பெரியாரும் தமிழும்
(பாவலரேறு பெருஞ்சித்திரனார் பெரியார் பற்றிக் கூறியவற்றில் தேர்ந்தெடுத்த பகுதிகள் அடங்கிய
விளக்கவுரை)
இக்கால் பெரியார் ஈ.வெ. இராமசாமியாருடைய தமிழ் மொழி பற்றிய
கருத்துகள் பற்றியும், குமுகாயச் சீர்திருத்தக் கருத்துகள் பற்றியும், தமிழக விடுதலை குறித்த கருத்து பற்றியும் பிற கருத்துகள்
பற்றியும் பலராலும் பரவலாகப் பேசப்பட்டும் உறழாடப்பட்டும் வருகின்றன.
பெரியாரின் தொண்டு பற்றியும் தமிழைப் பற்றிய அவருடைய
கருத்துகளைப் பற்றியும் இளைய தலைமுறையினர் உண்மையான செய்திகளைத் தெரிந்துகொள்ள
வேண்டும். பெரியாரைப் பற்றி 1958 முதல் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவையானபோதெல்லாம் எழுதியிருக்கின்றார்.
பெரியாரைப் பாராட்ட வேண்டிய நேரங்களில் வேறெவரையும் விடப் பாராட்டியும் அவருடைய
கருத்துகளில் எதிர்த்துக் கண்டிக்க வேண்டியவற்றை யெல்லாம் வேறெவரினும் துணிவாகக்
கண்டித்தும் பரவலாகத் தெளிவாக எழுதியுள்ளார்.
அவர் பெரியார் பற்றிப் பாராட்டியும் போற்றியும் எழுதியுள்ள
சிலவற்றைப் பார்ப்போம்:
(1958இல் தமிழ்நாடு நீக்கிய இந்தியப் படத்தை எரித்தற்காகப்
பெரியார் சிறைப்பட்டு மீண்டபொழுது பாவலரேறு எழுதிய பாட்டின் ஒரு பகுதி)
“நாட்டைக் குழப்பிடும் சாதியும் மதமும்
நசுங்கிட எழுந்ததே அரிமா! அதன்
பாட்டைக் கெடுக்கும் நாய்க்குல மழிக்கப்
பெரும்படை திரண்டதே எங்கும்!
பேச்சும் துணிவும் ‘பெருந்திறல் உரனும்’
பணிவும் அதன்கை வாளாம்!..(1958).
“அவர் (பெரியார்) ஒருவர் பிறந்திருக்கவில்லையானால்,
மக்கள் அறியாமைச் சேற்றில் இன்னும் நெளிந்துகொண்டுதாம்
இருப்பர் என்பதை எவரும் மறுத்தல் முடியாது. அவர் ஒருவரின் குரல் இத் தமிழகத்
தெருக்களில் எதிரொலித்திருக்கவில்லையானால், இன்றுள்ள தமிழர்கள் தலைகளில் குடுமிகளும்,
நெற்றிகளில்
சமயக்குறிகளும், வாய்களில் பாகவத இராமாயணப் பழங்கதைப் பேச்சுகளும்தாம்
நீக்கமற நிறைந்திருக்கும்” (1966).
“குமுகாயப் போராட்டத்தில் இவர் நல்ல வெற்றிகண்டுள்ளார்.
தூங்கிக்கொண்டிருந்த தமிழர்களைத் தட்டியெழுப்பித் தன்மான உணர்வை ஊட்டிய இவர்
தொண்டிற்குத் தமிழர்கள் என்றும் கடமைப்பட்டவர்கள்”(1967).
(கழகக்காலப் பாடல்களை ஒத்த ஆசிரியப்பா தொகுப்பான ‘நூறாசிரியம்’ எனும் நூலில் பாவலரேறு, பெரியார் குறித்து எழுதிய 24ஆம்எண் பாவின் ஒரு பகுதி)
“…கொல்வரியின் சொல்பாய்ச்சித்
தொல்குடிமை கட்டழித்த
ஆரியத்தை அடிதுமித்து…
குலக்கோ டரிந்து சமயக்கா லறத்துணித்துக்
கலக்குறு கொள்கைக் கடவுண் மறுத்தே
யாரும் யாவும் யாண்டும் துய்ம்மென
புதுமைப் பொழிவித்துப் பொதுமை தழைவிக்கும்
அரிய ராகலி னவரே
பெரியா ரென்னும் பெயரி யோரே!” (1970)
“பெரியார் ஒரு கட்சியின் தலைவரல்லர்;
ஓர் இனத்தின் தலைவர்; ஒரு காலத்தின் தலைவர்: ஒரு வரலாற்றின் நாயகர். அவர் தோன்றியிருக்கவில்லையானால்
ஓர் இனத்தின் அடிமை வரலாறே முற்றுப் பெற்றிருக்காது. ஒரு நாட்டின்மேல் போர்த்துக்
கிடந்த இருள் விலகியிருக்காது. தமிழனின் தலையெழுத்தே மாற்றப் பெற்றிருக்காது.
