பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் – உ
=========================================================
சிவஞான முனிவர் (18ஆம் நாற்.)
-----------------------------
வடமொழி உயர்வென்றும் தமிழ் நாழ்வென்றும் கருதப்பட்ட
காலத்திலும் இடத்திலும் இருந்துகொண்டு, தம் ஆழ்ந்த தென்மொழி வடமொழிப் புலமையாலும்,
அரிய இலக்கணவாராய்ச்சியாலும், செய்யுள் வன்மையாலும் தருக்க வாற்றலாலும், தமிழ்
வடமொழிக்கு எள்ளளவும் இளைத்ததன்றென நிறுவியவர் மாதவச்சிவஞான முனிவராவர்.
சுந்தரனார் (19ஆம் நூற்)
---------------
சுந்தரனார் தம் மனோன்மணீயத்திற் பின்வருமாறு தமிழை ஆரியத்தோடுறழ்ந்து,
ஆரியச்செருக்கை அடக்கினார்.
“கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா
ளமுந்துளுவும்
உன்னுதரத்
துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக்
கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத்
திறம்வியந்து செயல்மந்து வாழ்த்துதுமே”....
“சதுர்மறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ
யனாதியென மொழிகுவதும் வியப்பாமே”...
“பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும்
பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே”...
“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன்
குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி
ஒருகுலத்துக் கொருநீதி”...
“மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில்
மாண்டோர்கள்
கனஞ்சடையென்
றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ”
பா.வே. மாணிக்க (நாயகர்) (20ஆம் நூற்.)
--------------------------
தம் நுண்மாண் நுழைபுலத்தாலும் பன்மாண் பொறிவினைப்
பயிற்சியாலும், தமிழ் நெடுங்கணக்கை ஆழ்தாய்ந்து தமிழே உலக முதன்மொழியென முதன்முதற்
கண்டவரும், அதை அஞ்சாது எங்கும் எடுத்துவிளக்கிய தண்டமிழ்த் தறுகண்ணாளரும் பா.வே.
மாணிக்கநாயகரே.
(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 117,118., தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை–17)
________________________________________________________________________