வியாழன், 7 நவம்பர், 2024

தமிழ் செம்மொழி அறிவிப்பும் பயனும்!

  தமிழ் செம்மொழி அறிவிப்பும் பயனும்!

தமிழ்மொழி செம்மொழி என்று அறிவிக்க வேண்டுமென நூற்றைம்பதாண்டுக் காலம் பல்வேறு முயல்வுகளில் தமிழர் பலரும் ஈடுபட்டிருந்தோம். பல்வேறு அறிஞர்கள் குரல் கொடுத்து வந்ததுடன் பல மாநாடுகளிலும் அதற்காகத் தீர்மானம் இயற்றப்பட்டது.

1856ல் தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிஞர் கால்டுவெல் அறிவித்தார். 1902ல் பரிதிமாற் கலைஞர் தமிழ் செம்மொழி என்கிற கட்டுரையை எழுதினார். 1918ல் தமிழை செம்மொழியாக அறிவிக்கக்கோரி மறைமலை அடிகள் தலைமையில் தீர்மானம் இயற்றப்பட்டது. 1919-1920ல் கரந்தையில் நடந்த தமிழ்ச் சங்கத்தில் செம்மொழி கோரிக்கைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் பிறகு, 1988ல் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் தமிழைச் செம்மொழியாக்க அறிஞர்கள் தீர்மானம் இயற்றினர். மேலும்இ 1995, 1998, 2002 ஆண்டுகளில் நடந்த தமிழ் மாநாடுகளிலும் தமிழைச் செம்மொழியாக அறிவிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞரும், இலத்தீன், கீரேக்கம், தமிழ், சமற்கிருதம் என்னும் சங்கதம், உருசியன் உள்ளிட்ட பல உலக மொழிகளில் ஆழ்ந்த புலமை மிக்கவருமான சியார்ச்சு காட்டு 2000ஆம் ஆண்டு தமிழின் செம்மொழித் தகுதி பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழ் செம்மொழிக் கோரிக்கைக்கான ஊக்க விசையாக இவ்வறிக்கை இருந்தது. அப்பெருமகன், தமிழ் செம்மொழி என அறிவிக்கச் சான்றுகள் கேட்டதற்கே தம் வியப்பைத் தெரிவித்தவராவார்.

  செம்மொழி என்பதற்கான தகுதிகளாக மேற்குலக மொழியறிஞர்கள் பதினொரு கூறுகளைக் குறிப்பிட்டுள்ளனர். அவையாவன: தொன்மை, தனித்தன்மை, பொதுமைப்பண்பு, நடுவுநிலைமை, தாய்மைப்பண்பு, நாகரிக குமுகத்தின் பண்பாடு கலை வாழ்க்கைப் பட்டறிவின் வெளிப்பாடு, பிறமொழியின் - பிறமொழி இலக்கியத்தின் தாக்கமின்றித் தனித்தியங்கும் தன்மை, இலக்கிய வளம், உயர்சிந்தனை, கலைநய இலக்கிய வெளிப்பாட்டில் தனித்தன்மை, மொழிக்கொள்கைகள் ஆகியனவாம். தமிழுக்கு மட்டுமே மேலே குறிப்பிட்ட பதினோரு செம்மொழித் தகுதிகளும் முழுமையாக உள்ளதென்று மொழியியலறிஞர் கூறுகின்றனர் 

சென்னை ஆவடியில் நடுவணரசுப் ‘பாதுகாப்புஆய்வு, வளர்ச்சி அமைப்’பில் அறிவியலறிஞராகப் பணிநிறைவு செய்த அறிஞர் முத்துசாமி இராமையா, ‘கோரா’ தளத்தில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில், மேற்குறித்த 11 தகுதிகளில் சமற்கிருதம் என்னும் சங்கதத்திற்கு 7 தகுதிகள் மட்டுமே உள்ளனவென்பதும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகள் மட்டுமே உள்ளனவென்பதும் அறிஞர்கள் கருத்தென எழுதியிருக்கின்றார்.

இந்திய ஒன்றிய அரசில் அமைச்சராக இருந்த ‘முரளி மனோகர் சோசி’ என்ற மொழியறியா மொக்கையர், வழக்கொழிந்த மொழிகளைத்தான் செம்மொழி என்பார்கள், எனவே தமிழ் செம்மொழி இல்லை - என்று கூறி இக்கோரிக்கையை ஏற்க மறுத்துரைத்தார்.  

அப்போது தமிழ்நாட்டு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளராக இருந்த ஒளவை. நடராசனும், செத்த மொழியைத்தான் செம்மொழி என்பார்கள் என்று குறிப்பிட்டு, இந்த கோப்பை மூடினார் என்று தமிழறிஞர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள் என்றும் தமிழறிஞர் ஒளவை. துரைசாமிப்பிள்ளையின் புதல்வரான நடராசன் இப்படிச் செய்தது பலருக்கும் மனக்கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்றும் குறிப்புகள் உள்ளன.என்று (பி,பி.சி.) தமிழ் எழுத்தாளரான அ.தா.பாலசுப்பிரமணியன் 2020 ஆகத்து 14இல் எழுதிய கட்டுரையிலும் மறுபடியும் புதுப்பித்துப் பதித்த 2023 சூலை 30 கட்டுரையிலும் எழுதியுள்ளார். நல்ல தமிழ் உணர்வாளர் என்று நம்புகின்ற தமிழறிந்தார் தக்க பதவியிலிருந்தும் தமிழுக்கு ஆக்கம் மறுத்தொதுங்கிய இரண்டகம் நெஞ்சம் பதைக்கக் கவலச்செய்கின்றது. 

பிரித்தானிய அரசு, சில மொழிகளைச் செம்மொழிகளாக அறிவித்து அவற்றின் வளர்ச்சிக்காகப் பல உதவிகளைச்செய்து வந்தது என்றும் அதன் அடிப்படையிலேயே தமிழுக்கும் செம்மொழித் தகுதி வேண்டும் என்ற கோரிக்கை அந்தக்காலத்தில் எழுப்பப்பட்டது என்றும் முத்துசாமி இராமையா எழுதியிருக்கின்றார்.

நாட்டு விடுதலைக்குப்பின், இந்திய ஒன்றிய நாட்டில், செம்மொழி அறிவிப்புச் செய்யாமலே சமற்கிருதம் என்ற சங்கத மொழிக்கும் இந்தி மொழிக்கும் பலவகையிலும் அவற்றை வளர்க்கவும் பரப்பவும் திணிக்கவும்  பெருந்தொகை வாரி வழங்கப்பட்டு வந்தது. இப்போதும் செலவழிக்கப் படுகின்றது. தமிழுக்குச் செம்மொழித் தகுதி அறிவிக்கப்பட்டால், அம்மொழிகளுக்குச் செலவிடும் தொகைக்குச் சம்மாகவேனும் தமிழுக்குத் தொகை ஒதுக்கிச் செலவிடுவார்கள் என்று எதிர்பார்த்தே பல்வேறு நிலைகளில் பல்வேறு அமைப்புகளும் பலவாறு கோரிக்கைகளும் வேண்டுகோள்களும் விடுத்தனர்; போராடினர். பல்வேறு அரசியல் கட்சிகளும் தம் மாநாடுகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் நடுவணரசு அமைச்சர்களிடம் நேரில் வேண்டுகை மடல்கள் அளித்தும் முயன்றனர்.

பலவகை முயல்வுகளுக்குப் பின்னர், 2014 சூன் 6ஆம் நாளில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், அப்போதைய குடியரசுத் தலைவராக இருந்த மதிப்புமிக்க அப்துல்கலாம், தமிழ் ஒரு செம்மொழி என்று அறிவித்தார். அதன் பயனாக, ‘செம்மொழித் தமிழாய்வு நடுவ நிறுவனம்’ அல்லது ‘செம்மொழித தமிழ் உயராய்வு மையம்’ என்னும் நிறுவனம் இந்திய அரசால் 2006 மார்ச்சு மாதம் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு முதலில் மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவ நிறுவனத்தில் இருந்தது. பின்னர்ச் சென்னைக்கு 2008 மே 19ஆம் நாள் மாற்றப்பட்டு, இயங்கி வருகிறது. 

தமிழர் எதிர்பார்த்ததைப்போல் சமற்கிருதம், இந்திக்கு ஒதுக்கப்படும் தொகைக்குச் சமமாக சொம்மொழி தமிழுக்குத் தொகை ஒதுக்கப்பட வில்லை. அவ்விரு மொழிகளுக்கு ஒதுக்கப்படும் தொகையோடு ஒப்பிடுகையில் மிகக் குறைந்த தொகையே தமிழுக்கு ஒதுக்கப்படுகிறது. அந்தத் தொகையைக் கொண்டு செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் பல ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, ஆய்வுரைகளை ஆவணப்படுத்துகிறது. பழந்தமிழ் நூல்கள் சிலவற்றைப் புதப்பதிப்பாக வெளியிடுகிறது. சிலவற்றை மொழிபெயர்த்து வெளியிட தொகை வழங்குகிறது. பல ஆய்வாளருக்கு விருதுகள் வழங்கி வருகிறது.

செம்மொழியாகத் தமிழை அறிவித்தால், தமிழுக்கும் தமிழருக்கும் பெருநன்மை விளையும் என்று எதிர்பார்த்தோம். சீனா, பிரன்சு, சப்பான், உருசியா, கொரியா முதலிய நாடுகளில் உலகின் எந்த மொழியில் எந்தவகை அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், மொழியியல், நுண்கலைகள் முதலிய துறைகள் சார்ந்த எந்த நூல் வெளிவந்தாலும் அவற்றை அவர்கள் உடனுக்குடன் தம் மொழியில் பெயர்த்து வெளியிடத்தக்க வகையில் சிறந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். கலைச்சொற்களை உடனுக்குடன் பெயர்க்க இயலா நிலையிருந்தால், மூலநூலின் சொல்லையே முதலில் குறிப்பிட்டாலும், பின்னர்த் தம் மொழியில் தக்கவகையில் கலைச்சொல்லாக்கம் செய்து நூல்களில் ஏற்றிவிடுகின்றனர். தமிழுக்கும் அத்தகைய நிலை வாய்க்கும், தமிழ்வழிக் கல்விக்கும் வழிவகுக்கும் என்ற கனவோடு காத்திருந்தோம். 

தமிழ் செம்மொழி என்ற அறிவிப்பால் எந்தப் பெரும்பயனும் இல்லை. ஆய்வுக்கூட்டங்கள் நடத்த பல்கலைக்கழகங்கள் உள்ளன. நூல்களைப் பதிப்பிட சை.சி.நூ.கழகம், தமிழ்மண் பதிப்பகம் முதலிய நிறுவனங்கள் இருக்கின்றன. விருதுகள் வழங்க தமிழ்நாட்டரசும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் உள்ளன. இவற்றுக்காக நாம் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமெனப் போராட வில்லை, காத்திருக்கவில்லை. எனவே, இந்திய ஒன்றிய அரசு செம்மொழித் தமிழுக்குச் சங்கதத்திற்கும் இந்திக்கும் ஒதுக்கும் தொகைக்குக் குறையாமல் ஒதுக்கித் தரவேண்டும் என்றும் இதற்காகத் தமிழ்நாட்டரசு முழு முனைப்புடன் முயலவேண்டுமென்றும் வலியுறுத்துகின்றோம். 

இந்திய நாட்டில் அனைவரும் சம உரிமையர் என்பது உண்மை என்பதற்குக் காட்டாக இதைச் செய்வதே முறையென இந்திய அரசுக்கு இடிப்பாராக எடுத்துரைக்கின்றோம். தேர்தல் காலத்தில் மட்டும் தமிழை நினைக்காமல், தமிழ்நாட்டரசும் புதுவை அரசும் இதில் முழுக்கவனம் செலுத்தித் தமிழை வளர்த்தெடுக்கவும் தமிழர் வாழ்வு உயரவும் உண்மையாகப் பாடுபட வேண்டுமேன வலியுறுத்துகின்றோம்.  -------------------------------------------------------------------------------------------------------------------------------------------  புதுவையிலிருந்து வரும் 'நற்றமிழ்' 15-06-2024 நாளிட்ட இதழில் வந்தது. ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக