வெள்ளி, 8 ஜூலை, 2016

வடசொற் றிணிப்பால் வழக்கற்ற தென் சொற்கள்: பாவாணர் விளக்கம்

வடசொற் றிணிப்பால் வழக்கற்ற தென் சொற்கள்:
பாவாணர் விளக்கம்

வடமொழி தேவமொழி என்னும் ஏமாற்றையும் பண்டைத் தமிழ் வேந்தரின் பேதைமையையும் துணைக்கொண்டு, ஆயிரக் கணக்கான வடசொற்கள் தமிழில் வேண்டாது புகுத்தப்பட்டதன் விளைவாக அவற்றிற்கு நேரான விழுமிய தென்சொற்கள் சிறதும் பெரிதும் முற்றும் வழக்கு வீழ்த்தப்பட்டுள்ளன.
எடுத்துக்காட்டு:

வடசொல் -    -    -    -    :தென்சொல்
அன்னம்                        எகின், ஒதிமம்
ஆன்மா                         ஆதன், உறவி, புலம்பன்
ஆனந்தம், குதூகலம், சந்தோசம்: உவகை, களிப்பு, மகிழ்ச்சி
சகுனம்                         புள்
சத்தியம், நிசம், வாஸ்தவம்     உண்மை, வாய்மை, மெய்ம்மை
சீரணம்                         செரிமானம்
சுத்தம்                          துப்புரவு
திருப்தி                         பொந்திகை
பிதிரார்ச்சிதம்                   முதுசொம்
மேகம்                          முகில், கார், கொண்டல்
லாபம்                          ஊதியம்
நட்டம்                          இழப்பு
மைத்துன்ன்                     அளியன்
வருசம்                         ஆண்டு
ஸ்திரீ, புருஷர்                 ஆடவர், பெண்டிர்
(இங்குக் குறிப்பிட்ட வடசொற்கள் விளங்குதற் பொருட்டுப் பெரும்பாலும் தற்பவ வடிவிற் காட்டபட்டுள்ளன)

நகைச்சுவையை ஹாஸ்ய ரசம் என்பதும், அவையைச் சதஸ் என்பதும், பணிவிடையைச் சிசுருஷை என்பதும், திருமணத்தைப் பரிணயம் என்பதும், குடமூக்கு (குடந்தை), குரங்காடுதுறை, சிற்றம்பலம் (தில்லை), பழமலை (முதுகுன்றம்), மயிலாடுதுறை, மறைக்காடு முதலிய செந்தமிழ் நாட்டூர்த் தனித் தமிழ்ப் பெயர்களை முறையே கும்பகோணம், கபிஸ்தலம், சிதம்பரம், விருத்தாசலம், மாயூரம், வேதாரணியம் என வடசொற்களாய் ஏற்கனவே மாறியிருப்பதும், இத்தகைய இழி செயலை இன்றும் கையாள்வதும், தென்னாட்டு வடமொழியாளரின் வரையிறந்த வடமொழி வெறியை யன்றி வேறெதைக் காட்டும்?

இன்று தமிழில் வழங்கும் வடசொற்கள் தமிழிற்கு வேண்டியவு மல்ல;
உடம்பிற்குட் புகுந்து அதனுக்கு ஊறுசெய்யும் நச்சுப்புழுக்களையும்    
இன்னாப் பொருள்களையும் அதன் நலத்தின் பொருட்டு நீக்குவது போன்றே, வேண்டா வடசொற்களையும் தமிழினின்று விலக்குதல் வேண்டும்.
இதனைத் தடுப்பவர் புறப்பகைவரும் உட்பகைவருமாயே யிருத்தல் வேண்டும்.

வடசொற்கட்கு இங்குக் கூறியது பிற சொற்கட்கும் ஒக்கும்.

(நூல்: தமிழியற் கட்டுரைகள் பக்கம் 16,17. தமிழ்மண், சென்னை)  

------------------------------------------------------------------------------------------------------------
               






வியாழன், 7 ஜூலை, 2016

சொல்விளக்கம்: ஐயன்



சொல்விளக்கம்:
ஐயன்:

ஐ என்பது தலைவனைக் குறிக்கும் பெயர்.
என் ஐ முன் நில்லன்மின் என்பது குறள்.

தலைவன் எனினும் பெரியோன் எனினும் ஒக்கும்.
அரசன் ஆசிரியன், தந்தை, தாய், அண்ணன் என ஒருவர்க்கு ஐந்து பெரியோர் உளர். அவர்க்கெல்லாம் ஐ என்பது பொதுப்பெயர்.
தாயைக் குறிக்கும்போது அது ஆய் என்று திரியும்.
ஐ என்பது அன் ஈறு பெரின் ஐயன் என்றாகும்.
ஐயன் என்பதற்கு ஐயை என்பது பெண்பால்.
அண்ணனைக் குறிக்கும்போது ஐ, ஐயன் என்னும் சொற்கள் தன்னை, தமையன் எனத் தன் தம் என்னும்முன்னொட்டுப் பெறும்.

தமிழருட் பலவகுப்பார், அவருள்ளும் சிறப்பாகத் தாழ்த்தப்பட்டவர், தந்தையை ஐயன் அல்லது ஐயா (விளிவடிவம்) என்றே அழைக்கின்றனர். ஆசிரியர் எவ் வகுப்பாராயிருப்பினும், அவரை ஐயர் என்றழைப்பது வடார்க்காட்டு ஆம்பூர் வட்டத்தார் வழக்கு.

பெரியோரை எல்லாம் ஐயா என்று குறிப்பதும் விளிப்பதும் தொன்றுதொட்டுத் தமிழர் வழக்கம். மக்களுட் பெரியார் முனிவர் என்னும் கருத்துப்பற்றி, அவரைச் சிறப்பாக ஐயர் என்பது தமிழ் நூன்மரபு.

ஐயர் யாத்தனர் கரணம் என்ப என்பது தொல்காப்பியம்.

பிங்கல நிகண்டில் முனிவரைப் பற்றிய 3ஆம் பகுதி ஐயர் வகை எனப் பெயர் பெற்றுளது.

முனிவரிலும் பெரியவர் தெய்வங்க ளாதலின், தெய்வங்கட்கும் கடவுகட்கும் ஐயன் என்னும் பெயர் விளங்கும்.
ஐயன் = சாத்தன் (ஐயனார்), கடவுள்.
ஐயை = காளி, மலைமகள்.
இங்ஙன மெல்லாம் தொன்றுதொட்டு வழங்கும் ஐயன் என்னும் தென்சொல்லை, ஆர்ய என்னும் வடசொற் சிதைவென்பர் வடவர்.

(பாவாணருக்கு நன்றி! தமிழியற் கட்டுரைகள் பக்கம்-11. தமிழ்மண், சென்னை)

--------------------------------------------------------------     

சனி, 2 ஜூலை, 2016

பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!



பழந்தமிழரின் அயல்நாட்டுத் தொடர்பு!
          - புலவர் குழந்தை ஐயா தரும் விளக்கம்!
-----------------------------------------------------------
     சில தமிழ்ச்சொற்கள், தமிழ்நாடு மேனாடுகளுடன் நடத்திய கடல்வாணிகத்திற்குச் சான்று பகர்ந்துகொண்டு அம்மேனாட்டு மொழிகளில் இருந்து வருகின்றன.
தோகை துகி சிரியா
அகில் அகல் எபிரேயம்
கவி கபிம் எபிரேயம்
அரிசி அரிஜா கிரேக்கம்
இஞ்சி ஜஞ்சர் கிரேக்கம்
இஞ்சிவேர் ஜிஞ்சிபார் கிரேக்கம்

கி.மு.3000 ஆண்டுகட்கு முன், பாபிலோனிய நாட்டை ஆண்ட ஊர்ஏயா என்னும் மன்னனால், சாலடிய நாட்டின் தலைநகரான ஊர் (Ur) என்னும் நகரில் சேரநாட்டுத் தேக்கு மரத்தினால் திங்கட் கோட்டம் கட்டப்பட்டது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

கி.மு2600இல், தமிழகத்திலிருந்து கருங்காலி மரம், மணப் பொருள்கள் முதலியன எகிப்து நாட்டிற்கு ஏற்றுமதியானதாக,
ஆக்கஃப் என்னும் இடத்திலுள்ள கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. (P.T.S. Iyengar–தமிழ் வரலாறு)

பாலத்தீனத்துப் பேரரசனான சாலமன் காலத்தே (கி.மு.1000) மூன்று ஆண்டுகட் கொருமுறை, தங்கம், வெள்ளி, தந்தம், குரங்கு, மயில் ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் அங்குச் சென்றனவாம்.

திமிலையுடைய எருதுகள், பாரசீக வளைகுடாவுக்கும், ஆப்பரிக்காவுக்கும் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்டனவாம். (டாகடர் இராசமாணிக்கனார்-இலக்கிய வரலாறு-45)

மேனாட்டுகட்கு மிகுதியாக ஏற்றிமதியானது மிளகு ஆகும். அடுத்தது ஏலம் முதலிய மணப்பொருள்கள், முத்து, யானைத் தந்தம் முதலியனவாம்.
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை சிதற
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி      - (அகநானூறு-149).....

இரும்பிலிருந்து எஃகு (உருக்கு) செய்வதற்குத் தமிழ்நாட்டாரைத் தவிர, அக்காலத்தில் வேறு யாருக்கும் தெரியாதென்று கிரேக்க உரோமப் புலவர்கள் எழுதி இருக்கிறார்கள்.
எகிப்து நாட்டுக் கல்லறைக் கோபுரங்கட்கு (Pyramids) அடியிலிருந்து சேலத்து எஃகினால் செய்யப்பட்ட சுத்தி உளி முதலிய கருவிகள் கிடைத்திருக்கின்றன.

எஃகு ஆராய்ச்சியில் வல்லுநர்களான J.M.Heath என்பாரும் Sir.J.J.Wilkinson என்பாரும் சேலம் எஃகினால் செய்யப்பட்ட சுத்தி, உளி முதலியவற்றைத்தாம் எகிப்து நாட்டுச் சிற்பிகள் அப் பழங்காலத்தே பயன்படுத்தினார்கள் என்கின்றனர்.
அக்கல்லறைக் கோபுரங்களின் காலம் கி.மு.8000 ஆண்டுகட்கு முற்பட்டதென்பர்.  

(புலவர் குழந்தை ஐயாவுக்கு நன்றி! கொங்குநாடு பக்கம் 86,87,88. சாரதா பதிப்பகம், சென்னை)
-----------------------------------------------------------


வெள்ளி, 1 ஜூலை, 2016

பெயர் முன் அடை

பெயர் முன் அடை

      திரு என்பது சிறீ என்று திரியவே, திருமான் என்பதை சிறீமான், சீமான் என்றும் திருமாட்டி என்பதை சிறீமாட்டி, சீமாட்டி என்றும் சொல்லவும் எழுதவும் தலைப்பட்டனர்.

திருமான் என்பது திருமகன் என்பதன் மரூஉ.
ஒப்புநோக்கு: பெருமகன் பெருமான்.

பெருமானுக்குப் பெண்பால் பெருமாட்டியாதல் போல, திருமானுக்குப் பெண்பால் திருமாட்டியகும்.

     சிறீ என்பது திரு என்பதன் திரிபே யாதலால், சிறீ அல்லது சீ என்னும் அடைமொழி பின்வருமாறு தமிழில் எழுதப்படும்.

வடமொழி வடிவம்              தென்மொழி வடிவம்
    
     சிறீ                             திரு
     மகா ராஜ ராஜ சிறீ             மா அரச அரசத்திரு
                                     பேர் அரச அரசத்திரு
     சிறீலசிறீ                       திருவத்திரு
                                     திருப்பெருந்திரு
     சீகாழி                          திருக்காழி
     சீகாளத்தி                       திருக்காளத்தி               

     திருநாவுக்கரசு திருமங்கையாழ்வார் முதலிய பெயர்களில் வரும் திரு என்னும் அடை ஆங்கிலத்தில் அடியார் பெயர்முன் சேர்க்கப்படும், St. (Saint)  என்பதற்குச் சமமாய்த் தூய்மை குறிப்பதா யிருப்பதால், அடியாரல்லாத பிற மக்களைக் குறிக்கும்போது திருவாளர், திருவாட்டியார் என்ற அடைஎளையே முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும் வழங்குவது தக்கதாகும்.
திருவாளன்மார், திருவாட்டிமார் என்பன பலர்பால் அடைகள்.

     சீகாழியைச் சீர்காழி என்று வழங்குவது சரியாய்த் சோன்றவில்லை. சிறுதனம் சிறீதனம் என்று தவறாய் வழங்குகிறது.

(பாவாணருக்கு நன்றி! மொழிநூற் கட்டுரைகள் பக்கம் 55. தமிழ்மண், சென்னை.)