குறை தவிர்த்து நிறை போற்றக் கற்போம்!
--------------------------------------------------------------------------------------------------------------
ஓர் ஊரில் ஓர் அரசனிருந்தான்; அவனுக்கு ஒரு கண்ணிலும் ஒரு காலிலும் குறைபாடு!
குறைபாடுடைய கண்ணால் பார்க்க முடியாது, சுருங்கி இருக்கும். குறைபாடுடைய காலால் நிற்க முடியாது, நொண்டிக்காலாக இருக்கும்!
அந்த அரசன் தன்னை அழகான ஓவியமாகத் தீட்டித் தருமாறு ஓவியர்களிடம் கேட்டுக்கொண்டான்!
‘நொண்டிக் காலையும் நொள்ளைக் கண்ணையும் எவ்வாறு அழகான ஓவியமாக வரைவது?’ என்று தயங்கிய ஓவியரெவரும் முன்வரவில்லை!
ஆனால், ஓர் ஓவியர், தான் அழகார்ந்த அரசனின் ஓவியத்தை வரைந்து தருவதாக முன்வந்தார்.
அவர் வரைந்து தந்த ஓவியத்தில், அரசன் எந்த மாற்றமுமின்றி ஒப்பற்ற பேரழகோடு இருந்ததைப் பார்த்து அனைவரும் வியந்தனர்!
அந்த ஓவியத்தில் –
அரசன், கையில் நாணேற்றிய அம்புடன் ஒற்றைக் கண்ணால் குறிபார்த்த வண்ணம், ஒருகாலை மடக்கி நின்று, குறி பார்த்த பொருளின் மேல் அம்பெய்யும் நிலையிலிருந்தான்!
குறைபாடுடைய கண்ணையும் காலையும் ஓவியத்தில் காணவே இல்லை! அவற்றைத் தம் ஓவிய அறிவுத் திறத்தால் அறவே மறைத்து, ஒப்பற்ற ஓர் ஓவியமாக வரைந்திருந்தார்!
நாமும், பிறர் பிறர்
குறைபாடுகளை, வலுவினமையை அறவே
மறந்து அவர்தம் நற்பண்புகளைப் போற்றக் கற்போமே!
{பேரா.பசுபதி ஐயா (தேவமைந்தன்)
அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த ஆங்கிலக் குறிப்பைத் தழுவி எழுதியது}
---------------------------------------------------------------------------------------------------------------