தமிழ்நாட்டில் தமிழின் எதிர்கால நிலை!
தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பள்ளிகளில் தொடக்கக் கல்விமுதல் உயர்கல்வி வரையில் தமிழைக் கற்பிப்பதே இல்லை; மிகப் பெரும்பான்மைப் பள்ளிகளில் தமிழ்வழியில் கல்வியில்லை. ஆட்சியில், பெயர் அளவிற்கே தமிழ் ஆட்சிமொழியாக இருக்கிறது. பல குடும்பங்களில் வீட்டிலும் தமிழில் பேசுவது குறைந்துவிட்டது. இந்தி, சமற்கிருதத் திணிப்பு நாளுக்குநாள் தடையின்றிக் கூடிக்கொண்டே போகிறது. வழக்குமன்றத்திலும் தமிழ் இல்லை. வழிபாடுகளிலும் தமிழ் இல்லை. நாளுக்குநாள் ஆங்கிலச்சொற்கள் கல்லாத தமிழர் வாயிலும் புழங்குகின்றன. தமிழ்நாட்டு அமைச்சர்களிலேயே சிலருக்குத் தமிழைப் படிப்பதில் தடுமாற்றம் தெரிகிறது. திரைப்படம், தொலைக்காட்சி, பல்வேறு குமுக ஊடகங்களிலும் கலப்புத்தமிழே கோலோச்சுகிறது. வாயளவில் 'தமிழ், தமிழ்' என்று ஆட்சியாளர்கள் பேசுகிறார்களே தவிர உண்மையான ஆக்கமும் ஊக்கமும் இல்லை!- இப்படிப்பட்ட நிலைகளில் தமிழ்நாட்டில் தமிழின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று உணர்வுள்ள தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில், தமிழர்களில் ஓரளவு உணர்வும் அறிவும் உள்ளவர்களும் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்றுமொழிப் பள்ளிகளில், இன்னும் சொன்னால் ஆங்கிலவழி பயிற்றும் தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கிறார்கள்! இதற்குப் பெரும் தொகைகளைச் செலவழிக்கின்றார்கள்! தமிழ்வழியில் அரசுப்பள்ளியில் படித்தவர்களும் தம் பிள்ளைகளை ஆங்கிலவழித் தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கின்ற போக்கு நிலவுகிறது.
அவர்களில் பலர், குமுகச் சூழலைக் காரணம் காட்டுகின்றார்கள். குமுகத்தில் நிலவும் சாதிய, பொருளியல் ஏற்றத்தாழ்வுகளைப் போக்க முகன்மைக் காரணமாக இருக்கும் கல்வியிலேயே ஏற்றத்தாழ்வுகள் உள்ளதைக் காரணம் காட்டுகின்றார்கள்.
ஏழைகளுக்கு ஒரு கல்வி, பணக்காரர்களுக்கு ஒரு கல்வி என்ற நிலையில் கல்வியில் குமுகநயன்மை(சமூகநீதி) அறவே இல்லாத நிலை உள்ளது. ஏழைகள் காலை உணவு, பகலுணவு, மாலைஉணவு பெற்று அரசுப் பள்ளிகளில் படிக்கின்ற நிலை உள்ளது. பொருள் வசதி சற்றுவளர்ந்த நிலையினர் பள்ளியைத் தேர்வுசெய்யும்போது அரசுப்பள்ளிகளில் பாடத்திட்டங்களிலும் பள்ளிக் கட்டமைப்பு வசதிகளிலும் நிறைவில்லாத நிலை அவர்களைத் தனியார் பள்ளிகளை - ஆங்கிலவழிப் பள்ளிகளை - நோக்கித் தள்ளுகின்றது எனக் கூறுகின்றனர். வருங்காலப் போட்டி உலகிலும் நுழைவுத் தேர்வுகளிலும் தம் மக்கள் பின்தங்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு பெற்றோரை அவ்வாறு ஆங்கிலவழித் தனியார் பள்ளிகளை நாடிச்செல்லச் செய்கின்றது என்கின்றனர். அரசு இவற்றுக்குத் தீர்வுகாணாத வரை இந்நிலை மாறாது என்கின்றனர்.
குமுகத்தில் அரசுப்பள்ளியில் படிப்பதும் தமிழ்வழிப் பள்ளியில் படிப்பதும் தாழ்வு என்னும் மனநிலையை மாற்ற எவராலும் எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர்.
அரசுப்பள்ளிகளில் சேர்க்க விருப்பம் இருந்தும், பல பெற்றோர் தனியார் ஆங்கிலவழிப் பள்ளிகளை நாடும் நிலையின் பின்னணியில் அரசுப்பள்ளிகளில் தூய்மையான கழிப்பறை, நலஅடிப்படை வசதிகள், குழந்தைகள் பாதுகாப்பாகப் பள்ளிக்கு வந்து செல்வதற்கெனச் சிறப்பு அரசுப்பேருந்துகளோ பள்ளி ஊர்தி வசதிகளோ இல்லாமை, பள்ளிக் கட்டடங்களைப் பேணாமை முதலிய தேவையான அடிப்படை வினைப்பாடுகளை அரசு செய்யவில்லை என்கின்றனர்.
இந்தியா முழுவதும் சமமான ஒரே கல்விமுறை, தாய்மொழி வழிக்கல்வி என்கிற நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இருந்தும், இதுவரை அரசுகள் இவற்றில் கவனம் செலுத்தவில்லை.
தமிழர்களில் மிகப் பெரும்பாலார் இரண்டு தலைமுறைக்கு முன்னால் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரிட்டனர். தமிழ்வழியில் படிக்க வைத்தனர். வீட்டில் அயல்மொழி பேசுவதில்லை. இப்போது நிலை ஏறத்தாழ அடியோடு மாறிவிட்டது. கடந்த இரண்டு தலைமுறைகளில் தமிழ்க்குமுகத்தில் ஏற்பட்டுள்ள குமுக, பொருளியல், வாழ்வியல் மாற்றங்கள் மிக முகன்மையானவை. பெயரிடுதல், கல்விமுறை, அன்றாடப் பேச்சுவழக்கு ஆகியவற்றில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
உலகவயமாக்கல், வேலைவாய்ப்புத் தேவைகள் காரணமாக, அன்றாடப் பேச்சில் ஆங்கிலச் சொற்களின் கலப்பு (Code-mixing) பெரும் அளவில் மிகுந்துள்ளது. நகரப்புறங்களில் பல குடும்பங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசுவதைக் குறைத்துக் கொண்டுள்ளன. உயர் நயன்மன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ளது. ஒன்றியஅரசுத் துறைகளில் இந்தி, சமற்கிருதம், ஆங்கிலத்தின் வல்லாண்மை தொடர்வது தமிழர் உரிமைகளுக்கான போராட்டங்களைத் தொடர்ந்து தூண்டிவருகிறது.
தமிழர்கள் எதிர்கொள்ளும் உண்மையான தீங்கு மொழிச் சிதைவு ஆகும். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் முழுமையாக ஒரு சொற்றொடரைக்கூடத் தமிழில் பேசமுடியாமல், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பேசுவது மிகுந்து வருகிறது. தமிழ் ஒரு புதிய கலப்புப் பேச்சுமொழியாக உருவெடுக்கும் தீங்கு இருக்கிறது. தமிழைப் பேசத்தெரிந்தவர், பிழையின்றிப் படிக்கவும் எழுதவும் தெரிந்தவர் எண்ணிக்கை மிகுதியாகக் குறைந்து வருகிறது. செழுமையான தமிழ் இலக்கியங்கள், செவ்விலக்கியங்களை வாசிக்கும் வழக்கமும் புரிந்துகொள்ளுவதும் வருங்காலத் தலைமுறையினரிடம் இருக்குமா என ஐயம் எழுகிறது.
பெற்றோர், பிள்ளைகளுக்குத் தமிழ் வழிச்சிந்தனையையும், படிப்புப் பழக்கத்தையும், பிழையின்றிப் பேசும் உணர்வையும் வீட்டிலிருந்தே ஊட்டுவதில் ஆர்வமற்ற போக்கும் தென்படுகிறது.
சீனா, சப்பான், கொரியா, பிரான்சு, செருமனி, உருசியா, பின்லாந்து உள்ளிட்ட உலகில் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் வளர்ச்சியுற்ற பல நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. நோபல் பரிசு பெற்ற பல அறிஞர்களுக்கு அவர்கள் தாய்மொழியைத் தவிரப் பிறமொழி தெரியாது என்பது உண்மையாகும். மேற்கூறிய நாடுகளில், உலகின் எந்த மூலையில் எந்த மொழியில் புதிய அறிவியல் செய்தியோ பிறதுறைச் செய்தியோ வந்தாலும் உடனுக்குடன் அவர்கள் தாய்மொழியில் அச்செய்தி பெயர்த்தளிக்கப்படுகின்றது. நூல்களும் அவ்வாறே பெயர்க்கப் படுகின்றன. புதிய சொற்களை, குறியீடுகளை உடனே பெயர்ப்பதில் சிக்கல் இருந்தால் மூலநூல் சொற்களையும் குறியீடுகளையும் அப்படியே பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால், முறையாக அவற்றிற்கான தம் மொழியின் பெயர்ப்புச் சொற்களையும் குறியீடுகளையும் கண்டுபிடித்துப் பிறகு மொழிபெயர்த்த நூலில், செய்தியில் திருத்தம் செய்கின்றனர். இவ்வாறாகத் தமிழில் பெயர்த்துத்தரும் ஏற்பாடு பல வேண்டுகோள்களுக்குப் பின்னும் எந்த ஆட்சியாளராலும் செய்யப்படவே இல்லை.
தாய்மொழி வழி கற்கும் பிள்ளைகளுக்குச் சிந்தனைத் திறனும் (Critical Thinking), புதுமைப் படைப்பாற்றலும் அதிகமாக இருக்கும் என்பதை அந்நாடுகளில் மெய்ப்பித்துள்ளனர். பேச்சுவழக்கில் அழிந்துபோகும் நிலையில் இருந்த 'ஈப்ரு' என்னும் எபிரேய (Hebrew) மொழியை மீட்டுருவாக்கம் செய்து, நாட்டின் ஒரே ஆட்சிமொழியாகவும் கல்விமொழியாகவும் ஆக்கி இசுரேலியர் முன்னேறியுள்ள நிலையை உலகம் வியப்புடன் பார்க்கின்றது.
பெற்றோர் வேலைவாய்ப்பு நம்பிக்கையில் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்களை நோக்கி ஓடுவது தமிழுக்கு எதிரானது இல்லை! —பொருளியல் தேவைக் கட்டாயப்படுத்தும் முடிவென்பதை மறுக்க இயலாது. "தமிழ்வழியில் படித்தால் அரசு, தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு உறுதி" என்ற பொருளியல் உறுதிநிலையை உருவாக்குவதே தாய்மொழிவழிக் கல்வி வெற்றிபெற உறுதியான தீர்வாகும்.
தென்கொரியாவில் அனைத்து அரசுத் தேர்வுகள், தொழில் நிறுவனங்களின் நுழைவுத் தேர்வுகள் ஆகியவை 'கொரிய மொழியில்' மட்டுமே நடைபெறுகின்றன. தாய்மொழியில் தேர்ச்சி பெறாதவர்கள் உயர்பதவிகளுக்கோ அல்லது உள்நாட்டு வேலைவாய்ப்புகளுக்கோ செல்ல முடியாது என்றநிலை உருவாக்கப்பட்டுள்ளது. தாய்மொழி அறிந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 100% உறுதியும் முன்னுரிமையும் அளிக்கப்பட்டதால், மக்கள் இயல்பாகவே தாய்மொழிவழிக் கல்வியைத் தேர்ந்தெடுத்தனர்.
தமிழ்நாட்டில் இயங்கும் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களில் தமிழ்வழியில் படித்தவர்களுக்குத் தென்கொரியாவில் இருப்பதைப் போலக் குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடோ முன்னுரிமையோ வழங்க இங்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. தொழிற்கல்விக் கல்லூரிகளைத் தமிழ்வழியாக்கிச் செருமனியில் இருப்பதைப்போல உள்ளூர் தொழிற்சாலைகளுடன் நேரடிப் பயிற்சி ஒப்பந்த ஏற்பாடும் அறவே இங்கு இல்லை.
ஆட்சியில் சட்டங்கள், அரசாணைகள், அன்றாட நடைமுறையில் மடல் தொடர்புகள் அனைத்திலும் தமிழ் நடைமுறைப் படுத்தப்படாததால், தமிழ்வழி படித்தோர்க்கு வேலைக்கு உறுதி இல்லை. தொழிற்கல்வியும் தொழில்முறைப்பயிற்சிகளும் தாய்மொழியிலேயே வழங்கப்பட்டுத் தொழிற்கூடங்களோடு நேரடியாக இணைக்கப்படாததால் வேலையில்லா நிலை உருவாகிறது.
பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு வரும்போது ஆவணங்கள், மென்பொருள்கள், பயிற்சிக் கையேடுகளைத் தமிழிலேயே உருவாக்கக் கட்டாயப்படுத்தாததால் அவர்கள் மொழியினர்க்கே வேலைவாய்ப்புகள் சென்றுவிடுகின்றன.
தமிழர் வீடுகளில் தாய்மொழியில் பேசுவது குறையும்போது, அடுத்த தலைமுறைக்கு இயல்பான தமிழ் உணர்வும் சொற்களஞ்சியமும் கடத்தப்படுவது மிகவும் குறைகிறது. தமிழ்ப் பயன்பாடு ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்படுவதோடு, மக்களும் தங்கள் வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் தமிழைப் புறக்கணிக்கின்ற நிலையால் தமிழ் வழக்கொழிய நேர்கிறது. தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாதவரை, பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆங்கிலவழிக் கல்வியிலேயே சேர்ப்பார்கள். இதனால் தமிழ் வெறும் ஒரு "பாட மொழியாக"வும் இல்லாத சூழல் உருவாகும்.
பொருந்தல், கீழடி, சிவகளை முதலிய இடங்களின் அகழ்வாராய்ச்சிகள் தமிழர்களின் வரலாற்றுப் பழமையை அறிவியல் அடிப்படையில் மெய்ப்பித்து வருகின்றபோதும், தமிழ்மொழி, தமிழ்ப் பண்பாடு குறித்த பெருமிதமும், அதைக் காக்கவேண்டும் என்ற விழிப்புணர்வும் அரிதாகத் தமிழ்வழி படித்த சிலரிடமாவது காணப்படுமா என்ற ஐயம் எழுகிறது.
காலந்தோறும் பிற மொழிகளின் வல்லாண்மையை வென்று நிலைத்து நின்ற தமிழ், இந்தப் புதிய தொழில்நுட்பக் காலத்தில் தமிழர் கண்முன்னே வழக்கொழிய நேர்வதை இல்லையென மறுக்கமுடியாது.
செய்நுண்ணறிவு (AI), குரலறிதிறன் (Voice Recognition), இயற்கை மொழிச் செயலாக்கம் (NLP) ஆகியவற்றின் உதவியால் இணையத்திலும் திறப்பேசிகளிலும் தமிழின் பயன்பாடு அதிகமானாலும் தமிழ்நாட்டில் பயன்படுத்துவார் அருகிப்போகும் நிலை உள்ளது. தமிழ் படப்பாடல்கள், இணையவழிக் கேட்பு, (podcast), குமுகஊடக உள்ளடக்கம் (Social Media Content) வழி தமிழ்ப் பயன்பாடு இருந்தாலும் பயன்படுத்துவார் எண்ணிக்கை மிகவும் சிறுத்துப் போகும்.
தேசியக் கல்விக் கொள்கைகளும் ஒன்றிய அரசின் பல்வேறு திட்டங்களும் இந்தி, சமற்கிருதத்தின் வல்லாண்மைக்கு மேன்மேலும் வழிகோலக்கூடும். புதிய கல்விக் கொள்கையின் மொழித் திட்டம் தமிழக அரசியலில் எதிர்ப்பை உருவாக்கினாலும், ஒன்றிய வேலைவாய்ப்புத் துறைகளில்(தொடரித்துறை, பாதுகாப்பு, வைப்பகம், முதலியவை) இந்தி, சமற்கிருத மேலாண்மை தொடர்ந்து நீடிக்கும்.
"தமிழ் எங்கள் மூச்சு" என்று அரசியல் தளங்களில் முழங்கப்பட்டாலும், மேலாண்மையிலும் நயன்மைத் துறைகளிலும் பிற துறைகளிலும் தமிழை முழுமையாகச் செயல்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாடு (Political Will) இல்லாததால் சட்டம், வழிபாட்டுத் தளங்களிலும் தமிழ் புறந்தள்ளப்பட்ட நிலையே இருக்கும்.
ஒரு மொழி இறப்பது பேசுபவர்கள் குறைவதால் மட்டும் இல்லை — அது பயன்படுத்தப்படும் இடங்கள் (domains) குறைந்து போவதாலும்தாம்! குடும்பத்தில் மட்டும் பேசப்பட்டு, கல்வியிலும் மேலாண்மையிலும் நயன்மைத்துறையிலும் அறிவியலிலும் பயன்படாத மொழி, படிப்பறிவு மொழியாக இருந்து "சமையலறை மொழி”யாகச் சுருங்கிவிடுகிறது. இதைத்தான் மொழியியலாளர்கள் ஒரு மொழியின் மெதுவான இறப்பு என்கிறார்கள்.
இந்த அளவுகோலில் பார்த்தால், தமிழ்வழிக் கல்வியில் சேர்க்கை குறைவது, வழக்குமன்றத்தில் ஆங்கிலம், மேலாண்மையில் ஆங்கில ஆவணங்கள் முதலியவை உண்மையான பேரிடர்க் குறியீடுகளே! இவை எழுதும் தமிழை, சிந்திக்கும் தமிழைப் படிப்படியாக மழுங்கச் செய்யும்.
இன்று பேசப்படும் தமிழின் மிகப் பெரிய பரப்பாகத் திரைப்படம் இருந்தாலும் கலப்புத்தமிழை ஊக்குவதாலும், பாடல்களிலும் பிறமொழிக் கலப்பு மிகுவதாலும் தமிழின் அழிவுக்குத் துணைபோகின்றன.
தமிழ் ‘விக்கிப்பீடியா’ என்னும் கலைக்களஞ்சியம், இந்தியமொழிகளில் முன்னிலையில் இருந்தாலும், வலைப்பதிவுகள், வலையொளி போலும் குமுக ஊடகங்களில் தமிழ்உள்ளடக்கம் பெருகியிருந்தாலும், செய்நுண்ணறிவு வளர்ச்சியும் மொழிபெயர்ப்பும் எதிர்காலத்தில் ஆங்கிலத் தேவையைக் குறைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டாலும் கலப்புத்தமிழைக் கையாளுவதால் இவையும் மிக மெதுவாகத் தமிழை வீழ்த்துவனவாக அமையவே வாய்ப்பிருக்கின்றது.
வீடு, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றில் தமிழ் வாழ்ந்தாலும், கல்வி, வேலை, மேலாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் போன்ற பொதுவாழ்வுத் துறைகளில் அதன் பயன்பாடு குறுகும். அரசுப் படிவங்கள், அறிவிப்புகள், பணிகள், இணையதளங்கள் ஆகியவை தெளிவான தமிழில் கிடைக்கவில்லை. அலுவலகங்களில் தமிழில் பணிபுரியத் தேவையான பயிற்சியும் கருவிகளும் வழங்கப்படவில்லை.
தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லாதிருப்பதால், தமிழின் எதிர்காலம் பற்றிய அச்சம் பல தமிழர்களின் மனத்தில் ஆழமாகப் பதிந்து கொண்டு வருகின்றது என்ற கூற்று எளிதில் புறந்தள்ளக்கூடிய கூற்றன்று என்பதே உண்மை.
குமுக ஊடகங்களில் தமிழ் புழங்கும் — ஆனால் அதன் சொல்வளம் குறைந்து, ஆங்கிலச் சொற்களைத் தாங்கிப் பிழைக்கும் தமிழாக மாறிவரும். மொழி வளர்ச்சிக்குக் "கொண்டாட்டம்" தேவையில்லை; "பயன்பாட்டுச் சந்தை"யே தேவை.
அறிவியல், சட்டம், மருத்துவம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் தமிழில் தகுதியான நூல்களும் சொற்பொருள்களும் உருவாக்க ஊக்கம் அளிக்கப்படவில்லை. ஆணைகள், வழக்குத் தீர்ப்புகள், படிவங்கள் தமிழில் நடைமுறையில் இல்லை.
உண்மை நிலை இதுதான்: 2018-19 முதல் 2023-24 வரை தமிழ் வழிப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 65.87 இலக்கத்திலிருந்து 46.82 இலக்கமாகக் குறைந்துள்ளது. அதே காலத்தில் அரசுப்பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் ஆங்கிலவழிப் பள்ளிகளிலும் சேர்க்கை 55.18 இலக்கத்திலிருந்து 82 இலக்கமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ அனைத்துத் தனியார் பள்ளிகளும் ஆங்கிலவழியிலேயே பயிற்றுகின்றன.
பெற்றோர்கள் ஆங்கில வழியைத் தேர்ந்தெடுப்பதற்கு முகன்மைக் காரணங்கள் “வேலைவாய்ப்பும் குமுகத் தகுதிநிலை”யும் தாம்! தமிழ்வழியில் படித்தால் உயர்கல்வியில் தனியார் துறைகளில் பின்தங்கிவிடுவோம் என்ற அச்சம் நகர்ப்புற நடுத்தகைப் பிரிவுக் குடும்பங்களில் உள்ளது.
குழந்தைகளிடம் ஆங்கிலமே பேசும் போக்கு அதிகமாகி உள்ளது. “ஆங்கிலம் தெரிந்தால் மேன்மை” என்ற மனநிலை வலுவாக உள்ளது. தமிழுடன் ஆங்கிலச் சொற்கள் கலந்த பேச்சு – இப்போது இயல்பானதாகி விட்டது. தமிழில் இருக்கும் சொற்களைக்கூட ஆங்கிலச் சொற்களால் கூறும் போக்கு அதிகமாகிவிட்டது. - இது மொழி மாற்றத்தின் (language shift) தொடக்க அறிகுறி. முதல் தலைமுறை தமிழில் பேசுகிறது, இரண்டாம் தலைமுறை கலப்பு மொழியில் பேசுகிறது, மூன்றாம் தலைமுறை ஆங்கிலத்திற்கு நெருங்குகிறது.
நேரடி இந்தித் திணிப்பைவிட, தே.த.நு.தேர்வு (NEET), ஒன்றிய அரசு வேலைகள், வைப்பகத் தேர்வுகள் முதலியவை மூலம் வரும் மறைமுகத் திணிப்பு பெருங்கேடானது. இது தமிழ் இளைஞர்களை "தமிழ் போதாது" என்று நம்ப வைக்கின்றது.
இத்தகைய போக்குகளால், இவ்வாறு நிலவும் நிலைமைகளால், தமிழ் எதிர்காலத்தில் என்னவாகும்? அறவே அழியாது! ஆனால், தமிழ்பேசுவார் எண்ணிக்கை அரிதாகிப் போகும். தமிழ் அடையாளமிழந்து ஒரு கலப்பு மொழியாக உருமாறிப்போகும். மலையாளம் போலப் புதியமொழியாக உருவாகிவிடக்கூடும். பெரும்பான்மைத் தமிழர் வேறொரு புதிய கலப்புஇனத்தினராக மாறிப்போவர் என்பது உண்மை! மிகையாகக் கூறுவதே இல்லை!
தமிழ் இளையோர் சிந்திக்கவேண்டும்! எழுச்சிபெறவேண்டும்! தமிழ்நாட்டில், தாயகத்தில், தாய்மொழியை, உயிரனைய தமிழைக் காக்க உறுதிகொள்ள வேண்டும்! தமிழினத்தைக் காக்க வேண்டும்! தமிழரின் தொன்மையை, அன்பை, பண்பை, கொடையை, மானத்தை, வீரத்தை, இன்னும் பல விழுமங்களை, இலக்கிய இலக்கணச் செழுமையை வீழாது காக்க வேண்டும்!
தமிழா, அட தமிழா – நீ
இணைந்தெழு, இடியென முழங்கிடு, நூறிடு!
இலையெனில் தொலைந்ததுன் பேரே! - பாவலரேறு
‘குடிசெய்வல்’ என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந்து உறும். - கு. 1023
சூழாமல் தானே முடிவுஎய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு. - கு. 1024
- த.ந.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக