தமிழில் கலந்து எழுதப்படும் அயன்மொழிச் சொற்கள், சரியான பொருளைப் புரிந்து கொள்ளாமல் மனம்போனபோக்கில் எழுதப்படுகின்றன என்பதை மொழி ஆய்வாளர்கள், தமிழில் பிறமொழிச் சொற்களைக் கலந்து எழுதுவதால் விளையும் கேடுகளில் ஒன்றாக மிகத்தெளிவாக எடுத்துக் காட்டி வருகின்றனர்.
அறிஞர் மு.சண்முகம்(பிள்ளை) தமிழகராதி பற்றிய அறிமுகக் கட்டுரையில் தேவமைந்தன் என்னும் பேராசிரியர் பசுபதி ஐயா வடமொழிச் சொற்களின் உரியபொருள் அந்த அகராதியில் கொடுக்கப்பட்டுள்ளதையும் அதன்வழி அவ்வடசொற்கள் தொடர்பற்ற பொருளில் தமிழில் கலந்தெழுதும் போது பயன்படுத்தப் படுவதை அறிய முடிவதையும் எடுத்துக்காட்டி யிருந்தார்கள். இதைத் ‘திண்ணை’யில் வந்த அக்கட்டுரையைப் படித்தவர் அறிவர்.
‘அவர் எங்களோடெல்லாம் சேரமாட்டார்; தனிஆவர்த்தனம் தான்’ - என்றால் தவறான பொருள்தரும். ஏனெனில், ஆவர்த்தனம் = மறுமணம். ஆவர்த்தித்தல் என்றால் மறுமணம் செய்து கொள்ளுதல்.
பிரமாதம் என்றால் தவறு, பேரிடர், அளவில்மிக்கது,விழிப்பின்மை என்பனவே பொருள்களாம். இச்சொல் எவ்வளவு தவறாகப் பயன்படுத்தப் படுகிறது!
உதாசீனம் என்பதற்கு ‘விருப்பு வெறுப்பில்லா நடுநிலை’ என்று பொருள்.
அபிமான புத்திரன் என்பதற்கு வளர்ப்பு மகன், வைப்பாட்டி மகன் எனபனவே பொருள்களாம்.
பாமரன் என்றால் அறிவில்லாதவன் என்றே பொருள்.
பிதாமகன் என்றால் தந்தையைப் பெற்ற பாட்டன் என்பதே பொருளாம்.
‘மிகுதியாக’, ‘விருப்பத்தின்படி’ என்பவற்றையே பொருள்களாகக் கொண்ட யதேச்சை என்ற சொல், தற்செயல், தற்செயலாக என்ற பொருள்களில் எழுதப்படுகிறது.
சிரமம் என்றால் களைப்பு,, உழைப்பு, படைக்கலப் பயிற்சி என்பனவே பொருள்களாம். – இப்படி நிறைய சொற்களை எடுத்துக்காட்டலாம்
இவற்றைப் போன்றே தமிழில் கலந்துள்ள ஆங்கிலம் உட்பட மற்றமொழிச் சொற்களுள்ளும் அவற்றிற்குரிய பொருள் தவிர்த்து விருப்பத்திற் கேற்ப வேறு பொருள்களில் கையாளப் படும் சொற்களும் உள்ளன.
‘அந்தஸ்து’ என்ற சொல் சமற்கிருதச்சொல்லே; உருதுச்சொல் அன்று என்றே அகராதிகள் சொல்கின்றன. ஆங்கிலத்தில் தகுதி-யை ‘fitness’ என்கிறார்கள் என்பது சரியன்று. ‘fitness’ என்பதன் முதற்பொருளாக ‘பொருத்தம்’ என்பதையே தருகிறது சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ் அகரமுதலி (பக்கம் 389). அந்தஸ்து என்பதை ஆங்கிலத்தில் ‘status’ என்று சொல்கிறார்கள் என்பதும் சரியன்று. ஏனெனில், மேற்குறித்த அகராதி ‘status’ என்பதற்கு முதற்பொருளாக ‘சமுதாயப் படிநிலை’ என்றே குறிக்கின்றது. The Compact Oxford Reference Dictionary – யில் ‘status’ என்பதற்கு முதற்பொருளாக ‘a person’s social or professional position in relation to others’ –எனக் கொடுக்கப் பட்டுள்ளதைக் காணலாம்.
தமிழ்மொழியில் எழுதும்போதும் பேசும்போதும் தமிழ்ச் சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்பது எப்படி வேறுபாட்டை உண்டாக்கும்? இவ்வாறு கூறுவது ‘ஆக்கிரமிப்பு’ என்பது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?
