முதுமுனைவர், செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் ஐயா மறைந்தார்!
========================================
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய தமிழ்ப்பெருங்கடல் இரா.இளங்குமரனார் ஐயா 25-7-2021 ஞாயிறன்று மதுரையில் காலமானார் என்ற செய்தியறிந்து ஆறாத் துயருற்றோம். அவருக்கு விழுப்புரம் தமிழ்ச்சங்கம் வீரவணக்கம் செலுத்துகிறது. அவர் அன்பான அறிவுரைகளை ஏற்று நடக்க முயலவேண்டுமெனத் தமிழிளையோரைக் கேட்டுக்கொள்கின்றது.
===========================================================================
விழுப்புரம் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் 13-04-2019 காரிக்கிழமையன்று விழுப்புரத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வந்திருந்த முதுமுனைவர் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் ஐயாவைப் பற்றித் தமிழநம்பி ஆற்றிய அறிமுக உரையைக் கீழே காண்க:
===========================================================================
இரா. இளங்குமரனார் – அறிமுக உரை – 13-4-2019.
தமிழ்க்கடல் இரா. இளங்குமரனார் ஐயாவுக்கு அறிமுகமா? என அவையோர் கருதக்கூடும். ஐயாவைத் தலைசிறந்த தமிழறிஞராகவும், சிறந்த நூலாசிரியராகவும், கருத்தாழமிக்க சொற்பொழிவாளராகவும் அறிந்திருக்கிறோம். என்றாலும், ஐயாவைப்பற்றிப் பல நூல்களிலும், கணிப்பொறித் தேடல்களிலும் திரட்டிய செய்திகளைச் சுருக்கமாக அவையோர்க்குத் தெரிவிக்க விரும்பியே இவ்வுரையை அமைத்தோம் எனினும் இவ்வுரை ஐயாவின் சிறப்புயர்வுகளை முழுமையாகக் கூறும் உரை அன்று.
தமிழ் என்ற மொழியை, அதனோடு இணைந்த வழக்கை, பண்பாட்டை, வாழ்வு முறையைத் தலைமுறை தலைமுறையாகக் கொண்டு செல்லும் சான்றாண்மையர் பலர் காலந்தோறும் இருந்துவருகிறார்கள். அத்தகைய பெருமக்களது தொண்டினாலேயே, தமிழ் இன்றளவும் செழுமையாகத் திகழ்ந்து வருகிறது. அத்தகு பெரியோரில் தலைசிறந்தவராய் 90-ஆம் அகவையை அடைந்த நிலையிலும் ஒய்வின்றி அன்னைத் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் ஓயாது உழைத்து வரும் அருந்தவப் பெரியாரைப் பற்றி அறிதல் மிகப் பயன்விளைப்பதாகும்
திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் என்னும் சிற்றூரில் 1930-ஆம் ஆண்டில் சனவரி 30-இல் பிறந்தார். தந்தையார் படிக்கராமர் என்னும் இராமர், தாய் வாழவந்தம்மையார். இயற்பெயர் கிருட்டிணன். பின்னர் தம் பெயரை இளங்குமரானார் எனத் தூயதமிழில் மாற்றிக்கொண்டார்.
பள்ளிப்பருவத்திலேயே, தம் 14-ஆம் அகவையிலேயே சொற்பொழிவாற்றும் திறனும் பாடலியற்றும் திறனும் பெற்றிருந்தார். தம் 17-ஆம் அகவையில் இருந்தே ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார்.
பின்னர்த் தனியே தமிழ்படித்துச் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வழியாக 1951-ஆம் ஆண்டில் புலவர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் . மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் சில காலம் சிறப்புப் பேராசிரியர் (guest lecturer) ஆகப் பணிபுரிந்தார்.
ஐயா அவர்கள் பல ஆண்டுகள் தமிழாசிரியர் பணிபுரிந்தாலும், நூலாசிரியர், பாவலர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், ஆய்வாளர், தொகுப்பாசிரியர், இதழாசிரியர், சொற்பொழிவாளர் எனப் பல்வேறு நிலைகளில் பல பணிகளையும் ஈடிணையற்ற வகையில் செய்துவருகிறார்.
தமிழ்ப் பேரறிஞரான ஐயா அவர்கள் இலக்கணம் இலக்கியம் வரலாறு, பாடல்கள், ஆய்வுகள் முதலிய பல துறைகளில் பல்வேறு நிலைகளில் எழுதியுள்ள நூல்கள் ஏறத்தாழ 400 ஆகும். ஐயா எழுதியுள்ள திருக்குறள் ஆய்வுநூல்கள் மட்டுமே 89 ஆகும். “செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம்” நூல் மட்டுமே நாலாயிரத்துத் தொண்ணூறு பக்கங்களைக் கொண்டதாகும். ஐயாவின் நூல்களை ஆய்வு செய்து இளமுனைவர், முனைவர் பட்டங்கள் பெற்றவர் பலராவர்.
பண்டைத் தமிழ் நூல்கள் பலவற்றைத் தமிழர் இழந்தது குறித்துப் பாவாணர் கவலையோடு எழுதுகையில், “பாழான மண்ணுக்கும் படையான சிதலுக்கும் படியாதார் நெருப்புக்கும் பதினெட்டாம் பெருக்கிற்கும் பற்பல பூச்சிக்கும் பகைவரின் சூழ்ச்சிக்கும் இரையான கலைநூல்கள் எத்தனை எத்தனையோ” என்று குறிப்பிடுவார். அவ்வாறு இழந்த தமிழ் நூல்களை மீட்டுத்தந்த, மீட்டுருவாக்கம் செய்தளித்த பெருமைக்குரிய வினையாண்மையாளர் நம் இளங்குமரனார் ஐயா ஆவார்..
பண்டை நூல்களுக்கு, குறிப்பாக இலக்கண நூல்களுக்கு உரையெழுதிய உரையாசிரியர்கள், அவர்தம் உரையில் மேற்கோள் காட்டும் நிலையில், பல்வேறு நூற்களிலிருந்தும் பாக்களை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளனர். அவ்வாறு சிதறிக் கிடந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மேற்கோள் பாக்களைக் கண்டு கழிபேருவை எய்திய ஐயா இளங்குமரனார், அவற்றைத் திரட்டி அகர வரிசைப்படுத்தி ‘மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை’ என்னும் பெயருடன் தனிநூலாக அமைத்தார்.
அப் பாக்களை இயற்றிய தனித்தனி ஆசிரியர் பெயரால் அடைவு செய்து பார்த்தபோது, காக்கைப்பாடினியார் பாக்களை ஒருங்கமைத்துப் பார்த்த்தன் பயனாக, ‘காக்கைப்பாடினியம்’ என்னும் இலக்கண நூலை மீட்டுருவாக்கம் செய்து தமிழுலகிற்கு அளித்தார். ஐயா தொகுத்த ‘மேற்கோள் விளக்க நூற்பா அகரவரிசை’ நூலே ஒருவாறு ‘வளையாபதி’யையும் ‘குண்டலகேசி’யையும் ஓரளவிற்கு மீட்டுருவாக்கம் செய்ய உதவியது.
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய தமிழ் அறிஞர் பெருமக்களுள் ஐயா, சிறப்பிடம் பெற்றவராவார். இவர் எழுதிய நூல்களுள், இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, , தமிழர் வாழ்வியல் இலக்கணம், குண்டலகேசி, முதலிய நூற்றுக்கணக்கான நூல்களும், தொகுப்பு நூல்களில், தொல்காப்பியப் பதிப்பு, தமிழ்வளம், தேவநேயம், மறைமலையம், திருவிகவின் தமிழ்க்கொடை, செந்தமிழ் சொற்பொருட் களஞ்சியம், திருக்குறள் வாழ்வியலுரை. உள்ளிட்ட பல நூல்களும் இவர்தம் தமிழ்ப்பணியை என்றும் நின்று விளக்கியுரைப்பனவாம்.
ஐயாவின் குண்டலகேசி என்னும் பாவியம் 1958 ஆம் ஆண்டு மதுரை அங்கயற்கண்ணி ஆலயத்தில் அரங்கேற்றப்பட்டது. திருக்குறள் கட்டுரைத் தொகுப்பு என்னும் ஐயாவின் நூலை 1963- ஆம் ஆண்டு பண்டிதநேரு வெளியிட்டார். சங்க இலக்கிய வரிசையில் புறநானூறு என்னும் ஐயாவின் நூலை 2003-ஆம் ஆண்டு அப்துல் கலாம் வெளியிட்டார்.
ஐயா எழுதிய ‘பாரி’ என்னும் ஆய்வக்கட்டுரையைப் படித்த பாவாணர், “நுங்கள் “பாரி”யைப் பார்த்தேன் முற்றும் சரிதான்.என் அணுக்கராக நீங்கள் இருந்தால் என்னைப் போலவே சொற் பிறப்பு அமைப்பீர்கள்’ - எனப் பாராட்டியுள்ளார்.
ஐயாவின் உரையைக் கேட்டால், தமிழ் மூதாதையருள் உயிர்பெற்ற ஒருவர் வந்து பேசுவது போலிருக்கும் எனில் மிகையன்று. தமிழ்வழிக் கல்விக்காகவும் குறளியக் கருத்துக்காகவும் ஐயா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். தமிழகம் முழுவதும் திருக்குறள் உரைப்பொழிவுகளும், பிற ஆய்வுச் சொற்பொழிவுகளும் வழங்கி வருகிறார்.
திருமணங்களைத் தமிழ்வழியில் நடத்தி வருகிறார். ஐயா நடத்திவைத்த திருமணம், புதுமனைப் புகவு, மணிவிழா முதலியவை 4000-க்கும் மேற்பட்டவையாம்.
ஐயாவின் கையெழுத்து அடித்தல் திருத்தல் இல்லாமல் நிரல்பட இருக்கும். ஐயா, இரவில் கூட அறிவெழுச்சியில் கருத்துகள் தோன்றும்போது, இருட்டில் தம் தலைமாட்டில் உள்ள கரிக்கோலால் தாளில் எழுதும் பழக்கம் உடையவர். காலையில் வெளிச்சத்தில் எடுத்துப் பார்த்தால் அவை மிகச் செப்பமான எழுத்துகளாக இருக்கும். அரியதோர் ஆற்றல் இது. ஐயா மிகச்சிறந்த நினைவாற்றல் உடையவருமாவார்.
ஐயாவைபப் பற்றி, "உலகப் பெருந்தமிழர், தமிழ்த்திரு இரா.இளங்குமரனார்: வாழ்வும் பணியும்" என்ற ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஒரு புல் - தன் வரலாறு’ என்னும் தலைப்பில் தன் வரலாற்று நூலை இரண்டு தொகுதிகளாக 2017-ஆம் ஆண்டுவரையும் ஐயா எழுதியுள்ளார்.
திருச்சிக்கருகே அல்லூர் என்னும் ஊரில் தவச்சாலை நிறுவினார். அங்கு, ‘பாவாணர் நூலகம்’ என்ற பெயரில் 17000 நூல்களுடன் அவர் எழுதிய நூல்களையும் கொண்ட நூலகத்தை ஆய்வாளர்கள் பயன்கொள்ளும் வகையில் சிறப்பாக அமைத்துத் தமிழுலகுக்கு அறிவு ஈகையராய்த் திகழ்கின்றார்.
தவச்சாலையில், செவ்வாய்க்கிழமை தோறும் ஐயாவின் மாந்தநேயத் தொண்டு நடைபெற்று வந்ததையெல்லாம் விரித்துரைக்க நேரமில்லை. முதுமை காரணமாக ஐயா இக்கால் மதுரையில் தம் மகனாருடன் இருந்துவருகிறார்.
.
ஐயாவுக்குப் பல்வேறு தமிழ் அமைப்புகளும், பல்கலைக்கழகங்களும் தந்த பட்டங்கள், விருதுகள், பரிசுகள், தமிழக அரசு தந்தது உட்பட எண்ணிலடங்காதவை எனலாம்.
பொதுநோக்கில், பண்பாட்டுக்குக் காந்தியையும், பொருளியிலுக்குக் காரல் மார்க்சையும், சமூக முன்னேற்றத்துக்குப் பெரியாரையும் பின்பற்றுவதாகக் கூறுவார்.
திரு. வி. க. வை வாழ்வியலுக்கும் மறைமலையடிகளை தனித்தமிழ் உணர்வுக்கும் இலக்குவானரை தமிழ்த் தொண்டுக்கும் பாவாணரை சொல்லலாய்வுக்கும் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்வார்.
ஐயா இளங்குமரனார் ஆழ்ந்த புலமையர்; இலக்கணப் புலவ,ர்; இலக்கியச் செல்வர்; பெருஞ்செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட ஆழ்கடல் போலும் அமைதியர்; எந்த ஒன்றையும் நுணுகி நோக்குவதும் அகப்புறச் சான்றுகளால் அறுதியிடுவதும் இவர் புலமையின் இயல்புகள். தமிழ்மரபு காக்குநர்; நுழைபுலமிக்க ஆய்வாளர்; கற்றதை விரித்துரைக்க வல்ல சொல்லாற்றலர்; குறள் கூறும் செந்நெறியில் ஒழுகும் செம்மல். தமிழநூற் பரப்பின் எல்லையைக் கண்டவர். இலக்கிய இலக்கணச் சிந்தனைகளில் மூழ்கி முத்தெடுப்பவர்.
தமிழ் மொழி, இன.நாட்டுப் பற்றில் முதன்மையானவர். தமிழீழ விடுதலையில் மிகுந்த நம்பிக்கை உடையவர். உலக வரலாறுகள் கற்றவர். பாவாணர், திரு.வி.க.வாழ்வியலை மிக உயர்வாக மதிப்பவர். மூத்த அறிவுடையோருடன் கேண்மையுடையவர். தமிழ்மான உணர்வும் தன்மான உணர்வும் நிரம்பப் பெற்றவர். தமிழ் இலக்கியங்களைக் குறைத்து மதித்தவரையும், தமிழ்மொழியை இழித்தவரையும் முறையே தக்க சான்றுகளுடன் மறுக்கப் பொங்கியெழுந்து சீறிப்பாயும் மான மற வேங்கையெனத் திகழ்பவர்
தமிழ் தமிழர் நலன்கருதி வாழும் அறிவார்ந்த ஐயா அவர்களை இற்றைத் தமிழ் இளையோர் தம் வழிகாட்டியாகக் கொண்டு உழைப்பாராகில், தமிழ் தமிழர் தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டு தமிழர் வாழ்வும் வரலாற்றுப் பீடும் மேலுயர்த்தப்படும் என்பதில் ஐயமில்லை என்ற விழைவைத் தெரிவித்து வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து முடிக்கின்றேன், நன்றி, வணக்கம்!
==========================================================================