தன்னலந் தவிர்! - புறநானூற்றுப் பாடல்!
--------------------------------------------------------------
--------------------------------------------------------------
புறநானூற்றுப் பாடலொன்றைப் பிழைகளோடு முகநூலில்
எழுதியிருந்ததைக் கண்டு, அப்பாடலைப் பிழையின்றி எழுதிப் பாடலின் பொருளையும்
பின்னூட்டத்தில் எழுதியிருந்தேன். அதனைக் கீழே காண்க:
=================================================== தமிழிலக்கியப் பாடல்களைத் தப்பும் தவறுமாக எழுதுவதைத்
தவிர்க்க வேண்டுகிறேன்!
-----------------------------------------------
தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்,
உண்பது நாழி உடுப்பவை இரண்டே!
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே!
செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்பேம் எனினே தப்புந பலவே! -
புறநானூறு 189.
தெளிந்த நீரால் சூழப்பட்ட உலகம் முழுவதையும்
பிறவேந்தர்க்குப் பொதுவாதலின்றித் தமக்கே உரிமையானதாக ஆண்டு, வெண்கொற்றக் குடையால்
நிழல்செய்த அரசர்க்கும் இடை யாமத்தும் பகலும் தூங்காது, விரைந்த வேகங்கொண்ட
விலங்குகளை வேட்டையாடித் திரியும் கல்வி
இல்லாத ஒருவனுக்கும் உண்ணப்படும் பொருள் நாழி அளவினதே! உடுக்கப்படுபவை இரண்டு
உடைகளே! இவை போன்றே பிற உடல் உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும். ஆகவே,
செல்வத்தால் பெறும் பயனாவது கொடுத்தல் ஆகும். செல்வத்தை நாமே நுகர்வேம் என்று
கருதின் தவறுவன பலவாம்.
--------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக