திங்கள், 17 டிசம்பர், 2007

ஒரு தமிழ்ச்செல்வன் உயிர் பறித்தாலென்?



 அருந்தமிழ் வுணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
திருந்திடாச் சிங்களர் தீமையின் உருவினர்
போர்நெறி மதியாப் பார்பழி கொடுமையர்
சீரார் அமைதிச் சிரிப்பின் நல்லெழிற்
செந்தமிழ்ச் செல்வனைச் செகுத்தனர்! அட,ஓ!
முந்தும் அதிர்ச்சி! நொந்திடும் சிந்தை!

ஈழத் தேசிய எழுச்சித் தலைவரின்
ஆழன் பேந்திய அணுக்கத் தம்பி!
ஒப்பிலாத் தோழன்! உயர்மறப் பொருநன்!
செப்புரை தேர்ந்த செஞ்சொலன், இன்சொலன்!


அமைதிகாண் பேச்சுக்(கு) ஆண்டனார்க் குப்பின்
சமைவுறப் பொருந்திய அமைதிப் புறவவன்!  
நார்வே பவ்வர்  நனிபுகழ்ந் தேற்றும்
சீர்மையன், கூர்மையன், செழும்பொறை நோன்றவன்!

களம்பல வென்றவன்; காலிழந் திடினும்
உளவலி தாழா உறுதித் திண்ணியன்!
குறியின் மாறாக் கொள்கை நெறியினன்!
பெறற்கரு மாற்றலன், பெருவலி நெருப்பனான்!

இனவெறிச் சிங்களர் தனிக்கொடுங் கொடுமையர் மனச்சான் றழித்தே மாரியாய்க் குண்டுகள்
முழக்கொடு தொடர்ச்சியாய் இலக்குகொண் டழிப்பதோ குழந்தைகள் பெண்கள் குடுகுடு முதியோர்!
இன்றோ, அமைதிக் கென்றே உழைக்கையில்
கொன்றனர் எந்தமிழ்ச் செல்வனை, அன்றோ?

போர்தீர் வென்றிடும் புன்மதி யாளர்
தேர்பு, தமிழினம் தீர அழிப்பதே!
செருநெறி கருதார் சீரறம் பிழைத்தே
ஒருதமிழ்ச் செல்வன் உயிர்பறித் தாலென்?
ஓரா யிரந்தமிழ்ச் செல்வர் வருவர்
தீராக் கொடும்பகை தீர்கணக் காற்றுவர்!
ஈழ விடுதலை ஈட்டிப்
பீழை துடைத்தே பெருநலஞ் சேர்ப்பரே!

- த.ந. (05-11-2007)





10 கருத்துகள்:

வெற்றி சொன்னது…

நல்ல கவிதை.

பெயரில்லா சொன்னது…

ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு இவ்வாறு யாரும் எழுத முடியுமா! நல்ல தமிழ்.

-அகிலன்

பெயரில்லா சொன்னது…

நன்று, மிக நன்று, வாழ்த்துக்கள் பல.

தமிழநம்பி சொன்னது…

நன்றி ஐயா!
பாராட்டிய மூவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!
அன்பன்,
த.ந.

அகரம் அமுதா சொன்னது…

நெஞ்சம் கொதிக்கிறது இந்த நிலைகெட்ட சிங்களரை நினைந்துவிட்டால் - என்றே பாடத்தோன்றுகிறது. தங்களின் தனித்தமிழாற்றல் கண்டு பொறாமை கொள்கிறேன். இறப்பதற்குள் தனித்தமிழில் இதுபோன்ற பாநயமிக்க ஆற்றல்வாய்ந்த பாக்கள் நான்கைந்தாவது படைத்துவிட வேண்டும் என எண்ணுகிறேன்.

தமிழநம்பி சொன்னது…

நன்றி அகரம்அமுதா!

உங்களால் இதைவிடச் சிறப்பாக எழுத முடியும்.

எழுதுங்கள்.

உமா சொன்னது…

ஐயா, வணக்கம். இப் பாடலைப் படித்தவுடன் சற்றே தமிழ்ச்செல்வனின் மரணம் பற்றி அறிய விழைந்தேன். அதுதான் பின்னூட்டமிட தாமதமாகிவிட்டது. அற்புதமான, உணர்வு பொங்கும் பாடல். தமிழ்ச் செல்வனின் மரணம் பற்றியச் செய்தியைப் படித்ததால் ஐயங்கள் தீர்ந்தன. இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலை பற்றி சமீபகாலமாகவே நான் கவனம் செலுத்துகிறேன். அதன் ஆரம்ப நிலை தெளிவாகத் தெரியாது. இப்பொழுதுதான் அதிகமாக தெரிந்துக்கொண்டுவருகிறேன்.

//போர்தீர் வென்றிடும் புன்மதி யாளர்
தேர்பு, தமிழினம் தீர அழிப்பதே!
இது உண்மை என்பதைக் கண்டுவிட்டோம்.ஆயின்

//ஒருதமிழ்ச் செல்வன் உயிர்பறித் தாலென்?
ஓரா யிரந்தமிழ்ச் செல்வர் வருவர்
தீராக் கொடும்பகை தீர்கணக் காற்றுவர்!
ஈழ விடுதலை ஈட்டி
பீழை துடைத்தே பெருநலஞ் சேர்ப்பரே!

இது நடக்கும் நாள் என்நாள் என்றே மனம் ஏங்குகிறது.

பாவிலக்கணம் பொறுத்தவரையில் இப் பாவை அச்சு எடுத்து வைத்துள்ளேன். தங்களின் மற்ற பாக்களையும் அச்சு எடுத்து வைத்துள்ளேன். எதுகை, மோனையும் ஓசை நயமும் அறிய எனக்கு மிகவும் உதவியாயிருக்கும்.
மிக்க நன்றி.

ஐயா தாங்கள் தனித் தமிழில் எழுதுவது மிகவும் அற்புதமான விடயம். எனக்கும் தனித்தமிழ் எழுத ஆர்வம் மேலோங்குகிறது. இவ்விடயத்தில் தாங்கள் எனக்கு மட்டுமின்றி வெண்பாஎழுதலாம் வாங்க பதிவில் எல்லோருக்கும் சற்று உதவினால் மிக மகிழ்ச்சியாயிருக்கும். நாங்கள் எழுதும் பாவில் பிறச்சொல் கலந்திருப்பின் சுட்டிக்காட்டினால் கண்டிப்பாக மாற்றிக்கொள்வோம். நன்றி.

ஐயா இன்னுமொரு விடயம் திரு.அகரம் அமுதா அவர்கள் காரணியம் என்பதே தமிழ் வடிவம், காரணம் என்பது தமிழ் வடிவமல்ல எனக்கூறினார். அதன்காரணியத்தைச் சற்றே விளக்கவும்.
மிக்க நன்றி.

தமிழநம்பி சொன்னது…

நன்றி உமா!

ஈழத்தமிழர் நிலை பற்றி உணர்வோடு கருத்தைக் கூறியுள்ளீர்கள்.

எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாகப் பல நிகழ்ச்சிகள் ந்டந்துள்ளன.

நாம் நம்பியிருந்தவர்கள் இழைத்த இரண்டகத்தின் விளைவு நமக்கு ஆற்றொணாத் துயரத்தை அளித்துள்ளது; மிகவும் நோகச் செய்துள்ளது.
நிலைமை மாறும் என நம்புவோம்.

நாம் வெண்பா எழுதும் வலைப்பதிவில் நீங்கள் வினவியவற்றிற்கு விளக்கம் எழுதுகிறேன்.

உங்கள் உண்மையான உணர்வு வெளிப்பாட்டு உரைக்கு மீண்டும் நன்றி.

உமா சொன்னது…

[அய்யா உங்களின் முதல் வரியை, உங்களை குறிக்கவே பயன் படுத்திக்கொண்டேன்.]

அருந்தமிழ் வுணர்வுடை அன்புநெஞ் சத்தீர்!
பெரும்படைக் கொண்டேப் பீழைச் செய்தனர்
கடுங்கல் நெஞ்சினர், கற்றும் அறியார்
கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர்
பகைவனுக் கருளும் பண்புடைக் கருத்தினைப்
பகைவளர் பண்பினர் பாவம் அறியார்
இருளும் ஒளியும் இயற்கையின் நிகழ்ச்சி
மருளவே வேண்டா மனிதம் விழித்திடும்
முன்புநம் மண்ணில் முன்னவர் அழிந்தனர்
இன்றுநாம் விடுதலை இன்றியா வாழ்கிறோம்?
கொன்றுநாம் அழித்தோம் களைகளை என்றால்
நன்றுதாம் சுதந்திரம் நம்முடை நாட்டில்
சிந்திய செந்நீர் சிங்கள மண்ணிலும்
வந்திடும் ஓர்நாள் வெற்றியைச் சூடியே,
அந்தியும் சாய்ந்திடும் ஆங்கே
வந்திடும் தமிழர் வாழ்வினில் விடியலே!

[கொடுஞ்செயல் புரிந்ததும் கும்மாள மிட்டனர் - பிரபாகரன் இறந்துவிட்டார் இன்றச் செய்தியைக் கேட்டதும் சிங்களர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர் என்பது செய்தி.]

அய்யா பா சரிதானே!

தமிழநம்பி சொன்னது…

மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள் உமா!

இவ்வளவு விரைவில், ஆசிரியப்பாவினை இவ்வளவு நன்றாக எழுதியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும்.

பாட்டெழுதப் பயிலும் வலைத்தளத்திலும் இப்பாடலைப் பதிவு செய்யுங்கள்.

மற்றவற்றை அங்கு எழுத விரும்புகிறேன்.

நன்றி! நன்றி!