‘சாகித்திய அகாதமி’ என்னும்
இலக்கியக் கழகம் இந்திய அரசினல் 1954ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய மொழிகளின்
இலக்கிய வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு பல செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவின்
24 மொழிகளில் வெளிவரும் சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து பரிசளித்தும், பிறமொழிகளில் மொழிபெயர்த்தும்
ஊக்கப்படுத்தி வருகின்றது.
படைப்பாளிகளுக்கு
மதிப்பளித்து அவர்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஊடகமாகவும் உள்ளது இந்த
அமைப்பு, பரிசுக்குரிய நூலைத் தேர்ந்தெடுக்கும் முறை ஓராண்டுக்கால
நீட்சியுடையதாகக் கூறுகின்றனர்.
முதலில், இக்கழகத்தின்
தலைவரால் அமர்தப்பட்ட ஓரிரண்டு வல்லுநர் நூல்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
அந்நூல்கள் தகுதிசான்ற அறிஞர் பதின்மருக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அப்
பதின்பரும் ஆளுக்கு இரண்டிரண்டு நூல்களைத் தேர்வுசெய்து பரிசுக்குப்
பரிந்துரைக்கிறார்கள். இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட நூற்களின் பட்டியல் மூன்று
நடுவர்களின் தேர்ந்தெடுப்பிற்கு அனுப்பப்படுகின்றன. அவர்களில் பெரும்பான்மையர்
தேர்ந்தெடுக்கும் நூலே இவ் இலக்கியக் கழத்தின் செயற்குழுவால் ஏற்பிசைவு பெற்று
அறிவிக்கப்படுகின்றது.
இப்படிப்பட்ட
நடைமுறைகள் உள்ளதெனக் கூறப்பட்டாலும்,
இப்பரிசுக்குத் தேர்வு செய்யப்
படுவோருள்
சிலரின் தகுதிகுறித்து படைப்பாளிகள் தம் நிறைவின்மையை வெளிப்படுத்துவதும் உண்டு.
இந்த
இலக்கிய அமைப்பு சென்ற 2010ஆம் ஆண்டு முதல் சிறுவர் இலக்கிய மதிப்பளிப்பு (பால
சாகித்திய புரசுகார்) என்ற பெயரில் இந்தியாவின் இருபத்து நான்கு மொழிகளிலும் எழுதப்பெறும் சிறந்த குழந்தை இலக்கியத்திற்குப்
பரிசளிக்கின்றது. வாழ்நாள் குழந்தை இலக்கியப் பணிக்காவும் சிலருக்கு இப்பரிசு
வழங்கப்பட்டுள்ளது.
இந்த 2011ஆம் ஆண்டு தமிழ்மொழிக்கான குழந்தை
இலக்கியப் பரிசுக்குரிய நூலாக, இவ்வமைப்பு,
நம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய
தமிழ்வல்லார் பாவலர் ம. இலெனின் தங்கப்பா ஐயா எழுதிய
“சோளக்கொல்லைப்
பொம்மை”யைத் தேர்ந்தெடுத்து அறிவித்துப் பெருமை பெற்றுள்ளது.
இப்பரிசு,
ஐம்பதாயிரம் உருபாவுக்கான காசோலையும், ஒரு
செதுக்கப்பட்ட செப்புப் பட்டயமும் கொண்டதாகும். எதிர்வரும் நவம்பர் மாதத்தில்
நடைபெறவிருக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் இப்பரிசு வழங்கப்படும்.
இப்பரிசளிப்பு
குறித்து தங்கப்பா ஐயா கூறுகையில்,
உண்மையான
தகுதி மதிக்கப்பட வேண்டும் என்றும் குழந்தைகளோடு பழகி, இயற்கையோடு இயைந்து வாழ்ந்ததன் வெளிப்பாடாக, "சோளக்கொல்லை
பொம்மை” நூலை எழுதியதாகவும் தகுதியான நூலுக்குப் பரிசு
கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நம் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியைத்
தெரிவிப்பதோடு தங்கப்பா ஐயாவின் தகுதிக்குரிய பரிசுகள் இன்னும் அளிக்கப்பட
வேண்டும் என்ற விழைவையும் குறிப்பிட விரும்புகிறோம்.
(அடுத்த
பதிவு தங்கப்பா ஐயாவைப் பற்றிய செய்தித் தொகுப்பாக இருக்கும்.)
-----------------------------------------------------
தோழர் ம.இலெ.தங்கப்பாவிற்கு பால சாகித்திய புரஸ்கார் விருது கிடைத்திருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சியளிக்கிறது.
பதிலளிநீக்கு'தென்மொழி'யின் பழங்கருவூலம் இன்றாவது இவர்கள் கண்ணுக்கு பட்டதே. எம் ஆசிரியப்பெருங்கைக்கு வணக்கம்.
பதிலளிநீக்கு