‘Minor irrigation’ என்பதை ‘Small irrigation system’ என மாற்றி எழுதி, அதைத் தமிழில், ‘சிறுநீர்ப் பாசனம்’ என எள்ளல் மொழிபெயர்ப்பு செய்துகொண்டு, அதுவே மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்று தம்மைத் தாமே பாராட்டிக் கொண்டு, ‘சிறுநீர்ப் பாசனம்’ என்பது சங்கடப் படுத்துகிறது என்று எழுதி உலகின் முதற்றாய்மொழி என்றும் உயர்தனிச் செம்மொழி என்றும் போற்றப்படும் தமிழ்மொழியை இழிவுறுத்த முயல்வது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும் – என்பார் ஒருதனிப் பேராசானான வள்ளுவப் பெருந்தகை.
தாம் ஏற்க விரும்பாத கருத்தை ஒருவர் கூறினால், அதை வெறி என்பதையும், அதனால் தமிழ் அழிவை நோக்கியே போகும் எனச் சாவமிடுவதையும் எடுத்துக் காட்டுவதைப் பொய்யுரைப்பதாகக் கூறுவது நெஞ்சறிய உண்மை உரைப்பதாகுமா?
முரண்படும் கருத்துக்களை முறையாக மறுக்காமல், மேலாளுமை மனவுணர்வோடு சொற்களால் இழிவுசெய்ய முனையும் போக்கை இருபத் தொன்றாம் நூற்றாண்டில் ஏற்கமுடியுமா?
கார்கிலைப் பெயரில் கொண்டவர் என்பது சுட்டும் முறைகளில் ஒன்றுதானே? அங்ஙனம் சுட்டுவதைக் கார்கில் மேல் எரிச்சல் என இட்டுக் கட்டி ஏற்றிக் கூறுவது நெஞ்சறிய உண்மை கூறுவதாகுமா?
‘செத்தமொழி தாங்கிகள்’ எனக் குறிப்பிட்டது அறச்சினத்தின் வெளிப்பாடே. அவ்வறச்சினத்திற்குப் பல்வேறு தமிழறிஞர்கள் எடுத்துக் காட்டியுள்ள நயன்மையான பல மறுக்க வியலாக் காரணங்களும், அவற்றிற்கான சான்றுகளும் உள. ஒரு சான்றாக, பரிதிமாற்கலைஞரின் ‘தமிழ்மொழியின் வரலாறு’ என்ற நூலில் வடமொழியர் தமிழுக்கு எதிராகச் செய்த கெடுங்கேட்டுச் சூழ்ச்சி வினைப்பாடுகள் விளக்கப்பட் டுள்ளதைக் காட்டலாம்.
மொழி தொடர்பான செய்தியில், எவ்வகைத் தொடர்பும் இன்றித் திடுமென ‘இந்து மதத்தின்மேல் காழ்ப்புணர்ச்சி’ எனப் பொருத்தமும் பொருளுமற்ற ஒன்றைக் கூறித் துணைதேட முயலும் போக்கை நெஞ்சறிய உண்மை கூறுவதாகச்சொல்லமுடியுமா?
‘அபத்தமான உச்சரிப்புக்கு அடிகோலக்கூடிய தனித்தமிழில் எழுதுகிறேன் பேர்வழி என்று அபத்த மாற்றங்களில் ஈடுபட்டு..’ – என்ற சொற்றொடர் தனித்தமிழை இழிவு படுத்தவில்லை என்ற கூற்று நெஞ்சறிய உண்மையைச் சொல்வதாகுமா?
முறையான தக்க பொருந்திய மறுமொழி கூற இயலாத நிலையில், ‘உங்களால்தான் தமிழுக்கும் பெருஞ்சித்திரனாருக்கும் இழுக்கு’ எனக்கூறும் எரிச்சல் கூற்றால், ஆழ்மனத்தில் மூவர்மாட்டும் கொண்டுள்ள வெறுப்புணர்ச்சிதானே வெளிப்படுகிறது.
கருத்துக்களைக் கருத்துக்களால் நேர்கொள்ள வேண்டும் தானே? அதை விடுத்து, தான் விடைகூறுவது ஏதோ அருட்கொடை புரிவதாக மேலாளுமை மனவுணர்வில் தருக்கிக் கொள்வதும் தொடர்பே இல்லாமல் மதவுணர்வை எழுப்பிக் குளிர்காய முயல்வதும் வேறுபாட்டை விளைவிக்கும் முயற்சிகளாக அமைகின்றனவே யன்றி முன்னேற்றமான போக்கைக் காட்டுவனவாக இல்லையே!
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. – என்பார் பொதுமறை ஆசான். -----------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக