வியாழன், 8 ஜனவரி, 2026

காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி

 

        காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி

     காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி     ================================================================ 

    காலத்தால் மறைந்த தொலைவரிப் பணி

    தோழமை அன்புநிறை தூயமன நல்லோரே!

ஆழறிவு ஆய்வர் அமெரிக்க நாட்டினர்

சாமுவெல் மோர்சென்னும் ஓவியர் ஆராய்ந்து  

காமுறத் தாமுழைத்துக் கண்டு பிடித்தார்

தொலைவர் விரைவில் தொடர்புகொள ஏலும்

தொலைவரி என்கின்ற துள்ளொலித் 'தந்தியை! 

 நல்லவர் சாமுவெல் இல்லத் தரசியார்

பொல்லாத சாவடைந்த அல்லலுறு தீச்செய்தி

காலத்தில் கிட்டாத காரணத்தால் துன்பாழ்ந்தார்!

ஞாலத்தில் மீவிரைவில் நாம்செய்தி தானனுப்பக்

கண்டுபிடிப் போம்கருவி என்றுறுதிச் சூளேற்றுத்

திண்ணிய பேருழைப்பில் கண்டதே ‘தந்தி யாம்

நூறுடன் எண்பத்தெட் டாண்டின்முன் நுட்பமாய்க்

கூறுறத் தந்தார் குறையறத் ‘தந்தி! 

ஒருநூ(று) அறுபதுடன் ஓரிரண்டாண்(டு) இங்கே  

அருமையாய்த் தந்தி அடித்தார் அனைவருமே! 

செம்பு இரும்புவகை ஊடகத்தின் ஊடாகக் 

கம்பிவழிச் செய்தி கடத்துவதால் சங்கதத்தில்         

 ‘தந்தியென் றாரிந்தத் தக்க தொலைவரியை!

எந்தத் தொலைவுக்கும் எட்டியதே செய்தி! 

அடுத்துவந்த  ஆய்வாளர் அக்கம்பி தன்னை

விடுத்துத் தவிர்த்தபுதுக் கம்பியிலாத் தந்தி

அலையியக்கத்  தாலே அரும்பணியைச் செய்யும்   

தலையியக்கம் என்றவகைக் கண்டு பிடித்தாரே    

இன்னவகை முன்னேற்றம் இத்துடன் நிற்கவில்லை!

பன்வகையும் நுண்ணாய்வால் பாரோர்க்குத் தூரத்

தொலையச்சு என்றே துலக்கமாகச் சொல்லும் 

நிலையில் ‘தெலிபிரிண்டர்’ நேர்அச்சைத் தந்தனரே!

பின்னர்க் கணிப்பொறி என்னும் பெயருடனே

பென்னம்பே ராற்றலிங்குப் பேராட்சிச் செய்கிறது!        

கட்டில்லாக் கைப்பேசிமட்டில் இணையத்தால்  

கட்டுகட ‘தந்தி’ மறைந்ததுவே காலத்தால்!

சட்டமும் ஏற்கும் சரியான ஆவணமாய்த் 

திட்டமாய்த் ‘தந்தித் திகழ்ந்திட்ட காரணத்தால்

யாரும் இடைநுழைந்தே ஏதமெதும் செய்யவொணாத் 

தேறுநிலை காப்பு திகழ்கின்ற காரணத்தால்        

இக்காலும் இத்தாலிஇன்சப்பான் நல்பிரேசில்

ஒக்கசில நாட்டில் உயிர்வாழும் ‘தந்திமுறை!  

கப்பல் தொடர்பிற்கும் கண்காணித் தேநாடு

தப்பாமல் காக்கும் தகுதிமிகு போர்ப்படைக்கும்

எப்போதும்  ‘தந்தி ’ இனிதுதவி செய்கிறது!

இப்போதும் தேவை இருக்கிறது ‘தந்திக்கு!          

 சிற்றூரில் ‘தந்தியென வந்தாலே மக்கள் 

அரற்றி அலறி அழுததொரு காலம்! 

அறிவியல்முன் னேற்றமின்று யாரும் அறிவார்!

சிறியராம் பிள்ளைகளும் சிற்றூரில் பேரூரில்                 

கைப்பேசி கையாளல் கண்டு  வியக்கின்றோம்!               

மெய்ம்மறந்தே மூழ்கியதில் மீளா விருப்பமுடன்        

காலத்தை வீணடிக்காக் கோலத்தர் யாரேனும் 

ஞாலத்தில் உள்ளாரோ  ஐயம் அரிதேதான்!

இவ்வாறு  ‘தந்தி’ இருந்தநிலை இக்காலம்

எவ்வாறு மாறிய(து) என்பதையும் கண்டோம்!                 

இதுவே உலகியல்(பு) ஏதொன்றும் மாறல்        

பொதுநெறியாம் மாறாதே பூவுலகில் என்றும்!     

 அமைதியுடன் கேட்ட அவையோர்க்கு நன்றி! 

நமைக்கவர்ந்த ‘தந்தி’ நனிமறைந்த தைப்பாட

நல்வாய்ப்பை நல்கிய நல்லாரை உள்ளிட்ட 

 எல்லாரும் வாழ்க இனிது. 

               - தமிழநம்பி  -

---------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை: