சங்க இலக்கியக் கல்வி பற்றித் தொல்காப்பித் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம் ஐயாவின் வலியுறுத்தம்!
----------------------------------------------------------------------------------
எவ்வகைத் தமிழ்நூல்கள் எவ்வளவு படித்திருந்தாலும் தொல்காப்பியம்…முதலான சங்க இலக்கியக் கல்வி இல்லாதாரைத் திறமான தமிழ்ப்புலமை பெற்றவராகச் சொல்ல முடியாது.
ஆற்றுநீர் கடலிற்போய்க் கலக்கின்றது என்றாலும் ஆற்றிற் குளித்தோரைக் கடலிற் குளித்துத் திளைத்தவராகச் சொல்வதுண்டோ?
சொல்லாலும் பொருளாலும் பண்பாலும் செறிவாலும் நடையாலும் ஓங்கிய சங்கவிலக்கியம் கற்றாரின் புலமையே வேரோடிய தமிழ்ப் புலமையாகும்....
புரியாத நடையுடையது சங்கவிலக்கியம் என்ற ஒருசாராரின் அவலக் கருத்து, நீர்சுடும் என்பது போன்ற மயக்க மருளாகும்.
இலக்கண வழக்கு முரண்பட்ட அயல்மொழிகளைப் புரியும் என்று பொருள் கொட்டிப் படிக்கும் தமிழர்கள், தம் தாயிலக்கியம் புரியாது என்று புலம்புவது பேதைமையுள் எல்லாம் கலப்பற்ற பேதைமையாகும்.
சங்கத்தமிழை நீர்தெளிந்த கோதாவரிக்குக் கம்பர் ஒப்பிடுவதைச் சிறிதேனும் எண்ணுங்கள், புரியும்.
(‘நாவலர் நாட்டார் தமிழுரைகள்’-18, ‘நாட்டாரின் சங்கப்புலமை’ – தொல்காப்பியத் தகைஞர் முனைவர் வ.சுப.மாணிக்கம், பக்கம் xxii,xxiv, தமிழ் மண், சென்னை)
---------
சங்கக்காலம் யார்க்கும் சிந்தனையை வளர்த்த காலம். சங்கக் கல்வி கற்பவர்க்கெல்லாம் சிந்தனையை ஊட்டிய கல்வி. ௩௭௮ (378) அகப்புலவோருள் ஒரே பாடல் பாடியமைந்த புலவோர் தொகை ௨௪௯ (249) எனின்,படித்தோர் பெருக்கமும், பாடவல்லுநர் பெருக்கமும், சிந்தனைப் பரப்பும், செறிந்த தெளிந்த கல்வியும் சங்கக் காலத்து இருந்தமை பெறப்படும்.
- மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார், ‘தமிழ்க்காதல்’
-----------
“பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால் கிழம்போகும் கீழ்மையும் போம்”
- மா.குறள்-461. ஆசிரியர்: வ.சுப.மாணிக்கனார்
--------------