தங்கப்பா ஐயாவின், “Love stands alone” நூலுக்கு
இந்திய அரசு இலக்கியக் கழகத்தின் (சாகித்திய அகாதமி) பரிசு!
இந்திய அரசின் இலக்கிய அமைப்பு (சாகித்திய அகதமி) 2012ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக்கான
பரிசுக்குரிய நூலாக, நம்
பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய வாழ்வியல் அறிஞர்,பாவலர் ம. இலெனின்
தங்கப்பா ஐயா எழுதிய, “Love stands alone” என்னும்
நூலைத் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளது.
இந்நூல்,
தேர்ந்தெடுத்த கழக(சங்க) இலக்கியப் பாடல்களின் அரிய ஆங்கில மொழிபெயர்ப்பு
நூலாகும். இந்நூலை உலகப்புகழ்பெற்ற பெங்குவின் பதிப்பகம் பதிப்பித்து
வெளியிட்டுள்ளது.
இப்பரிசு, ஐம்பதாயிரம் உருபாவுக்கான காசோலையும், ஒரு செதுக்கப்பட்ட செப்புப் பட்டயமும்
கொண்டதாகும். சென்ற ஆண்டு தங்கப்பா ஐயாவின் சிறுவர் இலக்கிய நூலான ‘சோளக்
கொல்லைப் பொம்மை’க்கு இந்த இலக்கிய அமைப்பின் பரிசு
கிடைத்ததை முன்பே அறிவோம்.
நம் நெஞ்சார்ந்த
மகிழ்ச்சியைத் தெரிவிப்பதோடு தங்கப்பா ஐயாவின் தகுதிக்குரிய பரிசுகள் இன்னும்
அளிக்கப்பட வேண்டும் என்ற விழைவையும் குறிப்பிட விரும்புகிறோம். தங்கப்பா ஐயா அவர்கள் நல்ல உடல்நலத்துடன்
திகழ்ந்து இன்னும் பல அரிய ஆக்கங்களைத் தரவேண்டுமென்ற நம் அவாவையும் பணிவுடன்
அறிவிக்கின்றோம்.
------------------------------------------------------------------------