தன்மானமற்ற நம் இனம் ஆரியச் சேற்றில் மேலும்மேலும் அழுந்திக் கதிகலங்கிப்
போயிருக்கும்…
ஒரு முழு இனத்தின் துயரைத் துடைக்க,
இழிவைப்போக்க – அடையாக அப்பிக் கிடந்த வரலாற்றுக் கீழ்மையைத் தோண்டி
எடுத்துத் துப்புரவாக்க, அயராது ஒருவர் – தனி ஒருவர் அல்லும் பகலும் பாடுபடுகின்றாரென்றால்,
அவர் பெரியார் ஒருவர்தாம்!’’ (1971).
(பெரியார் மறைந்தபோது பாவலரேறு உணர்வு மேலோங்கப் பாடிய ஆறு
அறுசீர் மண்டிலப் பாக்களுள் ஒன்று)
“எப்பொழுதும் எவ்விடத்தும் எந்நேர மும்தொண்டோ(டு)
இணைந்த பேச்சு!
முப்பொழுதும் நடந்தநடை! முழுஇரவும் விழித்தவிழி!
முழங்கு கின்ற
அப்பழுக்கி லாதவுரை! அரிமாவை அடக்குகின்ற
அடங்காச் சீற்றம்!
எப்பொழுதோ அடடா,இவ் வேந்தனையித் தமிழ்நாடும்
ஏந்தும் அம்மா? (1974).
(‘தென்மொழி’யின் பெரியார் நூற்றாண்டுச் சிறப்பிதழில் வந்த பாடலின் ஒரு
பகுதி)
பெரியார் நம்மிடைப் பிறந்திரா
விட்டால்…
உரியார் நாமெனும் உண்மை,பொய்த் திருக்கும்
ஆரியர்க் கின்னும் அடியராய்க்
கிடப்போம்
பூரியர் புராணப் புளுகுக்
குப்பையுள் –
சாதிச்சகதியுள் –
சமயச் சேற்றினுள் –
புதையுண் டிருப்போம்! புழுக்களாய்
மேய்வோம்!...
“சாக்ரடீசு, புத்தர், திருவள்ளுவர், ஏசு, நபி,
காந்தி போலும் காலத்தின் எல்லையாக அமர்ந்துவிட்டவர்
பெரியார். ஆனால் அவர்கள் செய்த அருஞ்செயல்களைவிட ஒருபடி மேலாகவே செய்தார்
பெரியார். அவர்கள் அனைவரும் நன்மைகளையே செய்தார்கள்; பரப்பினார்கள்; பேசினார்கள்! ஆனால் பெரியார் தீமைகளையே எதிர்த்துப்
போரிட்டார்”…
“கிரேக்க அறிஞர் சாக்ரடீசு பேசிய பேச்சுகளைவிட பெரியார்
பேச்சுகள் அளவிலும், உணர்விலும் பலமடங்கு மிகுந்திருக்கும்….
சாக்ரடீசு பேசியதைவிட, நடந்ததைவிட பெரியார் அதிகமாகப் பேசினார்;
மக்களுக்காக இரவுபகல், பனிகுளிர், வெயில்மழை, மேடுபள்ளம், காடுநாடு, சிற்றூர் பேரூர் என்று பாராமல் நேரிடையாக நடந்து மக்களைப் போய்க் கண்டார்;
அவர்களுக்காகக் கவலை கொண்டார்;
அவர்களுக்காக மணிக்கணக்காகப் பேசினார்;
அவர்களின் நரம்புகளிலும் குருதியோட்டங்களிலும் தன்மான
உணர்வையும் தன்னம்பிக்கையையும் ஊட்டி உணர்வேற்றினார்”…
“அவருடைய கொள்கைகளில் பிழைகள் இருக்கலாம்;
கருத்துகளில் தவறு இருக்கலாம்;
ஆனால் முயற்சிகளில் அவர் தூய்மையானவர்;
மக்களுக்குழைத்த உழைப்புகளில் மாசில்லாதவர்;
பொதுத்தொண்டுக்கே இலக்கணமானவர்;
வரலாற்றில் அவரைப்போல் மக்களுக்காக உழைத்தவர்கள் மிகக்
குறைவானவர்கள்.
தம் வாழ்வுக்கென எதையும் தம்
அறிவால் சிந்தித்துக் கொள்ளாத அவர், தம் மகிழ்ச்சிக்கென எதையும் தம்கண்களால்
பார்த்துக்கொள்ளாத அவர், தம் தேவைக்கென எதையும் தம் காதுகளால் கேட்டுக்கொள்ளாத அவர்,
தம் உயிர்ப்புக்கென ஒரு நொடியும் மூச்சுக்காற்றை உள்வாங்காத
அவர்,
தம் இன்பத்துக்கென ஓரிடத்திலும் தம் உடலைக்கிடத்தாத அவர்,
தமக்கென ஒருசொல்லும் பேசியிராத அவர்,
ஒரு முனிவர்போல் வாழ்ந்தார்; துறவிபோல் அலைந்தார்; ஆனால், ஒரு தொழும்பனைப்போல் இவ்வுலக மக்களுக்குத் தொண்டு செய்தார்”.
(1978).
(1982இல் காஞ்சி சின்னசங்கரன் ‘பெரியார் விதைத்தவை நச்சு விதைகள்’
என்று கூறியபோது எழுதிய நெடும்பாவின் ஒரு பகுதி)
கருகிப்போய்க் கிடந்தயிந் நாட்டிடை
வந்தே
உருகி உருகி உயிரைத் தேய்த்தே
ஒளியைப் பரப்பிய ஊழித் தலைவராம்
அளிசேர் எங்கள் அருமைப் பெரியார்…
தன்மான ஊற்றினைத் தகைமைத் தலைவனை
மண்மானங் காத்த மாபெரு மீட்பனை
அரியாருள் எல்லாம் அருஞ்செயல்
ஆற்றிய
பெரியார் என்னும் பெரும்பே ராசானை
இழிப்புரை சொல்வதா?
சொல்லியிங் கிருப்பதா?
(1982).
(1983இல் ‘பெரியாரையும் பாவேந்தரையும் பட்டிமன்றத்திற்கும் –
பாட்டரங்கத்திற்கும் மட்டுந்தான் பயன்படுத்திக் கொள்ள
வேண்டுமா?’
என்னும் தலைப்பில் எழுதிய பாடலின் ஒரு பகுதி)
பெரியார் உணர்வினைப் –
பாவேந்தர் பீடினை –
அறியாத் தமிழராய் ஐயகோ அழிகிறோம்!
தமிழர் இனமே! தாழ்ந்துபோம் இனமே!
இமியும் பொறுத்திடற் கில்லை!
இனியேனும்
அமிழா உணர்வினால் ஆர்ந்துடன்
எழுகவே! (1983).
“பெரியாரின் தொண்டு இந்த உலகத்திற்குக் கிடைக்காமல்
போயிருந்தால், இந்த இனம் இன்னும் ஒரு 500, 1000 ஆண்டுக் காலத்திலே படிப்படியாகத் தேய்ந்துபோய்ப் பழைய கிரேக்க இனம்போல் இந்த
உலகத்தை விட்டே அழிந்து போயிருக்கும். அதை நான் துணிந்து சொல்வேன். ஏனென்று
சொன்னால் மொழி வழியிலே, இன வழியிலே, இலக்கியங்கள் வழியிலே, கலை வழியிலே, ஆட்சி அரசாளுமை வழியிலே ஆகிய எல்லாவற்றிலும் ஆரிய இனம் நாட்டைக்
கவ்வியிருந்தது. அந்த உண்மைகள் யாராலும் உணரப்
பெறாமலிருந்தன. தொடக்கக் காலத்திலே பல நூறு ஆண்டுகளுக்கு
முன்பு திருவள்ளுவர் காலத்திலே ஆரியம் இந்த நாட்டைக் கவ்வுகின்ற நிலையை - அதுபற்றி
எச்சரிக்கைக் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அதைத் தொடர்ந்து எந்தப் புலவரோ,
எந்த அறிஞரோ அல்லது எந்த ஒரு தலைவரோ அல்லது எந்த ஒரு அரசரோ
இனத்துக்கான வளர்ச்சிக்காக – உண்மையான மீட்சிக்காக – அறிவு முன்னேற்றத்திற்காக எந்தக் கருத்தையும் நூல் வடிவாகவோ அல்லது வேறுவகையான
தொண்டு வடிவாகவோ சொன்னதுபோல நான் படித்ததில்லை…
அறிவு முன்னேற்றத்திற்கு உண்மையாகவே
அடிப்படைத் தேவையாக இருக்கின்ற அந்தக் கல்வி வளர்ச்சியிலும்,
தன்மான வளர்ச்சியிலும், பகுத்தறிவு வளர்ச்சியிலும் இந்த இனத்தினுடைய உண்மையான அறிவு
ஊற்றுக் கண்ணைத் திறந்துவிட்டவர் ‘தந்தை பெரியார் தாம்’ (1989).
திருவள்ளுவருக்குப்பின்,
தந்தை பெரியாரைத் தவிர வேறு எவரையும் நம்மால் முழு அறிஞராக –
முழுத்தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை…
தந்தைபெரியாரின் பெருந்தொண்டின்
நோக்கம் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், தமிழன் ஒவ்வொருவனும் தன்மானத்துடனும்,
தன்னுரிமையுடனும், தன்னாட்சியுடனும் வாழவேண்டும் என்பதே! இந்த
நோக்கத்திற்காகத்தான் அவர் உழைத்தார், பெருஞ்சுமை தாங்கினார்; பெருந்துயர் உற்றார். (1989).
இனிப், பெரியாரின் தமிழ்மொழி தொடர்பான கருத்துகளை எதிர்த்தும்
கண்டித்தும் பாவலரேறு எழுதியுள்ள சிலவற்றைப் பார்ப்போம்:
“பெரியார் கரிநெய் கொண்டழித்த இந்தியை இப்பொழுது படித்துக்
கொள்ளுவதில் தவறில்லை என்று அவரின் வாய் முழக்கமிடும் அளவிற்கு அவர் நெஞ்ச வலிமை குன்றிப்போய்
விட்டமைக்காக நாம் வருந்துகின்றோம்” (1966).
“தமிழ்மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத்
தொண்டைப் பற்றிப் பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான்,
பக்தவத்சலம் ஆரிய அடிமை. பெரியார் திராவிட அடிமை. இன்னுஞ்
சொன்னால்,
குமுகாய அமைப்பில் இராசாசியால் எப்படித் தமிழர் இனம்
அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ, அப்படியே மொழியியல் துறையில் தமிழ்வளர்ச்சிக்கு இவர் ஓர்
இராசாசியாகவே இருக்கின்றார்…
தமிழ்மொழியைப் பொறுத்தவரையில் இவர் அதன் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாகவே
இருந்திருக்கின்றார். ஆரியப் பார்ப்பனர்களின் தில்லுமல்லுகளையும்,
அவரால் தமிழ்க்கு நேர்ந்த – நேரவிருக்கின்ற கேடுகளையும் புடைத்துத் தூற்றி எடுத்துக் காண்பிக்கும்
மதுகை படைத்த இவர், ஆரிய மொழியால் தமிழ்மொழிக்குக் கடந்த மூவாயிரம் ஆண்டுகளாக நேர்ந்த தீங்கை
ஒப்புக்கொள்வதில்லை; ஒரோவொருகால் ஒப்புக்கொண்டாலும் அதை விலக்க எவ்வகை முயற்சியும் செய்வதில்லை;
ஒரோவொருகால் செய்தாலும் அதைக் கடனுக்காகவே,
அவருடன் சேர்ந்திருந்த உண்மைத் தமிழன்பர்தம்
கண்துடைப்புக்காகவே செய்திருக்கின்றார்…
தமிழில் என்னஇருக்கிறது? என்று இவர்கேட்கும் வெறுப்புக்கொள்கை (Cynicism)
தான் இவர்காணும் பகுத்தறிவு என்றால் அப் பகுத்தறிவு நமக்கு
வேண்டுவதில்லை. உலகில் உள்ள மாந்த மீமிசைக் (Supernal) கொள்கைக்கு வழிகாட்டாத இவர் குமுகாய அமைப்பு நமக்குத்
தேவையில்லை…
ஆரிய அடிமைப்புலவர்கள் சிலர் இடைக்காலத்தில் ஆக்கிவைத்த
கம்பஇராமாயணம், பெரியபுராணம், வில்லிபாரதம் முதலிய பார்ப்பன அடிமைப் பழங்கதை நூல்களே தமிழ் என்று நினைத்தால்
தமிழ்மொழியில் மாந்த வாழ்விற்கான இலக்கியநூல்களே இல்லை என்பதை நாமும்
ஒப்புக்கொள்ளலாம். ஆனால், இப்பொழுது உள்ள கழக நூற்களையும், இறந்துபட்ட ஆயிரக்கணக்கான மெய்யிலக்கியங்களையும் கண்டும்
கேட்டும்,
உணர்ந்தும்கூட இவர் தமிழைப் பழிப்பதை நம்மால் பொறுத்துக்
கொள்ள முடியவில்லை. வேண்டுமானால் தமிழ்மொழியில் என்னென்ன இல்லை என்று இவர்
கூறட்டும்;
அதன்பின் நாம் என்னென்ன இருக்கின்றது என்று காட்டுவோம்…
தமிழ்மொழியில் எழுதப்பட்டுள்ள - புகுத்தப்பட்டுள்ள இடைக் காலக்
கருத்துகளைப் பற்றி ஆராய்ந்து, அக்கருத்துகள் யாவும் பிறரால் இம்மொழி பேசிய மக்களை
ஏமாற்றுவதன் பொருட்டு எழுதிவைக்கப் பட்டதாகும் என்று தெரிந்த இவர்,
அப் பாழ்வினைக்குத் தமிழ்மொழி மேல் குற்றங் கூறுவது
எப்படிச் சரியாகும்?
இக் காலத்துச் செய்முறை அறிவுநூலை அக் காலத்திலேயே எப்படி
எழுதி வைத்திருக்க முடியும்? என்றாலும் நம் தமிழில் உள்ள நூல்கள் அழிக்கப்பட்ட ஒரு நிலையில் நாம் இத்தகைய
கேள்வியை இரக்க உணர்வோடு கேட்கவேண்டுமேயன்றி, இழிவுணர்வோடு கேட்பதும், தமிழையே காட்டுமிராண்டிக் காலத்து மொழி,
நாகரிக
காலத்திற்குப் – பகுத்தறிவு காலத்திற்குப் பொருந்தாத மொழி என்று
இழித்துரைப்பதும் ஈ.வெ.ரா.வின் பேதைமையையே காட்டும்”…
இவர் அரசியலைப் பொறுத்தவரை ஓர் இலெனினாக இருக்கலாம்;
குமுகாயவியலைப் பொறுத்தவரையில் ஒரு கமால் பாட்சாவாக
இருக்கலாம்; பொருளியலைப் பொறுத்தவரை ஒரு மார்க்சாக இருக்கலாம்;
சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை ஒரு பெரியாராகவும்
இருக்கலாம். ஆனால் மொழித்துறையைப் பொறுத்தவரையில் – இவர் வெறும் இராமசாமிதான்…
தமிழர்களுக்கு விடுதலை தேடித்தருகின்றேன் என்று கூறும் ஒரு
தலைவர்,
தமிழைப் பற்றியும் உண்மைத் தமிழ்ப் புலவர்களைப் பற்றியும் தகுதிக்
குறைவாகப் பேசித் திரிகின்றார் என்றால், அஃது அவர்க்கு மட்டுமன்று தமிழர் எல்லாருக்கும் வந்த
இழிவாகும். தமிழ்நாட்டுக்கே வந்த இழிவு. இஃது அவர் எதிர்த்து வரும் ஆரிய
இனத்துக்கு வேண்டுமானால் மகிழ்வூட்டுவதாக இருக்கலாம்…
பிறரை எப்படிக் கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக்கூடாது என்று
இவர் கூறுகின்றாரோ, அப்படியே இவரையும் உண்மைத்தமிழர், கண்களை மூடிக்கொண்டு பின்பற்றக்கூடாது என்று
எச்சரிக்கின்றோம்” (1967).
நம்மைப் பொறுத்தமட்டில் பெரியார் குமுகாயச்
சீர்திருத்தத்தில் – பிராமண சூத்திரப் பெரும் போராட்டத்தில் - பெரியார்தாம்! அதில் ஐயமில்லை. ஆனால்
தமிழ்மொழி பற்றியோ, தமிழர் வரலாறு பற்றியோ பிற அறவியல் செய்திகளைப் பற்றியோ பேசுவதில் அவர் சிறியாரே!...
தமிழகத்தில் இருந்துகொண்டிருப்பதாலும்,
தமிழில் பேசத் தெரிந்திருப்பதாலுமே தமிழறிஞர் ஆகிவிட
முடியாது என்பதைப் பெரியார் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் (1967).