அகத்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அகத்தியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 30 ஜூன், 2025

அகத்தியர் புரட்டு: தமிழ் தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி- 4

 

அகத்தியர் புரட்டு: 

தமிழ் தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி- 4

===================================

    முனைவர் ப.தங்கராசு அவர்களின் முனைவர்பட்ட ஆய்வேடு  தமிழ் இலக்கியங்களில் அகத்தியர் - ஓர் ஆய்வுஎன்னும் நூலாகும். இந்த ஆய்வு, தமிழ்மொழித் தொடர்பான அகத்தியரை மையமாகக் கொண்டு அமைந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியன் என்னும் சொல் தமிழ்ச்சொல் எனக் கருதலாம் என்கிறார். 

                  'பொதியில் முனிவன்என ஒரு விண்மீனுக்குப் பெயர் வழங்கப் பெற்றிருப்பதால் அப்பெயரை உடையவர் மிகப் பழங்காலத்தில் தமிழ்நாட்டில் பெரும்புகழுடன் விளங்கியிருத்தல் வேண்டும் என்றும், பொதியமலையில் வாழ்ந்ததாகக் கருதப்படும் அகத்தியரைத் தமிழர் எனக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்.தமிழ் நூல்கள் குறிப்பிடுகிற அகத்தியர் தமிழ் அகத்தியர் என்றும் வான்மீகியும் இவரைக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறுகிறார். வடநாட்டு வேதகால அகத்தியர், பாரதகால அகத்தியர், இராமாயணகால அகத்தியர் ஆகியோர் ஆரிய அகத்தியர்கள் என்கிறார்.

                அகத்தியர் என்னும் பெயருடையோர் பல்வேறு காலங்களில் பல்வேறு இடங்களில் பலர் வாழ்ந்துள்ளனர்; ஆரிய அகத்தியர்கள் தவிர, தமிழகத்தில் அகத்தியர் என்னும் பெயரில் எழுவர் வாழ்ந்துள்ளனர்; அகத்தியர்களைப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவினும் அவர்கள் வாழ்ந்த காலம் பற்றி எவரும் உறுதிப்பட நிறுவவில்லை என்று கூறுகிறார். 

அகத்தியர் என்னும் பெயர் உடையோர் தென்னிந்தியாவி னின்று கீழைநாடுகளுக்குச் சென்று இந்திய நாகரிகத்தையும் பண்பாட்டையும் பரப்பியதோடு அரசமரபையும் தோற்றுவித்துள்ளனர் என்று  குறிப்பிடுகிறார்.

                இறையனாரகப் பொருளுரையால் அறியப்பெறும் அகத்தியத்தைத் தொன்மையான இலக்கண நூலாகக் கொள்ளலாம் என்றும்பேரகத்தியத் திரட்டு' என்னும் பெயரால் காணப்படும் நூலில் இடம் பெற்றுள்ள அகத்திய நூற்பாக்கள் பிற்காலத்தவர்களால் எழுதப்பெற்றவை என்றும் கூறுகிறார்.           கம்பர் தம்காலத்தும், தமக்கு முற்பட்ட காலத்தும் தமிழ்நாட்டில் வழங்கிய அகத்தியர் பற்றிய கதைகளையும், வான்மீகத்தில் கூறப்பெற்ற அகத்தியர் பற்றிய கதைகளையும், ஒரே அகத்தியர் பற்றியனவாகவே சொல்லியமை, அகத்தியர் பற்றிய தெளிவான கருத்துக்குத் தடையாக உள்ளது என்று எழுதுகிறார்.

  ஆய்வாளர் திரும‌ந்திரமணி. துடிசைகிழார் அ.சிதம்பரனார்அகத்தியர் வரலாறுஎன்னும் தம் நூலில், அகத்தியர் என்ற பெயர் கொண்டோர் பலராவர் என்றும் அவர்கள் வெவ்வேறு ஊரர்; வெவ்வேறு குலத்தர்; வெவ்வேறு காலத்தர்; வெவ்வேறு தொழிலர் என்றும் கூறுகின்றார். 

                அகத்தியர் என்னும் பெயர் முதன்முதல் தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வந்த ஒருசிறந்த தமிழ்ப்பெயர். அதனால் அப்பெயரை எல்லோரும் தத்தம் குழந்தைகளுக்கு இட்டு வழங்கிவந்தார்கள். அகத்தியர் என்னும் பெயரை உடைய பெரியார்கள் பலர் தமிழ் நாட்டில் பல இடங்களில் பல காலங்களில் வாழ்ந்து வந்து உள்ளனர் என்று கொண்டு அவர்களுடைய வரலாற்றில் உண்மை காண முயல்வதே அறிஞர் கடன் என்கின்றார். 

  அகத்தியர் என்ற பெயரைத் தமிழ்நாட்டில் வான்மீனுக்கு இட்டு வழங்க வேண்டுமானால் அப்பெயர் தமிழ்நாட்டில் பேரும் புகழும் பெற்றவருடையதாய் இருக்கவேண்டும் என்கின்றார்.      

     எழுமீன்(Great Bear – ‘சப்தரிசி’)மண்டலத்திலுள்ள  அகத்தியன் என்னும் விண்மீன் மிதுனராசியில் தோன்றுங் காலத்தில் கடல்நீர் ஆவியாக மாறுவதனால் கடல் வற்றுகிறதென்றும், அது மறையுங் காலத்தில் மழை பெய்வதால் கடலில் நீர் நிறைகிறதென்றும் பரிபாடல் பாடல் கூறுகின்றது. இதனைத்தான் உருவகமாக (in metaphorical language) அகத்தியர் கடலைக் குடித்தார் என்றும், மறுபடியும் கடல்நீரை அவர் உமிழ்ந்து விட்டார் என்றும் பழங்கதைகள் (புராணங்கள்) கூறும் என்று பேராசிரியர் ஒ.சி.கங்குலி (O.C.Ganguly) கருதுகிறார் என்றும் எடுத்துக்காட்டுகிறார்.

                  ஆரியஅகத்தியர்கள், தமிழ்அகத்தியர்கள் உள்பட முப்பத்தேழு அகத்தியர்கள் இருந்ததாகக் காலக்கணிப்புடன் எழுதியுள்ளார் என்பதை முன்பே எடுத்துக்காட்டினோம். ஒரே நாட்டில் பல காலங்களில் இருந்த அகத்தியர்களின் வரலாறுகள் அனைத்தையும் ஒன்றுபடுத்துவது தவறு என்றும், தனித்தனியாக ஒவ்வோர் அகத்தியருடைய வரலாற்றைப் பிரித்துப் படித்தால் முரண்பாடுகள் ஏற்படாது என்றும் தெளிவாகக் கூறுகிறார்.                

                 இனி, அறிஞர் பலர் தம் எழுத்துகளில் அகத்தியர் தொடர்பாகத் தெரிவித்துள்ள கருத்துகளைக் காண்போம்:   

                அ.மு.பரமசிவானந்தம்:வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்என்னும் அவருடைய நூலில் கூறியுள்ளவை: கந்தபுராண வரலாற்றின்படி அகத்தியர் இமயத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர் என்பர். வடமொழியில் உள்ளகந்த புராணத்தில் அகத்தியர் பற்றிய குறிப்பு ஒன்றும் இல்லை. அவரைத் தமிழ் அறிந்த முனிவராக அந்நூலில் எங்கும் குறிக்கவில்லை. அந்நூலைத் தமிழில் மொழிபெயர்த்த கச்சியப்பர் அவரைத் தமிழ்அகத்தியர் என்றே குறிக்கின்றார்.மலயத்து வள்ளல்என்றும், ‘தமிழ்மாமுனிஎன்றும் தமிழ் கந்தபுராணம் காட்டுகிறது. அகத்தியர் சிவபெருமான் திருமணம் காணச்சென்றிருந்தாலும், அவர் தமிழ்நாட்டிலிருந்து சென்றார் எனக் கொள்ளல் வேண்டும். 

 சில பழங்கதை (புராண) வரலாறுகள் வடமொழி, தமிழ் இரண்டையும் சிவபெருமான் உலகுக்கு அருளினார் என்றும் வடமொழியைப் பாணினிக்கும், தமிழை அகத்தியருக்கும் அறிவுறுத்தினார் என்றும் காட்டுகின்றன. மொழியியல்பு அறிந்தாருக்கும், வரலாற்றறிஞர்களுக்கும் இக்கருத்து முழுதும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அன்று என்பது நன்கு விளங்கும்..

புராணங்கள் பிந்திய காலத்தில் சமயமும் பற்றும் பின்னிப் பிணைந்த காலத்துப் புலவன் உள்ளத்தில் உதித்த கற்பனைகளே என்பதை இன்று சமயநெறி உணர்ந்த தக்கவர்களே ஏற்றுக்கொள்கின்றார்கள். 

   சிவபெருமான் திருமணத்துக்கு எத்தனையோ கடவுளரும் முனிவரும் வந்தனர் எனக் காட்டும் ஆரியர், அகத்தியர் வந்ததாகக் குறிக்கவில்லை என்பதை வடமொழி வாயிலாகக் கற்ற அறிஞர்கள் நன்கு விளக்கிக் காட்டுகின்றார்கள்.

  அகத்தியருக்கு விந்தியமலை வழிவிடவில்லை என்று புராணக்காரர் கூறிய கதையால் அவரைத் தென்னாட்டு ஒழுக்கமும் பண்பாடும் விந்திய எல்லையிலேயே தடுத்து நிறுத்தின என்று கொள்வது பொருந்தும். 

                  வடநாட்டு அகத்தியரின் வேறாகத் தமிழ்நாட்டின் பொதிய மலையில் வேறு ஒர் அகத்தியர் இருந்தார் எனவும், அவருக்கும் வடமொழிக்கும் தொடர்பு ஒன்றும் இருந்ததில்லை எனவும், பெயர் ஒற்றுமையால் இடைக்காலத்தில் இருவரையும் ஒருவரெனக் கருதியமையே இத்தகைய கற்பனைக் கதைகளுக்கும் பிறவற்றிற்கும் இடம்கொடுத்ததெனவும், உண்மையை எண்ணின், இருவேறு பகுதிகளில் வடக்கிலும் தெற்கிலும் இருவேறு அகத்தியர் வாழ்ந்தனர் எனக் கொள்ளலாம் எனவும், அவர்தம் பெயர் ஒற்றுமையைத் தவிர வேறு எதிலும் அவர்க்குள் தொடர்போ வேறு ஒற்றுமையோ இருந்ததில்லை எனவும் கொள்ளுதல் பொருத்தமாகும் என எண்ணுகிறேன். 

                அகத்தியச் சூத்திரம் எனக் குறிக்கும் இரண்டொரு சூத்திரங்களும் சிறந்தவை எனக் கொள்ளக்கூடியன அல்ல. எனவே, இருக்கும் ஏதோ இரண்டொன்றைக் கண்டு அவற்றின்வழி அகத்தியர் பெருநூல் செய்தார் எனவும் அது மறைந்தது எனவும் கொள்ளுவதினும் அந்நூல் எழவில்லை என்றே கொள்ளல் பொருத்தமானதாகும். 

அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் எவ்வாறு தொடர்பு கற்பித்தார்கள் என்பது விளங்காத புதிராய் உள்ளது. 

                பொதியமலையில் தமிழ் அறிந்த நல்ல பண்பாடுடைய ஒரு புலவர் வாழ, அதே பெயரோடு வடக்கே இமயத்திலிருந்து வந்து விந்தியமலையில் மற்றொரு புலவர் வாழ்ந்தார் என்று கொள்ளுவதே அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்துவதாகும். 

                சோமசுந்தரபாரதியார்: எந்த ஆதரவு வைத்துக் கொண்டு அகத்தியர் தமிழை உண்டாக்கினார், வளர்த்தார் என்று சொல்லுகிறீர்கள்அவ்வாறு கூறுவது முழுப்பொய். தமிழைப் படித்ததால் அகத்தியன் பெருமை பெற்றான். அகத்தியன் கடவுள் அல்லன். அகத்தியன் ஒரு மனிதன். அகத்தியனைப் பற்றிப் புராணங்கள் கட்டுக்கதைகளைக் கிளப்பின - என்கின்றார். 

இவர் ஆங்கிலத்தில் எழுதிய அகத்தியர் பற்றிய கட்டுரையில், அகத்தியர் பலரே என்னும் கருத்தைக் கூறுகிறார்.

                மறைமலையடிகள்:  இவர் தமது, ‘மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்என்னும் நூலில் குறிப்பிடுஞ் செய்திகள்: மணிமேகலையில் அகத்தியனாரைப் பற்றிய குறிப்புக் காணப்படினும் அவர் தமிழுக்கு இலக்கணம் செய்தார் என்றாவது, அவர் மாணாக்கர் தொல்காப்பியர் என்றாவது அதன்கண் ஏதுஞ் சொல்லப்பட்டிலது. 

         இறையனார் அகப்பொருளுரைப் பாயிரத்தில், அகத்தியனாரால் செய்யப்பட்டது அகத்தியம், அவர் இருந்தது தலைச்சங்கம் என்பது கூறப்பட்டதாலோவெனின்; அவ்வுரைப் பாயிரத்திலுள்ள இன்னோரன்ன வெல்லாம் நக்கீரர் உரைத்தனவல்ல வென்றும், அவை, புராணக்கதைகள் மிக்கெழுந்த பிற்காலத்தே யிருந்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டனவாமென்றும். இவ் ஆராய்ச்சியாரெல்லாம் உரைப்பக் காண்டலானும், அவ் வுரைப்பாயிரத்திற் கண்ட அவற்றுக்கெல்லாம் பழைய நூற் சான்றுகள் சிறிதுமின்மையானும் அவை உண்மையென்று கொள்ளற்பாலன அல்ல.

    “புறப்பொருள் வெண்பா மாலைப் பாயிரத்தில் அகத்தியனார் தொல்காப்பியனாரைப் பற்றிய இக் குறிப்புகள் காணப்படுதல் என்னையெனின், ‘புறப்பொருள் வெண்பாமாலைகி.பி. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட நூல் அன்றாகலின், புராணகாலத்து வந்த அந் நூற்பாயிரத்தில் அவை காணப்படுதல் ஒரு வியப்பன்று.

        அகத்தியனார் மாணாக்கர் பன்னிருவர் எனவும், அப்பன்னிருவரும் ஒருங்குகூடிச் செய்த நூலேபன்னிருபடலமாம் எனவும், அப்பன்னிரு படலத்தின் வழித்தாகவேபுறப்பொருள் வெண்பாமாலைஇயற்றப்பட்டது எனவும் அவ் வெண்பாமாலைப் பாயிரமாகியமன்னிய சிறப்பின்என்னுஞ் செய்யுள் நுவலுதல் பொருந்தாது.

                 ஆசிரியர் தொல்காப்பியனார் அகத்தியர் மாணாக்க ரென்றலும் வெறும் கட்டேயாம்!

                க. வெள்ளைவாரணனார்: இவர் தமதுதமிழ் இலக்கிய வரலாறுஎன்னும் நூலில் குறிப்பிடுஞ்செய்திகள்:

                அகத்தியர் என்ற பெயருடைய முனிவர் பலர் வடநாட்டிலும் தென்னாட்டிலும் காலந்தோறும் பல இடங்களில் பேசப்பட்டுள்ளார்கள். தலைச்சங்கத்து நூலாகிய அகத்தியத்தை இயற்றியவர் தென்னாட்டிலேயே பிறந்து செந்தமிழ் பயின்ற சிறந்த புலவராதல் வேண்டும். அகத்தியருக்கும் தொல்காப்பியருக்கும் உள்ள தொடர்பினைத் துணிதற்கேற்ற சான்று எதுவும் நூலில் இல்லை. பின்னுள்ளோரால் காட்டப்பெறும் அகத்திய நூற்பாக்கள் தொல்காப்பியர் காலத்துக்கு மிகமிகப் பிற்காலத்தே இயற்றப்பெற்றனவாதல் வேண்டும்.

                 அகத்தியர் என ஆசிரியர் பெயரும் அகத்தியம் என நூற்பெயரும் இறையனார் அகப்பொருளுரைக் குறிப்பில் காணப்படுவதனைக் கொண்டு அகத்தியருக்கு மாணவர் தொல்காப்பியர் எனத் துணியவியலாது. அகத்தியம் என்னும்பெயரால் எடுத்துக்காட்டிய நூற்பாக்களும், பேரகத்தியம் என்ற பெயரால் இக்காலத்து வெளியிடப் பெற்ற நூற்பாக்களும் மிகமிகப் பிற்காலத்தே அகத்தியர் பெயரால் வெளியிடப்பெற்றவையே!  

                இரா. இராகவையங்கார்: வேதகாலந் தொட்டுப் பிந்தியகாலம் வரை ஓர் அகத்தியர் பரம்பரை உண்டென்றும், அவ்வழியினருள் தமிழிலக்கணஞ் செய்தவரும் ஒருவர் உண்டென்றும், அவர் தொல்காப்பியனார் காலத்தவரென்றும், தமிழ் இலக்கண உரைகாரர் கூற்றால் துணியலாமென்று தெளிக. 

இவ் வகத்தியர்க்கு முன்னே இத் தமிழ்நாடு இனிய செய்யுளாலும், நல்ல வழக்காலும் சிறந்து விளங்கிற்றென்று கருதுவதே பொருத்தமுடையதாகும்.. வேதகால அகத்தியர் இராமாயண கால அகத்தியர், பாரத கால அகத்தியர் எனப் பலராதல் தெளியலாம். இவ்வழியில் பாணினீய காலத்தவராய்த் தமிழுணர்ந்தவராய்த் தமிழ் இலக்ணமும் செய்த அகத்தியர் ஒருவர் உண்டு என்பது தான் இயைவதாகும் என்கிறார். 

                ந.மு.வேங்கடசாமி நாட்டார்: தமிழ்முனி என்று பலராலும் பாராட்டப்பெற்ற அகத்தியரைத் தமிழர் என அழைப்பதில் தவறில்லை என்பார். 

                கா. சுப்பிமரணியபிள்ளை: தொல்காப்பியம் எழுத்ததிகார முன்னுரையில் அகத்தியர் இருவர் இருந்தனர் எனவும் அவர் இருவரும் பல்வேறு வகையில் வேறுபட்டு வாழ்ந்தவராவர் எனவும், பொதியமலை அகத்தியர் தமிழ்முனிவர் எனவும் குறிக்கின்றார். 

                பி. டி. சீனிவாச ஐயங்கார்: இவர்தமிழர் வரலாறு' என்னும் நூலில் அகத்தியரைக் குறித்துக் கூறியுள்ள கருத்துகள்:இஷ்வாகுகாலம் முதல்கிருஷ்ணன்காலம் வரையில் வடமொழி நூல்களில் கூறப்படும் அகத்தியர்கள், வசிட்டர்கள் ஆகியோர் தனிப்பட்ட அகத்தியரையோ வசிட்டரையோ குறித்தவர்கள் ஆகார். அப்பெயர்கள் குடும்பப் பெயராகப் பலருக்கு வழங்கியனவாகும். அப்பெயர்கள் குடும்பப் பெயரேயன்றித் தனிப்பட்டவர்களுக்குரிய பெயர்களல்ல. 

                வி.கோ.சூரியநாராயண சாத்திரியார்:கருத்துக்கள் தன்முயற்சியானெழும் ஒலிகளின் சம்பந்தமாகவே வெளிப்படுகின்ற இயல்பினின்றுமே பாஷைக ளுண்டாதலியலும் என்பது யாவரும் மறுக்கமுடியாததோர் பாஷைநூலுண்மை. இவ் வுண்மையை யொட்டியே தமிழ்ப்பாஷையின் தோற்றமும் ஏற்பட்டிருத்தல் மிகவும் கவனிக்கற்பாலதே. 

ஈதிவ்வாறாக, தமிழ் நூலாசிரியர் பலரும், இக்காலத்தினும் ஆங்கிலநூற் பயிற்சியில்லாத நண்பருட் சிலரும் தமிழ்மொழியும் வடமொழியும் தேவபாஷைகளென்றும் இவ்விரண்டு முறையே அகத்தியனார்க்கும் பாணினியார்க்கும் சிவபெருமானால் உபதேசிக்கப் பட்டன என்றும் கூறாநிற்பர். 

                கால்டுவெல்: இவர் தம் நூலான, ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (தமிழ்)  பக். 170 இல், "அவர் (அகத்தியர்) ஆரிய வந்தேறிகளின் தலைவர் என்று கூறுவதைவிட அக் குடியேற்றக் கட்டுக்கதைக்குத் தலைவரே யெனக் கூறலாம்" என்கின்றார்.

                உ.வே.சாமிநாதையர்: ''இவர் (அகத்தியர்) வருவதற்கு முன்னரே இந் நாட்டிலிருந்த தமிழையும் அதனிலக்கணத்தையும் இவர் தந்தாரென்று கூறியிருப்பது உபசாரவழக்கு

                தமிழோடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்த கொடி     (குமர.)

என்றதனாலும் அகத்தியர் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னமேயே          அந்நாட்டில் இருந்த தமிழின் தொன்மை விளங்கும். (சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்)

                பாவேந்தர் பாரதிதாசன்:அகத்தியன் விட்ட புதுக்கரடிஎனுந் தலைப்பில் அகத்தியர் பற்றிய சில குறிப்புக்களைப் புதிய நோக்கில் சுட்டியுள்ளார்.    பண்டைய திராவிடம் எனப்படும் தென்பகுதி எல்லா வகையிலும் சிறப்புற்றிருந்த காலத்து, அகத்தியர் ஆரியக் கோட்பாடுகளைப் பரப்பும் நோக்கத்துடன் தென்னாடு வந்தார் என்றும், பொதிகை மலையில் தங்கி, அங்கிருந்த தமிழ்ப்பெரும் புலவர்களிடம் இயற்றமிழ்இசைத்தமிழ், ஆடற்றமிழ் ஆகிய மூன்றனையும் முறைப்படி பயின்றார் என்றும் கூறியுள்ளார். மேலும், 'செல்வம் முற்பிறப்பில் செய்த நல்வினைப் பயன்', சிறுமை, முற்பிறப்பில் செய்த தீவினைப் பயன். தீ, தீம்புனல், கடுவெளி ஆகியவை தெய்வங்கள். இந்திரன் எதற்கும் இறைவன். அவன் மந்திர வேள்வியால் மகிழ்பவன்' முதலான ஆரியக்கோட்பாடுகளை அகத்தியர் தமிழர்சர்களின் ஆதரவோடு தமிழ்மக்களிடையே பரப்பினார் என்றும், இறுதியாகத் தமிழரசர்கள் இக்கொள்கைகளையும் ஏற்று அகத்தியருக்கு அடிமையாயினர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அகத்தியர் வடக்கிலிருந்து வந்த ஆரியர் என்றும், ஆரியக் கொள்கைகள் தமிழகத்துப் பரவியதற்கு இவரே அடிப்படைக் காரணம் என்றும், இவருடைய -வருகைக்குப் - பின்னரே தமிழ்க்கலை, பண்பாடு, நாகரிகம் முதலானவை அழிந்தன என்றும் சுட்டியுள்ளார். 

                அருணகிரியார், குமரகுருபரர்:சிவனை நிகர் பொதியவரை முனிவ னகமகிழவிரு செவிகுளிர வினியதமிழ் பகர்வோனே" என்பர் அருணகிரியார். தமிழ் முனிவன் வாழுமலை என்பார் குமரகுருபரர். அகத்தியரைச் சிவபெருமானோடு ஒப்பிட்டும், அவரைத் தமிழ் முனிவரென்றும் அவர்தம் இருப்பிடம் பொதியமலை என்றும் இவ்விருவர் கூற்றுக்களும் விளக்குகின்றன. 

அகத்தியரைப்பற்றி ஆராய்ந்தவர்களுள் மு. இராகவையங் காரும், செகவீரபாண்டியனும் அகத்தியர் ஒருவரே என்னுங் கருத்துடையோர் ஆவர். கே. என் சிவராசபிள்ளை, துடிசைகிழார் அ. சிதம்பரனார், ந.சி.கந்தையாப் பிள்ளை, கா. நமச்சிவாய முதலியார், ஆ.சிவலிங்கனார், ப.தங்கராசு, அ.மு.பரமசிவானந்தம், மறைமலையடிகள்சோமசுந்தர பாரதியார், இரா. இராகவையங்கார், பி.டி.சீனிவாச ஐயங்கார் முதலானோர் அகத்தியர் பலர் என்னும் முடிவினைக் கொண்டவர்கள் ஆவர்.

பிரபந்த இலக்கணம்என்னும் சிற்றிலக்கிய இலக்கணத்தைக் கூறுகின்ற பாட்டியல் இலக்கண நூல்கள் எழுத்துகளுக்கும் பாவகைகளுக்கும் கூட ஏற்றத்தாழ்வு (இன்ன சாதிக்கு இன்ன எழுத்து, இன்ன சாதிக்கு இன்ன பா வகை எனக்) கூறுகின்றவை. இவை கூறும் செய்திகளிலும் அத்தகைய உணர்வு இருந்தால் வியப்பதற்கில்லை. 

முடிப்புரை: 

                 மேலே எடுத்துக்காட்டிய அறிஞர்களின் கருத்துகளையும் பிற நூல்களின் குறிப்புகளையும் கொண்டு ஆழ்ந்து எண்ணிப் பார்த்தால், கீழ்க்காணும் முடிவுகளுக்கு வரலாம்.

1.அகத்தியர் ஒருவரே என்று கருதுவது தவறென்றும் அகத்தியர் பெயரில் பலர் இருந்துள்ளனர் என்றும் தெரிகிறது:

2. அகத்தியர் என்னும் பெயரில் வடமொழி ஆரியஅகத்தியர்களும் தமிழ்அகத்தியர்களும் இருந்துள்ளனர்.

3. தமிழ்நாட்டில் அகத்தியர் என்னும் பெயரினைத் தாங்கி வாழ்ந்த அறிஞர் தமிழரே. பொதியமலை அகத்தியர் தமிழரே.

4. வடஆரிய அகத்தியர் காலத்திற்கு முன்பே தமிழ், இலக்கிய இலக்கணச் செழுமையுடன் இருந்திருக்கின்றது. (உ,வே.சா., இரா. இராகவையங்கார் கருத்தைக் காண்க)

5. அகத்தியம் முதனூல் என்ற கூற்று உறுதிப்டுத்தப் படாததாகும்.

6. தொல்காப்பியரின் ஆசிரியர் அகத்தியர் என்பதற்கு அடிப்படையான உறுதிச் சான்றெதுவும் இல்லை.

7. அகத்தியம் என்று ஒரு நூல் இருந்ததற்கான அடிப்படையான உறுதிச் சான்றெதுவும் இல்லை.

8.அகத்தியர் நூற்பாக்களாக உரையாசிரியர்களால் காட்டப்படும் நூற்பாக்கள் பிற்காலத்தில் பிறரால் எழுதப்பட்டவை.

9. (வடவாரிய) அகத்திய மாமுனி தமிழ்இலக்கியத்தை முதன்முறையாக எழுதியவர் என்றும் அவரின் திறம் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது என்றும் இந்திய ஒன்றிய அமைச்சர் கூறியது கலப்படமற்ற முழுப்பொய்யே.

                இன்றைய அறிவியல்காலத்திலும் கூட, ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருக்கிற காரணத்தால், அந்த அதிகாரம், பெரும்பணவலிவு முதலியவற்றைக் கொண்டு, கூலி எழுத்தாளர்கள் கூட்டத்தையும், வாயை வாடகைக்கு விடும் முன்னாள் இந்நாள் பேராசிரியன்மாரையும் வளைத்துவிடுகின்றனர். அவர்கள் வழி அகத்தியர் பெயரால் பொய்ம்மைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, தமிழ்க் குமுகாயத்தை மூடஅடிமைகளாக்கிடவும், தமிழை மீண்டும் மூடநம்பிக்கைக் குப்பைக்குக் கொண்டுபோகவும், திட்டமிட்ட இந்தியஆட்சியாளர், இக்கால் விழிப்புற்றெழுந்த தமிழரின் எதிர்ப்பால் அமைதியாகி அடங்கியுள்ளனர் என்று அறியமுடிகிறது.

எவ்வளவு படித்திருந்தாலும் எத்தனை பெரிய அறிஞராயிருந்தாலும் தன்னலத்திற்கும் அறிவுக்கும் போட்டி என்று வரும்போது தன்னலம் வெற்றிபெற்று விடுகிறது; அறிவு தோற்றுவிடுகிறது என்று புரட்சியாளர் அம்பேத்கார் கூறியுள்ளார் என்று ஒருவர் புத்தகவிழாச் சொற்பொழிவில் கூறியதைக் கேட்க வாய்த்தது. ஆம், அதற்கு அகத்தியர் புரட்டுக்குத் துணை போனவர்களே சான்றாக உள்ளனர்.

 

கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்

நடுவொரீஇ அல்ல செயின்.             -கு.116

எற்றிற் குரியர்  கயவரொன் றுற்றக்கால்

விற்றற் குரியர் விரைந்து.                             - கு.1080.

 

உதவிய நூல்கள்:

1. K.N. Sivaraja pillai, ‘Agastya in Tamil Land’, Madras Law Journal press, Mylapore, Madraş. 

2. கா.நமச்சிவாய முதலியார், ‘அகத்தியர் ஆராய்ச்சி’, குடி அரசுப் பதிப்பகம், ஈரோடு, 1931. 

3. ந.சி.கந்தையாபிள்ளை, ‘அகத்தியர்’, ஆசிரியர் நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1931. 

4. செகவீரபாண்டின், ‘அகத்திய முனிவர்’, மதுரை, 1964. 

5. துடிசைகிழார் அ.சிதம்பரனார், ‘அகத்தியர் வரலாறு’, திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை, 1964. 

6. ஆ.சிவலிங்கனார், அகத்தியர்கள், ஒற்றுமை அலுவலகம், சென்னை, 1948.

7. முனைவர் ப.தங்கராசு, ‘தமிழ் இலக்கியங்களில் அகத்தியர்’, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1997.

8. அ.மு.பரமசிவானந்தம், ‘வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்’, வள்ளியம்மாள் கல்வி அறம், சென்னை – 102.

9. மறைமலையடிகள்,மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்' 1957. கழக வெளியீடு,1980. 

10. க.வெள்ளைவாரணனார், ‘தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்’, மாணவர் பதிப்பகம், சென்னை-7

11. உ.வே.சாமிநாதையர், ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’, .வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை – 41, 1978.

12. பாரதிதாசன், ‘அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துக் கதைபாரதிதாசன் பதிப்பகம், 1948.

13. இன்னும் பலரின் குறிப்புகள்.         உதவிய அனைவர்க்கும் நன்றி 

                              (அகத்தியர் புரட்டு முற்றுப்பெற்றது)  

(புதுவை 'நற்றமிழ்' ஆடவை 15-6-2025 இதழில் வந்தது) 


சனி, 14 ஜூன், 2025

அகத்தியர் புரட்டு: தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! – 3

 

அகத்தியர் புரட்டு: 

தமிழ், தமிழர்க்கு எதிரான சூழ்ச்சி! – 3


              ‘காசி தமிழ்ச் சங்கமம் 3.0’-இன் கருப்பொருளாக அகத்தியரை இந்தியஒன்றியஅரசின் கல்விஅமைச்சர் அறிவித்ததைத் தொடர்ந்து, செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனம் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கியது. சென்னையில் மாணவரைத் திரட்டி, அகத்தியர் புனைவு நடைச்செலவு, அகத்தியர் பற்றிய நூல் வழங்கல், படையலுணா வழங்கல், அகத்தியர் கட்டுரைப்போட்டி நடத்தல், ஆங்காங்கே அகத்தியக் கருத்தரங்கங்கள் நடத்தல் – என வேலைகள் நடந்தன. இவற்றுடன், காசி, அயோத்தி, பிரயாக்குராச்சிற்கும் பலரைக் கூட்டிச்சென்றனர். இவை எல்லாவற்றிற்கும் மக்கள் வரிப்பணத்தை வாரி இறைத்ததை முன்னரே பார்த்தோம்.

                மேலும், செய்தித்தாள்களில் அகத்தியர் பற்றிக் கட்டுரைகள் எழுதப்பட்டன; மின்ஊடகங்களில் அகத்தியர் பற்றி நிறைய பேசப்பட்டன. குமுகஊடகங்களில் எழுத்தாளர்  மாலன் வகையாரின் அறிவியல் தொடர்பற்ற பழங்கதை (புராண) அடிப்படையிலான கருத்துகள் வரத் தொடங்கி, மிகக் கடுமையான எதிர்ப்பு எழுந்ததால் பேரளவு அடங்கின என்றும் பார்த்தோம்.

          தொல்காப்பியத்திற்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் அகத்தியர் என்றும் பாரதியார் இதை உறுதிப்படுத்தியுள்ளார் என்றும் எழுத்தாளர் மாலன் பேசியும் எழுதியும் வந்தார். அதற்குச் சான்றாக அவர் பாரதி எழுதிய தமிழ்த்தாய்ப் பாடலின்,

ஆதிசிவன் பெற்றுவிட்டான் என்னை

ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்

வேதியன் கண்டு மகிழ்ந்தே நிறை

மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான். என்னும் அடிகளைஎடுத்துக்காட்டினார். அவரும், அவர் வகையாரும், அவரைச் சார்ந்தோரும், அதே பாரதியின், ‘உயிர் பெற்ற தமிழர்என்னும் தலைப்பிலான வேறொரு பாட்டில்,

கடலினைத் தாவும் குரங்கும் - வெங்

கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்ணும்,

வடமலை தாழ்ந்தத னாலே - தெற்கில்

வந்து சமன்செயும் குட்டை முனியும்,

நதியி னுள்ளேமுழு கிப்போய் - அந்த

நாகர் உலகிலோர் பாம்பின் மகளை

விதியுற வேமணம் செய்த - திறல்

வீமனும் கற்பனை என்பது கண்டோம். என்று பாடியுள்ளதை வசதியாக மறந்துவிடுகின்றனர்; மறைத்துவிடுகின்றனர். 

                வடமலை தாழ்ந்ததனாலே தெற்கில்வந்து சமன்செயும் குட்டைமுனி அகத்தியனே கற்பனை என்று பாரதி பாடுவதை நாம் அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது. பல இடங்களில், பாரதி, இருவேறு நிலைகளில் இருவேறு வகையாகப் பாடியவர் என்பதை யாவரும் அறிவர்.

                தொல்காப்பியர் ஐந்திரம் நிரம்பியவர் என்றும் ஐந்திரம் என்பது வடமொழி இலக்கணம் என்றும் பெருமையாக மாலன் முகநூலில் எழுதுகிறார். மொழிஞாயிறு பாவாணர், ஐந்திரம் என்னும் வடமொழி இலக்கணமும், ‘பிராதிசாக்கியங்கள்என்னுங் கிளை வேதஇலக்கணங்களும் தமிழிலக்கணத்தைப் பின்பற்றி எழுந்தவையே என்றும், ஐந்திரம் தமிழகத்திலேயே தோன்றித் தமிழகத்திலேயே அழிந்ததாகத் தெரிகிறதென்றும் செந்தமிழ்ச் செல்வி1979 பெப்பிரவரி கட்டுரையில் கூறுகிறார். இவை தவிர, மாலன்வகையார் திரும்பதிரும்பக் கூறும் உரையாசிரியர் கூற்றுகள், கம்பனின் பாடலடிகள் பற்றி முன்னரே விளக்கியுள்ளோம்.

                புறநானூறு 201ஆம் பாடலில் வரும் வடபால் முனிவன்என்ற பெயர் அகத்தியரைக் குறிப்பதென எழுத்தாளர் மாலனும் அவர்வகையாரும் கூறிக்கொள்கிறார்கள். சம்புமுனிவனை அகத்தியனாக்கும் இவர்கள் முயற்சி வீண் என்னும் வகையில் முன்பே அப் புறப்பாடலின் கருத்தை விளக்கிக் கூறியிருக்கின்றோம். (வடபால் முனிவன் தடவினுள் தோன்றிஎன்று கபிலர் கூறியிருப்பதற்கு, ‘விசுவபுராண சாரம்என்னும் தமிழ்நூலையும் தெய்வீக உலாஎன்னும் நூலையும் அடிப்படையாக வைத்து, இங்கு முனிவன் என்று குறிப்பிடப்பட்டது சம்புமுனிவன் என்று உ.வே.சாமிநாத ஐயரே கருத்துரைக்கிறார். தடவினுள் தோன்றி’ – என்றால் வேள்வியில் தோன்றிஎன்று பொருள். இதுவும் கற்பனையான பழங்கதையாகலின் ஆராய்ச்சிக்குரியதன்று எனப் பாவாணரும் பிறரும் கூறுவர்)

                அகத்தியர் பற்றி ஓர் ஆங்கில நூல் உட்பட ஏறத்தாழ ஏழு நூல்கள் ஆய்வாளர்களால் எழுதப்பட்டுள்ளன. இவையுந்தவிர, அறிஞர்கள் தனிக் கட்டுரைகள் பல எழுதியும் அகத்தியர் பற்றி விளக்கம் தந்துள்ளனர். இதுவரை வந்த அகத்தியர் பற்றிய ஆய்வு நூல்களாவன:

1. K.N. Sivaraja Pillai, “Agastya in the Tamil Land’ University of Madras. 1930.

2. கா.நமச்சிவாய முதலியார், ‘அகத்தியர் ஆராய்ச்சி’, குடிஅரசுப் பதிப்பகம். 1931.

3. ந.சி.கந்தையா பிள்ளை, ‘அகத்தியர்ஆசிரியர் நூற்பதிப்புக்கழகம், 1931.

4. ஆ.சிவலிங்கனார், ‘அகத்தியர்கள்’, ஒற்றுமை அலுவலகம், 1948.

5. கவிராசபண்டிதர் செகவீரபாண்டியன், ‘அகத்திய முனிவர்’,

 மதுரை, 1940.

6. துடிசைகிழார் அ.சிதம்பரனார், ‘அகத்தியர் வரலாறுதி. தெ. சை. நூ. கழகம், 1950, 1964.

7. முனைவர் ப.தங்கராசு, ‘தமிழ் இலக்கியங்களில் அகத்தியர்’, அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1997.

                அறிஞர் கே.என்.சிவராசப் பிள்ளை (1879-1941) சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றியவர். கட்டுரையாளர்; பாவலர்; இதழாளர். இவருடைய சங்க இலக்கியங்கள்’, ‘அகத்தியர்’, ‘கம்பராமாயணம்பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவையாகும். தமிழிலக்கியங்களின் காலக்கணிப்பிலும் ஈடுபட்டவர்.

                இவர், “Agastya in the Tamil land” என்னும் தம்முடைய ஆங்கில நூலில், Early History of Deccan (Bhandargar), History of Ancient Sanskrit Literature (Maxmuller), The Great Epic of India (Hopkins) ஆகிய மூன்று நூல்களின் அடிப்படையில் அகத்தியரை ஆராய்ந்தார் என்பர். அகத்தியர் என்னும் பழங்கதை(புராண)ப் பெயர் எப்படி வடஇந்தியப் பழங்கதைகளில் கையாளப்பட்டுள்ளது, தமிழில் அப்பெயர் எவ்வண்ணம் பதிவாகியுள்ளது என்று இந்நூலில் ஆராய்கிறார். அகத்தியர் பற்றிய ஆய்வுநூலாகவும், வரலாற்றுக்கு முந்தைய தமிழ்ப்பண்பாட்டை விளக்கும் ஆய்வாகவும் இந்நூல் கருதப்படுகிறது. இந் நூலின் தமிழ்மொழியாக்கம் இதுவரை வரவில்லை.

                அகத்தியரை இராமாயண, இருக்குமறை நூல்களின்படி பார்ப்பது வழக்கம். அகத்தியர் பற்றிய பழங்கதைகளும் தொன்மச் சான்றுகளும் கம்போதியா, இந்தோனேசியா தீவுகளிலும் உள்ளன. பெரும்பாலும் இவை கற்பனையின் அடிப்படையில் உருவானவை. காரிக்கண்ணனார், ஆலத்தூர் கிழார், தாமப்பல்கண்ணனார் போன்ற புலவர்களின் பாடல்களின் அடிப்படையில் அகத்தியரைப் பார்ப்பனர் என்று முடிவு செய்துள்ளனர். எனவே அகத்தியர் குறித்த பழங்கதையை மீளாய்வு செய்யவேண்டியுள்ளதுஎன்கிறார். தொல்காப்பியர், அகத்தியரைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்று உறுதியாகக் கூறுகிறார்.

