எண்ணுப்பெயர் ‘ஒன்பது’ பற்றிய
பாவாணரின் கருத்து விளக்கம்!
-------------------------------------------------------------
தொண்டு : தொள் + து = தொண்டு.
தொள் = தொளை.
உடம்பின் தொளைகள் ஒன்பதாயிருத்தலின், தொண்டு என்னும பெயர்
ஒன்பதாம் எண்ணைக் குறிக்கக் கொள்ளப்பட்டது.
தொண்டு – தொண்டி = தொளை
ஒப்புநோக்கு: தொண்டை (throat) = தொளையுள்ளது.
....................
ஒன்பதிற்கு முதலாவது வழங்கின பெயர் தொண்டு என்பது.
தொண்டு + பத்து = தொண்பதுந
தொண்பது – தொன்பது – ஒன்பது.
தொண்பது முதலில் 90 என்னும் எண்ணைக் குறித்தது. அறுபது,
எழுபது, எண்பது என்னும் பிற பத்தாம் இட எண்ணுப் பெயர்களுடன், தொண்பது என்பதை
ஒப்புநோக்குக.
தொண்ணூறு என்னும் பெயர், முதலாவது 900 என்னும் எண்ணைக்
குறித்தது.
தொண்டு + நூறு = தொண்ணூறு.
இதை அறுநூறு, எழுநூறு, எண்ணூறு என்னும் பிறமூன்றாம் இட
எண்ணுப்பெயர்களுடன் ஒப்புநோக்குக.
தொள்ளாயிரம் அல்லது தொளாயிரம் என்பது, முதலாவது, 9000
என்னும் எண்ணைக் குறித்தது.
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம் – தொளாயிரம்.
இதை ஆறாயிரம் ஏழாயிரம் எண்ணாயிரம்என்னும் பிற நாலாம் இட
எண்ணுப் பெயர்களுடன் ஒப்புநோக்குக.
தொண்டு என்னும் பெயர் எங்ஙனமோ, தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே உலகவழக்கற்றது. ஆயினும்,
செய்யுள் வழக்கிலிருந்தது. தொல்காப்பியரே தம் நூலில் தொடைத் தொகை கூறுமிடத்து,
மெய்பெறு மரபிற் றொடைவகை தாமே
ஐயீ ராயிரத் தாறைஞ் ஞூற்றொடு
நொண்டு தலையிட்ட பத்துக்குறை எழுநூற்
றொன்பஃ தென்ப உணர்ந்திசி னோரே. (செய்.101)
என்று, தொண்டு என்னும் சொல்லை 9 என்னும் எண்ணைக் குறிக்க
வழங்கியுள்ளார். “தொண்டுபடு திவ்வின்” (மலைபடு கடாம்.21)
என்றார் பெருங்கெளசிகனாரும்.
எண்ணுப் பெயர்களுள் தொண்டு என்னும் ஒன்றாம் இடப்பெயர்
வழக்கொழியவே, பத்தாம் இடப்பெயர் ஒன்றாம் இடத்திற்கும், நூறாம் இடப்பெயர் பத்தாம்
இடத்திற்கும், ஆயிரத்தாம் இடப்பெயர் நூறாம் இடத்திற்குமாக ஒவ்வோரிடம் முறையே
இறக்கப்பட்டன. பின்பு, ஆயிரத்தாம் இடத்திற்குப் பத்தாம் இடத்திலிருந்து ஒன்றாம்
இடத்திற்கு இறங்கிவந்த ஒன்பது என்னும் பெயருடன், ஆயிரம் என்னும் பெயரைக் கூட்ட
வேண்டியதாயிற்று.
எண் பண்டைப்பெயர் இற்றைப்பெயர்
9 தொண்டு ஒன்பது (தொன்பது)
90 தொண்பது தொண்ணூறு
900 தொண்ணூறு தொள்ளாயிரம்
9000 தொள்ளாயிரம் ஒன்பதினாயிரம்
(ஒன்பது+ஆயிரம்)
ஒன்பதினாயிரம் என்னும் கலவை எண்ணுப்பெயர் பண்டை முறைப்படி
(1000X9) 9000 என்னும் எண்ணைக் குறிப்பதாகும்.
ஒன்றுமுதல் பத்துவரையுள்ள ஏனை எண்ணுப்பெயர்களெல்லாம்
தனிமொழிகளாயிருக்க ஒன்பது என்பது மட்டும் தொடர் மொழியாயும், பது (பத்து) என்னும்
வருமொழியைக் கொண்டதாயு மிருத்தல் காண்க.
தொன்பது என்னும் பெயர் முதன்மெய் நீங்கி ஒன்பது என்று
தமிழில் வழங்குகுன்றது. தெலுங்கில் முதன்மெய் நீங்காமல் தொம்மிதி (தொனுமிதி) என்று
வழங்குவதுடன், எட்டு என்னும் எண்ணுக்கும் எனுமிதி எனப் பத்தாம் இடப்பெயர்
வழங்கிவருகிறது.
ஒன்பது என்னும் பெயருக்கு ஒன்று குறைந்த பத்து என்று
பெருள்கூறுவது, ‘பொருந்தப் புகலல்’ என்னும்
உத்தி பற்றியது. இக்கூற்றிற்கு உருதுவிலும்
இந்தியிலும் உள்ள, உன்னீஸ் (19) உன்தீஸ் (29), உன்சாலிஸ் (39), உன்சாஸ்
(49), உன்சட் (59), உனத்தர் (69), உன்யாசி (79), என்னும் எண்ணுப்பெயர்கள் ஒருகால்
சான்றாகலாம். ஆனால், அங்கும் அப்பெயர்கள் ஒழுங்கற்ற முறையிலமைந்தவை யென்பதை நவாசீ
(89), தின்னா நபே (99) என்னும் பெயர்களாலறியலாம்.
தொண்டு + பத்து = தொண்பது (தொன்பது –
ஒன்பது), தொண்டு + நூறு = தொண்ணூறு
தொண்டு + ஆயிரம் = தொள்ளாயிரம்
என்று புணர்ப்பது எளிதாயும் இயற்கையாயிமிருப்பவும், இங்ஙனம்
புணர்க்காது,
ஒன்பது + பத்து = தொண்ணூறு என்றும்,
ஒன்பது + நூறு = தொள்ளாயிரம் என்றும்,
செயற்கையாகவும், ஒலிநூலுக்கும் தருக்க நூலுக்கும் முற்றும்
மாறாகவும் தொல்காப்பியர் புணர்த்தது, அவருக்கு முன்னமே தொண்டு என்னும்
எண்ணுப்பெயர் வழக்கற்றுப் போனதையும், தொல்காப்பியத்திற்கு முந்தின தமிழிலக்கண
நூல்களில் மேற்கூறிய எண்ணுப்பெயர்களைத் தவறாக செய்கை செய்து காட்டியதையும்
குறிப்பதாகும். இதனால் தமிழின் தொன்மையும் தமிழிலக்கணத்தின் தொன்மையும்
அறியப்படும்.
தொல்காப்பியரைப் பின்பற்றி, நன்னூலாரும் தொண்ணூறு
தொள்ளாயிரம் என்னும் புணர்மொழி யுறுப்புகளைப் பிழைபடக் கூறியுள்ளார்.
(நன்றி! - பாவாணரின் ஒப்பியன் மொழிநூல்)
------------------------------------------------------------------------------------------------------------
அருமை
பதிலளிநீக்கு