்ளன.
ஒன்பதாம்மாதப் படம், புதிய போர்க்கருவிகள் சிலவற்றைக் காட்டுகின்றது. பத்தாம்மாதப்
படம், முதுகுடிமக்கள பயன்பாட்டுப் பொருள்களைக் காணத்தருகின்றது. பதினொன்றாம்மாதப்
படம், கண்கொள்ளாக் காட்சியாக முதுகுடிமக்களின் உருவங்களைக் காட்டுகின்றது.
பன்னிரண்டாமாதப் படம், எழுத்தறிவு மூலங்களாக எழுத்தாணிகள், ஏடுகள், செப்பேடுகள்,
கல்வெட்டுகளைக் காட்டுகின்றது. ஒவ்வொரு மாதத்திலும் படத்தில் காண்பவற்றை
ஆவணப்படுத்த வேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந் நாள்காட்டி, பண்டைத் தமிழரின் கலை பண்பாட்டு நாகரிகச்
சிறப்புகளை காட்சிகளாக்கி தமிழர்களுக்கு உணர்வூட்டுகின்றது. தமிழர் தம் பண்டைச்
சிறப்புகளைப் போற்றவும் வருங்காலத்தில் தம் அடையாளங்களை அழியாமல் காக்கவும்
வலியுறுத்துகின்றது. இந்த வகையில் இது நாள்காட்டியாக மட்டும் இல்லாமல் தமிழர்க்கு
உணர்வூட்டும் கருவியாகவும் விளங்குவது கண்கூடு. உருவாக்கித்தந்த அனைவருக்கும்
பாராட்டையும் நன்றியையும் தெரிவிப்போம்!
-------------------------------------------------------------------------