திங்கள், 22 ஜூன், 2009

இனியேனும் முயலாரென்றால்...!



இனவெறிச் சிங்க ளர்க்கே
     இலையெனா தெல்லாம் தந்தார்!
கனவிலும் உரிமை மீட்பே 
     கருதிய தமிழர் குண்டுக்
கனலினில் கருகி மாளக்
     கழியமீ துள்ளோர் துன்பில்
மனஞ்சிதை வுறுதல் போக்க
     மனப்பத னிலைதில் லிக்கே!

ஈழமண் நொசிந்து நைந்தே
     இறந்தவர் ஓரி லக்கம்!
தோழத்தே அடைத்த மந்தைத்
     தொகுப்பெனக் குமைந்தி ழிந்தே
ஆழவே துயருள் மீழ்கி
     அமிழ்ந்துளார் மூன்றி லக்கம்!
சூழலோ அவர்க்க மைத்தச்
     சொல்லொணாக் கொடுமை அந்தோ!

அங்கவர் அடைப்பின் நீங்கி
     அவரவர் வீடி ருந்த
தங்கிடம் செல்லு தற்கே
     தடையிடா தீரென் றந்தச்
சிங்கள ஆட்சி யாளர்
     செவிப்பறை யறையச் சொல்ல
இங்குளார் தில்லி யாரை
     ஏன்வலி யுறுத்தா துள்ளார்?

தமிழினத் தலைமை வேட்டத்
     தகுதியைக் காட்டற் கேனும்
நிமிர்வுற நின்று தில்லி
     நிலையினை மாற்றி ஈழத்
தமிழரின் துயர் துடைக்கத்
     தாமினி முயலா ரென்றால்
இமிழுல கெல்லாந் தூற்றும்!
     இரண்டகர் இவரே என்னும்!

------------------------------------------

வியாழன், 11 ஜூன், 2009

தொடரும் இந்திய இரண்டகம்!




காவிரியாறு, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற ஆற்றுநீர்ச் சிக்கல்களிலும், தமிழக மீனவர் பாதுகாப்புச் சிக்கலிலும் தமிழக நலனையும் தமிழர் நலனையும் இந்திய அரசுகள் புறக்கணித்தே வருகின்றன. ஈழச் சிக்கலிலோ இந்திராகாந்தி காலத்தில் தவிர மற்ற எல்லாருடைய ஆட்சிக் காலத்திலும் இந்திய அரசுகள் தமிழினத்திற்கு இரண்டகம் செய்து வரும் போக்கே நிலவி வருகிறது. இந்நிலைகளால், தமிழினம் முன் எப்போதையும் விட இக்கால் பெரு இழப்பையும் பேரழிவையும் சந்தித்து வருகின்றது.

இனஅழிப்பு

ஈழத்தில் நடந்த போரில், கடந்த மூன்றுமாத காலத்தில் மட்டும் 53,000க்கும் மேல் ஏதுமறியாத் தமிழர்கள் இனவெறிச் சிங்கள அரசால் படுகொலை செய்யப் பட்டுள்ளனர். 13000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் போயுள்ளனர்.

பன்னாட்டுச் சட்டங்களும் ஒன்றிய நாடுகள் மன்றமும் தடை செய்துள்ள எரிப்பொறைய (phosphorus bombs) குண்டுகளையும், கொத்துக் குண்டுகளையும் (cluster bombs) இன்னும் வேதியற் குண்டுகளையும் பல்லாயிரக் கணக்கில் தொடர்ந்து பொழிந்தும், வன்படைக்கலன்களை எவ்வகைத் தடையோ தயக்கமோ இன்றிப் பல்லாயிரம் முறை பயன்படுத்தியும் அந்தக் கொடிய அரசு, குழந்தைகள் பெரியோர் என்று எந்த வேறுபாடும் கருதாமல் ஏதுமறியாத் தமிழர்களைக் கொன்று தீர்த்திருக்கிறது.

ஈழப் போரில் இதுவரை உயிரிழந்த தமிழர் தொகை ஓரிலக்கத்திற்கும் அதிகம் எனத் தாளிகைகள் கூறுகின்றன. நான்காம் விடுதலைப் போர் என்று குறிப்பிடப்படும் இந்தப் போரினால் சிறுவர்களும் பெரியோருமாக ஏறத்தாழ நாற்பதினாயிரம் தமிழர்கள் உறுப்பறையராகி உரிய மருத்துவமும் இன்றித் துன்புறுகின்றனர்.

கொடுமைகள்

ஏதுமறியாத் தமிழர் மூன்றிலக்கம் பேர் 41 இடங்களில் இக்கால் முட்கம்பிகளாற் சூழப்பட்ட கடுங்காவற் கூடாரங்களில் மந்தைகளைப் போல் அடைக்கப் பட்டுள்ளனர். உணவு, மருந்து, நீரின்றி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். நெருங்கிய உறவினரிடமிருந்து வலியவே பிரித்து வைக்கப் பட்டுள்ளனர். அங்கிருந்து கடத்திச் செல்லப்படும் இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாது. அங்கிருந்து இழுத்துச் செல்லப்படும் பெண்கள் நாசமாக்கப் படுவதாகத் தொடர்ந்து ஊடகங்கள் கூறிவருகின்றன.

இருட்டடிப்பும் வெளிப்படுத்தமும்

தமிழ்நாட்டை ஒரு மாநிலமாகவும் தமிழரை இங்கு வாழ்கின்ற ஓரின மக்களாகவும் கொண்டுள்ள இந்தியா, ஈழப்போர் தொடர்பாக என்னென்ன செய்ததென்றும் செய்து கொண்டு இருக்கிறதென்றும் ஈழத் தமிழர்க்கு இழைக்கப்படும் கொடுமைகளிலும் அங்குத் தடையின்றி நடந்துவரும் இன அழிப்பிலும் இந்தியாவின் பங்கு என்ன என்பது பற்றியுமான உண்மைகளை உள்ளபடி அறிய, இங்குள்ள ஊடகங்களும் பிறவும் உதவாததோடு பல செய்திகளை பலகாரணங்களால் இருட்டடிப்பும் செய்து வருகின்றன.

வலிமையான திரையிட்டு மூடி மறைக்கப்படும் செய்திகளையும் வெளிப்படுத்தும் ஊடகங்களும் திறஞ்சான்ற நடுநிலைச் செய்தியாளர் பலரும் உலகிலுள்ள உண்மை மாந்த நேய மாந்த உரிமை ஆர்வலரும் உண்மைச் செய்திகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகின்றனர். இலங்கை ஆட்சியாளர்களின் கூற்றுகளின் வழியும் இந்தியாவின் கரவான வினைப்பாடுகளை அறிய முடிகின்றது.

இராசபக்சேக்கள் கூறுகிறார்கள்

அண்மையில், அம்பாறை மருத்துவ மனையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில், சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை அரசின் தலைவர் மகிந்த இராசபக்சேவின் தம்பியும் மூத்த அரசு கலந்துரைஞருமான பசில் இராசபக்சே, இந்திய அரசின் முழுமையான துணைதரவை(ஆதரவை)ப் பெற்ற பின்னரே தாங்கள் போரை முன்னெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

தி வீக்நாளிதழுக்கு அளித்த நேர்காணலில், இலங்கையரசின் தலைவர் மகிந்தா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இந்திய அரசு எங்களுக்கு அளித்த துணைதரவு மிகவும் முகன்மையானது என்று கூறியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. அதற்காக, இந்தியத் தலைவர்களைச் சந்தித்து நன்றி செலுத்துவதற்காகத் தாம் இந்தியா செல்ல இருப்பதாகவும் அந்த நேர்காணலில் இராசபக்சே கூறியுள்ளார்.

இவரே, “என்.டி.டி.விதொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் இலங்கைப் போரில் ஏதுமறியாத் தமிழர்கள் கொல்லப் படுவதைத் தடுக்க இந்தியா அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்ததாக இந்திய வெளியுறவுத் துறை கூறியிருக்கிறது; ஆனால், இந்தியத் தரப்பிடம் இருந்து எங்களுக்கு எந்த வலியுறுத்தலும் வரவில்லை; இந்தியாவின் சார்பில்தான் நாங்கள் விடுதலைப் புலிகளுடன் போரிடுகிறோம் என்பது இந்திய அரசுக்குத் தெரியும் என்று கூறியிருந்தார்.

மாந்த உரிமைகள் கண்காணிப்பகம்

போரில் இலங்கைக்கு (சிங்கள அரசுக்கு) இந்தியா உதவியதை மாந்த உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிறட் ஆடம்சும் திறனாய்வில் கடுமையாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய மனிதப் பேரழிவு ஏற்பட இருப்பதாக அனைத்துலகச் செங்குறுக்கைக் கழகம் எச்சரித்த பிறகும், இலங்கை இனச்சிக்கலில் இந்தியா தலையிட்டு போரை நிறுத்தாததற்காக அந்த நாடு என்ன காரணத்தைக் கூறினாலும் அதனை ஏற்க முடியாது! இதில் இந்தியா சற்று முனைப்புடன் செயல் பட்டிருந்தால் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் காப்பாற்றி யிருக்க முடியும் என த டைம்சுநாளிதழிடம் பிறட் ஆடம்சு கூறியுள்ளார்.

இந்தியா கூறியது என்ன?

இனவெறிச் சிங்கள அரசுக்கு இந்தியா கருவிகளும் தொகை உதவியும் பிறவும் அளித்து வருவதாகத் தமிழகத்தில் குரலெழுப்பிய போதெல்லாம், இந்திய அரசும் அதிகாரிகளும் இலங்கை அரசுக்கு இந்தியா எந்த உதவியும் செய்யவில்லை என்றே கூறி வந்தனர்.
மிக நெருக்கடியான சூழல்களில் விடை சொல்லவேண்டிய நிலையில், இந்தியா இலங்கை அரசுக்குத் தற்காப்புக்காக மட்டுமே சிறிது உதவுகிறது என்று வாயவிழ்த்தனர்.

பொது மன்னிப்பு அவை

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது பேரெண்ணிக்கை யிலான மக்கள் கொல்லப் படுவார்கள் என்பது தெரிந்தும், சிறிலங்கா அரசுக்கு இந்தியா முழுமையாகப் போரில் துணையிருந்தது என்று பொது மன்னிப்புச் சவையின் ஆசிய இயக்குநர் சாம் சரிஃபிகூறியுள்ளார்.

கோத்தபய கூற்று

இனவெறிச் சிங்கள அரசின் பாதுகாப்பு அமைச்சரும் அரசின் தலைவர் மகிந்த இராசபக்சேவின் உடன்பிறந்தாருமான கோத்தபாய இராசபக்சே இந்தியாவின் பி.டி.ஐ.செய்தி நிறுவனத்துக்குக் கருத்து தெரிவிக்கையில், இறுதிப் போரின் முதல்நாளிலிருந்து முடிவு வரை இந்தியாவுக்கு முழுமையாகச் செய்திகளை அறிவித்து, சீனாவுடனோ பாகித்தானுடனோ அல்லது வேறெந்த நாட்டுடனோ நாங்கள் வைத்துள்ள உறவு காரணமாக எவ்வகை ஐயமும் ஏற்படாத வகையில் நடந்து கொண்டோம் என்றார்.

வெளியுறவு அமைச்சின் தொடர்புகளுக்கும் மேலதிகமாக நாங்கள் இந்திய அதிகாரிகளுடன் ஒரு கட்டமைப்பினை ஏற்படுத்திக் கொண்டிருந்தோம். இந்த கட்டமைப்பில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்புச் செயலாளர் விசய் சிங் ஆகிய மூவரும் பங்கேற்றிருந்தனர் என்றும் கூறினார்.

அசோக்மேத்தா அறிவிக்கிறார்

இந்தியப் படையில் பணியாற்றி ஓய்வடைந்தவரும் முன்பு, இலங்கை சென்றிருந்த அமைதிப் படையின் தளபதியாக இருந்தவருமான அசோக் மேத்தாஇலண்டனில் இருந்து வெளிவரும் த டைம்சுநாளிதழுக்கு அளித்த நேர்காணலில் இந்தியாவைக் கீழ்க் காணுகின்றவாறு குற்றம் சுமத்தியிருக்கிறார்:
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காவுக்கு உதவ வேண்டும் என்று முடிவு செய்த இந்தியா, இராசீவ் காந்தி படுகொலைக்காக விடுதலைப் புலிகளை பழிவாங்கும் நோக்குடன் சிறிலங்கா அரசுக்குப் பல்வேறு ஆய்த உதவிகளை அளித்தது. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான இலங்கைப் போரின் கடைசிப் பகுதியில் சிறிலங்காவுக்கு இந்தியா மறைமுகமாகத் துணை போனது.

அதே நேரத்தில், களத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கவனித்துத் தடுக்க இந்தியா தவறிவிட்டது. இந்தியாவின் இந்த நிலைப்பாடு வருத்தம் அளிப்பதாகவும் கவலை அளிப்பதாகவும் உள்ளது. இப்போதைய காங்கிரசுத் தலைவர் சோனியா காந்தியின் கணவரும் முன்னாள் இந்திய தலைமை அமைச்சருமான இராசீவ் காந்தி 1991 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப் பட்டதற்குப் பழிவாங்க வேண்டும் என்று இந்திய அரசு விரும்பியது என்றும் அசோக் மேத்தா கூறினார். 

நாளிதழ் கூறியது

இந்தியாவில் 6 கோடித் தமிழர்கள் இருக்கும் போதிலும் அவர்களின் உணர்வுகளை ஒரு பொருட்டாகவே கருதாமல் சிறிலங்காப் படையினருக்கு ஆய்த உதவி, போர்ப் பயிற்சி ஆகியவற்றை இந்தியா வழங்கியது; விடுதலைப் புலிகள் குறித்த உளவுத் தகவல்களையும் சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்தது; தொடர்ந்து தூதரக வழியில் சிறிலங்கா அரசுக்கு இந்தியாவின் துணைதரவு இருந்தது; போர்ப் பகுதியில் சிக்கியிருந்த தமிழ் மக்களைக் காப்பாற்ற, தனது செல்சொல்லை (செல்வாக்கை)ப் பயன்படுத்திப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்றும் தூதரக வட்டாரங்கள் தெரிவித்ததாக த டைம்சுநாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

வெளியுறவுச் செயலர் 

புதுதில்லி வந்திருந்த இலங்கைத் தேசியத் தாளிகை (பத்திரிகை) களின் தலைமை ஆசிரியர்களை இந்திய வெளியுறவு அமைச்சகச் செயலாளர் சிவசங்கர் மேன்ன் சந்தித்துப் பேசினார்.
அப்போது, இலங்கையின் இனச்சிக்கல் தொடர்பான எந்தவொரு தீர்வு முயற்சியிலும் இந்தியா எவ்வகை அழுத்தத்தையும் இலங்கை மீது செலுத்தாது என்று கூறினார், (10-6-2009 – 4தமிழ்மீடியா)

இரிச்சர்டு டிக்சன் இடித்துரை

உலகின் தலைசிறந்த ஊடகவியலாளர்களில் ஒருவரும் மாந்த உரிமை ஆர்வலருமான இரிச்சர்டு டிக்சன்’, பிரித்தானியாவில் இருந்து வெளியாகும் 'மை டெலிகிராப்' நாளிதழில் எழுதிய கட்டுரையில் கீழ்க் காண்பவற்றைக் குறிப்பிட்டார்:

இலங்கைப் போரை ஒருங்கிணைந்து நடத்திய சில இந்திய தலைவர்கள் கொழும்புக்கு அடிக்கடி செலவு மேற்கொண்டனர். அவர்களின் செலவின் நோக்கம் போரைத் தடுத்து நிறுத்துவதன்று; அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுப்பது பற்றிப் பேசுவதன்று; மாறாக, போரில் எந்த அளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்காணிப்பதும், போரை நடத்தும் சிறிலங்கா அதிகாரிகளைப் பாராட்டு வதற்காகவும்தான்.
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தலையை எடுப்பது பற்றியும் பிரபாகரன் கொல்லப்பட்டதை உறுதி செய்வதாக ஒரு சான்றிதழைப் பெறுவது பற்றியும்தான் அவர்கள் சிறிலங்கா ஆட்சியாளர்களுடன் பேசினர்.

உலகை ஏமாற்றுவதற்காகத்தான் இந்தியத் தலைவர்கள் சிறிலங்கா சென்று (போர்நிறுத்தம் பற்றிப்) பேசுவது போல நடித்தனர் - என்று இரிச்சர்டு டிக்சன் கூறியுள்ளார்.

மாந்த உரிமைக்குழுவில் 

இந்த ஆண்டு சனவரி மாதத்தில் காசா பகுதி மீது குண்டுவீச்சு நடத்தி 926 பேரைப் படுகொலை செய்ததற்காக இசுரேல் மீது போரியல் குற்ற வழக்குத் தொடர்ந்து, உசாவல் நடத்தப்பட வேண்டும் - என்று ஒன்றிய நாடுகள் அவையில் தீர்மானம் வந்தபோது, அத் தீர்மானத்திற்குத் துணையாக நின்ற இந்திய அரசு, இலங்கைப் போரின் போது நடைபெற்ற மாந்த உரிமை மீறல்கள் குறித்துப் பொது உசாவல் நடத்தப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்த போது, அத் தீர்மானத்தைச் சீனா, இரசியா, பர்மா, கியூபா போன்ற நாடுகளுடன் சேர்ந்து கொண்டு முறியடித்தது.

தென்மார்க்கு, சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, பிரான்சு, செர்மனி, கனடா, மெக்சிகோ போன்ற நாடுகள் தீர்மானம் நிறைவேற்றத் துணைநின்ற போது, தீர்மானத்தை முறியடிக்க இந்தியா முயற்சி மேற்கொண்டது; முறியடித்தது. மேலும், சிறிலங்காவைப் புகழ்ந்து சிறிலங்காவே கொண்டுவந்த தீர்மானத்திற்குச் சார்பாகவும் இருந்தது. இச் செய்திகளை, ‘த டைம்சுஇதழ் விளக்கமாக எழுதுகிறது.

இவ்வாறு, இலங்கை அரசின் இனஅழிப்புச் செயல்களுக்கும் மாந்த உரிமை மதியாக் கொடுஞ்செயல்களுக்கும் துணையிருந்து வரும் இந்தியா, இந்த மக்கள்நாயகக் குடியரசு நாட்டில் இவற்றை மக்களுக்குத் தெரியாமல் கமுக்கமாகவே செய்துவருகிறது.

சூர்யநாராயண் சொல்கிறார்

அனைத்து நாட்டுத் தமிழ் நடுவம் என்ற அமைப்பு 8-6-2009 அன்று சென்னையில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.

இம்மாநாட்டில் இல்லினாய்சுப் பல்கலைக்கழகச் சட்டக் கல்லூரியின் அனைத்து நாட்டுச் சட்டப் பேராசிரியர் பிரான்சிசு பாயில் அவர்களும் வாசிஙடன் வழக்கறிஞர் புரூசு பெயின் அவர்களும் கலந்து கொண்டு இலங்கையின் இனஅழிப்புப் போக்கையும் அனைத்து நாட்டுக் குமுகாயம் என்ன செய்ய வேண்டுமென்றும் விளக்கிக்கூறினர். பிரானசிசு பாயில் ஈழத்தமிழர் தனிஅரசு கோரிக்கையை இந்தியா எதிர்க்கக் கூடாதென்றும் அறிவுறுத்தினார்.

வன்னிப்போர் நடந்தபோது, இந்தியத் தேசியப் பாதுகாப்பு அறிவுரைக் குழுவின் உறுப்பினராக இருந்தவர் பேராசிரியர் வி.சூர்யநாராயண். அவர் இம்மாநாட்டில் கலந்து கொண்டு பேசும்போது, “ நம் (இந்தியாவின்) கைகள் இரத்தக் கறையால் களங்கப் பட்டுள்ளன என்று ஒப்புதலுரை செய்தார்.

கடந்த இரண்டு மூன்று ஆண்டுக் காலமாகத் தமிழ்நாட்டு அரசைக் கலந்து கொள்ளாது (ஈழச் சிக்கலில்) புதுதில்லி எதையும் செய்வதில்லை என்று கூறி, கருணாநிதி முதல்வராயுள்ள தமிழ்நாட்டரசு அனைத்துச் செயல்களுக்கும் உள்கையாக இருந்ததை மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார்!

சூர்யநாராயண் கருத்துப்படி, ‘இந்தியா தலையிடக் கூடும்என்ற அச்சம் நீக்கப்பட்ட நிலை, இந்திய அரசதந்திரத்தின் தோல்வியாகும்! அதன் விளைவு மாந்த உரிமைக்குழுவில் தெரிந்தது...

ஓர் இந்தியனாக, மாந்த உரிமைக் குழுவில் புதுதில்லி ஒப்போலை இட்ட தன்மை குறித்துத்தாம் வெட்கப்படுவதாகக் கூறினார். ஒப்போலை செலுத்துவதில் கலந்து கொள்ளாது தவிர்த்திருக்க வேண்டுமென்றார்.

மாந்த உரிமைக் குழுவில் சிறிலங்காவிற்குச் சார்பாக ஒப்போலைகள் பெற இந்தியா ஏற்பாடு செய்தது என்பதுதான் அனைத்து நாட்டு நோக்கர்கள் கருத்தாகும்.

சிறிலங்கா பற்றிய இந்தியாவின் கொள்கையில் வெளிப்படை நிலை (ஒளிவு மறைவு இல்லாமை) இல்லை என்பதைப் பெருவருத்த உணர்வோடு தெரிவிப்பதாகக் கூறினார்.
இந்தியாவின் சிறிலங்காக் கொள்கை ஒருசார்பான, நாடாளு மன்றத்திற் கப்பாற்பட்ட உயர்நிலையாளர் சிலரால் கையாளப் படுகின்ற தென்று இந்தியாவிற்கு வெளியிலுள்ள மக்கள் பல ஆண்டுகளாகவே சுட்டிக்காட்டுகின்றனர் என்றார்!...

எவ்வகைக்கட்டுப்பாடுமின்றி 500 கோடி உருபாவைச் சிறிலங்கா அரசிற்கு அளித்ததற்காக எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேன்னை அவர் குறைகூறினார். அந்தத் தொகையைச் செலவழிக்க சிறிலங்கா அரசால் அமர்த்தப் பட்ட 20 உறுப்பினர் குழுவில், 19 பேர் சிங்களர், ஒருவர் முசுலிம் என்றும் தமிழர் ஒருவருமில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார்!... 

தினமணியின் குமுறலுரை

29-5-2009
நாளிட்ட தினமணிநாளிதழின் ஆசிரியருரையில் காணப்பட்ட கீழ்க் காணும் குறிப்பைப் பாருங்கள்:
எங்கோ வியன்னாவில் தேராசச்கண்ட்டு தலைவர் நிரஞ்சன் தாசைக் கொலை செய்ய காலிசுத்தான் சிந்தாபாத் இயக்கத்தினர் முயன்றனர் என்பதற்காகப் பஞ்சாப் பற்றி எரிகிறது. தலைமை அமைச்சர் (பிரதமர்) பதறுகிறார். உள்துறை அமைச்சர் பதற்றமடைகிறார். ஊடகங்கள் அலறுகின்றன. ஆனால் 50 அயிரமாத்திரித் தூரத்தில் இலக்கக் கணக்கான தமிழர்கள் இலங்கையில் வீடின்றி வாசலின்றி, உடையின்றி உண்ண உணவின்றி யாருமற்றோராய் (அநாதைகளாய்) சொந்த மண்ணில் ஏதிலிகளாய் அல்ல்ல்படுகிறார்கள். கேட்க யாருமில்லை (நாதியில்லை). நமக்கும் கவலையில்லை.

மதிக்கப்படாத உணர்வுகள்

இலங்கைச் சிங்கள இனவெறிக் கடற்படையால் 350க்கும் மேல் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறு அவர்கள் கொல்வதும் தளைப்படுத்திக் கொண்டுசெல்வதும் தமிழக மீனவர்களின் மீன்களைக் கொள்ளையடிப்பதும் படகுகளைப் பாழ்செய்வதும் வலைகளை அறுத்து வீணாக்குவதுமான செயற்பாடுகள் தொடர்கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் ஈழத் தமிழரை இனவெறிச் சிங்களரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றும் தமிழக மீனவரை சிங்களக் கடற்படையினரிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றும் கடந்த பல மாதங்களாகப் பல்லாயிரக் கணக்கான, பல்வேறு வகையிலான அறவழிப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தக் காந்தி தேசத்தில் அந்தப் போராட்டங்கள் கடுகளவும் - அணுவளவும் கூட மதிக்கப்படவில்லை. தமிழர்களின் உணர்வுகள் பொருடபடுத்தப் படவே இல்லை.

பொருட்படுத்தா மனப்போக்கு

நூறு, ஆயிரமெனப் பணத்தை வாரி யிறைத்தும் வேறுவகை மோசடி செய்தும் தேர்தல்களில் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம்; இவர்களை மதிக்கவோ பொருட்படுத்தவோ தேவையில்லை என்ற மனப்போக்கு உள்ளத்தில் காழ் கொண்டு விட்டது தெரிகிறது. மாந்த நேயமோ அறமோ பேசுவதில் பயனில்லை என்ற நிலையையே காணமுடிகின்றது.

இந்நிலையில், தமிழர்க்கு 967ஆம் எண் குறள்தான் நினைவில் வந்து உறுத்துகின்றது. அது இதுதான்:

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.
    
----------------------------------------------------------------------

புதன், 3 ஜூன், 2009

ஐயா திருமுருகனார் மறைவுக்கு இரங்கல்!

. .                                                                                                                 
 
ஏற்கெனவே எம்முள்ளம் எரியத் தீய்க்கும் . 
          ஈழத்துச் செய்தியின்பின் இந்தச் செய்தி ! 
தேற்றமுற விடையளிக்க யாரைத் தேர்வம்?  . 
          தீந்தமிழின் இலக்கணத்தில் ஐயம் தோன்றின்!
ஏற்றமுற விளக்குதற்கே எவரிங் குள்ளார் . 
          இசைத்தமிழின் நுணுக்கங்கள் எடுத்துச் சொல்லி ! 
ஆற்றலுறத் தமிழறிந்த ஐயா எங்கள் . 
          அருந்திரு முருகனாரே ! அழுகின் றோமே !

திங்கள், 25 மே, 2009

இரண்டகர் இரண்டுபேர்!




ஓரிலக்கம் பேர்கொன்றான் ஈழ மண்ணில்!
    உடனிக்கால் மூன்றிலக்கம் மெல்லக் கொன்றே 
ஓரினத்தை உருத்தெரியா தழிக்கின் றானே 
    உரிமைநிலத் தடயமெலாம் ஒக்க நீக்கி!
பூரியனின் கொடுமைகட்குத் துணையாய் நிற்போர்
    பொய்ம்முகத்தி னித்தாலிப் பொல்லாப் பேயும் 
சீரியநல் லார்காறித் தூ !தூ ! வென்றே 
    சினந்துமிழும் தன்னலப்பேய்க் கலைஞன் தானும்!

            ----------------------------

ஞாயிறு, 17 மே, 2009

புழுவாகிப் போனோம்!



உலகமே! 
நீ குருடா?
செவிடா?

ஐயோ!
உலகில் மாந்த உணர்வே அற்றுப் போனதோ?
ஒரே நாளில் 25000 மாந்த உயிர்கள் சுடப்பட்டும் காயம்பட்டும் எரியுண்டும் பொசுங்கியும் சாவதா?

ஐ.நா. மன்றமே! 
அமெரிக்காவே!
மாந்த உரிமைகள் பற்றிய உங்களின் பேச்செல்லாம் இவ்வளவுதானோ?
, ஈழத்தமிழன் வெள்ளைத் தோலன் இல்லை என்பது காரணமோ? 

உலக நாடுகளே!
உங்கள் நாடுகளில் மாந்த நேயம் பற்றி எந்த அறிஞனும் எழுதவில்லையா? பேசவில்லையா?
ஈழத்தமிழருக்கு இன்று நேர்வது நாளை யாருக்கும் நடக்குமென்றுங்கூட எண்ணமில்லையா?

இந்திய ஆட்சியாளர்களே!
அதிகார வல்லாளரே!
நீங்கள் மாந்தர் தாமா?
வெட்கம்! வெட்கம்! 
இந்தக் கொடுமைகளை நிறைவேற்றவா இலங்கையை நட்பு நாடென்கிறீர்?

உலக நாடுகளின் தலைவர்களே!
மாந்த உரிமை அமைப்புகளே!
ஐ.நா.மன்றமே!
மாந்தர்களே!
நாம் உயிரோடு இருக்கும் காலத்தில்தான் இந்தக் கொடுங் கொடிய பெரும் பேரழிவு நடக்கிறது!

சே!
இதற்குச் சான்றாக இருந்து கொண்டு செயலற்றிருக்கும் இழிவு, 
அட, ஓ! எண்ணிப் பார்க்க முடியாத மானக்கேடு!
விலங்கினும் கீழாக,
பூச்சிப் புழுவாக -
மலத்தில் நெளியும் புழுவாகிப் போனோம்!

-------------------------------------------------------------

திங்கள், 11 மே, 2009

இனங்கொல்லும் இரண்டகம்!



  
2002-ஆம் ஆண்டில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை, அவ் வொப்பந்தம் உருவாக்கக் காரணமாயிருந்த நாடுகளுக்கும் தெரிவிக்காமல், இராசபக்சே அரசு தன்விருப்பமாகவும் தடாலடியாகவும் திடீரென 2008 சனவரியில் முறித்துக்கொண்டது.

இனவெறித் தாக்குதலில், இலங்கை அரசின் முப்படைகளும் தமிழர்களை எவ்வகை வேறுபாடுங் கருதாது கொன்று குவித்து வருகின்றன. தங்கள் கொப்பூழ்க் கொடி உறவுகளின் இன்னல்களையும் உயிர் இழப்புகளையும் கண்டு, தமிழ்நாட்டின் எல்லாப்பிரிவு மக்களும் மனங் கலங்குகின்றனர். 

இக்கால் வன்னியில் தமிழ்மக்கள் படும் துயரம் சொல்லி மாளாது! நாள்தோறும் நூற்றுக்கணக்கில் ஏதுமறியாத் தமிழர்கள் கொல்லப் படுகின்றனர். இம் மாதம் 9, 10 ஆகிய இருநாட்களில் மட்டும் 3000 பேர் குண்டு வீச்சால் கொன்று குவிக்கப் பட்டுள்ளனர்.

கை கால் உறுப்பிழந்தும் நோயுற்றும் பசிக் கொடுமையிலும் நீரின்றியும் அவர்கள் படுந்துனபங்கள் விளக்க வியலாதன. வன்னிப் பகுதியினின்றும் வெளிவந்தோர் சிங்களக் கொடியோரால் படுந்துனபம் கேட்டாலே நடுங்கச் செய்வதாக உள்ளது.

இக் கொடுமைக்கு எதிராகப் பேரெழுச்சி கொண்டு தமிழ்நாட்டு மக்கள் கண்டனப் பேரணி, உண்ணாநோன்பு, மறியல், வேலைநிறுத்தம், கடைஅடைப்பு, உருவ எரிப்பு, முற்றுகை போன்ற அனைத்துவகைப் போராட்டங்களையும் ஊர்தோறும் நடத்தி, ஈழத்தமிழரின் இன்னல் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசையும், தில்லி நடுவண் அரசையும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காகவே, தமிழகத்தில் முத்துக்குமார் முதலாகப் பதின்மூன்று பேர் தீக்குளித்து இறந்தன ரென்பதையும் அறிவோம். இந்திய அரசோ, இலங்கை அரசின் இனஅழிப்புப் போரைத் தடுத்து நிறுத்தாமல், அச் சிங்கள இனவெறி அரசுக்குப் பல வழிகளிலும் உதவி செய்து வரும் போக்கே தொடர்கிறது.

இந்திய ஆளுங்கட்சியின் தலைமை, ஓர் உயிரின் இழப்பிற்குப் பழிவாங்க, ஓரினத்தையே அழித்தொழிக்கும் எண்ணத்தில், சிங்களரின் முயற்சிக்குத் துணை போகின்றதோ என்றே எண்ணத் தோன்றுகிறது. தொகை, பயிற்சி, கருவிகள், தொழினுட்பம், உளவு, ஆட்கள் முதலியவற்றை அளித்துப் பல்வேறு வகைகளிலும் சிங்கள இனவெறி அரசுக்கு உதவி வருகின்றது. தமிழர்களின் உணர்வுகளையும் மதிக்கவில்லை; போராட்டத்தையும் பொருட்படுத்தவில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதி, ஈழத் தமிழரின் இன்னலைத் தீர்க்க உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நேரத்திற் கொன்றைப் பேசிக் குழப்பி வருவதையும், போலியான போராட்டங்களை அறிவித்து மக்களின் எழுச்சியை மழுங்கடிக்க முயல்வதையும் காண்கின்றோம்!

இச் சிக்கலில், இராசிவ்காந்திக்கு முன், பின் என்று பார்க்க வேண்டுமென்றார்; புலிகளின் 'உடன்பிறப்பா ருடனான போர், முற்றதிகாரப் போக்கு’ (சகோதர யுத்தம், சர்வாதிகாரம்) பற்றிப் பேசினார்; இந்திய அரசின் கொள்கையே தம் கொள்கை என்றார்; தில்லிக்குத் தொலைவரி தரும் போராட்டம் என்றார்; நாடாளுமன்ற உறுப்பினர் பதவிவிலகுவர் என்றார்; மாந்தத் தொடரிப் போராட்டம் என்றார்; ஓரளவுக்குத்தான் அந்நாட்டைக் கேட்டுக் கொள்ள முடியும் என்றார்; வேலைநிறுத்தம் என்றார்; மூன்றுமணி நேர உண்ணா நோன்பிருந்தார்; போர் நின்றுவிட்டது என்றார்; புலிகள் போரை நிறுத்த வேண்டுமென்றார்; பிரபாகரன் என் நண்பர் என்றார்; மறுநாளே மறுத்தார்; விடுதலையை நோக்கமாகக் கொண்டதே விடுதலைப் புலிகள் இயக்கம் என்றார்; பேராயக்கட்சி எதிர்த்துக் கருத்துரைத்ததும் அமைதியானார்.

அ.தி.மு.க.வின் தலைவி செயலலிதா, நாடாளு மன்றத் தேர்தல் பரப்புரையில், ஈழச் சிக்கலுக்குத் தீர்வு தனித்தமிழ் ஈழமே என்றும், தம் கூட்டணி வலிவாக வெற்றி பெற்றால், இந்திரா காந்தி வங்கதேச விடுதலைக்கு வழி செய்ததைப் போல், தானும், தன் கூட்டணியின் உதவியுடன் அமைய இருக்கும் புதிய இந்திய அரசு மூலம், ஈழம் விடுதலை அடையச் செய்வேன் என்றும் தமிழ்நாடெங்கும் தான் பேசிய பரப்புரைக் கூட்டங்களில் அறிவிப்புச் (பிரகடனம்) செய்தார்.

தமிழ்நாட்டு மக்கள் ஈழச் சிக்கலில் தம்பால் நம்பிக்கை இழந்து விட்ட நிலை தெளிவாகத் தெரிந்த பின்னர் முதல்வர் கருணாநிதி, திடுமெனத் தமிழ் ஈழம் அமையத் தானும் உதவுவதாகக் கூறினா ரென்றாலும், பேராயக்கட்சி அதை எதிர்த்துக் கருத்துக் கூறிய பின்னர் அமைதியானார். சென்னையில் பேராயக் கட்சித் தலைவி சோனியா காந்தியுடன் கலந்து கொண்ட தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அதைப்பற்றி வாயே திறக்க வில்லை.

தன் குடும்பத்தாரின் நலன்களையே முதன்மையாகக் கருதிப் பதவி, பொருள், அதிகாரங்களை அவற்றிற்காக மட்டுமே பயன்ப டுத்தும் கருணாநிதி, தமிழ்நாட்டு நலன்களையும் தமிழ்இன நலன்களையும் புறக்கணித்து வருவததோடு அதனை ஞாயப்படுத்தும் முயற்சியில் பல்வேறு வகையாக மாறிமாறிப் பேசி மக்களை ஏமாற்றிக் குழப்புகிறார் என்ற உண்மையைத் தமிழர்கள் உணர்ந்து கொண்டதை இக்கால் அறிய முடிகிறது.

-----------------------------------------------------------------