வியாழன், 23 அக்டோபர், 2008

தீராப்பழி ஏற்கத் துணிவதோ?


(10-03-2008-இல் எழுதிய இப்பதிவு, தேவை கருதி மிண்டும் இடப்படுகின்றது.) 

இலங்கையில் இப்போது கொடுமையான போர் நடந்து கொண்டிருக்கின்றது இலங்கை அரசின் முப்படைகளும் குழந்தைகள்முதியோர்பொதுமக்கள்போராளிகள் என்று எந்த வேறுபாடுமின்றி ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து வருகின்றன. ஒரு நாட்டின் அரசே தன் குடிமக்களைக் கண்டமேனிக்குக் குண்டுகள் வீசிக் கொன்று குவிக்கின்றஉலகில் வேறெங்கும் காண முடியாத கொடுமைஅங்கு நடந்து கொண்டிருக்கின்றது.
நார்வேஅமெரிக்காசப்பான் ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் நடுவர்களாக இருந்து உருவாக்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்புடைய யாருக்கும் தெரிவிக்காமல் இலங்கை அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென முறித்துக் கொண்டதுஇந்நிலையை உலக நாடுகள் ஏற்கவில்லை என்றாலும் எந்த நாடும் இதுவரை இலங்கை அரசைத் தட்டிக்கேட்க முன்வரவில்லை.
கடல்கொண்ட குமரிக்கண்டத்தின் எஞ்சிய நிலப்பகுதியாக இலங்கையை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்இலங்கையில் உள்ள ஈழத் தமிழர்கள் அந்நாட்டின் ஆதிக்குடிகள்ஈழத்தின் மண்ணின் மைந்தர்கள்இலங்கையின் வடக்குகிழக்கு முதலிய பகுதிகளில் கி.பி.1832 வரைத் தம்மைத்தாமே ஆட்சி செய்து கொண்டு வாழ்ந்த மக்களின் பிறங்கடைகள்இவ்வுண்மையைத் தமிழகத் தமிழர்களில் பெரும்பாலரும் தெரிந்திருக்கவில்லை. இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ளவர்களில் இவ்வுணமையைத் தெரிந்தோர் மிகமிகக் குறைவானவரே!
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லாருமே தமிழகத்திலிருந்து சென்றவர்கள் என்றே பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். கி.மு.150-இல் வரையப்பட்ட இலங்கையின் நாட்டுப்படத்தில் வடக்குகிழக்குவடமேற்குப்பகுதிகளும்தெற்கில் சில பகுதிகளும் தமிழ்மன்னர் ஆட்சிப் பகுதிகள் எனத் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளனகி.மு.543இல் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்று சேர்ந்தவர்களே சிங்களவர்கள் என்று அவர்களின் 'மகாவம்சம்என்ற சிங்கள நூல் குறிப்பிடுகிறதுவேறு சான்றுகளையும் ஆய்வாளர்கள் தருகின்றனர்.
சிறுபாணாற்றுப்படை(117-20),  புறநானூறு (176:6-7), பட்டினப்பாலை (191) போன்ற கழக (சங்கஇலக்கியங்கள்  பதியெழ லறியாப் பழங்குடியான தமிழ்க்குடியே இலங்கையின் சொந்தக்குடி என்பதற்குச் சான்று சொல்கின்றன அகநானூறு (88, 231, 307) குறுந்தொகையில் (189, 343, 360) மும்மூன்று பாடல்களும் நற்றிணையில் (366) ஒருபாடலும் எழுதிய ஈழத்துப் பூதன் தேவனார்தம் பாடல்களில் ஈழத் தமிழகத்தின் அகவாழ்வுச் சான்றுகளைக் காட்டியுள்ளார்.
1619இல் போர்த்துக்கீசியர் இலங்கையின் வடபகுதியையும், 1638இல் ஒல்லாந்தர் (டச்சுக்காரர்இலங்கையின் கிழக்குப் பகுதியையும், 1795இலும், 1815இலும் ஆங்கிலேயர் இலங்கையின் பல பகுதிகளையும் கைப்பற்றி ஆண்டனர்ஆங்கிலேயரே 1833இல் இலங்கை முழுவதையும ஓர் அரசின் கீழ் இணைத்தனர். இலங்கையை ஆங்கிலேயர் ஆண்டபோதுதமிழகப் பகுதிகளும் ஆங்கிலேய ஆட்சியின் கீழ் இருந்தனதஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த ஆங்கிலேயரே இலங்கைக்கும் ஆட்சியராக இருந்தார்.
ஏறத்தாழ ஐந்து ஆறு தலைமுறைகளுக்கு முன்னர்ஆசைகாட்டி ஆங்கிலேயரால் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மதுரை, முகவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர்களாவர்அவர்களே இந்தியாவினின்றும் இலங்கைக்குச் சென்ற குடிகள்.
ஆங்கிலேயர் ஆட்சியினின்றும் இலங்கை 04-02-1948இல் விடுதலை அடைந்ததுவிடுதலை பெற்ற கையோடு சிங்கள ஆட்சியாளர் இலங்கையின் தோட்டத் தொழிலாளர் பத்து இலக்கம் பேரின் குடியுரிமைஒப்போலை உரிமையைப் பறித்தனர்.(இலங்கையின் தோட்டத் தொழிலாளர் பட்ட துன்ப துயரங்களை 1980ஆம் ஆண்டில் தொலைக்காட்சி வழி பார்த்த இங்கிலாந்து மக்கள்இனிஇலங்கைத் தேயிலையை வாங்குவதில்லை என முடிவெடுத்து அறிவித்த செய்தி உலகம் முழுவதற்கும் இலங்கைத் தோட்டத் தொழிலாளரின் இரங்கத்தக்க நிலையை எடுத்துரைத்தது)
தமிழீழ மக்களால் "தந்தைஎனப் பெருமதிப்போடும் பேரன்போடும் அழைக்கப்பட்ட சட்ட அறிஞர் தலைவர் செல்வநாயகம் அவர்கள் பல்லாற்றானும் துன்புற் றுழலும் தமிழீழ மக்களின் இன்னலை நீக்கி வாழ்வுரிமையை உறுதிசெய்ய 1949இல் 'தமிழரசுக் கட்சி'யைத் தோற்றுவித்தார்பல அறப் போராட்டங்களைத் தமிழர்கள் அமைதியாக நடத்தினர்சிங்கள இனவெறி ஆட்சியாளர் அவற்றைப் பொருட்படுத்தவே யில்லை. 1956இல் தமிழுக்கு இடமளித்துச் சட்டம் வந்ததுஆனால்அச்சட்டம் கிடப்பில் போடப்பட்டதுஊர்திகளில் சிங்கள எழுத்து 'சிறீயைக் கட்டாயம் எழுத வேண்டுமென்ற ஆணையை எதிர்த்த தமிழர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
05-06-1956இல் இயற்றப்பட்ட இலங்கை அரசமைப்புச்சட்டம் தமிழரின் மொழி உரிமைசமய உரிமைகல்வி உரிமைகளைப் பறித்ததுகொந்தளிப்பான சூழலில்நிலைமை மோசமாகிவிடாமல் தடுக்கபண்டாரநாயகா 26-07-1957இல் தந்தை செல்வாவுடன் கலந்து பேசி ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்
ஆனால்அந்த ஒப்பந்தத்தின்படி சிங்கள அரசு நடந்து கொள்ளவில்லைபெரும் போராட்டங்களுக்குப் பிறகு, 1958இல் தமிழில் நுழைவுத் தேர்வுகளை எழுதலாம் என்றும் வடக்கு-கிழக்கு மாநிலங்களில் தமிழைப் பயன்படுத்தலாம் என்றும் ஒரு சட்டம் வந்ததுஆனால்,அதுவும் செயற்பாட்டுக்கு வரவில்லை
1965 தேர்தலில் சிங்களரின் பெரிய கட்சிகள் இரண்டிற்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 14தொகுதிகளை வென்ற தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சியின் துணைதரவைக் கேட்டுப் பெற்று ஆட்சிக் கட்டிலேறிய தட்லி சேனநாயகா  25-03-1965இல் தந்தை செல்வாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்ஆனால் அவரும் அவ்வொப்பந்தத்தை நிறைவேற்ற வில்லை.
தமிழர்களைப் புறக்கணித்து  22-05-1972இல் சிங்களர் கொண்டுவந்த அரசமைப்புச் சட்டமும் தமிழரின் மொழியுரிமை, மதவுரிமைகல்வியரிமைகளை மறுத்துசிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்றதுபுத்தமதம் அரசமதம் என்றதுதமிழின மாணவர் உயர்கல்வி தொழிற்கல்வியில் சேர, சிங்கள மாணவரைவிட அதிக மதிப்பெண்கள் எடுத்தாக வேண்டு மென்றதுகூட்டாட்சி அமைப்பை மறுத்துச் சிங்கள ஒற்றையாட்சியையே உறுதி செய்தது. இச் சட்டத்தை  25-05-1972இல் தமிழரசுக் கட்சியினர் செல்வாவின் தலைமையில் கூடித் தீயிட்டு எரித்து எதிர்ப்பைத் தெரிவித்தனர். பயனேதும் ஏற்படவில்லை.
இவ்வாறுஉரிமை பறிப்புகளும்ஒப்பந்த மீறல்களும், ஒடுக்குமுறைத் தாக்குதல்களும் தொலையாத் தொடர்கதையாகிப் போன பின்னர்தான்நிலையான தீர்வுக்குச் சிந்திக்கத் தொடங்கி, இலங்கை ஒற்றையாட்சியிலிருந்து தமிழர் தாயகம் தனியே பிரிந்து போக வேண்டும் எனத் தமிழீழத் தலைவர்கள் முடிவெடுத்தனர். இம்முடிவே  14-05-1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானமாகப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
தந்தை செல்வா, 'தமிழர்களுக்கான விடுதலை பெற்ற நாடு வேண்டும்என்பது தமிழீழ மக்களின் தீர்மானமே என்பதை விளக்கமாக வெளிப்படுத்த விரும்பினார்அதற்காகவேதம்முடைய 'காங்கேசன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினின்றும்  03-10-1972இல் விலகினார் பிறகு அத்தொகுதிக்கு 05-02-1975இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் அவர்களின் தமிழீழப் பிரிவினைத் தீர்மானத்தை முன்வைத்துப் போட்டியிட்டார்மக்கள் அவரைப் பெருவெற்றிபெறச் செய்து தமிழீழ விடுதலையே தமக்கு விடிவு தரும் என்ற தங்களின் முடிவினைத் தெளிவாக அறிவித்தனர் நாடாளுமன்றம் சென்று தமிழீழ விடுதலை பெற்றே தீருவோமெனச் செல்வா முழங்கினார்.
இதற்கிடையே, 1974 சனவரியில் யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்றது. 10-01-1974 பிற்பகலில் மாநாட்டின் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு இருக்கும்போது வந்த நாற்பது காவலர்கள்மாநாட்டில் கலந்து கொண்டோரைக் கலைந்து செல்லும்படி அறிவித்துக்கொண்டே, அங்குக் கூடியிருந்த ஐம்பதினாயிரம் தமிழ் மக்களையும் அல்லோலகல்லோலப் படுத்தினர்ஆண்பெண்களின் உடைகளை உருவி அலறியோட அடித்தனர்!  துமுக்கியாலும் சுட்டனர்! மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் பலர் மின்தாக்குதலுக் குள்ளயினர்இக்கொடிய வன்தாக்குதலில் 11பேர் உயிரிழந்தனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று உயிருக்குப் போராடினர்!
உரிமை பறிப்புகளும் ஒப்பந்த மீறல்களும் உருவாக்கிய நம்பிக்கையின்மையாலும்,  1956, 1958, 1961, 1974ஆம் ஆண்டுகளில் இலங்கையில்  தொடர்ந்து நடந்த சிங்களக் கொலை வெறியாட்டத்தாலும்இனஅழிப்புத் தாக்குதல்களாலும் தமிழர்கள் செய்வதறியாது கலங்கி நின்றனர்
இந்நிலையில்யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த கொடுங்கொடிய தாக்குதலில் குழந்தைகளும் பெண்களும் முதியோரு மடங்கிய தமிழ்மக்கள் பட்ட சொல்லொணா அல்லல் அவலங்கள் ஈழத்தமிழ் இளைஞரைச் சிங்கள இனவெறி அரசுக்கு எதிராக எழுச்சி கொள்ளச்செய்தன. 05-05-1976இல் ஈழத்தமிழ் இளைஞர்கள் புதிய இயக்கத்தை உருவாக்கினர்.
காவற்படையும்போர்ப்படையும் கொண்டு சிங்கள அரசு தமிழினத்தை அடக்கி ஒடுக்கி அழிக்கும் போக்கு தொடர்ந்ததால் இலங்கையில் தமிழினம் வாழ்வுரிமையை முற்றிலும் இழந்துவிட்ட நிலையில்கொடுமைகளை எதிர்த்து நிற்கவும்தங்களைக் காத்துக் கொள்ளவும் ஆய்தம் தாங்கிய ஒரு படையை உருவாக்க வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்கு ஈழத்தமிழர் தள்ளப்பட்டனர்
அவ்வாறு,படையை உருவாக்கிக் கருவியேந்திப் போராடித் தம் தாயகத்தை நிறுவிய நாடுகள் பல உள்ளனஅந்நாடுகள் அ.நா. அவையின் (U.N.O) அனைத்துலகச் சட்டங்களின்படி ஒத்தேற்கப் பட்டுள்ளன (U.N.O. Declaration 1970, Universal Declaration of Human Rights, Section 15) என்பது அறியத்தக்க செய்தியாகும்.
ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்கும் பெருமுயற்சிக்கே தம்வளங்களையும் வாழ்நாட்களையும் செலவிட்ட ஈகச்செம்மல் தந்தை செல்வா  27-04-1977இல் மறைவுற்றார்.  1977 ஆகத்து மாதத்தில் யாழ்ப்பாணத்திலும் திருக்கோணமலையிலும் சிங்களரால் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதுபலர் கொல்லப்பட்டனர்.
1977ஆம் ஆண்டில் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து மாபெரும் கண்டனப் பேரணி தமிழகத்தில் கலைஞர் கருணாநிதியார் தலைமையில் நடந்ததுதமிழகத் தலைவர்கள் பலரும் அறிக்கை வழி கண்டனம் தெரிவித்தனர்சிங்கள அரசின் ஒடுக்குமுறை ஓயாது தொடர்ந்தது.
11-07-1979இல் செயவர்த்தனா நிறைவேற்றிய அச்சுறுத்த வன்முறைத் தடுப்புச் சட்டம் தமிழர்களைக் கொடுங்கொடிய முறையில் வேட்டையாடியது. 1981ஆம் ஆண்டில் தமிழர்க்கெதிராகத் தீயிட்டழிப்புகொள்ளைகொலைகற்பழிப்பு நடந்ததை நாடாளுமன்றில் அமைச்சரே ஒப்புக் கொண்டார்.
1983இல் சிங்கள அரசு மேற்கொண்ட அரச அச்சுறுத்த வன்முறைகளும்சிங்களக் காடையரின் கொள்ளை கொலைக் கொடுமைகளும், தமிழ்ப்பெண்கள் பலவகைக் கொடுமைகளுக் காளாக்கப்பட்டுச் சீரழிக்கப்பட்டமையும்சிறையிலிருந்த தமிழர்களைக் கொடுந் தாக்குதலால் படுகொலை செய்தமையும் தமிழ்நாட்டு மக்களைப்பேரெழுச்சி கொள்ளச் செய்தனஈழத் தமிழர்க்காகப் பரிந்து எழுந்த தமிழகத் தமிழர்களின் பேரெழுச்சிஇந்தியாவை அதிர்ந்து குலுங்க வைத்ததோடு அனைத்து உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்தது.
இலங்கையில் இன்றுவரை  70,000 தமிழர்களுக்குமேல் கொல்லப் பட்டிருக்கிறார்கள்ஏறத்தாழ ஏழு இலக்கம் பேர் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து அல்லலுக் குள்ளாகி யுள்ளனர். உள்நாட்டில்  ஐந்து இலக்கம் பேர் இடம்பெயர்ந்து இன்னற் படுகின்றனர்.
இனவெறிச் சிங்கள அரசு இந்தியா பாக்கித்தான், இசுரேல், அமெரிக்கா முதலான நாடுகளிடமிருந்து ஆய்தங்களையும், வானூர்திகளையும்போர்ப் பயிற்சிகளையும்உளவு அறியும் உதவிகளையும் தடையின்றிப் பெற்றுத் தமிழர்களை ஒடுக்கி யும் அழித்தும் வருகிறதுசொந்த நாட்டு மக்களையேதமிழர்கள் என்ற காரணத்தால் முப்படைகளையும் கொண்டு  கண்டமேனிக்குக் குண்டு வீசிக் கொன்று குவிக்கின்றது.
குழந்தைகள்பள்ளிச்சிறார்,முதியோர் என்றும், கோயில், பள்ளிவாயில், திருச்சவை என்றும் எந்த வேறுபாடும் கருதாமல் குண்டுமழை பொழிந்து கொல்கின்றது. 22-02-2002இல் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை நார்வே முதலிய நாடுகளுக்கும் தெரிவிக்காமல் தன்விருப்பமாக முறித்துக் கொண்டு, இலங்கை மண்ணில் தமிழர்களே இல்லையெனும்படியான நிலையை உருவாக்கும் நோக்கில்கொடுமையாகக் கொலைவெறித் தாக்குதல் செய்து வருகிறது.
ஈழத்தமிழருக்கும் தமிழ்ஈழ விடுதலைக்கும் துணைநிற்கும் பேரெழுச்சியான நிலைமை  1983முதல் தமிழகத் தமிழரிடம் காணப்பட்டதுஆனால், 1991இல் நடந்த இராசீவ் காந்தி கொலைக்குப் பின்னர்அவ்வெழுச்சி குறைந்து போனதுஅதே போழ்தில், தமிழ் ஈழத்தைப் பற்றியும் ஈழப் போராளிகளைப் பற்றியும் பேசஎழுதவும் தயங்குகின்ற நிலை அடக்குமுறை அச்சுறுத்தலால் உருவாக்கப் பட்டதுஇன்னும்தமிழ்தமிழர் என்றாலே தடை, தளைப்படுத்தம், சிறைப்படுத்தம் என்ற நிலை ஏற்பட்டது. என்றாலும்துணிவும் உணர்வும் மிக்க சிலரால் இந்த இறுக்கமான நிலையில் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்வேற்பட்டு வருகிறது.
இந்த மண்ணில்ஈழப் போராளிகளால் எவ்வகை வன்முறை நிகழ்வதையும் தமிழகத்தில் உள்ள எவரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்அதே போழ்தில்தமிழகத் தமிழரின் தொப்புள் கொடி உறவான ஈழத்தமிழர்கள் அவர்கள் கண்முன்னேயே அல்லற் படுவதையும் அழிவதையும் எங்ஙனம் பொறுமையோடு பார்த்துக் கொண்டிருப்பார்கள்?
ஆகத்து 2002 முதல்-9 என்னும் பெயரிய யாழ்ப்பாண நெடுஞ்சாலையை மூடியதால்யாழ்ப்பாணத்திலுள்ள இலக்கக் கணக்கான தமிழ்மக்கள் இன்றியமையா உணவுப் பொருள்களான அரிசி முதலானவும்மருந்துதுணி முதலானவும் கிடைக்காமல் பட்டினியாலும் நோயாலும் சாகின்ற நிலை உருவாக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தம் அரத்த உறவான யாழ்ப்பாண மக்களுக்கென அளித்த உணவுமருந்துப் பொருள்களைச் செங்குறுக்கைக் கழகத்தின் வழியாக யாழ்ப்பாணத்திற்கு அனுப்புதற்கும் இந்திய அரசு இசைவு தரவில்லைபலரும் பலவாறு வேண்டுகோள்கள் விடுத்தும் தமிழ்நாட்டரசும் கண்டுகொள்ளவில்லை!
இனஅழிப்பிற் காளாகி அழியும் ஈழத் தமிழர் நிலையில்இந்திய அரசிலும் தமிழ்நாட்டரசிலும் ஆட்சியாளர் மாறியதால் எவ்வகைப் புதிய விளைவும் ஏற்படவில்லைஇராசீவ் காந்தி கொலையுண்ட நிகழ்ச்சியுடன் 40 இலக்கம் ஈழத்தமிழரின் நிகழ்கால எதிர்கால வாழ்வை முடிச்சுப் போடக்கூடாது என்று  'தினமணி' (20-04-2002) ஆசிரியருரையும், 'தமிழ் ஓசை' (13-02-2008ஆசிரியருரையும் மற்றும் பல்வேறு  நடுநிலை அறிஞர்களின் கூற்றும் வலியுறுத்தியதை ஆட்சியாளர் கருத்திற் கொண்டதாகத் தெரியவில்லை.
நடுவண் அரசிலும் தமிழ்நாட்டு அரசிலும் அமர்ந்துள்ள தமிழர்களாகிய அமைச்சர்களும்நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களும்தமிழ்மண்ணில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களாக வலம் வந்துகொண் டிருப்போரும்தமிழராக உள்ள ஒவ்வொருவரும் நெஞ்சில் கைவைத்து எண்ணிப்பார்க்க வேண்டிய நேரமிதுஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம் தமிழினத்தின் போராட்டமாகும்.அப்போராட்டம் தக்க தீர்வினை எட்டாமல்எக்காரணங் கொண்டும் வீழ்ச்சி அடையக்கூடாதுஈழத்தமிழர் வீழ்ந்தால் அதுதமிழினத்தின் வீழ்ச்சியாகவே அமையும்!
இந்த இக்கட்டான சூழலைப் புரிந்து கொள்ளாமல் பொருள் சுரண்டும் அரசியலிலும்நாற்காலிக் கனவு நாட்டத்திலும், தன்னலவெறிப் போக்கிலுமே தமிழகத் தலைவர்கள் சென்று கொண்டிருப்பா ராயின்தீராப்பழி வந்து சேரும்! தமிழர் வரலாற்றில் இழிவு சேர்க்கும் பக்கங்களுக்குக் காரணமாகிப் போவோம்! எள்ளி நகைக்க இலக்காகிப் போவோம்!  இவ்வுண்மையை மறந்துவிடக் கூடாது!
தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை ஓராயிரம் முறைக்கும் மேல் கடுந் தாக்குதல் நடத்தியிருக்கின்றதுதமிழக மீனவர்களின் மீன்பிடி வலைகளையும்அவர்கள் பிடித்த மீன்களையும்படகுகளையும் கொள்ளையடித்துக் கொடுங் கூத்தாடி அவர்களைச் சுட்டுக் கொன்று வருகின்றது. 250க்கும் அதிகமான தமிழக மீனவர்கள் சிங்களவெறித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்பல நூறு மீனவர்கள் படுகாயப் படுத்தப் பட்டுள்ளனர்.
பலமுறை தமிழ்நாட்டு மீனவர்கள் இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே சிங்களக் கடற்படை யினரால் தாக்கப்பட்டு ள்ளனர்இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கும் போதெல்லாம் இந்தியக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் எங்கே போயிருந்தார்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாதுஒரு முறையும் கூட இவர்கள் தமிழக மீனவர்களை சிங்களர் தாக்குதலினின்றும் தடுத்துக் காத்ததாகச் செய்தி வந்ததில்லைஓரிரு இலக்கம் உருவாக்களை இழந்த உயிர்களுக்கு இழப்பீடாகத் தந்துவிட்டுக் கடமையை முடித்துக் கொள்ளும் அரசாக தமிழ்நாட்டரசு இருந்துவருகிறது.
இந்நிலையில் இந்திய அரசுசிங்கள இனவெறி அரசுக்குக் கதுவீ (RADAR) உள்ளிட்ட உளவுக் கருவிகளும்ஆய்தங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து கொடுத்து வருகின்றதுபூனாத் தேசியப் பாதுகாப்புக் கழகத்திலும் பிற இடங்களிலும் வழக்கமாகப் பிற நாட்டினர்க்கு விளக்கப்படாதவை பற்றியெல்லாம் இலங்கைப் படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு விளக்கிக் கூறிப் பயிற்சி தரப்படுகின்றதுஇந்தியப் படையின் உளவுப்பிரிவு அதிகாரிகள் குழு கொழும்பு சென்றுஅங்குப் போர்ப்படை உளவுப் பயிற்சிப் பள்ளி அமைப்பதற்கு ஆவன செய்து தருகின்றது (தமிழ் ஓசை-11-02-2008என்ற செய்தியும் வருகின்றது.
இந்தியாவின் ஒரு மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்களின் குருதிவழிச் சொந்தங்களைக் கொன்றழிக்கவும் இன்னும் தமிழ்நாட்டு மீனவர்களையே தாக்கிக் கொல்லவும்இந்தியா இலங்கை அரசுக்குச் செய்யும் பல்வேறு உதவிகளும் சிங்களர்க்குப் பயன்படுகின்றன.  இவ்வகையில்தமிழர்களின் வரிப்பணமே தமிழர்களைத் தாக்கவும் அழிக்கவும் பயன்படுத்தப் படுகிறது எனில், மிகையன்று.
தமிழ்நாட்டரசு இவற்றைத் தக்கவாறு எதிர்த்துத் தடுக்க வேண்டுமல்லவா இந்தியஅரசை முறையாகச் செயற்படச் செய்து ஈழத்தமிழரையும் தமிழக மீனவரையும் காக்க வேண்டாவா? பதவிக்காகவோ வேறு அரசியல் பயன்களுக்காகவோஇந்திய அரசை வற்புறுத்தித் தமிழர்களைக் காத்திடும்படிச் செயற்படச் செய்யாமல்வாய்மூடி இருப்பதை விட இல்லாமற் போவதே மேலல்லவா!
இந்த அரசுகளை வற்புறுத்தி ஈழத் தமிழினத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழினம் உள்ளதுதமிழிளைஞர்கள இம்முயற்சியில் முழுமையாக ஈடுபட வேண்டும்இக்கடமையில் தவறினால்ஈழத்தமிழர் நசுக்கி அழிக்கப்பட்டு விடுவார்கள். நெருக்கடியான இக்காலக் கட்டத்தில் விழிப்புற் றெழுந்து இதைக் கட்டாயம் செய்தாக வேண்டும். இல்லையேல்தீராப்பழி ஏற்று இழிவைச் சுமக்க வேண்டியவர்களாகிப் போவோம்!
புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்என்று கூறும் புறநானூற்று வரிகள் வெறும் எழுத்துகள் அல்லவே!

-----------------------------------------------------------------------

                                                                                                                                                                                                                                      

கருத்துகள் இல்லை: