அறுசீர் மண்டிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறுசீர் மண்டிலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 மார்ச், 2010

திருக்குறள் விளக்க மண்டிலப் பா

.என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர் 

இது பொருட்பால் படைச்செருக்கு அதிகாரத்தில் முதலாவது குறளாகும். குறள் எண்.771. பாவாணர் இக் குறளுக்குக் கூறும் உரையில்
             "ஒரு மறவன் தலைவன் மேல் வைத்த அன்புப்பெருக்கால், தன் மறத்தையும் தான் சேர்ந்த படையின் மறத்தையும் தலைவன் மேலேற்றிக் கூறியவையே இவை. படையின் வெற்றி படைத்தலைவன் வெற்றியாகக் கூறப்படுவது மரபாதலால், இங்ஙனம் கூறினான் என்க. 
            போரில் இறந்த மறவனுக்குக் கல்நட்டு, அதில் அவன் பெயரும் பெருமையும்பொறிப்பது பண்டை மரபு. ..... ஒரு மறவன் தன் திறத்தை மிகுத்துக் கூறுவது நெடுமொழி எனப்படும். 
            இதை வெட்சித்திணைக் கரந்தைப் பகுதித் துறையாகத் தலைதாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல்என்பர் தொல்காப்பியர் (தொல். பொருள். புறத். 5). 
            ஐயனாரிதனார் இதை நெடுமொழி கூறல்என்று கரந்தைப் படலத் துள்ளும், ‘நெடுமொழி வஞ்சிஎன்று வஞ்சிப் படலத் துள்ளும் அமைப்பார். இவற்றுள் முன்னது தன் அரசனை நோக்கியது. பின்னது தன் பகைவரை நோக்கியது" 
-         என்று விளக்குகிறார். 
         (வெட்சி ஆநிரை கவர்தல், கரந்தை ஆநிரை மீட்டல், வஞ்சி பகைவர் மண் கொள்ளுதல்)                                                                                                                                                 நெடுமொழி என்பது பெருமிதம். வஞ்சி மறவன் பெருமிதத்தால் தன்னை வியந்து கூறும் மொழி பற்றி இப்பெயர் பூண்டது இத்துறை. ஒரு மறவனால் நெடுமொழியாகக் கூறப்பட்டுள்ள இக் குறளை ஆறு அறுசீர் மண்டிலங்களில் விளக்கும்படி 'பன்மலர்' இலக்கிய மாத இதழ் கேட்டிருந்தது. அதன்படி எழுதப்பட்ட இந்த ஆறு அறுசீர் மண்டிலங்கள் பன்மலர் இதழ் 108இல் வெளிவந்தன :



மூத்த மாந்தன் உலகினிலே
     முன்னே பிறந்த மொழிக்குரியன்
பூத்துச் சிறந்தே பொலிவுற்ற
     புரையில் நாக ரிகங்கண்டான்
ஏத்தும் காதல் மானமுடன்
     ஈடில் வீர இயல்பாளன்
கூத்தும் இசையும் இயற்றமிழும்
     கூறாய்க் கொண்ட தமிழ்மொழியன்

ஒப்பில் வீரச் செம்மாப்பை
     உலகுக் குரைக்கும் ஒருகாட்சி
செப்பும் ஏழு சீருக்குள்
     சிறப்பாய்க் கண்முன் நிறுத்துகிறார்!
முப்பால் தந்த வள்ளுவனார்
     முதிர்ந்த முத்துக் குறளொன்றில்!
அப்பா! என்னே அருங்காட்சி!
     அவர்க்கே ஆகும் அருந்திறமே!

இரண்டு அரசர்க் கிடையினிலே
     ஏதோ இகலால் போர்மூண்டுத்
திரண்டு வந்த படையினரைத்
     தெரிந்தே ஊர்க்கு வெளியினிலே
அரணில் களத்தில் முழங்குகிறான்
     அங்கோர் மறவன் ஆர்ப்புடனே!
மிரண்டப் பகைவர் வெதிர்ப்புறவே
     விளக்கிச் சொன்னான் கைநீட்டி!

அங்கே காண்க அணியணியாய்
     அமைத்து நட்ட கற்களவை
இங்கெம் தலைவ ரெதிர்நின்றே
     இறந்த எண்ணில் வீரர்க்கே!
செங்கை வாளாற் சிதைவுற்றார்
     செறிந்தார் நடுகற் சீரணியாய்!
உங்கள் நன்மை உன்னியிதை
     உரைத்தேன் தெவ்விர் நில்லன்மின்!

நின்றார் எதிரில் கல்லாக
     நிற்ப தறிவீர் மாணாரே!
நன்றே கருதி உரைக்கின்றேன்
     நண்ணல் கருதீர் போரென்றே!
குன்றா உணர்வில் நெடுமொழியாய்க்
     கூறும் உரையால் தெளிவீரே!
என்னும் காட்சி விளக்கத்தில்
     இணையில் வீரம் இயம்புகிறார்!

எந்தச் சிறப்பைப் போற்றுவது?
     எதனை வியந்து கூறுவது?
முந்தைத் தமிழர் முழுவீரம்
     முன்னம் உணர்ந்து மகிழுவதா?
எந்தை ஐயன் வள்ளுவனின்
     இணையில் ஆற்றல் எண்ணுவதா?
இந்நாள் தமிழர் இழிநிலையை
     எண்ணி இரங்கிக் கவலுவதா?

----------------------------------------

வியாழன், 26 நவம்பர், 2009

உன்றன் களங்கம் தீராதே!

* உன்றன் களங்கம் தீராதே! 

நாளுக் கொன்று கதைக்கின்றாய்;
    நடிப்பில் ஏய்க்க முனைகின்றாய்!
ஆளும் வாய்ப்புன் குடும்பத்தார்
    ஆக்க வளத்திற் கெனக்கொண்டாய்!
மூளும் சினம்நீ புலிகள்மேல்
    மொத்தப் பழியும் சுமத்துகையில்!
நீளும் ஆட்சி இரணிலுக்கு
    நிலைக்கா ததினால் ஊறென்றாய்!


இணையில் மறவன் ஈழத்தின்
    எழுச்சி பிரபா கரன்வீழ்ச்சி
உணக்க உன்றன் விழிநீரும்
    உகுக்கும் என்றாய் உண்மையிலாய்!
வணங்கா மண்ணின் மைந்தரொடு
    வக்கில் லோராய் இங்குள்ள
பிணக்கத் தமிழர் இனிமேலுன்
    பேச்சை நம்பார் இரண்டகனே!


வாசெ குவுடன் பொற்கோவும்
    வக்குஇல் சுபவீ வீரமணி
பேசி ஏய்க்கும் இனும்பலரும்
    பின்னே உள்ளார் என்றெண்ணிக்
கூசா நடிப்பில் கொள்கையரை
    குழப்ப முனைவாய் வீணுன்றன்
மோசச் செயல்கள் வெல்லாதே!
    முழுத்தன் னலனே! மொய்ம்பற்றோய்!


நன்றாய்  முனைந்து  நடிக்கின்றாய்;
    நாளும் கதைகள் சொல்கின்றாய்!
உன்றன் குடும்ப நலனுக்காய்
    ஒழித்தாய் ஈழத் தமிழர்களை!
இன்றுன் கதைகள் நம்பற்கே
    எவரிங் குள்ளார் மெய்த்தமிழர்!
ஒன்றிங் குறுதி உணர்ந்திடுவாய்;
    உன்றன் களங்கம் தீராதே! 
   
------------------------------------------------------------------------

திங்கள், 22 ஜூன், 2009

இனியேனும் முயலாரென்றால்...!



இனவெறிச் சிங்க ளர்க்கே
     இலையெனா தெல்லாம் தந்தார்!
கனவிலும் உரிமை மீட்பே 
     கருதிய தமிழர் குண்டுக்
கனலினில் கருகி மாளக்
     கழியமீ துள்ளோர் துன்பில்
மனஞ்சிதை வுறுதல் போக்க
     மனப்பத னிலைதில் லிக்கே!

ஈழமண் நொசிந்து நைந்தே
     இறந்தவர் ஓரி லக்கம்!
தோழத்தே அடைத்த மந்தைத்
     தொகுப்பெனக் குமைந்தி ழிந்தே
ஆழவே துயருள் மீழ்கி
     அமிழ்ந்துளார் மூன்றி லக்கம்!
சூழலோ அவர்க்க மைத்தச்
     சொல்லொணாக் கொடுமை அந்தோ!

அங்கவர் அடைப்பின் நீங்கி
     அவரவர் வீடி ருந்த
தங்கிடம் செல்லு தற்கே
     தடையிடா தீரென் றந்தச்
சிங்கள ஆட்சி யாளர்
     செவிப்பறை யறையச் சொல்ல
இங்குளார் தில்லி யாரை
     ஏன்வலி யுறுத்தா துள்ளார்?

தமிழினத் தலைமை வேட்டத்
     தகுதியைக் காட்டற் கேனும்
நிமிர்வுற நின்று தில்லி
     நிலையினை மாற்றி ஈழத்
தமிழரின் துயர் துடைக்கத்
     தாமினி முயலா ரென்றால்
இமிழுல கெல்லாந் தூற்றும்!
     இரண்டகர் இவரே என்னும்!

------------------------------------------

செவ்வாய், 5 மே, 2009

பாவேந்தர் இன்றிருந்தால்...!

(29-4-2009 அன்று பாவேந்தர் பேரவை நடத்திய பாவேந்தர் பிறந்தநாள் விழாவில் "பாவேந்தர் இன்றிருந்தால்" என்ற தலைப்பில் பாடிய மண்டிலப் பாக்கள்)


பெரியோரே! அறிஞர்களே! பெற்றெடுத்த தாய்க்குலமே!
     பீடு சான்ற
அரிமாவின் குருளைகளே! அறிவார்ந்த பிள்ளைகளே!
     அனைவ ருக்கும்
பரிவார்ந்த வணக்கங்கள்! பாவேந்தர் விழாவினிலும்
     பதைப்பு நெஞ்சில்!
சொரிகின்ற குண்டுமழை சுட்டழிக்கும் ஈழத்தில்
     சொந்தம் மாய்க்கும்!

பாவேந்தர்:

நோவேற்றித் தாய்த்தமிழை நொய்வித்தார் நொட்டுரையை
     நொறுக்கி வீழ்த்தி
தாவாற்றி தலைநிமிர்த்தி தமிழ்த்தாயின் தளையறுத்து
     தழைக்கச் செய்யப்
பாவாற்ற லாற்றமிழின் பகைஒடுக்கிப் படர்நீக்கப்
     பாடு பட்ட
பாவேந்தை அறியாரைப் பலகற்றும் தமிழரெனப் 
     பகர லாமோ?

தன்னலத்தார்:

ஆர்த்தெழுந்த இளைஞர்களை அறிவார்ந்த காளைகளை
     அணையச் சேர்த்தே
நேர்த்தியுறு போர்த்திறத்தில் நேரொழுங்கில் பயிற்றியவர்
     நெடுமீ கத்தால்
கூர்த்தவினை முடித்தீழக் கொடியேற்றி ஆண்டாரைக்
     குலைத்த ழித்துத் 
தீர்த்தவழி தன்குடும்பம் திளைக்கவளம் தீக்கரவில்
     தேர்ந்தார் அந்தோ!

பாவேந்தர் இன்றிருந்தால்...

அமுதூட்டல் போல்நஞ்சை அகமகிழ ஊட்டுந்தாய்
     ஆனார் என்னே!
உமிழ்வாரே பாவேந்தர் உறுபழியர் முகத்திழித்தே
     உலறிச் சீறி!
இமிழுலகில் தமிழர்க்கே இன்துணையாய் இருவென்றே 
     இருத்தி வைத்தால்
தமிழீழ இனமழிக்கத் தகவிலர்க்குத் துணைபோனாய்!
     தாழ்ந்தாய் என்பார்!

பொங்குதமி ழர்க்ககின்னல் புரிவார்க்கே அழிவுறுதி
     புரியு மாறே
சங்குமுழக் கோடுலகில் சாற்றியதை மறப்போமா?
     சற்றுக் கூட
தங்குதயக் கின்றியந்தத் தகையறியாக் கொலைவெறியர்
     தருக்குஞ் சொல்லார்
சிங்களவர் வீழ்ச்சிக்கே சீறிஅறம் பாடிடுவார்
     சினத்தால் தீய்ப்பார்!

வேகுந்தீக் கிரையாகி வீணிலுயிர் இழப்பாரை
     விளித்த ழைத்துச்
சாகின்ற தமிழாநீ சாகச்செய் வார்சாகச்
     செய்வாய் என்பார்!
மாகுன்றத் தோளனுயர் மறத்திற்குப் பொருளானான்
     மண்ணிற் காணா
வாகறிவுப் பெருவீரன் வரிப்புலிக்குத் துணையிருப்பாய்
     வாழந்தே என்பார்!

உரஞ்செறிந்த எழுச்சியுடன் உலகிலுள்ள தமிழரெலாம்
     ஒன்றாய் நிற்பீர்!
நரம்பெல்லாம் இரும்பாகி நனவெல்லாம் உணர்வாகி
     நண்ணி யந்தக்
கரம்புமன இனக்கொலையர் கடுமொடுக்கு முறையெதிர்த்தே 
     கனல்க என்பார்!
வரம்பறியாக் கொடுமையற வாழ,தமிழ் மண்மீட்க
     வாழ்த்துச் சொல்வார்!

இரண்டகரை இனங்காண்பீர்! இழித்தொதுக்கி வைத்திடுவீர்!
     ஈழம் சாய்த்த
வறண்டமனத் தில்லியரை வலிமையுடன் எதிர்த்தினத்தை
     வாழ வைப்பீர்!
இரண்டுநிலை இந்தியனுந் தமிழனுமாய் இருக்காதீர்!
     இனிஎ ழுந்தே
திரண்டிடுவீர் தமிழரென! தேர்ந்திடுவீர் அடையாளம் 
     தெளிவாய் என்பார்!        

வியாழன், 26 பிப்ரவரி, 2009

இன்னநிலை புரிந்தெழுவோம்!



      (நான்குகாய் +மா + தேமா)


மூண்டெழுந்த கொந்தளிப்பை முகம்மாற்றித் தணித்துவிடும்
     முடிவைக் கொண்டு
தூண்டலினால் காவலரும் துடிப்புவழக் குரைஞருடன்
     துலக்க மின்றி
வேண்டாராய்ப் பகையுணர்வில் வெறுப்புற்று மோதிடவும்
     விளைவாய்ப் பல்லோர்
ஆண்டடிதாக் குதல்களுக்கே ஆளானார் அவற்றோடே
     அவர்கள் ஊர்தி

காவலரின் கைத்தடிகள் கடுந்தாக்கில் நொறுங்கிவிழ
     கலங்கா நின்ற
நாவலராம் வழக்குரைஞர் நனிமிகவே தாக்கமுற
     நடுங்கா நெஞ்சின்
கோவமிகக் காவலர்குண் டாந்தடிகள் கட்டடத்தைக்
     குறியாய்த் தாக்க
வேவலுற எரிந்ததுகாண் விளைவிலொரு காவலகம்
     வெறுப்பி னாலே!

இன்னவகை மோதலினால் எவருக்கே இன்பயனென்(று)
     எண்ணிப் பாரீர்!
முன்னணியில் நின்றிருந்து முனைந்தீழப் போர்நிறுத்த
     முழக்கம் செய்தோர்
வன்குரலை ஒடுக்கிடவே வலிந்தங்குக் காவலரை
     வரச்செய் தாரே!
இன்னநிலை புரிந்தெழுவோம்! ஈழஉற வைக்காக்க
     எழுவோம் மீண்டும்!

----------------------------------------------------

வெள்ளி, 30 ஜனவரி, 2009

முத்துக்குமார் நினைவாக...!

அவரும் இவரும் நீயும்!
அவர்:
ஒருவருடை இறப்பினுக்கே ஓரினத்தைப் பழிவாங்கும்
     உளங்கொண் டாரோ?
உருளுலகில் இந்நாட்டை உயர்வல்ல அரசாக்க
     உளங்கொண் டாரோ?
உருவாகும் ஈழத்தால் ஒற்றுமைக்கிங்(கு) ஊறென்றே
     உளங்கொண் டாரோ?
ஒருமுடிவாய்ப் பலவகையும் உதவுகிறார் சிங்களர்க்கே
     உணமை ஏதோ?
இவர்:
ஈழத்தில் இனமழிய இவ்வாட்சி எதற்காக
     இனியெம் சொந்தம்
ஆழத்தாழ் துயர்மூழ்கி அழிகின்ற நிலைமாற்ற
     ஆளும் தில்லி
தாழவிடா தாட்சியினைத் தாங்குகின்றோம் ஈழப்போர்
     தடுப்போம்! என்றே
சூழல்கண் டுரைத்தார்பின் சோர்ந்தாரே! பதவிக்காய்ச்
     சுருங்கி னாரே!
நீ:
இங்குதமிழ் நாடாளும் இயலாத்தன் னலத்தாரின்
     ஏய்ப்புக் கூறி
பொங்கீழத் தமிழினத்தைப் பொல்லாரோ டிணைசேர்ந்து
     போரில் மாய்க்கும்
எங்குமிலாக் கொடுமைசெயும் இந்தியத்தின் இரண்டகத்தை
     எடுத்துக் கூறி
மங்கலிலாப் புகழோடே மாய்ந்தமுத்துக் குமாரேயெம்
     மறமே வாழ்க!

புதன், 26 நவம்பர், 2008

அண்ணாவின் பெருமை!

       
பெருமையெனல் உயர்ச்சிசிறப் பெனஒருவர் குணநலன்கள்
பெரிதாய்ப் போற்றும்
ஒருதகைமை! செயற்கரிய உண்மையிலே செய்ததினால்
உற்ற பேறே!
எருவெனவே உயிருடம்பை இத்தமிழ மண்ணுக்கே
ஈந்த பெம்மான்
திருமைமிகு அண்ணாவின் பெருமையினைச் சிறிதிங்கே
தெரிந்து கொள்வோம்!



அறிஞருளும் அறிஞரவர் அரசியல்சீர் கற்றறிந்தார்
அவரின் பேச்சைப்
பொறிமடுத்தார் வயப்படுவர்; புரிந்தபிறர் வேட்டிருப்பர்;
புரியார் தம்மை
நெறிப்படுத்தும் குமுகாய நிலைதிருத்தும் பெரும்பணியர்
நெஞ்சக் கூட்டில்
வெறியன்பால் தமிழ்மக்கள் விருப்பத்தோ டடைத்துவைத்த
வெல்லுஞ் சொல்லார்!



உலகினிலே முதன்முதலாய் உயர்ந்திருந்த ஓரினத்தை
ஒப்பே இல்லா
இலகுதமிழ் முதன்மொழியை ஏய்ப்பினிலே வீழ்த்திய
ரியத்தின் மாயை
துலக்கமுற விளக்கியவர் தோல்வியிலா எழுத்தாற்றல்
துணையி னாலே
இலங்குகதை கட்டுரைகள் ஏற்றமிகு மேடைதிரை
எல்லாம் வென்றார்!



பொருநரென மேடையிலும் புத்தெழுத்து நடையினிலும்
பொலிவு சேர
அருந்தமிழ்க்கு அணிசேர்த்தார்! அயற்சொற்கள் தவிர்த்தெழுத
ஆவல் கொண்டார்!
இருந்தமிழ்க்கு மறுமலர்ச்சி இவராலே வந்ததெனில்,
இதுவே உண்மை!
பெருஞ்சிறப்பில் செந்தமிழ்க்கே பீடுறவே எடுத்தாரோர்
பெருமா நாடே!



எழுத்தாளர் கல்கிமகிழ்ந் திவர்அறிஞர், தென்னாட்டின்
பெர்னாட் சாஎன்(று)
அழுத்தமுறப் புகழ்ந்துரைத்தார்! ஆங்கிலத்தில் அண்ணாவின்
ஆற்றல் பேச்சு
இழுத்ததந்த வாச்பேயி நேருவுட னெல்லாரின்
இனிய சிந்தை!
வழுத்திதமிழ் மக்களெல்லாம் வாய்மகிழ அண்ணனென
வழங்கி னாரே!



இருபத்து மூன்றுதிங்கள் இவர்முதல்வ ராயிருந்தார்
இதற்குள் ளேயே
இருமொழியே போதுமென இந்திமறுத் தோர்சட்டம்
இயற்றித் தந்தார்!
பெருமகிழ்வில் தமிழ்நாடாய்ப் பெயர்மாற்றம் செய்திட்டார்!
பின்தன் மானத்
திருமணங்கள் செல்லுமெனுந் திருத்தத்தால் தமிழ்மானம்
திரும்ப மீட்டார்!



இனக்கொலைகள் அன்றைக்கும் ஈழத்தில் ஐம்பத்தோ(டு)
இரண்டாண் டின்முன்
கனக்குமனத் தோடண்ணா கனிவற்ற தில்லியினைக்
கடிந்து ரைத்தார்!
மனக்குமுற லோ(டு)ஐநா மன்றிற்கும் எழுதிநிலை
மாற்றக் கேட்டார்!
இனக்காவல் மறவனவர் இருந்திருந்தால் இன்றிருக்கும்
ஈழ நாடே!



அண்ணாவின் உரோம்செலவில் ஆற்றலுடை ஒருமறவர்
அடைப்பின் நீக்க
பண்ணவராம் போப்பவரும் அண்ணாவின் வேண்டுகைக்குப்
பரிந்தி சைந்தே
திண்ணமிகு இரானடேயை விடுவிக்கச் சிறைக்கதவும்
திறந்த தன்று!
எண்ணமெலாம் நன்னேயம் இயக்கமெலாம் நன்னெறியன்(று)
இலங்கி னாரே!



பெரிதுபெரி தண்ணாவின் பெரும்பெருமை முடிந்திடுமோ
பேசு தற்கே!
அரியதமிழ் மீட்பிற்கு அண்ணாவே முன்னணியர்
அறியார் யாரே!
விரிந்ததவர் சிந்தனைகள் தளையறுத்துத் தமிழருயர்
விடிவைத் தேடி!
அரிதவரின் பெருமைசொலல் அவரவரும் தம்முணர்வால்
அறிந்து கொள்வீர்!

 -------------------------------------------------------------
        

   
   

ஞாயிறு, 19 அக்டோபர், 2008

நல்லெண்ணம் வளர்ப்போம்!




மாந்தர்க்குத் தகைமைமதிப் புயர்வுசிறப் பளிப்பதெலாம்
          மனத்தின் எண்ணம்;
வேந்தெனினும் நல்லெண்ணம் இலையெனிலோ வெறும்மாவே,
          விரைவில் வீழ்வான்!
சாந்துணையும் உயர்வூட்டும் சாலஉயர் எண்ணங்கள்
          சரிவே காணா
ஏந்துடைய நல்வாழ்வு என்றென்றும் ஏய்ந்திடநல்
          எண்ணம் வேண்டும்!


ஒருவரைநீ வாழ்த்தினையேல் உனைநீயே வாழ்த்தினையென்
          றுணர்ந்து கொள்க!
ஒருவர்க்குத் தீங்குசெய நினைத்தாயேல் தீங்கினைநீ
உனக்கே செய்தாய்!
ஒருவரைநீ சினந்தாயேல் ஊறுன்றன் மனத்திற்கும்
          உடற்கும் உண்டே!
ஒருக்காலும் மாறாத உறுதியிது எண்ணங்கள்
          உயர்த்தும்; வீழ்த்தும்!


தப்பாதே நல்லெண்ணம் வளர்க்கின்ற சூழ்நிலைகள்
          தமையே தேர்க!
எப்போதும் நற்றொடர்பும் ஏற்றமுறும் நல்லுறவும்
          இணைத்துக் கொள்க!
இப்போது மனத்தினிலே எழுச்சிகொளும் நல்லெண்ணம்
          இனிமை சேர்க்கும்!
முப்போதும் செயல்களெலாம் முழுச்செப்ப வெற்றியுடன்
          முடியும், உண்மை!


ஓய்வினிலும் பொழுதோட்டும் ஒருநேரந் தனிலதிலும்
          உன்னும் நெஞ்சில்
ஏய்தலுற நல்லெண்ணம் எழக்கண்டும் கேட்டுரைத்தும்
          இயைந்து நின்றால்
ஆய்வறிவர் முடிவிதுவே அடரெண்ணம் ஏந்துமனம்
          அளிக்கும் வெற்றி!
தோய்கின்ற தொழிலதிலும் தூயவுள நல்லெண்ணம்
         துணையாய்க் கொள்க!


எண்ணத்தை ஆக்குவதார்? உள்வாங்கு்ம் செய்திகளே!
          எனவே என்றும்
ஒண்ணலுறுஞ் செய்திகளே உள்வாங்கும் படிச்சூழல்
          ஓர்ந்து தேர்க!
எண்ணவராம் வள்ளுவரும் உயர்வையுள ஓதியதை
          எண்ணிப் பாரீர்!
திண்ணரெனப் பொறிவாயில் தேர்ந்தவிக்கச் சொன்னதையும்
          தெளிந்து கொள்க!


நல்லெண்ணம் மனங்கொள்க! நல்லுணர்வைப் போற்றிடுக!
          நன்மை நாடி
நல்லாரோ டுறவாடி நல்லொழுக்கம் பேணிடுக!
          நயந்தே நாளும்
வல்லாரும் மெல்லியரும் வலியவுள நல்லெண்ணம்
          வளர்த்து வாழ்க!
எல்லாரும் நல்லவராய் இயங்கிநலந் தோய்ந்திடவே
          இனிது வாழ்க!


-----------------------------------------------------------------------------------------------