வியாழன், 7 நவம்பர், 2024

ஆளுநரின் அடாச்செயல்கள்!

                                 ஆளுநரின் அடாச்செயல்கள்! 

இரவீந்திர நாராயண இரவி பீகாரின் பாட்டுனாவில் பூமிகார் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர். 1974இல் பூதியலில் (Physics) முதுநிலைப் பட்டம் பெற்றவர். சிறிது காலம் தாளிகைத் (பத்திரிகைத்) துறையில் பணியாற்றிய பிறகு, 1976 இல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார். 2012இல் அரசுப் பணிலிருந்து ஓய்வுபெற்றார். பிறகு, தேசிய தற்பணி மன்றம் (R.S.S), பா.ச.க கொள்கைகள் சாரந்தவராக தேசிய நாளிதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதினார். 


இவர் 2014 ஆம் ஆண்டு கூட்டு புலனாய்வுக் குழுவின் தலைவராக அமர்த்தப்பட்டார். பின்பு, 5 அக்டோபர் 2018 அன்று இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்புச் சூழ்ந்தாய்நராக (ஆலோசகராக) அமர்த்தப்ப்பட்டார். அதன்பின், ஆகத்து 1, 2019 முதல் 9 செபுதம்பர் 2021 வரை நாகாலாந்தின் ஆளுநராகவும், 18 திசம்பர் 2019 முதல் 26 சனவரி 2020 வரை மேகாலயா ஆளுநராகவும் இருந்தார்.


தமிழ்நாட்டிற்கு ஆளுநராக அவர் அமர்த்த ஆணை பெற்றதும், நாகாலாந்து. தேசிய மக்களாட்சி முற்போக்குக்கட்சியின் தலைவர் சிங்வாங்கு கொன்யாக்கு, இரவியின் செயல்பாட்டில் நாகாலாந்து அரசிற்கு மனநிறைவில்லை என்றும் அவர் ஒரு புகழ்வாய்ந்த அரசின் செயற்பாடுகளில் குறுக்கிட்டதாகவும் கூறினார். இரவி தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டபோது கோகிமா செய்தியாளர் மன்றத்தில் (கேபிசி) நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியைச் செய்தியாளர்கள் அனைவரும் புறக்கணித்தனர்.


இவர் 18 செப்டம்பர் 2021 அன்று தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றார். ஏப்ரல் 2022 இல்,இராசீவ் காந்தி கொலையில்  தண்டனைபெற்ற பேரறிவாளனின் மடலை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய இவருடைய நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி, அத்தகைய நடவடிக்கை நாட்டின் "கூட்டாட்சிக் கட்டமைப்பின்" அடிப்படைகளைத் தகர்க்கிறது என்று கூறிக் கண்டித்தது. 


மே 31, 2022 அன்றுவரை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 21 சட்ட முன்வரைவுகள் இவரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. சனவரி 2023 இல் தமிழ்நாட்டுக்குத் "தமிழகம்" என்பதுதான் மிகவும் பொருத்தமான பெயர் தமிழ்நாடு என்ற பெயர் சரியில்லை என்றார். பின்னர் சில நாள்களில், அவரது அலுவலகம் தமிழ்நாடு எனும் பெயரை ஏற்பதாக அறிவித்தது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக ஆண்ட அரசியல் கட்சிகளின் ஆட்சியைப் பிற்போக்குத்தனமானது என்று குறிப்பிட்டார். இவர் கருத்துகளைத் திமுக, பேராயக் (காங்கிரசுக்) கட்சி எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பொதுவுடைமைக் கட்சிகள் முதலிய பல கட்சிகளின் தலைவர்கள் கண்டித்தனர். இவர் செயற்பாடுகளை உச்ச நயன்மன்றம் கண்டித்த நிகழ்ச்சிகளோடு எச்சரிக்கை செய்த நிகழ்வும் உண்டு. இவரைக் கண்டித்தது போல வேறு எந்த ஆளுநரையும் உச்சநயன்மன்றம் இதுவரை கண்டித்தது இல்லை.


பொதுவாக ‘இந்துத்துவா’க்காரர்களுக்கு அடிப்படையான ஒரு செயல்திட்டம் இருக்கிறது. அது இந்திய நாட்டை ஆரிய நாடாக்க அதாவது பார்ப்பனரே தலையாயவர் பிற பிரிவாரெல்லாம் அவர்களுக்கு அடிமைகள் என்ற நிலைகொண்ட நாடாக்க உருவாக்க வேண்டுமென்பதே அது. அவர்களுக்கு விருப்பமான சிலஅடிமைகளுக்குச் சில அதிகாரப்பதவிகளைத் தருவார்கள். அந்தக் கரவான திட்டத்தின் நிறைவேற்றத்தை நோக்கியே அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் கரவாக இருக்கும். அதாவது மொழித்திணிப்பு, மாநில அதிகாரப்பறிப்பு, அடக்குமுறைச்சட்டங்கள், பெண்களை முன்னேறவிடாமை, அனைவரும் எல்லாநிலையிலும் கற்கத் தடைசெய்யும் கல்வித்திட்டம் முதலிய பல தந்திரமான திட்டங்கள் இருக்கும். 


ஆனால் இவற்றை மறுக்கவும், மறைக்கவும் அவர்கள் ‘ஆரியர்’ என்ற இனமே இல்லையென்றும், ஆரியர் வந்தேறிகள் இல்லையென்றும் கருத்துருவாக்க ஆள்சேர்த்து வரலாற்றைத் தவறாகச் சித்திரிக்கிறார்கள். இரவீந்திர நாராயண இரவி ‘சனாதனம்’ என்றும், கால்டுவெல், ‘பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர்’ என்றும், செம்பு ஆலையைத் தமிழ்நாட்டில் திறக்கவேவேண்டும் என்றும், தமிழ்நாடு மட்டும் முன்னேறுவது சரியில்லை என்றும், இந்தி சமற்கிருதத் திணிப்புக்குத் துணைதரவாகவும் பேசிவருவது இதைச் சார்ந்ததே.


இவர்கள் நேரடியாக எதிர்த்து வெற்றிபெற முடியாத ஒருவரோ அல்லது ஒரு கருத்தியலோ இருந்தால், அந்நிலையில், அவரை அல்லது அக்கருத்தியலை தம்மோடு அணைத்துச் சேர்த்துத் தம்மவராக. அல்லது தமதாக ஆக்கிக் கொண்டுப் பின் கொஞ்சம்கொஞ்சமாக அழித்துவிட்டுத் தம்மை வலுப்படுத்திக் கொள்வார்கள்.


திருவள்ளுவரையும் திருக்குறளையும் அவர்கள் இந்த வகையில் தான் தம்மவராக, தமதாக ஆக்கிக்கொள்ள முனைகிறார்கள். உலகப் பொதுவான ஈடெடுப்பற்ற திருக்குறள் கருத்துகளை இவர்களால் எதிர்க்க முடியாது, எனவேதான், இரவீந்திர நாராயண இரவி, ‘மதப்பரப்புநரான சி.யு.போப்பு திருக்குறளிலுள்ள பத்தி சிந்தனைகளை நீக்கிப் பெரிய அவமதிப்பைச் செய்திருக்கிறார்’ என்றும் அவரின் உள்நோக்கம் கொண்ட திருக்குறள் மொழிபெயர்ப்பு ஆதன் இல்லாத பிணம் போல இருக்கிறது என்றும் கூறினார். திறுக்குறள் வாழ்வியல் நெறி நூல் என்று குறைத்து மதிப்பிடுகின்றனர் அது ஒரு தொல்வரலாற்று (இதிகாசம்) நூல் என்றும் அதில் நிலையான ஆதனிகத்தின் (ஆன்மிகத்தின்) ஆதன் (ஆன்மா) இருக்கிறதென்றும் கூறியதோடு திருக்குறளில் இருக்கு மறையிலுள்ள (இருக்கு வேதத்திலுள்ள) சொற்கள் உள்ளன என்றும் (அதாவது இருக்கு மறையின் கருத்துகளே திருக்குறளில் உள்ளன என்ற கரவான கருத்தைக்) கூறினார். 


கடந்த தி.பி. 2055 சுறவம் 2 (சனவரி 16, 2024) இல் திருவள்ளுவர் நாள் அன்று இவர், திருவள்ளுவரைப் ‘பாரத சனாதனத்’தின் ஒளிவீசும் துறவி என்றபோதே தமிழர் அனைவரும் அவரைக் கண்டித்து உரைத்தனர். அத்துடன், காவி உடையுடன் கைகளில், நெற்றியில் திருநீற்றுப்பூச்சுடன் வரைந்த திருவள்ளுவர் உருவப் படத்தை வைதிருந்தார். இதைக் கண்ணுற்ற தமிழர் பலரும் கடுமையாக எதிர்த்தனர்.


தமிழ்நாட்டரசு தமிழர் திருநாளான பொங்கலை அடுத்த நாள் திருவள்ளுவர் நாள் எனக் கடைப்பிடித்து வருகையில் அண்மையில் தி.பி.2055 விடை11 (மே 24, 2024)இல் இவர் ‘வைகாசி 11’ திருவள்ளுவர் நாளென தாமே அறிவித்து மேற்கூறியவாறே திருவள்ளுவர் படத்தையும் காட்சிக்கு வைத்திருக்கின்றார்.


இவருடைய இந்த அடாவடிச்செயலை நற்றமிழ் கண்டிக்கின்றது. தமிழர் உயிரெனப்போற்றும் திருக்குறளையும் திருவள்ளுவரையும் இழிவு செய்து, திருவள்ளுவரை ஒரு மதஞ்சார்ந்தவராகக் காட்டும் இவருடைய போக்கை நற்றமிழ் கடுமையாகக் கண்டிக்கின்றது.   


இருக்கு முதலிய மறைகளின் கருத்துகளுக்கு நேர்மாறான குமுகநயன்மை, மாந்தநேய கருத்துகள் முதலிய பலவற்றைக் கொண்ட திருக்குறளைத் தமதே என வலியுறுத்துவதே இரவியின் முயற்சியாக இருக்கின்றது என்பதை தமிழர் புரிந்துகொள்ளல் அரிய செயலன்று.

அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான். (குறள். 30)


மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கம் குன்றக்கெடும். (கு. 134)


அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று (கு. 259)


ஆவிற்கு நீரென் றிரப்பினும் நாவிற்

கிரவின் இளிவந்த தில். (கு.1066)


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான். (கு. 972)


ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 

செத்தாருள் வைக்கப் படும். (கு. 214)


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் 

தொழுதுண்டு புன்செல்ப வர். (கு. 1033)



- முதலிய பல குறள்கள் ஆரிய ஒழுக்கத்தை, ஆரிய மறைகளின் கருத்துகளைக் கண்டிப்பனவாகும். எனவே, யார் எவ்வளவு முயன்றாலும் திருவள்ளுவரை மதஞ்சார்ந்த ஒருவராகவும் திருக்குறளை ஒரு மதநூலாகவும் காட்ட இயலாது என்பதையும் அத்தகைய முயற்சிகள் தமிழர்களுக்கு எதிரானதாகக் கருதப்படும் என்பதையும் வலியுறுத்துகின்றோம்.                                                                                   

-த.ந.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

புதுவையிலிருந்து வரும் 'நற்றமிழ்' 15-06-2024 இதழில் வந்த ஆசிரியருரை

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக