சனி, 16 டிசம்பர், 2017

செந்தமிழ் இனமே!

செந்தமிழ் இனமே!
-----------------------------------------------

செந்தமிழ் இனமே! செந்தமிழ் இனமே!
முந்து தமிழும் முதனா கரிகமும்
இலக்கியச் சிறப்பும் இலக்கணச் செழுமையும்
துலக்குறு அறிவொடு இலக்குறு வாழ்வும்











நெடுவரைப் பனிமலை நெற்றியில் விற்கயல்
கொடும்புலி பொறித்த கடுமறத் திறத்தொடும்
மிகையுங் கொளாது குறையுங் கொடாது
தகைமிகு வணிகம் தரைகட லோடி
நுண்கலை வானியல் நுட்ப அறிவியல்
எண்ணியல் நாட்டியம் பண்ணிசை யாழொடும்
செழிப்புற விளங்கிய செந்தமிழ் இனமே!

அழிப்புற ஒடுக்குற இழிதாழ் வுற்றே
இரண்டகக் கொடியரால் எய்தினை வீழ்ச்சி!
திரண்டவுன் சீர்மைச் சிறப்பெலா மிழந்தனை!
இன்மொழி நாட்டொடு இன்னினந் தொழும்புறத்
தன்னலத் தமிழரே முன்னின் றனரே!

இளந்தமிழ் உளங்காள்! எண்ணுக இதனை!
துளக்கறு மறிவில் துளங்கலில் விளங்கி
நம்மொழி நம்மினம் நம்நா டுற்ற
நம்பரு  மடிமை விம்முறு விலங்கு
ஒடித்து நொறுக்கிப் பொடித்திடு நோக்கில்
அடிப்படைத் திட்டம் ஆய்ந்து துணிந்து
என்றுங் கண்டிலா எழுச்சியோ டெழுக!

முன்னைப் பிழையும் உன்னித் தவிர்த்துத்
தகவில் இரண்டகம் தக்காங் கொறுத்து
இகலறுத் தினத்தார் இணைவுற எழுந்து
ஈட்டுக மீட்சி! இத்தரை
காட்டுக நந்தழிழ் கணிக்கருந் திறமே!
-------------------------------------------------------------------- 

வெள்ளி, 13 அக்டோபர், 2017

நன்றியறிவிப்பு

                           நன்றியறிவிப்பு
                           -----------------
                என் துணைவியாரின் மறைவையொட்டி நேரிலும், தொலைப்பேசி வழியாகவும் மடல் வழியாகவும் ஆறுதல் கூறித் தேற்றித் துணையிருந்த நண்பர்கள் உறவினர்கள் ஏனை அன்புள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். அந்த அதிர்ச்சியினின்றும் மீண்டு வர உங்களின் அன்பும் ஆறுதலும் பெரிதும் துணையாயிருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கின்றேன்.

ஓர்இல் நெய்தல் கறங்க ஓர்இல்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூவணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப
படைத்தோன் மன்ற,அப் பண்பி லாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே!   - புறம்.194.

(பக்கு உடுக்கை நன்கணியார் பாடல்)

அன்பார்ந்த உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி!
அன்பன்,
தமிழநம்பி.


புதன், 23 ஆகஸ்ட், 2017

அருமையான செய்தியொன்று!



அருமையான செய்தியொன்று!  

நான் பல முறை படித்ததென்றாலும், புதியதாகவே இருப்பது!

...........
..அன்று திருமண நாள்! அழகி அவள் கணவன். நன்னன் மாலையில் அலுவலகத்திலிருந்து வருவதற்க்காகக் காத்திருந்தாள்.

திருமணம் நடந்த சில ஆண்டுகளில் எண்ணிப்பார்க்காத மாற்றம்.!    
    
ஒருவரின்றி யொருவர் இருக்க இயலாத நிலையில் பொருந்தியிருந்த அவ்விணையர் மாறி, சிறுசிறு  செய்திகளுக் கெல்லாம் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரிடமொருவர் பேசாமல் ஒரே வீட்டில் இருவேறு அறிமுக மற்றவர்களைப் போன்று இருந்தார்கள்.

ஒன்றுமில்லாததெற் கெல்லாம் சண்டையிட்டுக் கொள்வதை அவர்களே விரும்பவில்லை! நிலைமை மாறியது.
இன்று, தம் திருமண நாள என்பதை மறவாமல் நன்னன் நினைத்திருக்கிறானா என்றறிய ஆவலுடன் காத்திருந்தாள்!

வாயில் அழைப்பு மணி ஒலித்தது. அவள் விரைந்து சென்று கதவைத் திறந்தாள். அவள் கணவன் நன்னன் மழையில் நனைந்த தோற்றத்துடன் கையில் பூங்கொத்துடன் புன்னகை பொதுள நிற்கக் கண்டாள்.

அவர்களிருவரும் தம்மைத் திருத்திக் கொள்ளத் தொடங்கி  பழையபடியே வாழத் தொடங்கினர். சண்டை சிக்கல் மறந்து இசைநிகழ்ச்சி விருந்திற்குப் போகத் திட்டமிட்டிருந்தனர். ஒரே மழை! 

அலறலாகத் தொலைபேசியின் மணி ஒலித்தது. அழகி தொலைப்பேசியை எடுத்தாள். மறுமுனையிலிருந்து...

நான் காவல்நிலையத்திலிருந்து பேசுகிறேன் அம்மா, நன்னன் வீட்டுத்தொலைபேசி எண்ணிலிருந்துதானே பேசுகிறீர்கள்?

ஆமாம்

வருத்தமான செய்தி அம்மா! நேர்ச்சியொன்றில் ஒருவர் இறந்துவிட்டார்; இந்தத் தொலைபேசி எண் இறந்தவரின் பணப்பையிலிருந்தது! நீங்கள் வந்து இறந்தவரின் உடலை அடையாளம் கண்டு கூறவேண்டும்!

அழகிக்குப் பேரதிர்ச்சி! அவள் நெஞ்சாங்குலை நடுங்கியது!

என் கணவர் இங்கு என்னுடன் இருக்கின்றாரே! என்றாள்.

அந்தத் துயர நிகழ்ச்சி மாலை 4மணிக்கு நடந்ததம்மா! அவர் தொடர்வண்டியில் ஏற முனைகையில் நிகழ்ந்துவிட்டது

அழகி, அதிர்ச்சியில் நினைவிழக்கும் நிலையிலிருந்தாள்!

இது எப்படி நடந்திருக்கும்??!!

இறந்தவரின் ஆதன் (ஆத்மா) நீங்கிச்செல்லுமுன், அதற்கு அன்பானவர்களைக் காண வருமென்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறாள்!!!

கண்கள் நீர் சொரிய, அடுத்த அறைக்கு ஓடிச்சென்று பார்த்தாள்!
நன்னனை அங்குக் காணவில்லை! அது உண்மையோ!! அவன் அவளைப் பிரிந்தே போய்விட்டானா?

அடக் கடவுளே! அவனோடு போட்ட சிறுசிறு சண்டைகளைத் விட்டுத் திருந்தி வாழ்ந்திட இன்னொரு வாய்ப்பிற்காக, அவள் உயிர்விடவும் அணியமாயிருந்தாளே!

அவள் அழுதுகொண்டே கீழே வீழ்ந்தாள், வலியில் துடித்தாள்! அவள் இழந்துவிட்டாள்; இனி எப்போதும் அந்த வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை! 

திடுமென குளியலறையில் ஒலி! கதவைத் திறந்துகொண்டு நன்னன் வெளியேவந்து, அன்பே! உன்னிடம் சொல்ல மறந்துவிட்டேன், என்னுடைய பணப்பை இன்று தொடர்வண்டியில் ஏறும்போது திருடு போய்விட்டது என்றான்!
இதைக் கேட்ட மாத்திரத்தில், அவள் நெஞ்சம் அவனுக்காக அழுத்து! அவன் உயிரோடிருக்கும் உண்மையறிந்து மகிழ்ச்சியில் அவள் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது!

வாழ்க்கை உங்களுக்கு இரண்டாவது வாய்ப்பொன்றைத் தராமலே போகலாம்!. எனவே, ஒரு கணத்தையும் வீணடிக்காமல் தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்!

திருந்திக்கொள்ளத் தொடங்குவோம்!

பெற்றோரிடமும், உடன்பிறந்தாரிடமும், உறவினரிடமும், நண்பர்களிடமும் மற்றெல்லாரிடமும் தவறின்றித் திருத்தமாக நடக்கத் தொடங்குவோம்!

யாரொருவரும் நாளைக்கிருப்பது உறுதியில்லை!

வருத்தமற்ற அருமையான வாழ்க்கையை வாழ்வோம்!

இந்நாள் அருமையான நாளாக இருக்கட்டும்!

இப்போதிருந்து. ஒவ்வொரு கணத்தையும் புன்னகையோடு துய்த்திடுவோம்!

(கெழுதகை அன்பர் (தாமரைக்கோ) தாமரை Thamaraikko Thamarai அவர்களின் முகநூல் பக்கத்தில் ஆங்கிலத்தில் பார்த்துப் படித்த செய்தியை மொழியாக்கம் செய்து தந்துள்ளேன். படம் இணையத்தில் எடுத்தது. Chillzee.in  இணையதளத்திற்கு நன்றி!)
-------------------------------------------------------------








திங்கள், 21 ஆகஸ்ட், 2017

பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் – ௩



பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார்
======================================================

ஆபிரகாம் பண்டிதர்
------------------


சிலப்பதிகார இசைத்தமிழ்ப் பகுதிகளைச் செவ்வையாக ஆராய்ந்து, பெருந்தொகையைச் செலவிட்டு, ஆயப்பாலை வட்டப்பாலைப் பண்திரிவு முறைகளையும் வீணையியல்பையும் தம் கருணாமிர்த சாகரத்தின் வாயிலாக விளக்கிக்காட்டி, தமிழிசையின் முன்மையையும் தாய்மையையும் நிறுவியவர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதரே.

கா.நமச்சிவாய முதலியார்
-------------------------


தமிழர் பலர் தமிழாசிரியத் தகுதிபெற இயலாதவாறு, வடமொழிப் பயிற்சியோ டிணைக்கப்பட்டிருந்த சென்னைப் பல்கலைக்கழக புலவன் (வித்துவான்) தேர்வுப் பாடத்திட்டத்தைக் கவனித்து, அதன் தீங்கைக் கண்டு, தனித்தமிழ்ப் பிரிவு (7 ) ஏற்படுத்திய பெருமை, அப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராயிருந்த நமச்சிவாய முதலியாரதே.

மு.சி.பூரணலிங்கம் பிள்ளை
--------------------------


தமிழ் நாகரிக வரலாற்றையும் தமிழ் இலக்கிய வரலாற்றையும் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டு, தமிழின் பெருமையை அயல்நாட்டார் அறியச்செய்த அருந்தமிழ்த் தொண்டர், ஆங்கிலப் பேராசிரியர் பூரணலிங்கம் பிள்ளையாவார்.

(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 119,120., தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை–17) 
--------------------------------------------------------------------------------------------------------    

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் - உ



பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார்
=========================================================

சிவஞான முனிவர் (18ஆம் நாற்.)
-----------------------------


வடமொழி உயர்வென்றும் தமிழ் நாழ்வென்றும் கருதப்பட்ட காலத்திலும் இடத்திலும் இருந்துகொண்டு, தம் ஆழ்ந்த தென்மொழி வடமொழிப் புலமையாலும், அரிய இலக்கணவாராய்ச்சியாலும், செய்யுள் வன்மையாலும் தருக்க வாற்றலாலும், தமிழ் வடமொழிக்கு எள்ளளவும் இளைத்ததன்றென நிறுவியவர் மாதவச்சிவஞான முனிவராவர்.

சுந்தரனார் (19ஆம் நூற்)
---------------

சுந்தரனார் தம் மனோன்மணீயத்திற் பின்வருமாறு தமிழை ஆரியத்தோடுறழ்ந்து, ஆரியச்செருக்கை அடக்கினார்.

கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
 உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும்
 ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
 சீரிளமைத் திறம்வியந்து செயல்மந்து வாழ்த்துதுமே....

சதுர்மறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
 முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே...

பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
 எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே...

வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
 உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி...

மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
 கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ

பா.வே. மாணிக்க (நாயகர்) (20ஆம் நூற்.)
--------------------------

தம் நுண்மாண் நுழைபுலத்தாலும் பன்மாண் பொறிவினைப் பயிற்சியாலும், தமிழ் நெடுங்கணக்கை ஆழ்தாய்ந்து தமிழே உலக முதன்மொழியென முதன்முதற் கண்டவரும், அதை அஞ்சாது எங்கும் எடுத்துவிளக்கிய தண்டமிழ்த் தறுகண்ணாளரும் பா.வே. மாணிக்கநாயகரே.

(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 117,118., தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை17)  
________________________________________________________________________

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் - க



பாவாணர் காட்டும் கிளர்நிலைப் படலத்தார் - க
================================================================

திருவள்ளுவர் (கி.மு.முதல் நூற்றாண்டு)


திருவள்ளுவர், ஆரியப் பல்சிறு தெய்வ வழிபாட்டை நீக்கிக் கடவுள் வழிபாட்டை நிறுவியும், அருள் நிறைந்த துறவியரே அந்தணர் என்று வரையறுத்தும், குலத்திற்கேற்பத் தண்டனை கூறும் ஆரிய முறையை அகற்றி நடுநிலை நயன்மை நாட்டியும் தமிழ்ப் பண்பாட்டை கிளர்வித்தார்.

நக்கீரர் (கி.பி. 2ஆம் நூற்.)


நக்கீரர், ஆரியம் நன்று, தமிழ் தீது எனவுரைத்த குயக்கொண்டானை அங்கதம் பாடிச் சாவித்து, பின்பு பினர் வேண்டுகோட் கிணங்கி அவனை உயிர்ப்பித்து, தமிழின் உயர்வை மெய்ப்பித்துக் காட்டினார்.

பரஞ்சோதி முனிவர் (16ஆம் நூற்.)


பரஞ்சோதி முனிவர், தம் திருவிளையாடற் புராணத்தில்,

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ?
 
- என்று பாடித் தமிழிலக்கண உயர்வை எடுத்துரைத்தார்.

(தமிழ் வரலாறு-2, பாவாணர், பக்கம் 117, தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை17)
--------------------------------------------------------------

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

மூவகைத் தகுதி வழக்கு



மூவகைத் தகுதி வழக்கு
---------------------------

1. இடக்கரடக்கல் (Euphemism)

ஒன்றிற்கு இரண்டிற்குப் போதல்,
பவ்வீ.

2. மங்கலம் (Euphemism)

கொடித்தட்டுதல் = பாம்பு கடித்தல்
பெரும்பிறிது = சாவு.

3. குழூக்குறி (Conventional terms)

செந்தலை = அரைக்கால்
கருந்தலை = கால்
தங்கான் = அரை
அரும்பு = அரிசி

---------------------------------------------------------------------------------------------------
(தமிழ் வரலாறு 1, பக்கம் 101,102, - பாவாணர், தமிழ்மண் அறக்கட்டளை, சென்னை- 600017)
----------------------------------------------------------------------------------------------------

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

தமிழர்கள் மட்டுமே மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்களா?



தமிழர்கள் மட்டுமே மொழித்தூய்மையை வலியுறுத்துகிறார்களா?
---------------------------------------------------------------------------------------------------------

                                 

     ஆங்கிலத்தில் பிரெஞ்சு இலத்தீன்மொழிச் சொற்கள் கலந்து பொருட்குழப்பத்தை ஏற்படுத்துவதால் அம்மொழிகள் கலப்பற்ற தூய ஆங்கிலம் எழுத வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார் ஆங்கில வரலாற்று ஆசிரியர் பிரீமன் என்பவர்.தனிஆங்கிலக் கழகம்’ (society for pure English) என்ற அமைப்பு 1918 முதல் இயங்கி வருகின்றது.

     பிரெஞ்சு மொழியில் பிறமொழிச்சொற்களை நீக்குவதற்கென்றே பிரான்சு நாட்டின் தலைவராயிருந்த திகால் பல சட்டங்களை இயற்றினார்.
செருமானியரும் மொழிச் சீர்திருத்தத்தில் பல அயற்சொற்களை விலக்கினர்.

     புரட்சியாளர் இலெனின், ‘உருசிய மொழியைக் கெடுப்பதை நிறுத்துங்கள்; பிறசொற் கலப்பை எதிர்த்துப் போரிடுங்கள் என்று அறிக்கை வெளியிட்டவராவார்.

     துருக்கியின் வல்லாட்சியராக, வல்லதிகாரியாக இருந்தவர் கமால் அத்தாதுர்க் ஆவார். அந்தக் கமால் அத்தாதுர்க், துருக்கி மொழியில் கலந்திருந்த இருபதாயிரம் அரபி, பாரசிகச் சொற்களை நீக்கிவிட்டு 1,58,000 தூய துருக்கிச்சொற்களை உருவாக்கினார்.

     சீன மொழி தூய சீனமாக்கப்பட்ட பிறகு, மாண்டரின் எனப்பட்டது. தூய சீன மொழியையே பேசவேண்டுமென்று பொதுவுடைமை அரசு கட்டளையிட்டது.

     இங்கே, இந்தியாவில் கருநாடகத்தில், தூய கன்னட இயக்கம் திருள் கன்னடம் என்றும் அச்ச கன்னடம் என்றும் வழங்கப்பட்டது.

     அச்ச தெலுகு இயக்கம் தூய தெலுங்கில் இலக்கியங்களைப் படைத்தது.
 
     பச்ச மலையாளம் என்ற பெயரில் தனிமலையாளம் வழங்கப்பட்டது.

     இந்தச் செய்திகளையெல்லாம் முனைவர் சாரதா நம்பி ஆரூரன் தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும்என்ற நூலில் (2008இல் வெளிவந்தது) மிக விரிவாகவும், தெளிவாகவும் அடிப்படைச் சான்றுகளோடும் தந்துள்ளார்.

     பிரெஞ்சு மொழியிலும் சீன மொழியிலும் அயற்சொற் கலப்பு தண்டனைக்குரிய குற்றமாக உள்ளதை அறிகிறோம்.
------------------------------------------------------------------------------------------------------------
                                                   
                                                                      

புதன், 2 ஆகஸ்ட், 2017

தன்னலந் தவிர்! - புறநானூற்றுப் பாடல்!

தன்னலந் தவிர்! - புறநானூற்றுப் பாடல்!
 --------------------------------------------------------------

புறநானூற்றுப் பாடலொன்றைப் பிழைகளோடு முகநூலில் எழுதியிருந்ததைக் கண்டு, அப்பாடலைப் பிழையின்றி எழுதிப் பாடலின் பொருளையும் பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். அதனைக் கீழே காண்க:

=================================================== தமிழிலக்கியப் பாடல்களைத் தப்பும் தவறுமாக எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்!
-----------------------------------------------

தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்,
உண்பது நாழி உடுப்பவை இரண்டே!
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே!
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே!    - புறநானூறு 189.


தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும் பிறவேந்தர்க்குப் பொதுவாதலின்றித் தமக்கே உரிமையானதாக ஆண்டு, வெண்கொற்றக் குடையால் நிழல்செய்த அரசர்க்கும் இடை யாமத்தும் பகலும் தூங்காது, விரைந்த வேகங்கொண்ட விலங்குகளை வேட்டையாடித் திரியும்  கல்வி இல்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவினதே! உடுக்கப்படுபவை இரண்டு உடைகளே! இவை போன்றே பிற உடல் உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும். ஆகவே, செல்வத்தால் பெறும் பயனாவது கொடுத்தல் ஆகும். செல்வத்தை நாமே நுகர்வேம் என்று கருதின் தவறுவன பலவாம்.   
--------------------------------------------------------------------------
 

ஞாயிறு, 2 ஜூலை, 2017

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கஉ.



முதுமுனைவர்
இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கஉ.
============================================================

தமிழா,

இந்தி எதிர்ப்பு எதற்காக? தமிழைக் காக்கவா, ஆங்கிலத்தைக் காக்கவா?
உன் மாநிலத்தின் இருமொழிக் கொள்கை,
மும்மொழிக் கொள்கை இந்தியத்தினும் மோசடிக் கொள்கை அல்லவா?
இது திராவிடக் கொள்கையா, தீரா விடக் கொள்கையா?

தமிழைக் காப்பதற்காகத் தம்மை எரியூட்டிக் கொண்டவர் எத்தனை எத்தனை பேர்!
அவர்கள் புதைகுழியாம் அரியணைமேல் வீற்றிருந்து ஆட்சி செய்த திராவிடங்கள் தமிழைக் காத்தனவா?

எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்பது முழுக்க முழுக்க ஏமாற்றுத்தானே?
இருந்த அரசுப்பள்ளித் தமிழையும் இல்லாமல் செய்துவிட்டதை  எண்ண மாட்டாயா?

முறைமன்றத்தில் உன் மொழியில் வாதிடப்படுகிறதா?
உன் சிக்கலைப் பற்றி வாதிடுவது உனக்குப் புரிகிறதா?
உன் நோயை மருத்துவனுக்கு மொழிபெயர்த்துச் சொல்லி மருந்து தருவதற்கும்,
உன் மனைவியிடம் பேசுவதற்கு மொழிபெயர்ப்பாளி வைப்பதற்கும்,
இதற்கும் என்ன வேறுபாடு?

தமிழ் பயிற்றுமொழிக்குத் தடை , எவர் செய்தது?
ஆங்கிலக் கொள்ளையர்;
தடையாக்க வழிசெய்தவர் ஆள்பவர்.
தமிழில் பயிலச் சட்டமியற்றாமல் ஆணையிட்டார்!
சட்டம் செல்லும்; ஆணை தள்ளப்படும்.
உரிமம் கொடுக்கும் போதே, தமிழில் பயிற்றினால்தான் உரிமம் என்றால்,
இந்நிலை ஏற்படுமா?

*           *           *           *           *           *           *           *           *           *           *           *          
(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,11,12., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
---------------------------------------------------------------------------

வியாழன், 29 ஜூன், 2017

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கக.



முதுமுனைவர்
இரா.இளங்குமரனார் ஐயாவின் குரல் - கக.
============================================================


தமிழா,

நாட்டு விடுதலைக்கு முன்னது மொழி விடுதலை.
அதனைப் பெற  நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டவர் எண்ணவில்லை!
மாநில மொழிகள் அனைத்தும் மைய மொழியாக வேண்டும் என்று குரலெழுப்பவில்லை.

பாவாணர் எழுதினார்!
மாநிலப்பிரிவின் போதே செய்தாக வேண்டும் என்றார்!

அரசு - முடியரசு கூடச்சான்றோர் சொல்லை மதித்து நடந்தது!
குடியரசு ஆன பின்னரோ சான்றோர் உரையைக்கேட்கும் அரசாக எதுவும் வரவில்லை!

ஏய்ப்பரும் மேய்ப்பரும் ஆகியவர்க்குச் சால்பாவது, சான்றோர் உரையாவது ஏறுமா?

தமிழா, பூச்சால் நடைபெறாது!
புனைந்து பாடுதலால் வராது!

போராட்டம் இன்றிப் பொருவில் தமிழுக்குத்
தேரோட்டம் இல்லை தெளி
என்னும் மாணிக்கவுரை என்றும் மாணிக்க உரையே!

தாய்மொழிக்கு எல்லா வழிகளும் முதன்மை தராத நாடு, தாய்நாடு என ஆகுமா?
தாய் பெற்ற பிள்ளை ஆளும் நாடாகுமா?
ஆக்கத் தந்நலச் சூழ்ச்சியர் விடுவரா?

ஒன்றிய நாடுகள் உலகில் இல்லையா?
அவரவர் மொழியுரிமை காத்துப் பொதுமை  பேணும் நாடு இல்லையா?

மலையகம் சிங்கையில் உள்ள மொழியொன்றியம் இந்தியம் கொள்ளாதது ஏன்?

உனக்கு ஆக்கமாம் அரசா இந்திய அரசு? அழிவாம் அரசு!
உணர்ந்தால்.,

இந்தியக் கொத்தடிமையை ஒழிக்காமல் கிடப்பாகக் கிடப்பாயா?

ஏக  இந்தியம் என வாய் வருமா?      

*           *           *           *           *           *           *           *           *           *           *           *
(தமிழா! தமிழா!!’ – இரா.இளங்குமரனார், பக்கம்,22,23 ., 2016., திருவள்ளுவர் நிலையம், 7, இராமன் தெரு, திருநகர், மதுரை 625006)
---------------------------------------------------------------------------