வியாழன், 19 மார்ச், 2026

ஊரின் நினைவுகள்!

 

           ஊரின் நினைவுகள்!




அன்பொடு இயைந்த அருந்தமிழ் உளத்தீர்!

என்பும் பிறர்க்குரித் தென்னுயர் பண்பீர்!

இரங்குள நல்லீர்! திரங்கலில் நெஞ்சீர்!

அரங்கில் நிறைந்த அனைவர்க்கும் வணக்கம்!

பசுமரத் தாணியாய்ப் பதிந்து பொதிந்து

விசும்புற ஓங்கிய பசியப் பசுமைசேர்

ஊரின் நினைவுகள் உரைக்கவும் மூழ்கவும்

பேரின் பளிக்கும்! வாரி வழங்கி

மகிழவும் அவையை மகிழ்வில் ஆழ்த்தவும்

முகிழ்த்து மலர்ந்த முகமலர் வாய்ப்பிதே!



ஆற்றையா குளத்தையா அழகுபூக் காட்டையா

ஏற்றதண் தோப்பையா எதனைமுற் கூறுவேன்?

ஊரினோர் பகுதியில் ஏரழ குக்குளம்!

பாரிய குளத்தின் பக்கத்தே பாறை

பாறையில் ஒருசுனை, பகவன் கோயில்!

பாறையை அடுத்த ஆறுமங்(கு) உண்டே!

அழகுபூச் சோலை, நிழலுறை தோப்பு!

உழவர் வயலை ஒட்டித் திகழும்!

ஆற்றிலும் மணலிலும் ஆடிய தெல்லாம்

சாற்றிடற் கரிதே! சலிப்பிலா நினைவதே!



அகன்ற குளக்கரை அதிலுள மரங்கள்

தொகலுற வேம்பு துத்தி கொன்றை

இருவாட் சி அரசு இனியமா நெல்லியும்!

திருக்கோ யிலின்பூச் சோலையில் திகழும்

முல்லை, மல்லிகை, முளரிபிச் சியுடன்

நல்லசெவ் வந்திநற் பவழ மல்லிகை.!

குளத்தினில் தாமரை குவளை அல்லி!

குளத்துநீ ருள்ளோ குதித்திடு மீன்கள்!

இலுப்பைத் தோப்பில் இராதிரி வெளவால்!

இலுப்பைக் கொட்டை காலையில் பொறுக்குவம்!



அதைவைத் தாடிய ஆட்டங்கள் பலவே!

புதையா ஆற்றுப் புன்மண லதனில்

திருவிழா நாட்களில் திரண்டு சடுகுடு

பெருமகிழ் வாடிப் பிதற்றித் திரிவம்!

பிள்ளை களுக்குள் பெண்களுக் குள்ளும்

எள்ளல் தள்ளல் உள்ளலே இல்லை!

ஓற்றுமை பேணிடும் உடன்பிறப் பென்ன

சற்றும் பிரிவெணா உற்றவர் போன்றவர்!

பொங்கல் விழாவதும் பூரிக்க வைக்கும்!

எங்கும் மகிழ்ச்சி! யார்க்கும் களிப்பு!



காணும் பொங்கல் களிப்பிலும் அடுத்துப்

பேணும் ஆற்றுப் பெருவிழா தன்னிலும்

உற்ற மகிழவை உரைக்கவொண் ணாதே!

நல்லூர் தன்னில் நனிதிகழ் தெருசில!

நெல்விளை வயலொடு நெடும்பரப் பதனில்

புன்செய்ப் பயிர்களும் பொலிவில் விளையும்!

மழைபெய வேண்டி மக்கள் தொழுகையில்

விழைந்து’கூ ழூற்றல்’ விழாவது நடக்கும்!

நல்லூர் மக்கள் நனிமகிழ்ந் துழைக்கும்

வல்லவர்; உழவர் வாணிகர் உண்டே!



ஒருவர்க் கொருவர் உதவிவாழ் கின்ற

பெருநற் குணத்தர்! பிரிவுகள் கருதார்!

பற்பல சமயமும் பல்வேறு சாதியும்

கற்பித் திருந்தனர்! நல்லூர் மக்களோ

உற்ற வொருதாய் வயிற்றி னரென்ன

சற்றும் வேற்றுமை சாரா திருந்தனர்!

ஒல்லாப் போதிலும் இல்லா நிலையிலும்

பொல்லாப் பில்லாப் போற்றலில் வாழ்ந்தனர்!

பிள்ளைக ளெல்லாம் கள்ளம் அறியா

உள்ளத் துடனே ஒருங்கிருந் தனரே!



பெற்றோர் தாமும் உற்றார் உறவென

பெற்றியில் வாழ்ந்தனர்! பெருமைசேர்த் திருந்தனர்!

அரசியல் கட்சிகள் அப்போதும் இருந்தன!

கரவின்றித் தலைவர்கள் காத்தனர் மக்களை!

சிறுவர் சிறுமியர் பருவத் தினராய்க்

குறுகா அன்பில் கூடி மகிழ்ந்த

ஊரின் நினைவுகள் ஊறுதேன் உவப்பின!

பாரில் பலர்க்கும் பசியநல் உணர்வின!

எல்லா நிலையிலும் இனிதே

நல்லூர் நினைவுகள் நனிமகிழ் தருமே!


7-11-2025                                                                       - த.ந.

கருத்துகள் இல்லை: