கட்டுரை -நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரை -நூல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஜூன், 2008

பாவாணரின் 'திரவிடத்தாய்'


            தமிழ்மொழி, இந்திய நடுவண் அரசால் 'செம்மொழி 'என 17-09-2004இல் அறிவிக்கப் பட்டது. இந்திய அரசின் இவ்வறிவிப்பிற்கு நெடுங்காலம் முன்னரே, மொழியறிஞர்கள், தமிழை இயற்கைமொழி, முதன்மொழி, உயர்தனிச் செம்மொழி எனப் பலவாறு பாராட்டி உரைத்துள்ளனர். இன்றைக்கு இந்தியா என்றழைக்கப்படும் பண்டை நாவலந்தீவு முழுவதிலும் மக்கள் தமிழ்மொழியே பேசினர். ஆரியர் வருகைக்குப் பின், பல்வேறு சூழ்ச்சி கரவுச் செயல்களால் தமிழ் தாழ்வுறுத்தப்பட்டுக் குலைந் துலைந்து நிலையிழந் திழிந்தது.         தமிழருள்ளும் தன்மானமும் தாய்மொழிக் காப்புணர்வும் மிக்க சிலர் தாய்மொழி மீடசிக்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சிகளுக்குத் தம் அறிவழுத்தம் சான்ற ஆக்கமான அறிவு வெளிப்பாடு களால் பெரும் வலிவைச் சேர்த்தவர், பாவாணர் எனப் பரவலாகப் பலராலும் அழைக்கப்படும் தேவநேயப் பாவாணர் ஆவார். அஃகி அகன்ற தம் ஆய்வறிவால், மொழியாய்வில் மாபெரும் விழிப்புணர்வை உண்டாக்கிய பெருமை அவருக்கே உரியதாகும்.
            திரவிடத்தாய்மறுபதிப்பை வெளியிட்ட 'தமிழ்மண் பதிப்பக' நிறுவுநரான தமிழ்த்திரு கோ.இளவழகனார், அண்மைக் காலத்தில் பாவாணரின் நூற்களைத் தொகுப்பாக வெளியிட்டவ ராவார். அந்நூல்களின் பதிப்புரையில் ஒருவரைப் பற்றிக் கீழ்காணும் வகையில் நன்றியுணர்வோடு போற்றி வணங்கி குறிப்பிட்டெழுதுகிறார் : "இவர் தோன்றி யிராவிடில், குடத்துள் இட்ட விளக்காக இருந்த மொழிநூல் மூதறிஞர் பாவாணர் அவர்களைத் தமிழுலகம் ஏற்றிப் போற்றியிருக்காது; எங்களைப் போன்றவர்களும் அவர்தம் பேரறிவைக் கண்டு மகிழ்ந்திருக்க முட்டியாது."
            இளவழகனாரால் இவ்வாறு குறுப்பிடப் பட்டவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். இவர், பாவாணரின் தலைசிறந்த மாணாக்கரும் தமிழின விடுதலைப் பாவலரும் தென்மொழி', 'தமிழ்ச்சிட்டு', 'தமிழ்நிலம்' ஆகிய மூன்று தூயதமிழ் இதழ்களின் ஆசிரியருமாவார். கல்வியாளரிடையேயும், மாணவரிடையேயும், பொதுமக்களிடையேயும் தூயதமிழ் உணர்விற்கு வித்திட்டு வளர்த் தெடுத்த பெருமைக் குரியவர் இவர்.
            இத்தகைய சிறப்பிற்குரிய பாவலரேறு, பாவாணரைப் பற்றி எழுதுகையில், “இவர் வாயினின்று சரமாரியாக வந்துவிழும் தனித்தமிழ் ஆராய்ச்சிக் கருத்துக்களை இதுவரை எந்த அறிஞரும் தமிழ்மொழிக்கு வழங்கிவிட வில்லை. தமிழ்த் துறைக்கு அவர் தொண்டு புதியது; தமிழர்க்கு அவர் கருத்துக்கள் மயக்கறுப்பன; மேனாட்டார்க்கு அவர் நூல்கள் வியப்பளிப்பன. அவர் எடுத்துக்கொண்ட முயற்சி அரியது. தொல்காப்பியர் காலத்திற்குப் பின், தமிழ் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும் ஒட்டுமொத்த முயற்சிக்குப் 'பாவாணர்' என்றே பெயரிடலாம்" என அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.


ஆய்வுலகிற்கு அறிமுகம் 
            ஐம்பானாண்டுக் கடுங்கடிய உழைப்பில் பாவாணர் எழுதிய 39 தமிழ் நூல்களும், இரண்டு ஆங்கில நூல்களும், 152 கட்டுரைகளும், அருஞ்சிறப் பார்ந்த மடல்கள் பலவும் தமிழருக்கும் உலக மொழியாராய்ச்சி யாளர்க்கும் அரிய விளக்கந் தந்து வருகின்றன. 1931இல், அவரின் 29ஆம் அகவையில், 'செந்தமிழ்ச்செல்வி' இதழில் 'மொழியாராய்ச்சி' (Comparative Philology) என்னும் தம் முதல் ஆய்வுக்கட்டுரையைப் பாவாணர் எழுதினார். அதன்பின், 1940இல், தம் 38ஆம் அகவையில் 'ஒப்பியன் மொழிநூல்' என்னும் அரிய நூலினை எழுதி வெளியிட்டார். இவ் 'ஒப்பியன் மொழிநூல்' என்னும் நூலே, பாவாணருக்குத் தமிழுலகில் சிறந்ததோர் இடத்தை முதற்கண் வழங்கியதோ டமையாது ஆய்வுலகத்தினர் கவனத்தையும் ஈர்த்தது.

திரவிடத்தாய் 
            'திரவிடத்தாய்' பாவாணரின் சொந்தப்பதிப்பாக 1944இல் வெளிவந்தது . 2000த்தில் தமிழ்மண் பதிப்பக வெளியீடாக வந்தது. இந்நூல், ஒப்பியன் மொழிநூலின் முதன்மடலத்தில் மூன்றாம் பாகத்தின் பிற்பகுதியாக வருவதாகப் பாவாணர் நூலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளார். தமிழையும் பிற திரவிட மொழிகளையும் ஆராய்வதால் தமிழின் சிறப்பையும் பழந்தமிழரின் பெருமையையும் அறிவதுடன், உலக முழுதுந் தழீஇய குலநூல் (Ethnology), வரலாற்று நூல்(History), மொழிநூல் (Philology) ஆகிய முக்கலை களின் திறவுகோலையும் காணப் பெறலாம் என்று பாவாணர் முகவுரையில் கூறுவதையே இந்நூலின் நோக்கமாகக் கொள்ளலாம். 115 பக்கங்களைக் கொண்ட திரவிடத்தாயில், முன்னுரை, மலையாளம், கன்னடம், தெலுங்கு, துளு, முடிவு என்னும் ஆறு தலைப்புகளில் அரிய பல ஆய்வுக் கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. 

முன்னுரைப் பகுயில் உள்ள சில அரிய செய்திகள்
            மொழி, கருத்தைப் பிறருக்குப் புலப்படுத்தற்குக் கருவியாகக் கொள்ளும் ஒலித்தொகுதி; ஓசையைப் பொருளுணர்த்தும் அடையாளமாகக் கொண்டது. முதலில் மாந்தன் தோன்றிய இடத்தினின்றும் மொழியில்லா நிலையில் சில முறையும் மொழி தோன்றியபின் சில முறையுமாக மக்கள் பல திசையிலும் பலமுறை பரவிப் போயிருக் கின்றனர். மொழியில்லாது பிரிந்து போனவர் தாம் போன இடங்களில் புதிதாய்த் தத்தமக்கு ஏற்றவாறும் இயன்றவாறும் இயன்மொழிகளை ஆக்கிக் கொண்டனர். மொழி தோன்றியபின் பிரிந்து போனவர் தத்தம் சுற்றுச் சார்பிற்கேற்பப் புதுச் சொற்களை அமைத்தும் தட்பவெப்ப நிலைக்கேற்பப் பழஞ்சொற்களைத் திரித்துங் கொண்டனர். தமிழ் என்னும் பெயர்க்குப் பொருத்தமான பொருள்கள் தனிமையாக ழகரத்தைக் கொண்டது, தனிமை என இரண்டுமாம். தமிழ் இனிமையா யிருத்தலின் இனிமைப்பொருள் கூறுவர். 
தமிழ் தோன்றிய இடம்
            பன்னூராயிரம் ஆண்டுகட்கு முன்னே, குமரிமுனைக்குத் தெற்கே, இந்தியா தென்கண்டம் (ஆத்திரேலியா) ஆப்பிரிக்கா என்ற மூன்று கண்டங்களையும் இணைத்துக் கொண்டு ஒரு பெரு நிலப்பரப்பிருந்த தென்றும், அங்கேதான் மாந்தன் தோன்றினா னென்றும், அது பன்னூராயிரம் ஆண்டுகள் நிலைபெற்ற பின், பல கடல்கோள்களால் தென்பெருங் கடலில் மூழ்கி விட்ட தென்றும் எக்கேல், இசுகாட் எலியட் முதலிய மேலை யாராய்ச்சியாளர் கூறுகின்றனர். அதற்கு 'லெமூரியா', 'கான்டுவானா' என்று பெயர்களையும் இட்டிருக்கின்றனர். தெற்கே அமிழ்ந்து போன குமரிநாடே தமிழர் தொல்லகம். அதுவே தமிழ் தோன்றிய இடம்.
            தமிழ், பனிமலை (இமயமலை) தோன்றாத முற்காலத்தில் நாவலந்தேயம் முழுமையும் வழங்கி வந்தது. தொல்காப்பியர் காலத்தில் வேங்கடத்திற்கும் (தெற்கே அமிழ்ந்து போன) குமரி மலைக்கும் இடையில் வழங்கி வந்தது பண்டைக் காலத்தில் நாட்டுப்பெயர்களும் மொழிப்பெயர்களும் 'அம்' ஈறு பெற்றே வழங்கின. தமிழகம் என்பது குலம், நாடு, மொழி ஆகிய மூன்றையும் குறிக்கும் சொல். தெளிவின் பொருட்டு நாட்டைக் குறிக்கும் போது தமிழகம் என வழங்கினர். சமற்கிருத நூல்களில் (தமிழம்), 'த்ரமிளம்' என்று வழங்கிவந்த சொல், த்ரமிடம், த்ரவிடம் எனத் திரிந்து தமிழில் திரவிடம் என்றாகிப் பின்பு திராவிடம் என நீண்டு வழங்குகின்றது.
            தமிழ் என்னும் பெயர் எங்ஙனம் திராவிடம் எனத்திரிந்ததோ, அங்ஙனமே தமிழாகிய மொழியும் பிற திரவிட மொழிகளாய்த் திரிந்ததென்க. 

நான்கு வகைச்சொற்கள் 
            செந்தமிழ்ச் சொற்கள் இயற்சொல், திரிசொல், என இரண்டாக வகுக்கப்பட்டன. இயல்பானசொல் இயற்சொல்; அதனின்று திரிக்கப்பட்ட சொல் திரிசொல்.
இயற்சொல்(Primitives) : எடுத்துக்காட்டு : கிள், சேர்
திரிசொல் (Derivatives) : எடுத்துக்காட்டு : கிள்ளை, சேரி
இயற்சொல், திரிசொல் இரண்டும் செந்தமிழ்ச்சொற்கள்.
திசைச்சொல் : கொடுந்தமிழ்ச்சொல் (எ-டு) போயினாடு (தெலுங்கு)                                                    [போயினான் (தமிழ்)]
அயற்சொல் : வடசொல், ஆங்கிலச்சொல், போர்த்துகீசியச் சொல் முதலியன. 

திரவிட மொழிகள் 
            ஒரு காலத்தில் ஒரு மொழியே(தமிழே), நாவலந்தேய முழுவதும் தென்கோடியிலிருந்து வடகோடி நோக்கிச் சிறிதுசிறிதாய்த் திரிந்து வழங்கிய தென்பதையும் (மொழி பெயர் தேயம்), ஆரியக் கலப்பில்லா விட்டால் இன்றும் வடநாட்டில் திரவிடமே வழங்கு மென்பதையும் உய்த்துணரலாம். தமிழ் அல்லது தமிழம் என்னும் பெயர் போன்றே, திரவிடம் என்பதும் செந்தமிழ் கொடுந்தமிழ் இருவகைத் தமிழையும் ஒருங்கே உணர்த்தி வந்தது. தமிழினின்று முதலாவது பிரிந்துபோன கொடுந்தமிழ் மொழிகள் கூர்ச்சரமும் மகாராட்டிரமுமாம். அதன்பின் தெலுங்கும் கன்னடமும் மலையாளமும் முறையே பிரிந்து போனபின் தமிழ் என்னும் பெயர் சோழ பாண்டிய நாட்டுப் பகுதியை மட்டும் குறிக்கும் சிறப்புப் பெயராய் வழங்கியது. திராவிடம் என்பது ஒரோவிடத்துத் தமிழையும் ஒரோவிடத்துத் திரவிட மொழிகள் எல்லாவற்றையும் குறிக்கும் பெயராயும் வழங்கி வந்தது. சென்ற (19ஆம்) நூற்றாண்டில்தான், கால்டுவெல் கண்காணியார் திரவிடம் என்னும் சொல்லைத் திரவிடமொழிகளின் பொதுப் பெயராகவும் தொகுதிப் பெயராகவும் வரையறுத்தார். 

