அரணமுறுவல்!
இன்று (6.11.2015) காலை அன்பிற்கினிய முனைவர்
தோழர் ந.அரணமுறுவல்
மீளாத்துயில் ஆழ்ந்த செய்தியை ஐயா செந்தலை கவுதமனார்
முகநூல் குறிப்பின் வழி அறிந்து அதிர்ச்சியடைந்தேன் பெரு வருத்தத்திற் கிடையே பழைய நினைவுகள்
நிழலாடின.
1960ஆம் ஆண்டுகளின் இறுதியில், 1970ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில்,
தேவநேயச்சித்திரன், பொதியவெற்பன், கு.அண்டிரன், அரணமுறுவல் ஆகியோர் அடங்கிய அக்காலத் ‘தென்மொழி’ அன்பர் குழு “தமிழம்” என்னும் தலைப்பில் தனி இதழ் தொடங்க முயன்றதும் அம்முயற்சி
செயலாகும் முன்னரே ஐயா ‘செம்பியன்’ பன்னீர்ச்செலவம் ‘தமிழம்’ இதழைத் தொடங்கி நடத்தியதும் நினைவுக்கு வருகின்றது.
1974ஆம் ஆண்டளவில் நான் திருக்கோவலூரில் பணியில் இருந்தபோது, சந்தைப்பேட்டையில்
நான் குடியிருந்த வீட்டிற்கு வந்து பல செய்திகளைப் பேசிக்கொண்டிருந்ததும்,
போகும்போது நான் வைத்திருந்த நூல்கள் பாவாணரின் வடமொழி வரலாறு, தமிழர் மதம்
மற்றும் இரண்டு நூல்களை வாங்கிச் சென்றதும் நினைவில் உள்ளன.
கடலூரில், “தென்மொழி” அலுவலக/அக-த்தில் பாவலரேறு
பெருஞ்சித்திரனார் ஐயா நடத்தி வைத்த அரணமுறுவலின் திருமண நிகழ்வும் அதையொட்டி
நடந்த சிறு விருந்தும் மறக்க முடியாதவை.
பின்னர், அவர் சென்னை சென்றதும் தொடர்ந்து படித்ததும் முனைவரானதும் பல்வேறு
தமிழ்ப்பணிகளில் ஈடுபட்டதும் அவரை அவ்வப்போது பார்க்கும்போது அவரே கூறவும் அவருடைய
நெருங்கிய உறவினர் கு.அண்டிரன் ஐயா வழியும் அறிந்த செய்திகள்.
அவர் ’தமிழியக்கம்’ இதழ் தொடங்கி நடத்திய போது,
அவருக்கு இதழ் தொடர்பாக எழுதிய மடலும், அவர் உலகத் தமிழ்க் கழகத்தை மீண்டும்
செயற்பட வைக்க எடுத்த பெருமுயற்சியும், அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி
கண்டதும் முகன்மையாகக் குறிப்பிடவேண்டிய செய்திகளாகும்.
“முதன்மொழி” இதழைச் சிறப்பாகக் கொண்டுவந்த
வினைப்பாடும் பாராட்டப்பட வேண்டியதாகும். தமிழ் எழுத்து மாற்ற முயற்சியை எதிர்த்து
வீழ்த்த நடந்த பெரும் பணியில் உ.த.க. சார்பில் அவர் பங்கு குறிப்பிடத் தக்கதாகும்.
குமரிமுனையில் திருவள்ளுவர் சிலை காப்புக்காக அவரும் மா.செ.தமிழ்மணியும் பிறரும்
எடுத்த முயற்சிகள நினைவுக்கு வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக, பல்வேறு நிலைகளில் தமிழ், தமிழர் நலன் காக்கும் பணிகளில்
அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். அவர் மறைவை, இன்று ஈடு செய்ய இயலாப்
பேரிழப்பாகவே உணர்கின்றேன். அந்தத் ‘தென்மொழி’ அன்பர்க்கு, பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாசறையில்
உருவெடுத்த தமிழ்ப்படை மறவருக்கு, அஞ்சா நெஞ்சுடன் களப்பணியாற்றிய வல்லவர்க்கு
வீரவணக்கம் செலுத்துவோம்!
வீரவணக்கம்! வீரவணக்கம்! அரணமுறுவலுக்கு வீரவணக்கம்!
------------------------------------------------------------------------