வெள்ளி, 6 டிசம்பர், 2019

இருவேறு மாந்தர்


இருவேறு மாந்தர்
     நாள்தோறும் வாழ்க்கையில் பல்வேறுபட்ட குணங்களைக் கொண்ட மாந்தர்களைப் பார்க்கின்றோம். ஆனால், ஒரேநாளில் அடுத்தடுத்து கண்ட எதிரெதிர் குணநலன்களைக் கொண்ட எளிதில் மறக்கமுடியாத இருவரைப் பற்றி, அன்புள்ளங்களுடன் பகிர்ந்துகொள்ளத் தோன்றியதால் இதனை எழுதலுற்றேன்.

 

     
     கடந்த செவ்வாயன்று புதுவையிலுள்ள மருத்துவமனை யொன்றிற்குச் சென்றருந்தேன். மருத்துவமனையில் வேலை முடிந்து வெளியே வந்தேன். வாயில் அருகே, தானி (Auto) ஒன்று நின்றிருந்தது. தானியின் உள்ளே ஒரு மூதாட்டி அமர்ந்திருந்தார். வலுவற்ற என் இடக்காலுடன் தொலைவாக நடக்க சிக்கல் இருந்ததால், தானி ஓட்டுநரை நெருங்கி, பேருந்து நிலையம் பக்கமாகப் போகிறீர்களா? நான் பேருந்து நிலையம் போகவேண்டும் என்றேன். அவர், இல்லைங்க, அந்தப்பக்கம் போகவில்லை, வேறு பக்கம் சவாரி போகிறேன் என்றார்.
     
     நான் உடனே அங்கிருந்து நடக்கத் தொடங்கினேன். அந்தக் குறுந் தெருவைத் தாண்டியிருப்பேன், பின்னாலேயே என் அருகில் வந்த அதே தானியிலிருந்த அந்த ஓட்டுநர், நான் வேறு வழியில் தான் போக வேண்டும், பேருந்து நிலையத்திற்குப் போகும் வழியில் உங்களை இறக்கி விடுகிறேன்; என் பக்கத்தில் உட்காருங்கள் என்று கூறினார். அவர் இருக்கையிலேயே அவர் பக்கத்தில் அமர்ந்தேன். கொஞ்சம் தொலைவு சென்றதும், முச்சந்தி ஒன்று வந்ததும் தானியை நிறுத்தினார். நான் இங்கே இறங்கிக் கொள்ளவா? என்று கேட்டேன். ஆமாங்க, நான் வேறு சாலையில் போகிறேன் என்றார்.

     உடனே, பைக்குள் கையைவிட்டு, இருபதும் பத்துமாக இருந்த உருவாத் தாள்களை மொத்தமாக எடுத்து அவர்முன் நீட்டி, எவ்வளவு வேண்டும்? என்று கேட்டேன். அவர், வேணாங்க, நான் வேறு சவாரி செல்கிறேன், வேண்டாம் என்று சொன்னார். நான் வற்புறுத்தியும் கூட அவர் வாங்கிக் கொள்ளவே இல்லை. பின் இருக்கையில் அமர்ந்திருந்த மூதாட்டியிடம், இப்படியும் ஆள்கள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு, தானி ஓட்டுநருக்குக் கையைக் கூப்பி நன்றி தெரிவித்து விட்டு, அருகிலிருந்த பேருந்து நிலையத்திற்கு நடந்துசென்றேன்.

     பேருந்து நிலைய வாயிலருகில் சென்றபோது, நான் போக வேண்டிய இடத்திற்குச் செல்லும் தனியார் வண்டியொன்று வந்தது. நடத்துநர், வாங்க இடமிருக்கிறது ஏறுங்க என்றார். ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் இருந்த இருவர் இருக்கையில், ஓரிடம் இருந்தது, அமர்ந்தேன்.

     ஓட்டுநருக்கு இடப்புறத்தில் இருந்த நீளவாட்ட இருக்கையில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடிக்கு அருகாக அமருந்திருந்த ஒருவர் குடிமயக்கில் தூங்கி விழுந்து கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் இருந்தவர் நெளிந்துகொண்டே, இருக்கையின் முன்பக்கமாக நகர்ந்தும், பிறகு இருக்கையில் சரியாக அமர்ந்தும் நிலையில்லாமல் தொல்லைப் பட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில், அந்த குடிமயக்கக்காரர் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் அமர்ந்திருந்தவரின் பிற்புறமாகப் படுத்துக் கொண்டார். படுத்துக்கொண்டவர், மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக மூன்றாவதாக அமர்ந்திருத்தவரின் பின்னால் தலையை நூழைத்து வசதியாகப் படுத்துத் தூங்க முனைந்தார்.

     மூன்றாவதாக அமர்ந்திருந்தவர், நடத்துநரிடமும் ஓட்டுநரிடமும் அந்தக் குடிகார ஆளை ஒழுங்காக உட்காரச் சொல்லுங்கள் அல்லது அவரை இறக்கி விடுங்கள் என்று முறையிட்டார். என் அருகில் அமர்ந்திருந்தவர், அந்த ஆளும் ஓட்டுநரும் வண்டி எடுக்கும்போது, மிக நெருக்கமானவர்களாக மாமன் மச்சான் என்று பேசிக்கொண்டு வந்தார்கள்; அவர்கள் எங்கே தட்டிக் கேட்கப் போகிறார்கள்? என்றார். அவர் கூறியதைப்போலவே நடத்துநரோ ஓட்டுநரோ கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.

     கடுப்பாகிப்போன, மூன்றாவதாக அமர்ந்திருந்த முதியவர், ஏய், எழுந்து உட்கார் ஐயா, ஏன் இப்படி படுத்துத் தொல்லை கொடுக்கிறாய்? என்று குரலுயர்த்திக் கூறினார். அவர் இரண்டு மூன்று முறை கூறிய பிறகு ஒருவாறு எழுந்தான் அக் குடிகாரன். முறுக்கிய மீசையுடன் உடல் முருக்கேறியவனாக இருந்தான், மூன்றாவதாக அமர்ந்திருந்த அந்த முயவரை நோக்கி என்னடா, நீ பெரிய ஆளா? என்று கூறி அவர் தாடையில் குத்தி விட்டான். அந்த முதியவருக்கு உதட்டில் இரத்தம் கசிந்து வந்த்து. அப்போதும் நடத்துநரோ ஓட்டுநரோ எதையும் கண்டுகொள்ளவே இல்லை. பேருந்தில் இருந்தவர்களில் சிலர்தாம் கடுமையாக எதிர்த்துக் கூச்சலிட்டோம். அப்பொது ஓரிடத்தில் பேருந்து நின்றது. அங்கு ஏறிய அந்தத் தனியார் பேருந்தின் ஆய்வாளர், பேருந்தில் இருந்தவர்கள் போட்ட கூச்சலைக் கேட்டபின், அந்த நடத்துநரிடம் ஏன்யா, அவனையெல்லாம் ஏத்தறே? என்ற கேட்டுக்கொண்டிருக்கும் போதே அக் குடிகாரன் அந்த நிறுத்த்த்தில் இறங்கிவிட்டான். பிறகு அந்த ஆய்வாளர் அந்தக் குத்து வாங்கிய முதியவரிடம் அமைதி கூறிக்கொண்டு வந்தார்.

     தானி ஓட்டுநரையும் அந்தக் குடிகாரத் தடியனையும் எதையும் கண்டுகொள்ளாத அந்த நடத்துநரையும் பற்றிப் பலவாறு எண்ணியபடியே இருந்த நான், இறங்கவேண்டிய நிறுத்தம் வந்ததும் கீழிறங்கினேன்.

(படங்கள் 'கூகு'ளிலிருந்து எடுத்தவை, நன்றி!)
============================================================================  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக