(விழுப்புரம் ‘மருதம்’விழாப் பாட்டரங்கில் கலந்துகொண்டு பாடிய அறுசீர்மண்டிலப் பதிகம்)
பெருமதிப்புக் குரியோரே! பேரன்பீர்! தலைமையமர்
பெரும்பா வாண!
அருந்தமிழ்ப்பா யாத்தளிக்கும் ஆற்றல்சால் பாவலரே!
அன்பு நண்பீர்!
இருளகற்றும் அறிஞர்களே! இன்னன்புத் தாய்மாரே!
இளமை யோரே!
தெருளார்ந்த தமிழ்வணக்கம் தெரிவித்தேன் எல்லோர்க்கும்
தெளிந்த அன்பால்!
விழுப்புரத்தில் மருதவிழா! விருப்பூட்டும் இனியவிழா!
விளக்க மாக
செழுமரபுக் கலைகளெலாம் சீருறவே தொகுத்தளிக்கும்
சிறப்பு மிக்க
எழுச்சிமிகு சுறவவிழா! எல்லாரும் மகிழ்கின்ற
இவ்வி ழாவின்
கெழுவலுறு பாட்டரங்கில் கிழமையிழந் தேங்குதமிழ்
கிளத்த வந்தேன்!
மேலாண்மை செய்மொழியாய் மேற்குலக மொழியின்னும்
மேலி ருக்க
ஏலாத மொழியிங்கு எமையாள ஏற்றமிகு
எம்த மிழ்த்தாய்க்(கு)
ஆலாத்தி எடுத்ததன்பின் அங்கோர்மூ லைதொலைப்பார்
அதையு ணர்ந்தால்
மேலான இந்தஇனம் மீத்தாழ்ச்சி உற்றகதை
மிகவி ளங்கும்!
வரப்பகலந் தொடர்பாக வழக்கொன்று நம்சிற்றூர்
வடிவே லுக்கும்
பரப்புகுறை நிலமுடைய பச்சையப்பன் இருவருக்கும்
பட்ட ணத்தில்
உரத்தகுரல் வழக்கறிஞர் உகைத்தெழுந்தே ஆங்கிலத்தில்
உரைசெய் கின்றார்!
கரப்பின்றிக் கூறின்இவர் கவலைமிகப் புரியாமல்
கலங்கி நிற்பார்!
சிற்றூரில் வாழ்கின்ற சின்னத்தாய் மனைஉரிமை
சிறுகு டிற்கு
கொற்றத்தார் அலுவலகம் கொடுத்தவிடை ஆங்கிலத்தில்!
கூறும் செய்தி
கற்றறியாச் சின்னத்தாய் கலங்கிடுவாள் புரியாமல்!
காணீர் ஈதே
உற்றநிலை! தமிழிலதை உரைத்திருந்தால் சின்னத்தாய்
உணர்வாள் அன்றோ?
ஆண்டைம்பைத் தொன்றாயிற்(று) ஆட்சிமொழி சட்டமினும்
ஆழத் தூங்கும்!
மாண்தமிழில் எழுதாது மக்களுக்குப் புரியாத
மயக்க மூட்டும்
வேண்டாத மொழியினிலே விடைதருவார்! அரசாணை
விடுப்ப தெல்லாம்
ஈண்டெமக்கு விளங்காத இன்னொருவர் மொழியிலெனில்
இதுவா ஞாயம்?
அரசாணை நூற்றுக்கும் அதிகமுண்டு! தேவையெலாம்
அவற்றை மெய்யாய்
அரசுநடை முறைப்படுத்தல்! ஆட்சிதமிழ் வழிநடந்தால்
அதனால் மக்கள்
அரசாளும் முறைபுரிந்து அதன்நிறைகள் குறைகளையும்
அறியக் கூடும்!
அரசினிலும் பங்கேற்க அதன்வழியாய்த் தொண்டாற்ற
ஆகும் யார்க்கும்!
அதிகாரம் மக்களளித்(து) அரியணையில் அமர்ந்திடுவோர்
அச்சம் இன்றி
அதிர்தலுற செயற்படுவீர்! ஆட்சிமொழி தமிழென்றே
அறுத்துச் சொல்வீர்!
மதியாதார் ஒதுக்கிதமிழ் மக்களுக்கு விளங்குவகை
மாண்பில் ஆள்வீர்!
புதியமொழி குழப்பமற பொருத்தமுற மக்களுக்குப்
புரியும் அன்றோ?
அலுவலகப் பணியாளர் ஆசிரியர் மற்றவரும்
அவர்கை யொப்பம்
பொலிதலுறத் தாய்மொழியில் பொறித்திடுவீர்! மக்களுக்குப்
புரியும் வண்ணம்
சலியாதே தந்திடுவீர் தமிழினிலே உம்விடையைச்
சட்ட திட்டம்
புலனாகும்! அவருணர்ந்தே போயடுத்த பணிபார்ப்பார்
பொல்லாப் பில்லை!
அலுவலக நடைமுறைகள் அரசாணை தமிழினிலே
அளிக்க வேண்டும்!
மலியமிகக் கணிப்பொறிகள் மாத்தமிழில் மென்பொருள்கள்
மன்ற வேண்டும்!
நலிவில்லாத் தொடர்புமொழி நற்றமிழே எனுமுறுதி
நாளும் வேண்டும்!
வலிவோடு இவைசெய்தால் வண்டமிழிங் காட்சிசெயும்
வாழ்வும் ஓங்கும்!
தமிழ்கொஞ்சும் தங்கள் இப்பாவில் மெய்சிலிர்த்துப்போனேன்.
பதிலளிநீக்கு////வரப்பகலந் தொடர்பாக வழக்கொன்று நம்சிற்றூர்
வடிவே லுக்கும்
பரப்புகுறை நிலமுடைய பச்சையப்பன் இருவருக்கும்
பட்ட ணத்தில்
உரத்தகுரல் வழக்கறிஞர் உகைத்தெழுந்தே ஆங்கிலத்தில்
உரைசெய் கின்றார்!
கரப்பின்றிக் கூறின்இவர் கவலைமிகப் புரியாமல்
கலங்கி நிற்பார்!/////
இவ்வரிகள் என்னைக் கலங்கடித்தன வென்றால் அது மெய். மிக அழகாக நாட்டுநடப்பைப் பாவாக்கியுள்ளீர்கள். வாழ்க.
நன்றி அமுதா!
பதிலளிநீக்குஐயா அருமை. உங்கள் பதிவில் நிறைய படிப்பதற்கு இருக்கின்றன. கண்டிப்பாக படிக்கிறேன்.
பதிலளிநீக்கு