                தமிழ்நாட்டில் அகத்தியர் காலடி வைப்பதற்கு முன்பே, தொண்டைமண்டிலக் காட்டை (தண்டகாரணியத்தை) மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக்க இரு நூற்றாண்டுகளும், கருநாடகப் பகுதியில் ஆரியவல்லாண்மையை ஏற்படுத்த இரு நூற்றாண்டுகளும் ஆக நான்கு நூற்றாண்டுகள் கழிந்திருக்க இடமுண்டு என்றும் கூறுகிறார். மேலும் இவ்வாறு கணக்கில் கொண்டால் அகத்தியர் மெள்ளமெள்ள பொதியமலையை வந்து அடைய நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகள் ஆகியிருக்குமென்றும் இதனால் ஒரே அகத்தியர் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து இப்பணியைச் செய்திருக்க இயலாது என்றும் குறிப்பிடுகிறார். அகத்தியர்பெயரில் வந்த பலரே இங்ஙனம் ஆரிய வழியாக்கிய பணியைச் செய்திருக்கவேண்டும் என்று இவர் கருதுகிறார். மேலும் இருக்குமறைகால அகத்தியர், இராமாயணகால அகத்தியர் ஆகியோர் மட்டுமல்லாமல் மேலும் நான்கனுக்கு மேற்பட்ட அகத்தியர்கள் கருநாடகம், தமிழகம், இந்தோனேசியத் தீவுகள், கம்போதியா முதலிய கீழைநாடுகள் முதலிய பகுதிகளில் ஆரியமதம், ஆரியக்கோட்பாடுகள் ஆகியவற்றைப் பரப்பியிருத்தல் வேண்டும் என்றும் இவர் சுட்டிக்காட்டுவார்.

                அகத்தியர் தென்பகுதிக்கும் பிறநாடுகளுக்கும் போந்ததன் நோக்கம் ஆரியமதம், ஆரியக்கோட்பாடுகள் முதலானவற்றைப் பரப்பவே என்றும், அவ்வாறு போந்த அகத்தியர் ஒருவரல்லர் என்பதும், அப்பெயரினைத் தாங்கியவர் பலரே என்பதும் இவருடைய கருத்தாகும்.

                பல்வேறு காலங்களில் வாழ்ந்த பல்வேறு ஆசிரியர்களால் அகத்தியர்பெயரால் தொகுத்தளிக்கப் பெற்றவையே இன்று அகத்திய நூற்பாக்கள் எனக் காணப்படுகின்றன என்றும், இவை முழுமையும் போலி நூற்பாக்கள் என்றும் கூறுவார். மேலும் அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர் ஆகியோர் மேற்கோளாகக் காட்டியுள்ள அகத்திய நூற்பாக்கள்கூட அகத்தியர் செய்தன அல்ல என்றும், அவையும் பிற்கால நூற்பாக்களே என்றும் சுட்டுவார்.

                இந்நூலில் குறிப்பிட்டுள்ள சில கருத்துகளை முன்பே எடுத்துக்காட்டியிருந்தோம். இவர் கருத்துப்படி, அகத்தியமரபு என்பது, “பழங்கதையாளர் (புராணிகர்) படையணியின் கைகளில் கொடுக்கப்பட்ட வெற்றுக் குண்டறைத் துமுக்கிகள்” (“The array of puranic battalion... But its arms are loaded only with blank cartriges”) ஆகும்.

                அறிஞர் கா.நமச்சிவாய முதலியார் அகத்தியர் ஆராய்ச்சிஎன்னும் தம் நூலில் அகத்தியர் பிறப்பைப் பற்றிப் பல்வேறு பழங்கதைகளில் (புராணங்களில்) பல்வேறுவகையாக உருப்பசி(ஊர்வசி)யைத் தொடர்புபடுத்திக் கூறப்படும் அருவருப்பான காமக்கதைகளைக் குறிப்பிடுகின்றார். பல்வேறு பழங்கதைகளில் (புராணங்களில்) இடம்பெறும் அகத்தியர் பற்றிய வேறுபல செய்திகளையும் கூறுகின்றார். இந் நிலவுலகு தட்டையாக இருக்கிறதென்றும், அதன் நடுப்பாகத்தை ஒரு கோல் தாங்கிக்கொண்டிருக்கிறதென்றும், விந்தியமலை அடக்கப்பட்ட தென்றும் கூறுவது நம்பத்தக்கதாக இல்லையென்றும், வாதாபி வில்வலன் கதையும் அவ்வாறே என்றும் கூறுகிறார்.

                முதற்கழகம் (சங்கம்), இடைக்கழகங்களில் அகத்தியர் இடம்பெற்றதாகக் கூறப்படுவதைப் பற்றிய இவரின் கருத்தை முன்னரே பார்த்தோம். அகத்தியம்இயல்இசைநாடகத்தமிழ் இலக்கணநூல் என்பது நம்பவியலாததாக இருப்பதாகப் பல எடுத்துக்காட்டுகளுடன் கூறுகிறார். அகத்தியரின் மாணாக்கர் பன்னிருவர் என்ற செய்தியையும் ஐயத்தின்பாற்பட்டதாகக் குறிப்பிடுகின்றார்.

                நமக்கு இப்போது கிடைத்துள்ள தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு ஆகிய நூல்களில் ஓரிடத்தும் அகத்தியனாரைப் பற்றி ஒருசிறிதும் காணப்படவில்லை. இத்தகைய அரிய முனிவரைப்பற்றி தமிழ்மொழிக்கு முதற்கண் இலக்கணம் வகுத்த ஆசிரியரைப்பற்றி தமிழ்நாட்டில் வந்து இரண்டு கழகங்கள் (சங்கங்கள்) நிறுவிய முனிவரைப்பற்றி - ஆயிரக்கணக்கான யாண்டுகள் வாழ்ந்த- வாழ்கின்ற பெரியாரைப்பற்றி, மிகப்பழமையாக வழங்கும் சங்கநூல்கள் ஏதுங் குறித்துக் கூறாதது என்னே!என்று வியந்து கூறுகின்றார்.

                அகத்தியர் மருத்துவம் எனத் தமிழ்நாட்டில் பலவகை நூல்கள் தோன்றியுள்ளன. இவையன்றி வாதம், சோதிடம் முதலியவற்றிற்கும் நூல்கள் குறிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்கும்பொழுதே அகத்தியர் செய்தனவல்லவென்று புலப்படும்என்கின்றார்.

                முடிவாகக் கூறும்போது, அகத்தியர் என்னும் பெயரால் பற்பலர் காணப்படுகின்றனர் என்றும் அகத்தியர் பரம்பரை எனப் பலர் இருந்தனரென்றும் பல எடுத்துக்காட்டுகளுடன் கூறுகின்றார். முதற்கண் வந்த அகத்தியனார் அகத்தியம் என்ற நூலைச் செய்தனர் என்பது நம்பத்தக்கதன்று. அவர் முதலிரண்டு சங்கங்களை நிறுவினாரென்பதும் பொருந்தாதாம்எனப் பல காரணங்களைக் காட்டி விளக்குகின்றார்.

                அறிஞர் ந.சி.கந்தையாபிள்ளை அகத்தியர்என்னும் தம் நூலில் பெரும்பாலும் அகத்தியர் தொடர்பாக  பிற அறிஞர்  கூறுவதையே எடுத்துக்காட்டுகின்றார். அவர் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சிலபகுதிகள்:                                                  சமக்கிருதத்தில் இரண்டு அல்லது மூன்று அகத்தியர் பெயர்கள் காணப்படுகின்றன. வான்மீகருக்கு முற்பட்டவரும் வேத காலத்தவருமாகிய அகத்தியர் ஒருவர் இருந்தார். இவர் கங்கைக் கரையில் வாழ்ந்த ஆரியக் கூட்டத்தினரின் தலைவரும் உலோபாமுத்திரையின் கணவருமாவார். வேறு இரண்டு அல்லது மூன்று அகத்தியர்களைப் பற்றி இதிகாசங்கள்கூறுகின்றன”.

                நாம் கத்தியர் வரலாற்றைக் குறித்துப் பின் வருமாறு உய்த்துக் கூறலாம்:  ஆரியர் வருகைக்கு முன் அகத்தியர் என்னும் பெயருடைய தமிழ்அறிஞர் ஒருவர் தமிழ்நாட்டில் விளங்கினார். இவர் சமக்கிருதத்தோடு தொடர்புபெற்ற அகத்தியரில் வேறானவர். இவர் தமிழர் மதிப்புஅளித்த அறிவர்களுள் ஒருவர். அகத்தியர் என்னும் தமிழ்ப்பெயரே அகத்தியஎன்னும் ஆரியப்பெயரோடு ஒற்றுமை காணப்பட்டமைகொண்டு அவர் ஆரியராக்கப்பட்டார்என்றும் குறிப்பிடுவர்.

                தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்னும் பழங்கதை வழங்குகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைப்பற்றி எங்கும் குறிப்பிடவில்லை.தொல்காப்பியர் அகத்தியரைக் குறித்து யாண்டும் கூறாமையால் அவர் அகத்தியரின் மாணவரல்லர் என்பது எளிதில் விளங்கும். இவர் அகத்தியர் மாணவர் ஆயின், மிகப்புகழ் படைத்த தன் ஆசிரியரைக் கூறாது மறைக்கும் நன்றியில்லாத குணத்தை இச் சிறந்த ஆசிரியர் மீது ஏற்ற நேரும்.”.

                தொல்காப்பியருக்குப் பிற்பட்ட மக்கள் ஆரிய சம்பந்தமான பல கற்பனைகளை அகத்தியரோடு சம்பந்தப்படுத்திக் கட்டி வைத்தார்கள். தமிழ்ப்பெயர்களை ஆரியர் தம்முடையவையாகத் தமது பழங்கதைகளில் எடுத்து வழங்குவது இயல்பு. தமிழ்முருகன் சுப்பிரமணியராகவும், தமிழ்மால் விஷ்ணுவாகவும் வழங்கப் படுகின்றமையை நாம் அறிவோம். தமிழ்க் கருத்துக்களை ஆரியமாக்குமிடத்துத் தமிழ்க்கடவுளர் ஆரியராக மாறினர். தமிழ்நாட்டிலுள்ள இடங்கள், ஆறுகள், மக்களுக்கு ஆரியப்பெயர்கள் இடப்பட்டன. வெண்காடு சுவேதாரணியமாகவும், தண்பொருநை தாம்பிரபர்ணியாகவும் மாறின. பண்டைஎன்னும் அடியாகத் தோன்றிய பாண்டிய பரம்பரைப் பெயர் பாண்டவ அல்லது பாண்டு வமிசமாக மாறிற்று. இவ்வாறே தமிழ்அகத்தியர் சமக்கிருத அகத்தியராக மாறியிருத்தல் வேண்டும்.

                தமிழ்நாட்டில் வழங்கும் அகத்தியர் வரலாற்றுக்கு அடிப்படை பொதியமலையில் இருந்த ஒருவராதல் வேண்டும்; இல்லையேல் அகத்தியரைப் பற்றிய பழங்கதைகள் அந்தரத்தில் எடுத்த கோட்டையாக மாறிவிடும்.

                தமிழ்ப்புலவர்கள் ஆரியரொருவரைத் தமிழ்க்கல்விக்குத் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதினால் அகத்தியர் தமிழரேயாவார் என்பது வலியுறுகின்றது. பழங்கதை(புராண) காலத்தில் அகத்தியரைப்பற்றி ஆரியப்போக்கான கற்பனைக்கதைகள் வளரத் தொடங்கின.  அகத்தியர் என்னும் தமிழ்ப்பெயர் அகத்திய என்னும் ஆரியப்பெயரோடு ஒற்றுமை காணப்பட்டமைகொண்டு அவர் ஆரியராக்கப்பட்டனர்.”… 

                செங்கோன் தரைச்செலவு என்னும் நூலில் முத்தூர் அகத்தியர் என்னும் தமிழ்ப்புலவர் ஒருவர் பெயர் காணப்படுகின்றது. அவரை ஒப்ப மதிப்பைப் பெற்றிருந்த ஒருவரே அகத்தியராவர். முத்தூர் கன்னியாகுமரிக்குத் தெற்கேயிருந்து மறைந்துபோன பாண்டியநாட்டின் பகுதியில் உள்ளது. இதனால் ஆரியர் தென்னாடு வருவதன்முன் அகத்தியர் என்னும் தமிழர் ஒருவர் இருந்தாரென்பது செங்கோன் தரைச்செலவுநூலால் தெரியவருகின்றது.

   தமிழ்நாட்டில், அகத்தியர் என்னும் பெயருடன் பலர் விளங்கியிருத்தல் கூடும். அவர்களுள் ஒருவரே மிகப்புகழ் படைத்தவர். இவருடைய பெயரைச் சுற்றி அவர் புகழை விளக்கும் பல கதைகள் வந்து திரண்டன. இவ்வாறே ஆரியஅகத்தியரைக் குறித்த கதைகளும் அவர் பெயரைச்சுற்றித் திரண்டன. சங்ககாலத்துக்குப் பின் ஆரியக்கதைகளும் தென்னாட்டு அகத்தியர் கதைகளோடு வந்து கலந்தன”.

               கி.பி. முதல் ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய இலக்கியங்கள் எவற்றிலாவது அகத்தியர் கடவுளிடமிருந்து தமிழைக் கற்றாரென்றாவது, அவர் தமிழைத் தோற்றுவித்தா ரென்றாவது கூறப்படவில்லை. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் செய்தாரென்றும், அவர் சிவபெருமானிடத்தும் சுப்பிரமணியக் கடவுளிடத்துமிருந்து தமிழைக் கற்றாரென்றும் வழங்கும் கதைகள் கி.பி.1000க்குப் பின் தோன்றினவாதல் வேண்டும்”.

    சில செய்திகளில் சிறந்த மாந்தர் பெயரைச் சிறந்த பொருள்களுக்கு இட்டு அழைப்பது மாந்தர் கொள்கை. அது மலை, ஆறு, ஊர் முதலியவற்றிற்கும் பொருந்தும். அதுபோல் அகத்தியனார் சிறந்தவராயிருத்தலின் அவர் பெயரை விண்மீனுக்கு இட்டிருக்கலாம். அதனால் அவர் தமிழுக்கும் ஏதும் செய்தாரென்று நிச்சயிக்க முடியாது

                சீத்தலைச்சாத்தனார் (மணிமேகலைஆசிரியர்) காலத்தில் அகத்தியரைப் பற்றிய வரலாறு மிகப் பழங்கதையாக வழங்கிற்றே யன்றி அகத்தியர் தமிழோடு தொடர்பு பெறவில்லை. அக்காலத்தில் அகத்தியர் பொதியமலையில் இருந்தாரென்னும் வரலாறு வழங்கிற்று. 

                அகத்தியர் குடத்தில் பிறத்தல், பிரமதேவருக்கு ஊர்வசியிடம் பிறத்தல் போன்ற கதைகளை ஆராய்தல் மணல் சோற்றில் கல்ஆராய்தல் போலாகுமெனக் கருதி அவற்றை ஈண்டு ஆராய்ந்திலேம்.

            கவிராச பண்டிதர் செகவீரபாண்டியன் எழுதிய நூல் அகத்திய முனிவர்என்பதாகும். இந் நூல், அகத்திய முனிவரின் பிறப்பு, இருப்பு, குணம், செயல், பெருமை என்னும் ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. அகத்தியர் பிறப்பு பற்றிக்கூறும்போது, ‘நதி மூலத்தையும் முனிமூலத்தையும் முனைந்து காணலாகாதென மூதறிவாளர் புனைந்து கூறியுள்ளார்என்று கூறிவிடுகிறார்.

           சிவன்-சிவை திருமணத்தில் வடக்கு தாழ தெற்கு உயர்ந்ததாகக் கூறி சிவன் அகத்தியரைத் தெற்கே போகப் பணித்த கதை, அகத்தியர் பொதிகைமலைக்கு வந்து அகத்தியம் என்னும் இலக்கணநூலை எழுதியதாகக் கூறப்படும் கதை முதலிய எல்லாவற்றையும் உண்மையாக நடந்ததாக எழுதுகிறார். அகத்தியர் ஒருவரே எனக் கருதுகின்றார். எல்லாப் பழங்கதைகளையும் தரவுகள் சான்றுகள் பற்றிக் கருதாது உண்மையென எழுதுகின்றார்.

                முல், இடை, கடை என முக்கழகங்களிலும் (சங்கங்களிலும்) அகத்தியர் இருந்ததாகக் கூறுகிறார். கூறப்படும் நிகழ்வுகளுக்கு இடையில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இருக்க, அகத்தியர் தம் ஆற்றலால் அவ்வளவு காலம் உயிர்வாழ்ந்ததாக எழுதுகிறார். எனவே எல்லாப் பழங்கதைகளையும் வெறும் நம்பிக்கை அடிப்படையில் நடந்ததாகக் கூறுவதால், ஏற்க இயலாதனவாக உள்ளன. மேலும், இந் நூல் அறிவுக்கும் அறிவியலுக்கும் தொடர்பற்ற செய்திகளைக் கூறுவதால், நம்பகத்தன்மை இல்லாததாக உள்ளது.

     அறிஞர் ஆ.சிவலிங்கனார் அகத்தியர்கள்என்ற தம் ஆய்வுநூலில், “அகத்தியர் ஒருவரல்லர். நால்வருக்கு மேற்பட்டிருந்திருத்தல் வேண்டும். அவருள் தமிழ் அகத்தியர் இருவர். ஆரியஅகத்தியர் இருவர்... பிற அகத்தியர்களும் இருந்திருக்கின்றார்கள் என்று எழுதியுள்ளார். இதை முன்னரே எடுத்துக்காட்டினோம். சிவலிங்கனார், பெரும்பாலும் பழங்கதை (புராணக்கதை)களை ஒட்டியே கருத்துரைக்கின்றார்.  

                இலிங்கம்- இதனை லிங்கம்என்று கூறி ஆரியச்சொல் என்பர். ஆரியர்களுக்கு இலிங்க வழிபாடேயில்லையென்றும் அவர்கள் தமிழர்களுடன் கலந்தபின்னரே இலிங்க வழிபாட்டை மேற்கொண்டனர் என்றும் ஆராய்ச்சியின் முடிபாக அறிஞர் கூறுகின்றனர் ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்தபின்னர் எழுதப்பட்ட இருக்குவேதத்திலும் இலிங்க வழிபாட்டைப் பற்றிக் கூறப்படவில்லை. அதனால் இலிங்கம் என்பது தமிழ்ச்சொல்லே யென்பது தேற்றம்.  இலிங்கம் என்றசொல் எப்படி ஆரியச் சொல் எனப்பட்டதோ அதே போன்று அகத்தியர் என்ற சொல்லும் ஆரியச் சொல்லாக்கப்பட்டது. இது தூய தமிழ்ச்சொல். அகம் என்ற பகுதியின் அடியாகத் தோன்றியது. அகத்தியர் என்பது -. அர் விகுதி. அத்துசாரியை. அகத்தர் என்பது பின் அகத்தியர் என்றாகியிருக்கலாம்.

            அகத்தியரைப் போல அக்காலத்தில் முத்தமிழையும் முறைப்பட ஓதியுணர்ந்து தம்மகத்தில் நிறுத்தியவர் இன்மையின் அக்கால மக்கள் இவரைச் சிறப்பிப்பான் வேண்டி அகத்தியர் என்று அழைத்தனராதல் வேண்டும். அச் சிறப்புப் பெயரே நிலைப்ப தாயிற்று”.

    அகத்தியர் வடநாட்டிலிருந்து தம்மொடு வந்த பார்ப்பனர்களுக்காக இலக்கணத்தை (அகத்தியம்) யியற்றினார் எனக் கூறுவாரும் உளர். அவர் கூற்று அகத்திய நூலாசிரியரை வடநாட்டகத்தியர் எனக் கொண்டமையால் நேர்ந்த பிழையாகும்என்று எழுதுகின்றார்.

                சிலர் தலைச்சங்கத்திலிருந்த அகத்தியரே இடைச்சங்கத்தும் இருந்தார் என்பர். அது பொருந்தாது’. தலைச்சங்கத்திருந்த அகத்தியரே இடைச்சங்கத்தும் இருந்தார் என்றால் அகத்தியர் 4410 ஆண்டுகட்குமேல் இருந்திருக்க வேண்டும் அன்றோ? இது எள்ளளவும் நம்புதற்கியலாதது’ – என்கிறார்.

           வடநாட்டகத்தியர்களைப் பற்றிக் கட்டிய கதைகள் பல. நடந்தன சில. ஆரியர்கள் தம்மை யுயர்த்திக் கொள்ளச் செய்த சூழ்ச்சிகள் பல. அவற்றுள் தலைசிறந்தது வேதத்தைச் சூத்திரர் பயிலுதல் கூடாது என்றது. தமிழர்களை அவர்கள் சூத்திரர் என்றனர்வேதம் இறைவன் உரைத்தது என்றனர். கடவுளிடத்து நம்பிக்கையும் ஆழ்ந்த பற்றுதலும் கொண்ட தமிழர் நம்பினர். அதனால் பலர் ஆரியமயமாயினர். தம்மைத் தாமேயிழிவுபடுத்திக் கொண்டனர்அதன் விளைவுகள்தாம் ஆரிய அகத்தியர்கள் தென்னாடு போந்ததும் ஆரியர் மிகுதியாகக் குடியேறியதும் ஆம்” - என்று குறிப்பிடுகின்றார்.

                இமயமலை யரசனிடம் சென்று சிவனார் பார்வதியை மணந்தகாலைத் தேவரெல்லாம் கூடிச் சேர இருந்தமையின் தென்திசை உயர்ந்ததாக அதனைச் சமப்படுத்துவான் வேண்டிச் சிவனார், அகத்தியரை நோக்கித் தென்திசைசென்று பொதிகையில் இருக்க என, அவர் தென்னாடு போந்தார் இதை யூன்றி நோக்கின் மறைவாக உள்ள ஓர் உண்மை புலப்படும். தென்திசை யுயர்ந்த தென்பது தென்னாடு பல வளங்களாலும் கல்வி கேள்விகளாலும் வீரம் முதலியவற்றாலும் சிறந்துயர்ந்த நிலையையே குறிக்கும். இதனைக் கேள்வியுற்ற ஆரியர் (இமயஅரசன் மகள் பார்வதி மணத்திற் கூடியவர்கள்) கூட்டத்துள் ஒருவர் தென்னாடு நம் நாட்டினும் உயர்வுற்றது அதனை எப்படியேனும் கீழ்ப்படுத்துதல் வேண்டும். நம்மால் வென்று கீழ்ப்படுத்த இயலாது. சூழ்ச்சி கொண்டுதான் கீழ்ப்படுத்த முடியும். அங்ஙனம் கீழ்ப்படுத்த வல்லவர்  தென்னாட்டானின் பெயர் பூண்டவராகிய இவ் வகஸ்தியரே செல்லத் தகுதியுடையார். ஆதலின் இவர் செல்லின் நன்று என்றனர். அனைவரும் ஆம்ஆம் என்றனர். அவர்கள் கருத்துப்படியே ஆரிய அகத்தியர்-1 தென்னாடுநோக்கிப் புறப்பட்டார். இதுவே ஆரிய அகத்தியர்-1 தென்னாடு வரக்காரணம்”- என்று எழுதுகின்றார்.

                அகத்தியர் பிறப்பு பற்றிய கதைகளைப் பற்றிக் கூறும்போது, “ஒரு பெண்ணுடன் கலவாமல் ஆடவனின் விந்திலிருந்தே ஒரு பிறவியுண்டாகும் என்றால் எவ்வளவு தூரம் பொய்யென்பதைக் கூறவேண்டுவதில்லை. இத்தகைய பொய்க்கதைகள் புனைவதற்கென்றே தேவர்கள் நினைத்த அமயத்தில் நினைத்தவற்றைச் செய்துமுடிக்கும் ஆற்றலினரென்றும், மாயமாய் மறைதல், வானத்திற் பறத்தல் போன்ற இயலாத செயல்களையும் செய்வர் என்றும் அறிவுக்குப் பொருத்தமில்லாதனவற்றைப் புளுகிக்கொண்டார்கள் என்பதில் என்ன வியப்பு?” - என்கிறார்.

                ஆ.சிவலிங்கனார், முடிப்புரையில், அகத்தியர் ஒருவர் அல்லர் பலர் என்றும், அவருள்ளும் தமிழகத்தியர்கள் இருவர் இரண்டு சங்கங்களில் திகழ்ந்தனர் என்றும் ஆரிய அகத்தியர்களும் இருவர் என்றும், முத்தூர் அகத்தியன் என்பவரும் ஒருவர் இருந்தனர் என்றும், பிற அகத்தியர்களும் இருந்திருக்கின்றனர் என்றும் அவர்தம் வரலாறுகளும், ஆரியஅகத்தியர்களைப் பற்றிய கட்டுக்கதைகளும் ஒருவாறு உணரலாம் என்றும் கூறுகின்றார்.

                இனி, முனைவர் தங்கராசு, துடிசைகிழார் அ.சிதம்பரனார் ஆகிய இருவரின் நூல்கள் அகத்தியர் பற்றிக் கூறுவனவற்றையும், பிற அறிஞர் கட்டுரைகளில் அவரைப் பற்றிக் கூறுவனவற்றையும் சுருக்கமாகப் பார்ப்போம்; முடிவான கருத்துரையுடன் முடிப்போம்!


------------------------------------------------------------------------------------------------------------------------------------