மொழி வேறுபடக் காரணங்கள் 
            தமிழிலிருந்து பிற திரவிடமொழிகள் வேறுபடப் பாவாணர் கூறும் காரணங்கள் :
1) மக்கட் பெருக்கம்
2,3,4) எழுத்தொலி சொல் பொருள் திரிபுகள்
5) இயற்கைத் தெரிப்பு (தமிழில் வீட்டைக் குறிக்கும் ஒருபொருட் பலசொற்களில் தெலுங்கு இல்என்னும் சொல்லையும், கன்னடம் மனஎன்னுஞ் சொல்லையும் கொண்டமை)
6) வழக்கற்ற சொல் வழங்கல் (தமிழில் இதுபோது எழுத்து வழக்கில் மட்டுமுள்ள சொற்கள் பிற திரவிட மொழிகளில் பேச்சு வழக்கில் வழங்குவது) 7) குடியேற்றப் பாதுகாப்பு (இப்போது தமிழில் வழங்காவிடினும் குமரிநாட்டில் வழங்கியதாகத் தெரிகின்ற சொற்களும் சொல்வடிவங்களும் பிற திரவிட மொழிகளில் பாதுகாக்கப் பட்டிருத்தல்)
டு : போழ் (மலையாளம்) = போழ்து , கொம்மு (தெலுங்கு) = கொம்பு )
8) புத்தாக்கச் சொல்
9) தாய்த் தமிழொடு தொடர்பின்மை
10) வடசொற் கலப்பு
11) வடமொழி எழுத்தையும் இலக்கணத்தையும் மேற்கொள்ளல்
12) தமிழின் பண்படுத்தம் (முதற் றமிழரின் ஒலிமுறை, சொற்களின் பழைய அல்லது திருத்த வடிவம் , நுண்பொருள் விளக்கம், சொற்றொடரின் வழா நிலையும் காத்துக் கொள்ளும் வரம்பீடு) 

ஆரியக்கலப்பால் வந்த கேடு 
            தமிழுக்கும் சேய்மொழிக்கும் தொடர்பறவு, மொழிப் பிரிவினையும் மக்கட் பிரிவினையும், ஒலித்திரிபும் சொற்றிரிபும், சொல் வழக்கொழிவும் மறைவும், வரலாற்று மறைப்பும் மலைவும், புதுச்சொல்லாக்கத் தடை, தாய்மொழி யுணர்ச்சி யின்மை, கலை வளர்ச்சியின்மை, மொழி மறைவு ஆகிய பத்துவகைக் கேடுகள் ஆரியக் கலப்பால் திரவிடத்திற்கு வந்தன. 

முழுத் திரவிடம் 
            செந்தமிழும் கொடுந் தமிழும் சேர்ந்தே தமிழாதலானும், தமிழல்லாத்-திரவிட மொழிகளெல்லாம் பழைய கொடுந் தமிழ்களே யாதலானும், திரவிட ரெல்லாம் ஒருகுலத்தாரே யாதலானும் ஆரியக் கலப்பின்றி அவர் பேசும் சொற்களும், இயற்றிய நூல்களும் திரவிடமே யாதலானும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்தே முழுத் திரவிடமாகும். 

கால்டுவெல்லாரும் தமிழும் 
            'திரவிட ஒப்பியல் இலக்கணம்' எழுதிய கால்டுவெல் தமிழ் திரவிடக் குடும்பத்தில் உயர்ந்ததும் தொன்மையானதும் முதன்முதல் பண்படுத்தப் பெற்றதும் வளமானதுமான மொழி என்ற கருத்தைக்கொண்டிருந்தார். வடமொழித் தொடர்பை அறவே விலக்கி தனித்து வழங்குதல் மட்டுமின்றி, தமிழ் தழைத்தோங்கவும் இயலும் என்று கூறியிருக்கிறார். கால்டுவெல்லார் தமிழின் சிறப்புகளாக அவர் கருதியவற்றை நூலில் பல்வேறு இடங்களில் குறித்திருக்க, அவற்றில் முன்னுரை, பக்கம்1, 4, 9, 49, 50, 83-9, 91, 126, 254, 452 ஆகிய பத்து இடங்களைப் பாவாணர் எடுத்துக் காட்டுகிறார்.
            பாவாணர், கால்டுவெல்லாரின் மொழிநூன் முடிபுகள் பற்றி வேறோர் இடத்தில் கூறுகையில், “கழகநூற் பயிற்சியும் தனித்தமிழ் உணர்ச்சியும் இல்லாத அக்காலத்தில் அயல்நாட்டாரான அவர், ஆரியத்தினின்று திராவிடத்தைப் பிரித்துக் காட்டின அத்துணையே மிகச் சிறந்ததென்று கொண்டு பெருமகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளோம்என்று கூறுகிறார்.
            அவரே, வேறோரிடத்தில், கால்டுவெல் கண்காணியார் குமரிநாட்டு வரலாற்றையும் தொல்காப்பியத்தையும் மேற்கணக்கு நூல்களையும் அறியாதவராதலின், தமிழரை வடக்கிருந்து வந்தவராகவும் ஆரியரால் நாகரிகமடைந்தவராகவும் கொண்டு த்ரமிளம் என்னும் வடசொல்லினின்று தமிழ் என்னுஞ்சொல் பிறந்ததென்று கூறினார். ஆனால் பண்டிதர் கிரையர்சன் இதை மறுத்துத் தமிழம் என்பதே த்ரவிடம் என்பதன் மூலம் எனத் தமது இந்திய மொழியாராய்ச்சி’ (Linguistic survey of India) என்னும் நூலில் நிலைநாட்டி யுள்ளார் என்று முரண்படும் இடத்தையும அதற்குரிய காரணத்தையும் குறிப்பிடுகிறார்.

மலையாளம் 
            கழக(சங்க)க் காலத்தில் முத்தமிழ் நாடுகளில் ஒன்றாயிருந்த சேரநாட்டின் மேல்பாகமே இப்போது மலையாள நாடாயிருக்கின்றது. சேரன் எனும் பெயர் சேரல் எனப் போலியாகிப் பின்பு அன்ஈறு பெற்றுச் சேரலன் ஆனது. சேரலன் என்னும் பெயர், முறையே கேரலன், கேரளன் என மருவிற்று.             மேற்குத்தொடர்ச்சி மலைக்கு மேற்கே, வடக்கில் மங்களூரிலிருந்து தெற்கில் திருவனந்தபுரம் வரைக்கும் தென்கன்னடம் மலபார் கொச்சி திருவிதங்கோடு என்னும் நான்கு சீமைகளில் தாய்மொழியாகப் பேசப்படுவது மலையாளம்.
            16ஆம் நூற்றாண்டிலிருந்து மலையாளநாட்டுமொழி கொடுந்தமிழா யிருந்த தென்றும் அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் மலையாளமாகத் திரியத் தொடங்கி 17ஆம் நூற்றாண்டில் மிகத்தெளிவாகப் பிரிந்து போன தென்றும் விளக்குகிறார். இலக்கியங்களில் இடம்பெற்றுள்ள மலையாளம் தொடர்பான செய்திகளை எடுத்துக்காட்டுகிறார்.
            மலையாளம் திரிந்ததற்குக் காரணங்களாகப் பிற தமிழ்நாடுகளுடன் பெருந் தொடர்பின்மை, பாண்டிய சோழ மரபுடன் மணவுறவு நிறுத்தம், வரம்பற்ற வடசொற் கலப்பு, மூக்கொலி சிறந்தமை, செந்தமிழ் நூல்களைக் கல்லாமை, ஒலிமுறைச் சோம்பல் ஆகியவற்றைக் கூறுகிறார். சொல் வரிசைகளைக் கூறித் தமிழ்ச்சொற்கள் திரிந்திருப்பதை விளக்குகிறார். மலையாளத்தில் வழங்கும் பல பழஞ்சொற்கள் (பழமொழிகள்), தமிழ்ப் பழமொழிகளின் சற்றே திரிந்த வழக்காக உள்ளதைக் காட்டுகிறார். 

கன்னடம் 
            கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. இது முதலாவது கன்னட நாட்டைக் குறித்துப் பினபு அங்கு வழங்கும் மொழியைக் குறித்தது. தெற்கே நீலமலையிலிருந்து வடக்கே பீடார்ப் பகுதி வரை மைசூர் கன்னடம் தென்மராட்டம் ஐதராபாத்தின் தென்மேற்குப் பகுதி ஆகிய சீமைகளில் பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுகிறது.
            கன்னடநாட்டு வரலாற்றைக் கூறுகையில், கழக இலக்கியங்களிலிருந்தும் சிலம்பிலிருந்தும் மேற்கோள் காட்டிச் செய்திகளை விளக்குகிறார். தமிழ்மன்னராட்சி ஒழிந்தமையும், தமிழ்நூல்கள் வழங்காமையும், தமிழர் விழிப்பின்மையும், தமிழ் ஒலியும் சொல்லும் திரிந்தமையும், வடசொற் கலப்பும், வடமொழி இலக்கண அமைப்பும் கன்னடமாகத் திரிந்ததற்குக் காரணங்களாகக் கூறுகிறார். பதினெட்டு முறைகளில் கன்னடம் திரிந்ததாகக் கூறி விளக்குகிறார். சொல் வரிசைகளில் 25க்கும் மேறபட்ட தலைப்புகளில் பட்டியலிட்டுத் தமிழ்ச்சொற்கள் திரிந்திருப்பதைக் காட்டுகிறார். பல்வேறு இலக்கணக் கூறுகளின் அமைப்பை விளக்குகிறார். 

தெலுங்கு 
            தெலுங்கு என்பதன் பண்டை வடிவம் திரிலிங்கம் என்பது. பண்டைத் தெலுங்கு நாட்டின் ஒரு பாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியாயிருந்தது. அதனால் திரிகலிங்கம் எனப்பட்டது. திரிலிங்கம் தெலுங்கம் தெலுங்கு என மருவிற்று.
            தென்னிந்தியாவில், கிழக்கே கடற்கரை யொட்டிப் பழவேற் காட்டிலிருந்து சிக்காக்கோல் வரைக்கும், மேற்கே மராட்டிய மைசூர் சீமைகளின் கீழெல்லை வரைக்கும், ‘கொடுக்கப்பட்ட கோட்டங்கள்’, கர்நூல், ஐதராபாத்து சீமையின் பெரும்பகுதி, நாகபுர நாட்டின் ஒருபகுதி, கோண்டுவனம் அகிய இடங்களில் தெலுங்கு பெரும்பாலும் தாய்மொழியாகப் பேசப்படுகிறது.
            தெலுங்கு நாட்டு வரலாற்றைப் பண்டை இலக்கியங்கள், கல்வெட்டுக் குறிப்புச் சான்றுகளோடு விளக்குகிறார். தெலுங்கு திரிய ஏழு காரணங்களைக் கூறுகிறார். சொல் வரிசைப் பட்டியல் இலக்கணக் கூறுகள் வழி தமிழினின்றும் திரிந்திருப்பதை விளக்குகிறார். 

துளு 
            குடகுக்கு மிக நெருங்கி, கன்னடத்தினின்றும் சிறிதும் மலையாளத் தினின்றும் பெரிதும் வேறுபட்டுத் திருந்திய மொழி துளு. கன்னட வெழுத்திலும் மலையாள வெழுத்திலும் துளு எழுதப்பட்டு வருகின்றது. மேல்கரை நாட்டில் கன்னடத்திற்குத் தெற்கில் சந்திரபுரி கல்யாணபுரி ஆறுகளுக் கிடையில், பெரும்பாலும் தாய்மொழி யாகத் துளு பேசப்படுகிறது. துளு திரியக் காரணங்கள் ஆறனையும் துளு திரிந்த 15 வகைகளையும் கூறுகிறார். 20க்கும் மேற்பட்ட தலைப்புகளில் சொல்வரிசை தந்தும் இலக்கணக் கூறுகளின் வழியும் தமிழினின்றும் திரிந்திருப்பதை விளக்குகிறார். 

சொல்வரிசை 
            பாவாணர், நூலின் முகவுரையில், மூவிடப்பெயர்கள், முறைப்பெயர்கள், தட்டுமுட்டுப் பெயர்கள், அக்கம்பக்கப் பொருட் பெயர்கள், பேரிடப் பெயர்கள், வா, போ முதலிய முக்கிய வினைகள், பல்வகைப் பண்புப் பெயர்கள், கை கால் முதலிய சினைப் பெயர்கள் ஆகியவை இயற்கை வடிவிலும் வேர்ப்பொருள் தாங்கியும் எம்மொழியி லுள்ளனவோ, அம்மொழியே அதற்குத்தாய் எனத் துணிதல் வேண்டும் என்கிறார். அவ்வாறே, நூலில் பல்வேறு தலைப்புகளில் சொல் வரிசைகள் தந்து விளக்கியிருக்கிறார்.
பாவாணர் தந்த சொல் வரிசையுள் மூவிடப் பெயர்கள், எண்ணுப் பெயர், எண்ண்டி உயர்திணைப் பெயர்ப் பட்டியல் மட்டும் கீழே காண்க. 

 பாவாணர் தந்த சொல் வரிசையுள் மூவிடப் பெயர்கள், எண்ணுப் பெயர், எண்ண்டி உயர்திணைப் பெயர்ப் பட்டியல் மட்டும் கீழே காண்க. 

பெயர் / கன்னடம் / தெலுங்கு / துளு / மலையாளம் 
ஒருமை-தன்மை / யானு /நானு / நேனு ஞான் 
முன்னிலை நீனு / நீவு / ச / நீ 
படர்க்கை அவனு,இவனு / வாடு / / அவன்,இவன் அவளு,இவளு/ / / அவள்,இவள் அது,இது / அதி / / அது,இது 
தற்சுட்டு தானு / தானு / தானு / தான் 
பன்மை-தன்மை நாவு,நாவுகளு / மேமு,மனமு / எங்களு / நாம்,நம்மள்,ஞங்கள் முன்னிலை நீவு,நீவுகளு / மீரு / ஈரு,நம / நிங்கள் 
படர்க்கை அவரு,இவரு / வாரு / / அவர்,இவர் அவு,இவு / / / அவ,இவ 
தற்சுட்டு தாவு / தாமு,தமரு / தனுகுளு,நிகுளு / தங்ஙள், தாங்ஙள்,தாங்கள் 

எண்ணுப்பெயர் 
ஒந்து / ஒகட்டி / ஒஞ்சி / ஒண்ணு எரடு / இரடு / ரட்டு / ரண்டு மூரு / மூடு / மூஜி / மூன்னு நால்கு / நால்கு / நாலு / நாலு ஐது / அயிது / ஐனு / அஞ்சு ஆரு / ஆறு / ஆஜி / ஆறு ஏளு / ஏடு / ஏளு / ஏழு எண்ட்டு / எனிமிதி / எண்ம / எட்டு ஒம்பத்து / தொம்மிதி / ஒம்பத்து / ஒம்பது ஹத்து / பதி / பத்து / பத்து 

எண்ண்டி உயர்திணைப்பெயர் 
ஒப்பரு / / வொரி / ஒருவர் இப்பரு / / இர்வெரு / இருவர் மூவரு / / மூவெரு / மூவர் நால்வரு/ / நாலவெரு / நால்வர் ஐவரு / / ஐவெரு / `ஐவர் / / ஆஜ்வெரு / அறுவர் / / யேள்வரு / எழுவர் இவை தவிர, வினை, முறை, மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மரம், செடி, கருவி, ஐம்பூதம், கணியம், ஊர்தி, உணவு, ஆடையணி, தட்டுமுட்டு, இடம், காலம், சினை, பல்பொருள், பண்பு, நோய், தொழிற்பெயர்கள், வினைச்சொல் வடிவங்கள், இடைச்சொற்கள், மற்றும் பிற இலக்கணக் கூறுகளையும் எடுத்துக்காட்டி மறுக்கவியலாச் சாறுகளாகத் தருகிறார். 

முடிவுக் கூற்று 
முடிவு என்னும் தலைப்பின் கீழ், தமிழல்லாத் திரவிட மொழிகள் உயிரும் உடம்பும் போன்ற அடிப்படையில் முகன்மையான பகுதிகளெல்லாம் தமிழேயென்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்புறவணியில் மட்டும் ஆரியந் தழுவினதென்றும், அவ்வாரியமும் (அவை) தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே யென்றும், வடமொழியைத் தமிழல்-திரவுடத்தின் தாயெனக் கூறுவது பெரிதோர் ஏமாற்றென்றும் கூறுகிறார். பாவாணர், தொடக்கத்தில் எழுதிய இந்நூலில், சுமார், சரித்திரம், உலோகம் முக்கியம் போன்ற அயற்சொல் லாட்சிகள் காணப் படுகின்றன. 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

சனி, 23 பிப்ரவரி, 2008

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் "செயலும் செயல்திறனும்"


          இருபதாம் நூற்றாண்டில் தூயதமிழ் செழுமைமிக்க, உயர்ந்த, அறிவுசான்ற இலக்கியங்களை ஆக்கிக்கொடுத்த தன்னேரில்லாப் பெரும்பாவலர்!
தூயதமிழைப் பரவலாகப் பலருக்கும் உணர்த்தி ஊன்றிய அரிய தமிழ் மீட்பர்!
மூத்த தமிழை முழுமையாய்க் காத்து நின்ற கேடயம்! செத்தமொழி தாங்கிகளின் சித்தம் கலங்கடித்த போர்வாள்!
ஒப்பற்ற தமிழறிஞர்! உயர்ந்த ஆய்வாளர்! அரிய மெய்யறிவுச் சிந்தனையாளர்!
சொல்லுக்கும் செயலுக்கும் மாறுபாடு வேறுபாடு இல்லாத மெய்வாழ்வர்! ஈடற்ற செழுந்தமிழ்ச் சொற்பொழிவாளர்!
தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் ஆகிய மூன்று இதழ்களைச் சிறப்புற நடத்திய ஈடெடுப்பற்ற இதழாளர்!
சிறந்த இலக்கியப் புலமையாளர்! நல்ல ஓவியர்! திறஞ்சான்ற அச்சுத்தொழில் வல்லார்!
தமிழ்இன இழிவு நீக்கத்திற்கும் தமிழ்நாட்டு விடுதலைக்குமாக அயராது பொருது நின்ற போராளி!
மூன்றுமுறை தமிழகவிடுதலை மாநாடுகளை நடத்திய துணிவாற்றல் சான்ற வினையாண்மையர்!
தமிழ்மொழி தமிழ்மக்கள் தமிழ்நாட்டு நலன்களுக்காக முப்பத்தைந்து முறைகளுக்கும் மேல் சிறைசென்ற அஞ்சாநெஞ்சர்!
சலுகை பெறவும் சாதிகூடாதென வாழ்ந்த சாதிமறுப்பாளர்! சாதிமறுத்து மணம்புரிந்து கொண்டவர்! தம் மக்களுக்கும் அவ்வாறே மணம்செய்வித்தவர்!
......இவ்வாறு பல்வேறு சிற்ப்புக்களுக்கு உரியவரே துரை.மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார்.
தமிழகப் பிரிவினையை வலியுறுத்தி எழுதியும் பேசியும் வந்ததாலும் அதற்கென மாநாடுகள் நடத்தியதாலும் வேறு காரணங்களாலும் இப்பெரியாரின் அளப்பரிய ஆற்றல், அவர் உயிரோடிருந்த காலத்தும், மறைந்த பின்னரும் கூட இருட்டடிக்கப்பட்டே வருகின்றது.
இவ்வரும்பெரும் ஆற்றல் சான்ற பெரியார், செயல்திறன் பற்றிய அடிப்படைத் தெளிவில்லாது அலமரலுற்று உழலும் மக்கள்பால் கழிவிரக்கங் கொண்டு ஆக்கித்தந்த நூலே, "செயலும் செயல்திறனும்" என்ற தலைப்பினதாகும்.

நூலாக்க விளக்கம்
சிறுவர்களுக்கான 'தமிழ்ச்சிட்டு' இதழில், பாவலரேறு "செயலும் செயல்திறனும்" என்ற தலைப்பில் 1980 முதல் 1987 வரையிலான ஏழாண்டுக் காலத்தில் ஆசிரியருரைக் கட்டுரைகளாக 56 இதழ்களில் எழுதி வெளியிட்டார். அக்கட்டுரைகளே, பின்னர் நூல் வடிவம் பெற்றன. கழகக்கால (சங்ககால) இலக்கியப் பாடல்களுக்கு இணையாகப் பாட்டியற்றும் ஆற்றல் பெற்ற பாவலரேறு ஐயா அவர்கள், பண்டைய உரையாசிரியர்களின் செறிவான புணர்ப்புமிக்க உரைநடைபோலும் எழுதுவதிலும் தனித்திறம் பெற்றவராயிருந்தார். இருந்தபோதிலும் இந்நூலைச் சிறுவர்களும் பரிந்து கொள்ளுமாறு எளியநடையில் எழுதியிருக்கின்றார். இந்நூலின் முதற்பதிப்பு 1988ஆம் ஆண்டிலும் இரண்டாம் பதிப்பு 2005ஆம் ஆண்டிலும் வந்தன.

நூலின் உள்ளடக்கம்
செயல்களை எவ்வெவ் வகையில் எவரெவர் மேற்கொள்ள வேண்டும்? எவ்வெவ்வாறு செய்யவேண்டும்? என்னென்ன முயற்சிகள் முன்னேற்பாடுகள் அவற்றுக்குத் தேவை? செயல்களுக்கு இடையில்வரும் இடையூறுகள் இடர்ப்பாடுகள் பொருள்தடைகள் ஆள்தடைகள் எவ்வெவ்வாறு இருக்கும்? அவற்றை எப்படியெப்படிக் கடந்து மேற்செல்லுதல் வேண்டும்? அவற்றில் என்னென்ன சிக்கல்கள் இருக்கும்? அவற்றை எப்படியெப்படித் தீர்ப்பது? –- என்பவை பற்றியும், நல்ல அரிய பயனுள்ள செயல்களைத் திறம்படச் செய்வது எப்படி? எவ்வெவற்றில் எத்தகைய கவனமும் கண்காணிப்பும் கொள்ளுதல் வேண்டும்? அவற்றுக்கு எவரெவரைத் துணையாளராகவும் பணியாளராகவும் கொள்ளுதல் வேண்டும்? அவர்களைத் தேர்ந்தெடுப்பது வப்படி? - – என்பவை பற்றியும் எல்லாருக்கும் விளங்கும் வண்ணம் இவ்வரிய நூல் நன்கு எடுத்து விளக்குவ தாகவும் ஆசிரியரே முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

நோக்கம்
முன்னுரை முதலாக இருபத்தைந்து தலைப்புகளில் விரிவாகவும் விளக்கமாகவும் எளிதில் புரியுமாறும் எழுதப்பட்டுள்ள இந்நூல், 250 பக்க அளவில் அமைந்துள்ளது. 'செயல்களே உயர்வதற்கு அடையாளம்; பெருமைக்கும் சிறுமைக்கும் செயல்களே அடிப்படை; தமக்கும் பிறர்க்கும் இன்பம் தரும் பயனுடைய அழியாத செயல்களே அறச்செயல்கள்' என்று விளக்குகின்ற ஆசிரியர், இளைஞர்களின் மனவுணர்வு தீயவற்றில் வேரூன்றா வண்ணம் கட்டிக்காக்கும் கடமை உணர்வில் இந்நூலில் கருத்துக்கள் வைக்கப்படுகின்றன எனக் கூறுகிறார்.

நூலின் விளக்கம்
எந்த ஒரு செயலையும் தொடங்குதற்குமுன் நன்றாக, நம் அறிவு முழுமையாக அதில் ஈடுபடும் அளவிற்கு எண்ணிப் பார்க்க வேண்டும்; சிந்தனையும், ஆர்வமும், அறிவும் அதிலேயே ஈடுபடுத்தப்படவேண்டும். நமக்கு இயலும் வினையளவு - ஒல்லும் அளவு -அறிந்து வினைசெய்தல் வேண்டும். வினையின் முடிவாக விளையும் பயன் நல்லதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
நம் தகுதிக்குத் தாழ்வான செயல்களைத் தவிர்க்கவேண்டும். வினையில் ஈடுபடத் தேவையான பணம், உழைப்பு, காலம் குறித்தும் ஆய்ந்துபார்க்க வேண்டும். நம் திறமையைச் சரியாக மதிப்பிட்டுக் கொள்வதில்தான் நம் வெற்றியே அடங்கி யிருக்கின்றது. எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை இருந்தாலொழிய செயலில் படிந்து ஈடுபட முடியாது.
வினைக்கு முதல் தேவை பொருள். அடுத்தது கருவி. வினையறிந்த தக்கவர்களைத் துணைவர்களாககக் கொள்ளுதல் வேண்டும். வினைக்குரிய காலத்தையும் இடத்தையும் நன்கு தேர்ந்து திறம்படச் செய்யவேண்டும். உடலுறுதி, உள்ளவுறுதி, அறிவுறுதி ஆகியவை மிகவும் தேவை. இறங்கிய செயலில் பின் வாங்காது தாழ்ச்சியுறாமல் உழைக்க வேண்டும். முன்னெச்சரிக்கை, கண்காணிப்பு கட்டாயமாக இருக்க வேண்டும் -என்பனவற்றையெல்லாம் எடுத்துக் காட்டுகளோடும் மேற்கோள்களோடும் நேர்த்தியாக, சுவைபட இனியநடையில் நூலில் விளக்குகின்றார்.
இன்னும், இடையூறுகண்டு மனந்தளராமை, இழப்புகண்டு சோர்வுறாமை, துன்பம் கண்டு துவளாமை, தவறான வழிகளைக் கடைப்பிடியாமை, துணைவருவாய் கருதி வேறு வினைகளில் ஈடுபடாதிருத்தல், துணையாளரையும் பணியாளரையும் அமர்த்துகையில் கவனிக்கவேண்டியவை பற்றியெல்லாம் விளக்கமாகக் கூறுகிறார்.

எச்சரிக்கைகள்
ஆசிரியர் செய்திகளைச் சுவைபட விளக்கும் திறத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு :
எச்சரிக்கைகள் ஆறு எனக் குறிக்கின்றார். இதற்குப்பின் இது, இதனால் இது, இதற்காக இது, இதுபோனால் இது, இது வந்தால் இது, இதுவே இது என்ற அந்த ஆறு எச்சரிக்கைகளைப் பற்றிக் கூறி அவர் விளக்குவதைப்பார்ப்போம்.
எச்சரிக்கை 1. இதற்குப்பின் இது : "இந்த வினையைச் செய்து முடித்தபின்னர் இந்த வினையைச் செய்யவேண்டும்; அதற்குப்பின் இதைச்செய்ய வேண்டும் என்று வரிசை முறையாகத் திட்டமிட்டுக் கொண்டு ஒருமுறைக்குப் பலமுறையாக எச்சரிக்கையுடன் எண்ணிப்பார்த்துச் செய்யவேண்டும்" என்று விளக்கம் தருகிறார்.
மின்குமிழியைப் (electric bulb) பொருத்திவிட்டுப் பின்னர்ச் சொடுக்கியைப் ( switch) போடவேண்டும் என்று ஓர் எடுத்துக்காட்டையும், பேருந்து ஓட்டுநர், எந்திரம் ஓடிக்கொண்டிருப்பதை நிறுத்திவிட்டே வண்டியினின்றும் இறங்க வேண்டும் என்று இன்னோர் எடுத்துக்காட்டையும் தருகிறார். மேலும், ஆங்கிலத்தில் கூறப்படும் "one by one", "one thing at a time" என்னும் கருத்துமொழிகளும் இதையே வலியுறுத்தும் என்றும் விளக்குகிறார்.
இவ்வாறே, மற்ற ஐந்து எச்சரிக்கைகளையும் விளக்கிக் கூறுகிறார். அந்த எச்சரிக்கைகளுக்கு அவர் தந்துள்ள எடுத்துக்காட்டுகளுள் ஒவ்வொன்றை மட்டும் இப்பொழுது பார்க்கலாம்.
2. இதனால் இது : சமையல் முடித்தபின், அடுப்பை முழுவதுமாக அணைக்காமல், அரைகுறையாக அணைத்துவிட்டு வந்தால், காற்றில் கனன்று ஒரு சிறு நெருப்பும் வீட்டையே எரித்துவிடக்கூடும்.
3. இதற்காக இது : மிதிவண்டி, உந்துவண்டி சக்கரங்கள் அடிக்கும் சேற்றைத் தடுக்க, சக்கரங்களின் மேல் மட்காப்பு (mudguard) போடுதல்.
4. இது போனால் இது : பாய்மரக்கப்பலில் பாய்மரம் கிழிந்துவிட்டால் உடனடி பயன்படுத்தத்திற்குரிய வகையில் துடுப்புகளைப் பயன்படுத்தல்.
5. இது வந்தால் இது : மின்சாரத்தடை வந்தால் விசிறியும் மெழுகுத்திரியும்
(candle) மண்ணெய் அடுப்பும் பயன்படுத்தல்.
6. இதுவே இது : திருகாணியைத் திருகி எடுக்க ஏற்ற திருப்புளி இல்லாத பொழுது அகலமான நுனியுடைய கத்தியையோ இரும்புக் கருவியையோ பயன்படுத்தல்.

எடுத்துக்காட்டான நிகழ்ச்சி
பாவலரேறு ஐயா ஒரு சமையம், விழுப்புரத்தில் நடைபெறவிருந்த ஒரு கலந்துரையாடலுக்கு வரவேண்டியிருந்தது. விழுப்புரம் வழிப்போக்கர் விடுதியில் மாடிப்பகுதி அறையைக் குறிப்பிட்ட இரண்டு நாட்களுக்குப் பதிவு செய்யம்படிக் கூறினார். விழுப்புரம் வழிப்போக்கர் விடுதியில் அதற்குமுன் இரண்டு மூன்று முறை தங்கியிருந்தவராகையால், அவ்விடுதியின் அமைப்பு வசதிகளைப்பற்றி அவருக்குத் தெரியும்.
அவர் கூறியவாறே அறையைப் பதிவு செய்தபின், செய்தியைத் தொலைப்பேசி வழியாகக் கூறியபோது, அவர், "தம்பி, விடுதிக் காவலரிடம் முன்பே சொல்லி வைத்துவிடுங்கள்; ஆறு மணிக்கெல்லாம் வந்துவிடுவோம் என்பதைச் சொல்ல மறந்து விடாதீர்கள்! மழைக்காலமாக இருப்பதால் இரண்டு குடை இருக்க வேண்டும்; மின்தடையின் போது பயன்படுத்த மண்ணெய் விளக்குகள் வேண்டும்! மெழுகுத்திரியும் இருக்கட்டும்! ஞாயிற்றுக்கிழமை அருகில் உள்ள தேநீர்க்கடை மூடியிருக்கும்! பேருந்து நிலையம் அல்லது தொடர்வண்டி நிலையத்திற்கருகில் போய்த் தேநீர் வாங்கிவரத் தெறுமக்குடுவை (thermos flask) தேவை! இரவில் சிற்றுண்டி தேவைப்படுவோருக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்!" என்றெல்லாம் சென்னையிலிருந்து கூறுவார்.
அவர் தம் வாழ்க்கையில் மேற்கொண்டிருந்த நடைமுறைகளும், பட்டறிவும், திருக்குறளில் ஆழ்ந்து அவர் மூழ்கியெடுத்த முத்துக்களும், அவருக்கே உரிய ஆழ்ந்த அறிவுமே நூல் முழுவதிலும் கருத்துக்களாக வெளிப்பட்டிருக்கின்றன என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் எளிய சான்றெனலாம்.

அரிய விளக்கங்கள்
நுண்மாண் நுழைபுலத்துடன் சில சொற்களுக்கு அவர் கூறும் விளக்கங்கள் வேறெங்கும் காணமுடியாதவை. அவற்றுள் சில :
விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கெனவே தொடர்பான ஒரு பொருளின் மேல் தானாகச்செல்லும் மனநாட்டம்.
செப்பம் என்பது செவ்வையாக, திருத்தமாக, அழகாக, தவறில்லாதபடி என்க.
நுட்பம் என்பது மிகவும் பொருத்தமாக, கூர்மையாக, ஆழமாகக் கவனித்து என்க.
ஒட்பம் என்பது தெளிவாக, விளக்கமாக, அறிவுணர்வு புலப்படும்படி என்க.
காலம் என்பது வேளையோ, பருவமோ, நம் அகவையோ, வினைக்குரிய சூழலோ என்றில்லாமல், எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு வாய்ப்புக்கூறு என்றே பொருள் கொள்ளுதல் வேண்டும்.
இடம் என்பது பாதுகாப்பான, வினை செய்வதற்குரிய, பகைவர்கள் எளிதில் நெருங்க இயலாத, முயற்சிகளுக்கேற்ற வாய்ப்புகள் மிகுந்த இடம் என்று பொருள்படும்.
முதல் என்பது பொருளும், உழைப்பும், அவ்வுழைப்பக்கேற்ற அறிவும், இவ்வனைத்தையும் சிதறவும் தளரவும் செய்யாத ஊக்கமும் ஆகும்.
உறுதி என்பது உடலுணர்வுத் தன்மையையும் ஊக்கம் என்பது உள்ள உணர்வுத் தன்மையையும் குறிக்கும். அவ்வாறு குறித்தாலும் உடலில் உள்ளமும் உள்ளத்தோடு உடலும் பொருந்தியிருப்பதால் பொதுவாக இரண்டின் தன்மைகளையுமே இவ்விரண்டு சொற்களும் குறிக்கக் கூடியன.
ஒருவன் பிறந்து தன்னை உலகுக்கு அறிவிக்க வேண்டும். அவ்வறிவித்தல் நிலைத்து நிற்றல் வேண்டும். அதற்குத்தான் புகழ் (ஒளி) என்று பெயர்.
அறியாமை ஒன்றைத் தெரிந்து கொள்ளாமை.
பேதைமை ஒன்றைத் தெரிந்து கொள்ள இயலாமை.
மூவுரம் என்பது உடல்உரம், உள்ளஉரம், அறிவுஉரம் என்பவற்றை - இவற்றின் உறுதிப்பாட்டைக் குறிக்கும். மூவுரம் மும்முரம் என்று திரிந்தது.
அறிவு மூன்று காலத்திற்கும் உரியது. அதன் பயன் நிகழ் காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் மட்டுமே உரியது.
கடந்தகால அறிவு வரலாறு. நிகழ்கால அறிவு வாழ்க்கை. எதிர்கால அறிவு அறிவியல்.
அறிவைப் பெறுவதற்கான ஐந்து வழிகள் காட்சி, கேள்வி, உசாவல், கல்வி, பாடு என்பன.
நமக்கு மட்டும் அறிவுண்டு என்று நினைப்பது போன்ற அறியாமை வேறிலது.
ஒருவன் தன்னையிழந்து தாமாக மாறுவதையே அன்புவாழ்க்கை, அருள்வாழ்க்கை, வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என்று சான்றோர் கூறுவர்.
- இவைபோலும் பல விளக்கங்கள் நூலின் பல இடங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

சமன்பாட்டு விளக்கங்கள்
இடையூறு கண்டு மனந்தளராமை என்ற தலைப்பில் அஞ்சாமை வேண்டும் என வலியுறுத்துகையில் அஞ்சாமையுடன் வீரமோ அறிவோ சேருங்கால் விளைவு எவ்வாறிருக்கும் என்பதைக் கணக்கியல் சமன்பாட்டு வகைபோல எழுதிக்காட்டுகிறார். அவை இவையே :
அஞ்சாமை + கோழைமை > தனிமை > தன்னலம்
அஞ்சாமை + வீரம் > ஓரளவு பயன்
அஞ்சாமை + அறிவு > செயலாண்மை
'இழப்புகண்டு சோர்வுறாமை' என்ற தலைப்பின் கீழும் இத்தகைய சமன்பாட்டு விளக்கங்களைக் காணலாம்.
உடல்தாக்கம், உள்ளச்சோர்வு, அறிவுத்தளர்ச்சி ஆகியவைபற்றி விளக்கியுள்ள செய்திகள் வேறெந்த தமிழ் நூலிலும் காணற்கரியன.

யார் - என்ன உணவு?
'இடையூறுகண்டு மனந்தளராமை'யில் உடல்நலம் பற்றிய செய்தியில் யார்யார் எவ்வெவ்வுணவை உண்கின்றனர் என்ற செய்தி விளக்கப்பட்டுள்ளது.
சிறந்த அறிஞர்கள் - அறிவுநலந்தரும் உணவையே உண்கின்றனர்.
நன்கு கற்றவர்கள் -உடல்நலத்துக்கான உணவையே உண்கின்றனர்.
ஓரளவுகற்ற பொதுவானவர்கள் - உடல்வலிவுக்கான உணவையே உண்கின்றனர்.
கல்லாதவர்களும் சிறிதே அறிவுள்ளவர்களும் -உடல்தேவைக்கான எந்த
உணவையும் உண்கின்றனர்.
கீழாக அறிவுள்ளவர்கள் - பசிக்காகவே உண்கின்றனர்.
அதனினும் கீழானவர்கள் - ஆசைக்காகவே உண்கின்றனர்.
விலங்குகளும் பறவைகளும் - உண்பதே உயிரியக்கமாகக் கொண்டன.

துணையாளரும் பணியாளரும்
வினைத்திறம் கொண்டவர்கள் (அறிவுணர்வு முதல் நினைவாற்றல் ஈறாக) நாற்பத்தோர் உணர்வுகளில் மிக்கக்கூர்மை உடையவர்களாக இருப்பர் என்றும் இவற்றுள், பெரும்பான்மையும் பொருத்தமாக உள்ள ஒருவரே இருவரே வினைத் துணைவர்களாக முடியும் என்றும் கூறுகிறார்.
மேற்கூறிய நாற்பத்தோர் உணர்வுகளை, அகஉணர்வுக் கூறுகள் அல்லது இயற்கை உணர்வுகள், புறஉணர்வுக் கூறுகள் அல்லது செயற்கை உணர்வுகள், உலகியல் உணர்வுக் கூறுகள் அல்லது செயற்பாட்டு உணர்வுகள் எனப் பிரித்துப் பட்டியலிட்டுள்ளார். இவ்வுணர்வுகளுக்குத் தக்க விளக்கமும் தந்துள்ளார்.
ஒருவரைப் பணியாளராக அமர்த்துவதற்கு முன்னர், அவருடைய பதின்மூன்று வகைக் குணநலன்களில் மிகு கவனம் செலுத்துதல் வேண்டுமெனக் கூறுகிறார். இவற்றுள் மிகுதியும் தகுதியுடையவர்களைத் தேறும்பொழுது, செயலும் மிகு சிறப்புடையதாக இருக்கும் என்கிறார்.
நூலின் இறுதியில், செயல்திறத்திற்கு எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் 'உரிமைச்சிலை'யைச் செய்த செயல்திறத்தை விளக்கிக் கூறுகிறார்.

மேற்கோள்கள்
திருக்குறளின் சிறப்பைக் கூறும்போது, அற நூல், வாழ்வியல் நூல், அரசியல் நூல், பொருளியல் நூல், குமுகவியல் நூல், ஒழுக்கநெறி நூல், புரட்சி நூல், இனநல மீட்பு நூல், இன்ப நூல் எனப் பாவலரேறு அதன் பல்வேறு உயர்ச்சிகளை அவருடைய வேறொரு நூலில் விளக்குவார். இந்நூலில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை மேற்கோள் காட்டிச் செய்திகளை விளக்கியிருக்கின்றார். நூல் நெடுகிலும் திருக்குறளைக் கொண்டே மிகப்பெரும்பான்மையான செய்திகளை விளக்கிச் சொல்லியிருக்கின்றார்.
நல்வழி, வாக்குண்டாம், நீதிநெறிவிளக்கம், அகநானூறு, கலித்தொகை, புறநானூறு, பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம், திருமந்திரம் முதலான நூல்களிலிருந்தும் அவர் எழுதிய 'உலகியல் நூறு' நூலிலிருந்தும் மேற்கோள்கள் தந்துள்ளார். இவையும் தவிர, பல்வேறு பழமொழிகளையும் செய்திகளை விளக்கப் பயன்படுத்தியுள்ளார்.

இறுதியாக...
இதுவரையில் இவ்வகையில் தமிழில் வராத அரிய நூலாக இந்நூல் திகழ்கிறது. இது மிகைக் கூற்றோ வெற்றுப் புகழ்ச்சியோ இல்லை என்ற உண்மையை நூலைப்படித்தபின் நன்கு உணரமுடியும். இந்நூலில், அரசியல்சார்புக் கருத்து எதுவும் இல்லை. நாட்டின் சட்டக்கூறுகள் எதற்கும் புறம்பாக உள்ள கருத்து எதுவும் கிடையாது. இந்நிலையில், ஈடெடுப்பற்ற இந்த அறிவுநூலுக்கு இதுவரை எந்தப் பாராட்டோ பரிசோ அளிக்கப்படாத்து, நாட்டின் பரிசளிப்பு முறையில் உள்ள குறைபாட்டையே எடுத்துக் காட்டுகின்றதெனத் துணியலாம்.
இந்நூலை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டுமென்ற பாவலரேறு ஐயாவின் விருப்பம் இன்றுவரை நிறைவேறவில்லை என்பது ஒரு வருத்தந்தரும் செய்தியாகும்.
********************************************************************