காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

‘காதற் காமம்’ – மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார்!



காதற் காமம் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் விளக்குகிறார்!



தமிழ்த்திணை எனத்தகும் அகத்திணைக்கு வெறும் உள்ளக்காதலும் பொருளன்று., வெறும் மெய்க் காம்மும் பொருளன்று. உள்ளம் இயைந்த உடலுறவும், உடல் இயைந்த உள்ள உறவும், சுருங்கக்கூறின் உயிர்மெய்ப் புணர்ச்சியே அதன் பாடுபொருளாம்.

     ஆண்டாள் காதல் அகத்திணையாகாது, மெய்யுறல் இன்மையின். மாருத வேகன் சுதமதியைக் கூடியதும் அகத்திணையாகாது, உள்ளிசைவு இன்மையின். மெய்யாக நோக்கின் காதல் என்பதனுள் உடற்கலப்பும் அடங்கும்.

உடற்கலவியின்றிக் காதற்றன்மை செவ்வுறாது. பாலுறவுதான் காதல் என்னும் தகுதிக்கு உரியது. காதல் என்ற பெயர் மேலிட்டுப் பிறவாறு சொல்லுவன வெல்லாம்  அரைகுறையான உருவகமாவன என்பர் ஆசுவால் சார்ச்சு.(The psychology of sex. P.105)

காதற் காமம் காமத்துச் சிறந்தது
விருப்போ ரொத்து மெய்யுறு புணர்ச்சி            -(பரிபாடல்.9.)  என்று இருசொற்களையும் இயைத்தார் குன்றம் பூதனார்.

பொதுவான மொழி வழக்கில் காதல் என்பது உள்ளப பற்றையும், காமம் உடற்பற்றையும் குறிக்கும் என முன்னர்க் கண்டோம். இரு சொல்லையும் ஒருங்கு காட்டும் ஒரு தமிழ்ச்சொல் உண்டா? உண்டு. அதுவே அகம் என்னும் சொல். எனினும் முன்னிலைப் படுத்திக் கூறும் நான்மறையாளர்க்கு விளங்கவேண்டி, குன்றம் பூதனார் காதற்காமம் (காதலங்காமம் - பரி.6, அன்புறு காமம் - நற்.389) என்ற ஒரு புதுத்தொடரை ஆக்கினார். ஆக்கி, விருப்பு ஓரொத்து மெய்யுறு புணர்ச்சி எனப் பொருளும் நிரல்பட விரித்துக் காட்டினார்.

இக் காதற்காமந்தான் அகத்திணை. அகத்திணை தலைமக்கள் உள்ளங்கூடிய உடற்கூட்டாளிகள். உடல்மட்டும் கலந்ததா, உள்ளம் கலந்ததா? என்ற வினாவிற்கு இவர்பால் விடையில்லை. ஆதலின் அகப்பாட்டின்கண் காதல் என்ற சொல் வருமிடத்துக் காமப் பொருளும் உண்டெனக் கொள்க. காமச்சொல் வந்த இடத்துக் காதற் பொருளும் உண்டெனக்கொள்க.

(தமிழ்க்காதல் வ.சுப.மாணிக்கம், இயல், தஞ்சாவூர். பக்.402,403.) 
----------------------------------------------------------------------