புதன், 23 ஜூலை, 2008

போனால் விளையும் நலமே...!


(கட்டளைக் கலித்துறை) 

தானும் முயலா நிலையில் முயலுவார் தம்முனைப்புக்
கூனும் படிக்கே உரைத்தே எழுதிக் குழப்பிவரும் 
தேனாம் தமிழின் பெயர்சொலித் தின்று திரிபவர்கள் 
போனால் நலமெலாம் பூக்கும் தமிழுக்குப் பொய்யிலையே!

மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் ஆபிரகாம் தொ. கோவூர்


(ஆங்கிலமூலம்: வி.எ.மேனன்  ***   தமிழாக்கம் தமிழநம்பி)

            உலகப் புகழ் பெற்ற பகுத்தறிவாளரும் மன மருத்துவருமான முனைவர் ஆபிரகாம் தொ. கோவூர், ஆவி, ஆதன்(ஆன்மா) தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.
           
      அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்ட தலைசிறந்த ஓர் அறிவியலறிஞர் ஆவார்.
            உலகில் ஆதன் தொடர்பான ஆராய்ச்சியிலீடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் அறிவியலரும், - ஒரே அறிவியலரும் கோவூர் அவர்களே!
            ஆதன், ஆதனல்லாவகை விந்தை நிகழ்வுகள் பற்றிய இடுவுரை (thesis)க்காக அமெரிக்க மின்னசோட்டா மெய்யறிவுக் கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது.
            ஆதன், ஆதனல்லாதவை, ஆவி ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்றால் ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் இன்றேல் மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் எனபதே அவரின் உறுதியான கருத்தாகும்.
            "இயற்கையை மீறிய ஆற்றல்களை எவரும் எக்காலத்திலும் பெற்றிருக்கவில்லை; அப்படடிப் பட்டவர்கள் மதநூலின் பக்கங்களிலும், உணர்ச்சிகளை வணிகமாக்கும் செயதித்தாள்களின் பக்கங்களிலுமே இருந்து வருகிறார்கள்" எனகிறார் கோவூர்.
            'எர்னெசுட்டு எக்கெல் சூழலியல் நடுவம்' இந்தியப் பெருங்கடலிலும், அதன் கரையோர நாடுகளிலும், படிமலர்ச்சி(evolution) ஏணியின் விடுபட்ட இடைவெளிகளைக் கண்டறியும் நோக்கில், 'எக்கெல் ஆய்வுச் செலவு' மேற்கொண்டது.
            அதற்கென அமைத்த அறிவியலர் குழுவில் கலந்து கொள்ளும்படி அமெரிக்காவின் அந்நிறுவனம் அழைத்த ஒரே ஆசிய அறிவியலர் முனைவர் கோவூர் ஆவார்.
            ஆனால், அவருடைய துணைவியார் நீண்டகாலம் நோய்வாய்ப் பட்டிருந்ததாலும், அந்நோயால் இறந்து போனமையினாலும் அந்த வாய்ப்பை கோவூர் இழக்க நேர்ந்தது.
            முனைவர் கோவூர் உலகின் பல இடங்களுக்கும் சென்றவர். பல நாடுகளில் பொதுக்கூட்டங்களிலும், உலகமாநாடுகளிலும் சொற்பொழிவு நிகழ்த்தியவர். அவருடைய நூல்களிலுள்ள நிகழ்வாய்வு(case study) உணமைக் கதைகளைப் பல்வேறு நாடுகளில் பல தாளிகை(பத்திரிகை)களும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன.
            அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது.
            மூடநம்பிக்கையை விட்டுத் தொலைத்து காரணமறிந்து நடக்கும்படி தம் வாழ்நாள் முழுவதும் அறிவுறுத்தியவர் முனைவர் கோவூராவார். இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சவையின் கருமியக்குருத் தலைவரான காலஞ்சென்ற பேரருள்திரு கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார்.
            'புனர்சென்மம்' என்ற (மலையாள) திரைப்படத்தில் ஓர் மன மருத்துவராகத் தோன்றும் போது, கீழ்க்காணுமாறு தம் பிறப்பைப்பற்றி கோவூர் கூறுகின்றார்:
            "முக்கால் நூற்றாண்டுக்கு முன்னால், ஒரு சிரியன் கிறித்தவக் குடும்பத்தில், நானே தேர்வு செய்து கொள்ள இயலாததும் என் கட்டுப்பாட்டில் இல்லாததுமான நிலவரைவியல், உயிரியியல் நேர்ச்சியால் (accident), அழகிய கேரள மண்ணில், ஒரு கிறித்தவத் திருத்தந்தையின் மகனாகப் பிறந்தேன். வளர்ந்து ஆளான பின்னர், இன்னொரு அழகிய நாடான சிரீலங்காவை என்னுடைய நாடாகவும், பகுத்தறிவாண்மையை என் மெய்ம்மவியலாகவும்(philosophy) நானே தீர்மானம் செய்து ஏற்றுக் கொண்டேன்."
            திருவள்ளாவில், தம் மூதாதையர் இல்லத்தில், தந்தையார் தொடங்கிய சிரியன் கிறித்தவக் கல்வி நிலையத்தில், கோவூர் பள்ளிப் படிப்பை முடித்தார். பின்னர், அவருடைய தம்பி பெகனன் கோவூருடன், (அமெரிக்க ஏல் பல்கலைக் கழகத்திலும், அனைத்து நாடுகள் அவையிலும் பணியாற்றியவர்) உயர்கல்வி பெறக் கல்கத்தா சென்றார்.
            கல்கத்தாவில் பங்கபாசி கல்லூரியில் புதலியல்(Botany), விலங்கியலைச் சிறப்புப் பாடமாகப் படித்துத் தேறினார்.
            கோட்டயம் கல்லூரியில் இரண்டாண்டுகள் உதவி விரிவுரையாளராகப் பணி புரிந்தார். பின்னர், 1928இல் யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரி முதல்வர் அருள்திரு பி.தி.கேசு அவர்களின் அழைப்பை ஏற்று, சிரீலங்காவுக்குக் குடிபெயர்ந்தார்.
            உதகையில் மலை-மரவடை (mountain flora) மாதிரிகளைத் திரட்டும் களப்பணியில் இருந்த போதுதான், தலைசிறந்த புதலியலரான அருள்திரு கேசு முனைவர் கோவூரைச் சந்தித்தார்.
            யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியில் பணியேற்ற முதலாண்டில் இளைஞர் கோவூரை, இறுதியாண்டு மாணவர்களுக்குப் புதலியலுடன் கிறித்தவத் திருமறைப் பாடமும் கற்பிக்கச் சொன்னார்கள்.
            கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்திலிருந்து தேர்வு முடிவுகள் வந்தன. அவருடைய மாணவர்கள் அனைவரும் மேஞ்சிறப்போடும் மதிப்போடும் திருமறைப் பாடத்தில் தேறியிருந்தாரகள். ஆனால் அடுத்த ஆண்டு, திருமறைப்பாடம் கற்பிக்கும் பொறுப்பு கோவூரிடமிருந்து பறிக்கப் பட்டது. கல்லூரித் துணைமுதல்வர் அருள்திரு ஓ.எல். கிப்பனுக்கு அப்பொறுப்பு தரப்பட்டது.
            அதைப்பற்றி வினவிய போது, அருள்திரு கேசு அவர்கள், "ஆபிரகாம், திருமறைப் பாடத்தில் நீங்கள் சிறப்பான தேரச்சி முடிவுகளை உருவாக்கித் தந்தீர்கள் என்பதை நான் அறிவேன்! ஆனால், அம்மாணவர்கள் அனைவருமே அவர்களுடைய மத்தத்தைத் துறந்து விட்டனர்!" என்று புன்னகையுடன் கூறினார்.
            1943இல் அருளதிரு கேசு பணிநிறைவுற்று (ஓய்வு பெற்று) இலங்கையினின்றும் நீங்கியதும், கோவூர், யாழ்ப்பாணம் நடுவண் கல்லூரியினின்றும் நீங்கி கல்லியிலுள்ள இரிச்மான்டு கல்லூரியிலும் பின்னர் மவுண்டு வினியாவிலுள்ள தூய தாமசு கல்லூரியிலும் பணியாற்றினார்.
            1959இல் கொழும்பு தர்சுட்டன் கல்லூரியில் அறிவியல் துறைத் தலைவராக இருந்தபோது பணிநிறைவுற்றார்.
            கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்.
            "எல்லாக் குழந்தைகளையும் போலவே, நானும், இளமைக் காலத்தில், பெற்றோருடைய சமய மூட நம்பிக்கைகளாலும், நடவடிக்கைகளாலும் மூளை மழுக்கத்திற்கு ஆளாகியிருந்தேன். பின்னர், அம்மடத்தனமான கருத்துக்களை விலக்கித் தள்ள எனக்குப் பெரும் பாடாயிருந்தது" என்று கோவூர் கூறுகிறார்.
            அதே தவற்றை மீண்டும் செய்வதைத் தவிர்த்துத் தம் ஒரே மகனான ஆரிசு கோவூரை மத மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதில்லை எனத் தீர்மானித்தார்.
            பேராசிரியர் ஆரிசு கோவூர், இப்பொழுது(1976) பிரெஞ்சு, கியூபா அரசுகளின் கீழ், அறிவியல் ஆராய்ச்சிகளை நெறிப்படுத்திக் கொண்டிருக் கின்றார். அவருடைய மூன்று மகன்களையும் எவ்வகை மத நம்பிக்கைகளின் அடையாளமு மில்லாமல் வளர்த்து வருகின்றார். இதற்கு அவருடைய அறிவார்ந்த துணைவியார் பேராசிரியை சாக்குலின் கோவூரின் முழு ஒத்துழைப்பையும் பெற்றிருக்கிறார்.
            முனைவர் கோவூரின் துணைவியார் 'அக்கா கோவூர்' 1974இல் இறந்த போது அவருடைய இறப்பு அறிவிப்பு சிரீலங்காவில் அந்நாட்டு நாடாளு மன்றத்திலும்- பேருணர்வெழுச்சியை ஏற்படுத்தியது.
அந்த இறப்பறிக்கை, "திருவாட்டி அக்கா கோவூர், பேதமை சான்ற மக்கள் கவலும்படியாக எந்த ஆவியையோ, ஆதனையோ விட்டுச்செல்லாமல் இறந்து விட்டார். அன்னாரின் விருப்பப்படி, அவருடைய உடல், கொழும்பு திருநள்ளா பாமன்கடா சந்திலிருந்து, இன்று (வெள்ளிக்கிழமை) காலை எட்டு மணிக்குக் கொழும்பு சிரீலங்கா பல்கலைக் கழக மருத்துவப் புலத்திற்கு அகற்றப்படும். இறுதிச்சடங்கோ, எரியூட்டலோ, மலர்களோ இல்லை!" என்று எழுதப் பட்டிருந்தது.
            அவருடைய இறப்பறிவிப்பு எல்லா உள்நாட்டுச் செய்தித் தாள்களிலும் பதிப்பிக்கப் பட்டது. எனினும், சிரீலங்கா ஒலிபரப்பு வாரியம், இறப்பறிவிப்புப் பட்டியலில் இவ்வறிவிப்பைச் சேர்க்க மறுத்து விட்டது,




            நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட போது, உரோமன் கத்தோலிக்கரான ஒலிபரப்புத்துறை அமைச்சர், உரோமன் கத்தோலிக்கத் திருத்தந்தை ஒருவரும், புத்தமதத் துறவி ஒருவரும் வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில் மறுக்கப் பட்டது என்று கூறினார்.
            'ஆதனிலி'க் கொள்கையை நம்பும் ஒரு புத்தத் துறவி, தூய நெஞ்சில் ஆதன் இடம்பெற் றுள்ளதாக நம்பும் ஒரு கத்தோலிக்கத் திருத்தந்தையின் நம்பிக்கையில் பங்கு கொண்டதுதான் விந்தை!
            திருவாட்டி கோவூர், அவருடைய கணவரின் ஆராய்ச்சிகளிலும், செயற்பாடுகளிலும் அவருக்கு வலிவுமிக்கத் தூணாகத் துணையிருந்தார். சிரீலங்கா பகுத்தறிவாளர் கழகத்தின் பொருளாளராகத் தொடக்கத்திலிருந்தே இருந்து வந்தார். கட்டற்ற சிந்தனையாளர்களின்(Free thinkers) உலக மாநாடுகளில் தம் கணவருடன் கலந்து கொண்டார்.
            இயல்பிகந்த (வியக்கத்தக்க) ஆற்றல் உடையவராகக் கூறிக் கொள்பவர்கள் ஏமாற்றுக் காரர்களாகவோ மன நோயர்களாகவோ இருப்பர் எனபதை, அறியாமையில் உழலும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென கோவூர் விரும்பினார்.
            அதற்காகவே, இயற்கையிகந்த வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்ம்முறைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலக்க உருவா பரிசளிக்க அவர் அணியமாய்(தயாராக) இருக்கிறார் என்ற அறிவிப்பை வெல்விளி(challenge)யாகக் கூறினார்.
            தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார்.
            (முனைவர் கோவூரின் "BEGONE GODMEN!" என்ற ஆங்கில நூலின் முன்னுரையில், திரு.வி.எ.மேனன், கோவூர் குறித்து எழுதியுள்ளவற்றிலிருந்து ஒரு பகுதி.)
------------------------------------------------------------------------------------------------------------

சனி, 19 ஜூலை, 2008

“யுகமாயினி”


பொருள் புரியவில்லையா?
அதைப்பற்றி யாருக்குக் கவலை?
பொருள் புரியா அயற்சொல்லைக் கூறவேண்டும்!
அதுதானே மேட்டுக்குடி படைப்பாளிக்கு அடையாளம்!

சரி,
யுகமாயினி’ – தெரிந்துகொள்ள வேண்டுமா?
உங்கள் கெட்ட நேரம்! கீழே படித்துக் கொள்ளுங்கள்! 

1. பணக்காரர்களால் பணக்காரர்களுக்காக பணக்காரர்கள் நடத்தும் பணக்கார இதழ். ஆம்! உண்மை அதுவெனினும், வசதியற்றோர்க்கும் ஏதாவது காரணத்தைக் கொண்டு இதழில் இடந்தருதலு முண்டு. 

2. கண்டிப்பாகத் தலைப்பிலும் உள்ளுரையிலும் அயற்சொற் கலப்பு இருந்தே தீர வேண்டும் பிறமொழிக் கலப்பை வைத்தே எழுத்து மதிப்பிடப்படும். குறிப்பாக, வடசொற் கலப்பு கட்டாயம். ஆங்கிலமும் பிறமொழிகளும் அவரவர் விருப்பப்படிக் கலந்தெழுதலாம்! இப்படி எழுதினால்தான் பெரிய எழுத்தாளர். அதனால்தான், இது மாபெரும் பெருமைக்குரிய இதழ்! 

3. நிறுவக ஆசிரியர்” – எஸ்.பொ. அதென்ன நிறுவக ஆசிரியர்? நிறுவுநர் நமக்குத்தெரியும். நிறுவனர் என்பதும் புரியும். -இப்படியெல்லாம் கேட்காதீர்கள். நிறுவக ஆசிரியர்என்றால் பெரிய பெரிய இதழாளர்க்குத்தான் புரியும். நம்மைப் போன்று தமிழைப் படித்த கைநாட்டுகளுக்குப் புரியாது!

சரி, பெயர்ச் சுருக்கத்திலும் பிறமொழிக் கலப்பு உள்ளதைப் புரிந்து கொள்ளுங்கள்.
எஸ்.பொ.!
எப்படி? இரண்டெழுத்திலும் ஒன்று ஆங்கிலம்.

ச.பொ.” – என்றால் அமங்கலமாகத் தெரிகிறதாம்!
சண்முகப் பொன்என்று எழுதலாமென்கிறீர்களா?
அது, நாட்டுப்புறத்தான் போல் தெரிகிறதாம்.
அது சரி, தனியொருவர் உரிமையில் (இதழாசிரியர் கூற்றுப்படி, ‘தனிநபர் சுதந்திரம்’) நாம் தலையிடக் கூடாது. 

4. தமிழர் உருபடியாகச் சிந்தித்துவிடக்கூடாது. அதற்காகவே மிகமிக ஆராய்ந்து எழுதப்படுகின்றன.

சிறிய எடுத்துக்காட்டு:
            மகிழ்வுந்து, சரக்குந்து, பேருந்து எண்களை ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதி நுண்ணறிவார்ந்த பா (கவிதை) உருவாக்கப் படுகின்றது.
அறிவு கூர்மையடையும் என்ற விளக்கமும் உண்டு -  நீங்களும் நான்கு உந்துகளின் எண்களை எழுதி அறிவைக் கூராக்கிக் கொள்ள!

5. உலகெங்கிலுமுள்ள பெரிய பெரிய எழுத்தாளர்களின் கசமலம்(!) எல்லாம் வழவழப்புத்தாளில் வக்கணையாக வண்ண அட்டையோடு தரப்படுகின்றன.

ஆனால்,- இந்தப்பணக்கார ஈழத்து நிறுவக ஆசிரியர்இதழில்  

கொடுங் கொடிய இனவெறிக் கொலைகாரச் சிங்களரின் முப்படைகளாலும் துன்புற் றுழன்றுச் செத்து மடியும் தமிழர்க்கென எழுத இடப் பற்றாக்குறை! 

இவ்வாசிரியரின் ஒரு பிள்ளை ஈழ உரிமைப்போரில் உயிரீந்திருக்கலாம்!
அது அவர் உணர்வு!
அதற்காக இந்தப் பணக்கார மேட்டுக்குடி இதழாளரிடம் நீங்கள் அதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது!

இன்னும் விளக்கலாம் தான்! உங்களுக்கு வேலையிருப்பதாகச் சொன்னீர்கள். எனக்கும் கூட வேலையிருக்கிறது. வருகிறேன். நன்றி! 

வெள்ளி, 18 ஜூலை, 2008

தமிழ்மக்கள் சிந்தனைக்கு...!


            தமிழர்களுக்குக் கிடைத்துள்ள பழந்தமிழ் நூல்களுள், தொல்காப்பியம் என்னும் இலக்கண இலக்கிய நூலே மிகப்பழமையான நூலாக உள்ளது. இந்நூல் 2700 ஆண்டுகளுக்கு முற்பட்டது என மொழியாய்வர் கூறுகின்றனர்.

            இந்நூலில், நூலாசிரியர் தொல்காப்பியர் அவருக்கும் முன்னர் இத்தமிழ் மண்ணிலிருந்த மொழி அறிஞர்களும் நுண்கலை வல்லாரும் பிற பெரியோரும் இவ்விவ்வாறு கருதினர் என்பதைக் குறிக்கும் வகையில், 'என்ப', 'என்மனார்', 'கூறுப', 'மொழிப' முதலான சொற்களை இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் கையாண்டிருக்கின்றார்.


            இவையுந் தவிர, மரபு என்னும் சொல் தொல்காப்பியத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றது. மரபியல் என்று ஓர் இயலே தொல்காப்பியத்தின் உறுப்பாக உள்ளது.


            இவற்றிலிருந்து சில செய்திகளை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பியத்திற்கும் முன்னரேயே, பல துறைகளிலும் தமிழர்கள் நுண்ணறிவோடு பல நூல்களை உருவாக்கித் தந்திருக்கின்றார்கள் என்ற உண்மை தெரிகிறது. உயர்ந்த இலக்கியங்களையும் கலை அறிவியல் நூல்களையும் படைத்தளித் திருந்தமையைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இவற்றிற்கான சான்றுகளையும் தொல்காப்பியத்தில் காணமுடிகிறது.


            தொல்காப்பியத்திற்கும் முன்பே தமிழ் இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று உறுதியாகத் தெரிகின்றது. அவற்றிற்கும் முனபே உயர்ந்த இலக்கியங்களும் நுண்கலை நூல்களும் இருந்திருக்க வேண்டுமெனவும் அவற்றிற்கும் முன்னரே பேச்சு மொழி வளர்ந்திருக்க வேண்டுமெனவும் தெளியத் தெரிகின்றது.


                        ஆம்! தமிழர் தொன்று தொட்டே - அதாவது மாந்தனாகப் படிமலர்ச்சி யடையத் தொடங்கிய காலத்திலிருந்தே - படிப்படியாகக் கொஞ்சம் கொஞ்சமாக மொழி, பண்பாடு, நாகரிகத்தில் வளர்ந்து, உயர்ந்த நிலையெய்திச் செழித்திருந்த உண்மை தெரிகிறது. இந்நிலை எப்போது மாற்றமுற்று இன்றுள்ள தாழ்வுக்குக் காரணமாகியது?


            இந்தியாவிற்குள் புகுந்த ஆரியர், தெற்கு நோக்கிய அவர்களின் செலவின்வழி, தமிழ் மொழியின் வளச் சிறப்பையும் தமிழரின் வாழ்வியற் சிறப்பையும் கண்டறிந்து வியந்தனர். அவர்தம் கரவான சூழ்ச்சி வினைகளால் அச்சிறப்புகளைக் கவர்ந்து கொண்டு, அவர்தம் மொழியையும் வாழ்வையும் உயர்த்திக கொள்ளவும், தமிழையும் தமிழரையும் இழித்துத் தாழ்த்தவும், பலவாறாக முனைந்தியங்கினர்.


            இவ்வுண்மைகளைப் பரிதிமாற் கலைஞரின் 'தமிழ்மொழியின் வரலாறு' என்னும் நூலும் பிற ஆய்வறிஞர்களின் நுண்மாண் நுழைபுல ஆய்வு வெளிப்பாடுகளும் தெள்ளிதின் விளக்குகின்றன.


            மெல்ல மெல்ல, சிறிதுசிறிதாகத் தமிழில் வடசொற் கலப்பையும் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிப்பையும் மிகக் கரவோடும் திறத்தோடும் அவர்கள் மேற்கொண்டனர். தமிழர்தம் வீட்டு நிகழ்ச்சிகளில் திறக்கரவாகச் சமற்கிருதத்தை நுழைத்தனர். தமிழ், தன் நிலையிழந்து குலைந்துலைந்து இழிந்திட நேர்ந்தது.


            மடமுடவர்களாகவும் மதமடவர்களாகவு மிருந்த தமிழ் மன்னர்கள் ஆரியச் சூழ்ச்சியில் மயங்கி அவர்களின் எல்லாச் செயல்களுக்கும் துணை போயினர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவ்வீழ்ச்சிநிலை தொடர்ந்தது; இப்போதும் கூடத் தொடர்ந்து வருகின்றது.


            இற்றைக்கு இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னர், உணர்வுற் றெழுந்த தமிழர்சிலர், தம் தாய்மொழியும் தாமும் தம் நாடும் வீழ்ந்துவிட்ட நிலையறிந்தனர். எப்பாடு பட்டேனும் அவற்றை மீட்க உறுதிபூண்டுச் செயற்படத் தொடங்கினர்.


            இப்பணியில், அவ்வணியில், தமிழறிஞர்களும் குமுகாய விடுதலைச் சிந்தனையாளரும் இருந்தனர். தமிழர்கள் நிலையிழந்து வீழ்ந்து கிடக்கும் அவலத்தை அவர்களுக்கு எழுத்து, பேச்சு, கூத்து போன்றவற்றால் விளக்கித் தமிழர் எழுச்சிபெறச் செய்யப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டனர்.


            நிறை தமிழ் மலையாம் மறைமலையடிகள், மாகறல் கார்த்திகேயனார், திரு.வி.க., வ.உ.சி., அயோத்திதாசர், பாவாணர், பாவேந்தர், வ.சுப.மா., பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழறிஞர்களும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணாத்துரை போன்ற பெரியோர்களும் தமிழரின் மொழி, பண்பாடு, நாகரிகம், வரலாறு போன்றவற்றின் மீட்சிக்கும் தமிழரின் உயர்ச்சிக்கும் அரும்பாடு பட்டோருள் சிலராவர். தந்தை பெரியார் தமிழர் தன்மான உணர்வு பெறவேண்டு மென்பதற்காகவே ஓர் இயக்கம் தொடங்கினார்.


            கொஞ்சம் கொஞ்சமாக, பையப் பைய பயன் விளைந்தது. தமிழர் தம் தாய்மொழியைப் பிறமொழிக் கலப்பின்றி எழுதவேண்டு மெனவும், தமிழ்ப் பெயரே தாங்கவேண்டு மெனவும், தம் குடும்ப நிகழ்ச்சிகளிலும் தாம் வழிபடும் தமிழகக் கோவில்களிலும் வடமொழியை அறவே விலக்கித் தழிழே இடம்பெறச்செய்யவேண்டுமெனவும் விழிப்புணர்வு கொளுத்தப் பட்டனர்.


            வேதாசலம் சுவாமிகள், மறைமலை அடிகளாகி வழிகாட்டினார். அவரின் 'ஞானசாகரம்' இதழ் 'அறிவுக்கடல்' ஆயிற்று. நாராயணசாமி தம் பெயரை நெடுஞ்செழியன் என்று மாற்றிக் கொண்டார். இராமையா அன்பழகனானார். இவ்வாறே பலரும் தமிழ்ப்பெயர் தாங்கியதோடு அவர்களின் பிள்ளைகளுக்கும் தூயதமிழ்ப் பெயரையே சூட்டி வழங்கினர்.


            தந்தை பெரியாரின் தளராத பேருழைப்பால், தமிழர் தனமானத் திருமணம் செய்து கொண்டனர். குடும்பத்தில் மூடநம்பிக்கை இழிவுகள் நீக்கி, வடமொழியை விலக்கி, நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்கின. தாய்மொழியில் எல்லாருக்கும் புரியும் வகையில் சடங்கு நிகழ்ச்சிகள் நடத்தத் தொடங்கினர்.


            ஆனால், தமிழப் பற்றையும் தனமானத்தையும் வலியுறுத்தி வந்தோர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த சில ஆண்டுகளிலேயே, வரலாறு திரும்பத் தொடங்கி விட்டது. இன்றைய நிலையை எண்ணிப் பாருங்கள்! தமிழ் கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழர்களிடமிருந்து விலக்கப்பட்டு வருகிறது.


            பல தமிழ்க் குடும்பங்களில் பிள்ளைகளுக்குத் தமிழ் எழுதத் தெரியவில்லை. தமிழில் பேசுவதையும் இழிவாக எண்ணும் மனப்போக்குக் காளாகி விட்டனர். தமிழ்ப்பெயர் தாங்கிய பாட்டன்களின் பெயரன்களுக்கு மொழி புரியாத, பொருள் விளங்காத பெயரிட்டழைக்கும் போக்கு வளரத் தொடங்கி யுள்ளது. ஆங்கிலமும் வடமொழியும் தமிழர் வாழ்வை வன்கைப்பற்றலாகப் பற்றிப் பறித்துவிட்ட நிலை நிலவிடுவதைக் கண்டு கொண்டு வருகின்றோம்.


            செய்தித்தாள்கள், இதழ்கள், மின் ஊடகங்களில் ஆங்கிலம் வடமொழி முதலான அயல்மொழிகளில்தான் எந்தப்பேச்சும் உரையாடலும்! இடையிலே இணைப்பிற்காக ஓரிரு தமிழ்ச்சொற்கள்!


            கோயில்களில் பல்லாண்டுகளாகப் பெரும் போராட்டம் நடத்திய பின்னும் சில மணித்துளிகள் தேவாரம் திருவாசகம் ஓதலாம் என்று சலுகையாம்! தில்லையில் மட்டுமன்று! தமிழ்நாட்டின் எல்லா ஊர்க் கோயில்களிலும் தமிழ் வழிபாடு எனபது அறவே இல்லை!


            நம் சிற்றூர்க் காத்தமுத்துவுக்கும் கருத்தமுத்துவுக்கும் இடையிலான வழக்கு நயன் மன்றத்தில் ஆங்கிலத்தில்தான் நடைபெறுகிறது. சிற்றூர்ச் சின்னத்தாயி முறையீட்டுக்கு அரசு ஆங்கிலத்தில் விடைமடல் விடுக்கிறது!


            இசையரங்குகளில் தமிழிசைக்கு இடமில்லை. தெலுங்கும் வடமொழியும் பரக்கவிரித்து அமர்ந்து கொண்டு தமிழை உள்புகவிடாத நிலை!


            கவர்ச்சி ஓவியக் கழிசடைத் தாளிகைகள் இளைஞர்களைப் பாழ்வழிக்குத் துரத்துகின்றன. தப்ப முயல்வாரைத் தொலைக்காட்சியின் சோடி எண் ஒன்று, மானாட்ட மயிலாட்ட ஆட்ட பாட்டங்கள் பணபாட்டுச் சீரழிவை நோக்கி மின்னல் வேகத்தில் செலுத்து கின்றன.


            தமிழக மீனவர்கள் இனவெறிச் சிங்களக் கொலைவெறிப் படையால் நாள்தோறும் - கிழமைதோறும் - மாதந்தோறும் - தாக்கப் படுவதும், சுட்டுக் கொல்லப் படுவதும் அவர்களின் மீன்களும் வலைகளும் கொள்ளையடிக்கப் படுவதும் இங்கு வாடிக்கையான இயல்பு நிகழ்ச்சிகள்! இலங்கைத் தமிழன் ஒடுக்கப்பட்டு நசுக்கப்பட்டு பூண்டோடு கொன்றழிக்கப் படுவதைப் பற்றி இங்கு எவருக்கும் கவலையில்லை!


            இரண்டு, மூன்று தலைமுறைக்குள், எழுந்துநிற்க முயன்ற இத்தமிழன் ஆழக்குழியில் குப்புற வீழ்ந்துவிட்ட நிலையையே காண்கின்றோம். இனியும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேண்டுமா? இன்னொரு பெரியாரும் இன்னொரு மறைமலையும் வருவார்களா? இல்லை, இப்படியே தமிழர் வரலாறு முடிந்துவிட வேண்டுமா?


            தமிழ்மக்களே, தமிழிளைஞரே, சிந்திப்பீர்! 

வியாழன், 10 ஜூலை, 2008

வாழ்க்கையில் முதல்முறை!


(ஆங்கிலமூலம்: ஆபிரகாம் தொ. கோவூர்  *  தமிழாக்கம்: தமிழநம்பி) 

            ஐந்து தடவைகளில், முதல் தடவையாக மாரடைப்பால் நான் துன்புற்றபோது போது, 1959ஆம் ஆண்டில் கொழும்பு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். நான் இருந்த அறையில் மூன்று படுக்கைகள் இருந்தன. அவற்றுள் ஒன்றில் சிரீலங்காப் பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த திரு.குணசேகராவும், இன்னொன்றில் மொரட்டுவா பகுதியைச் சேர்ந்த கிறித்தவ மதத் தலைவரான அருள்திரு வும், மூன்றாவதில் பகுத்தறிவுத் தலைவரான நானும் இருந்தோம். நாங்கள் மூவருமே நெஞ்சுப்பைக் குருதித் திரைப்பு’ (Coronary thrombosis) நோயினால் தாக்கப்பட்டிருந்தோம்.
            ஒரு காரி(சனி)க்கிழமை மாலையில் பணிக்குழுச் செவிலி, அருட்டிரு வுக்கு கொழும்பு ஆயர் ஆரண்மனையிலிருந்து வந்த செய்தியை அவருக்குத் தெரிவித்தார். மறுநாள், நோயுற்றிருக்கும் அருள்திரு வின் நலத்திற்காகத் திருப்பலி வழிபாடு (Holy Mass) செய்வதற்காகக் கொழும்பு ஆயர் மருத்துவமனைக்கு வருகின்றார் என்பதே அச்செய்தி. அச்செய்தியைக் கேட்டவுடன் சமயக்குரு வுக்குப் பேரச்சம் ஏறபட்டது. தாம் விரைவில் இறந்துபோய்விடுவோம் என்பதற்காகத் தமக்கு இறுதி எண்ணெய்க்காப்பு (Last Unction) தருவதற்காகவே ஆயர் வருகிறாரென அவர் கருதிக் கொண்டார்.           மறுநாள், கொழும்பு ஆயர் பேரருள்திரு உரோலோ கிரகாமும் அவருடைய கருமியக்குரு அருள்திரு கேனன் பாசில் செயவர்த்தனாவும் குழுவினருடன் அறைக்குள் வந்தனர். அவர்கள் உள்ளே வரும்போதே, நான் ஒரு புத்தகத்தை எடுத்துக் கையில் வைத்துக்கொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துக் கொண்டே, படிப்பதைப்போல் பாசாங்கு செய்து கொண்டிருந்தேன்.
            வழிபாட்டு நிகழ்ச்சிகள் முடிவுற்றதும் ஆயர் என்னிடம் வந்தார்; கருமியக்குரு குணசேகராவிடம் சென்றார்.
            என் கையிலிருந்த நூலின் பெயரைப் பார்த்து விட்டு,“கருத்து மாறுபாடு மிக்க நூலைப் படிக்கின்றீர்களே!என்றார் ஆயர். என் கையிலிருந்தது அறிஞர் கின்சே எழுதிய அமெரிக்க இளைஞரின் பாலியல் நடத்தைகள்என்ற புத்தகம்!
            உங்கள் கையிலுள்ள திருமறை(Bible) அளவிற்கு இந்நூலில் அதிக முரண்பாடு இல்லைஎன்றேன் நான். அறிஞர் கின்சேயும் அவருடைய மாணவர்களும் நடத்திய ஆய்வில் திரட்டிய உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு, கின்சே இந்நூலை எழுதியிருக்கின்றார். ஆனால், இத் திருமறையோ அராபிய இரவுகள்’, ‘கல்லிவர் செலவுகள்போலும் முழுக் கற்பனைக் கதைகளையே கொண்டதா யிருக்கின்றதுஎன்றும் கூறினேன்.
            நீர் நம்பிக்கையற்றவர் போல் தெரிகிறது! உங்களுக்கு என்ன உடல்நலக்குறை, உடன்பிறப்பே!என்று கேட்டார் ஆயர்.
            உங்கள் மொரட்டுவா அருள்தந்தைக்கு வந்துள்ள அதே நோய்தான்என்றேன்.
            நீங்கள் நலம்பெற இறைவனிடம் வேண்டிக் கொள்ளட்டுமா?” என்றார் ஆயர்.
            வேண்டவே வேண்டாம்! மருத்துவத்தினால் குணமடையவே நான் இங்கு வந்தேன். திறமைமிக்க மருத்துவக் கவனிப்பினால் குணமடைந்தும் வருகிறேன். என்னைக் குணப்படுத்திய பெருமையில் ஒரு பங்கை நீங்கள் பறித்துக் கொள்வதை நான் விரும்பவில்லை! உங்க            ள் வழிபாடுகள் பயனில்லாதவை என்பதை நீங்களே அறிவீர்கள்! வழிபாட்டினால் குணமாக்க முடியுமென்றால் நீங்கள் உங்கள் அருள்தந்தையை மருத்துவ மனையில் சேர்த்திருக்க மாட்டீர்களல்லவா? இப்போது, அவர் உடல்நிலை தேறி வருகின்றார். அவரைக் குணமடையச் செய்த சிறப்பில் உங்களுக்குப் பங்கு உண்டு என்று காட்டிக் கொள்ளவே நீங்கள் வந்திருக்கின்றீர்கள்!
            என்னுடைய நேரிடையான, ஒளிவுமறைவற்ற குற்றச்சாட்டுகளைக் கேட்டு ஆயர் பின்வாங்கியபோது, கருமியக்குரு, அவரிடம் வந்து நான் யாரென்பதை அவர் காதருகில் கிசுகிசுத்தார்.
            அதன்பின்னர், “நான் நோயுற்ற ஒருவருக்காக இறைவனை வேண்டிக்கொள்வதாகக் கூறியும், அவர் அதை வேண்டாமென்று மறுத்துவிட்ட நிகழ்ச்சி என் வாழ்வில் இதுவே முதல் முறை!என்று கூறிவிட்டுச் சென்றார் அந்த நல்ல ஆயர். 
            சாவை எதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளின் மருத்துவமனை அறைகளும், தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சிறையாளிகளின் சிறை அறைகளும் மதகுருமார்களுக்கு மிகநல்ல வேட்டைக் காடுகளாக இருக்கின்றன! 

****************************************************************************************

புதன், 9 ஜூலை, 2008

பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு!


          பொதுவாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கும் பழக்கமில்லாதவன் நான். இன்று (8-7-2008) இரவு பத்தரை மணியளவில் 'விசய்' (Vijay) தொலைக்காட்சியில் நீயா? நானா?’ என்ற நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்ததைப் பார்த்தேன்.
            இதற்கு முன்னும் இத்தலைப்பில் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பார்த்திருக்கிறேன். இன்று நடந்த நிகழ்ச்சியில், அணமையில் நடைபெற்ற பள்ளி இறுதித் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணாக்கரை அவர்தம் பெற்றோருடன் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து சிறப்பித்தனர்.
            இதில் போற்றத்தக்க சிறப்பு இருந்தது. பொருளியல் நிலையில் மிகமிகக் குறைந்த நிலையில் இருந்தபோதும் முயன்று படித்துப் பல்வேறு பாடங்களில் முதன்மையான மதிப்பெண்களைப் பெற்ற பையன்களையும் பெண்களையும் தேடிக் கண்டுபிடித்து, அவர்களைப் பெற்றோருடன் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது அத்தொலைக்காட்சி!
            அம்மாணாக்கர்க்குப் பொருள் உதவியும் அத் தொலைக்காட்சி செய்தது. கணிப்பொறிக் கடவைகள்(courses) படிக்க உதவியும் பெற்றுத் தந்துள்ளது.
கூலிவேலைக்காரர், உணவுவிடுதிப் பரிமாறுநர், வீட்டுவேலை செய்யும் பெண், ‘புரியப்பம் (பரோட்டா) உருவாக்குநர், துப்புரவுத் தொழிலாளர் போன்றோரே அம்மாணாக்கரின் பெற்றோராயிருந்தனர்.
அவர்கள், தம் பிள்ளைகளைப் படிக்க வைக்கப் பெரும்பாடு பட்டதையும் அப்பிள்ளைகள் நன்கு படித்துக் குன்றின் மேலிட்ட விளக்காகச் சிறந்தபோது பெற்ற மகிழ்ச்சியையும் உணர்வுப் பெருக்கில் கண்கலங்கி பேச்சுவரா நிலையில் தம் உணர்வுகளை ஒருவாறு ஒருநிலைப் படுத்திக் கொண்டு எடுத்துக் கூறினர். அவற்றைத் தொலைக்காட்சியில் கண்ணுற்றவரும் செவிமடுத்தரும் கண்கலங்கினர்!
            இக்காட்சி, பலருக்கு ஊக்கமளிக்கும். பலருக்கு உதவி கிடைக்க வழி செய்யும். மாந்த நேயத்தோடும் குமுகாய முன்னேற்ற அக்கறையோடும் இந்நிகழ்ச்சி அமைக்கப் பட்டிருந்ததெனில், மிகையுரை அன்று. விசய்தொலைக்காட்சிக்குப் பாராட்டு! நெஞ்சார்ந்த பாராட்டு! *****************************************************************

புதன், 2 ஜூலை, 2008

எல்லாரும் ஏமாறல் இல்!



இன்னிசைச் சிந்தியல் வெண்பா 

சொல்லுவ தொன்று செயலொன்றா? - தொல்லுலகில் 
பல்லபல ரேமாற்றல் பைங்கண்ணாய் ஒல்லுமே!
எல்லாரும் ஏமாறல் இல்.