செவ்வாய், 18 ஆகஸ்ட், 2009

பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான ஈழத்தமிழறிஞர்!


    பதினேழு அகவையில் பன்மொழிப் புலவரான
                 ஈழத்தமிழறிஞர்!


தமிழ்ஈழம் என்று இக்காலத்தில் நாம் அழைக்கும் பகுதி, சிரீலங்கா என்று பெயர் மாற்றப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளாகக் குறிக்கப் படுகின்றது. இலங்கையின் மேற்குக் கரையிலும் மிக நெடுங்காலமாகவே தமிழ் மக்கள் வாழ்ந்து வந்தனர்.  அங்குப் பிறந்த அரிய ஆற்றல் மிக்க அறிஞர் பன்மொழிப் புலவர் சய்மன் காசிச் செட்டி ஆவார்.

தமிழர் வாழ்ந்த மேற்குக்கரை :

மேற்குக்கரையில் அமைந்துள்ள முனீசுவரர் கோயிலும், அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளும், அங்கு வாழ்ந்த மூதாதையர் பயன்படுத்திய தமிழில் எழுதப்பட்ட காணி நிலங்களுக்கான உறுதிகளும் சான்றுகளாக உள்ளன.

மேலும் இலங்கையின் மேற்குக் கரையோரமாக உள்ள பெருநிலப்பரப்பில், சிலாபம், உடப்பு, கருக்குப்பனை, மங்கலவெளி, கட்டைக்காடு, நாவற்காடு, நுரைச்சோலை, புளிச்சாங்குளம், நரைக்களி, மாம்புரி, பாலாவி, முந்தல், பாலைக்குடா, குறிஞ்சிப்பிட்டி, கற்பிட்டி, புத்தளம், மருதங்குளம், பலகைத்துறை, முன்னைக்கரை, நஞ்சுண்டான் கரை, கண்டல் குடா, முதலிய பல இடங்கள் தூயதமிழ் மணக்கும் ஊர்களாக நிலவி வந்துள்ளன என்பதற்குப போதிய சான்றுகள் உள்ளன என்று திரு.க.சி.குலரத்தினமும், தமிழ்ஒளி க.செபரத்தினமும் குறிப்பிடுகிறார்கள்.

உலகச் செலவரான (world traveller) இபன்பற்றுற்றா என்பவர், 1344இல் இலங்கைக்கு வந்திருந்த போது, யாழ்ப்பாண அரசரான செகராச சேகரனை, புத்தளத்திலிருந்த அரண்மனை ஒன்றில் சந்தித்ததாக தம் நூலான சாவர்நாமா வில் குறிப்பிட்டுள்ளதால், புத்தளம் பகுதி யாழ்ப்பாண அரசனின் ஆட்சியிலிருந்த தமிழ்ப்பகுதி என்பதை அறியலாம்.

பிறப்பும் கல்வியும்  :

மேற்குக் கரையோரத்தில் பெரிய ஊராகவும் துறைமுகமாகவும் விளங்கியது கற்பிட்டி ஆகும். இவ்வூரில் 21-3-1807ஆம் ஆண்டில் காபிரியேல் என்பார்க்கும் மேரி என்பார்க்கும் பிறந்தவர் சய்மன் காசிச் செட்டி என்பவராவார். செட்டி என்பது செட்டிமார் என்று அழைக்கப்பட்ட வணிகர் குலத்தைக் குறிக்கிறது.

சய்மன் காசி, கற்பிட்டியிலும், புத்தளம் கொழும்பு ஆகிய இடங்களிலும் கல்வி பயின்றார். தம் பதினேழாம் அகவைக்குள் தாய்மொழியாகிய தமிழுடன் சிங்களம், ஆங்கிலம் ஆகியவற்றைக் கற்றுப் புலமை பெற்றார். மேலும், சமற்கிருதம், ஒல்லாந்தம், போர்த்துக்கீசியம், இலத்தீனம், கிரேக்கம், எபிரேயம், அரபி, பாளி ஆகிய மொழிகளையும் தாமே கற்றுத் தேர்ந்து பன்மொழிப் புலவரானார்.

பணியாற்றிய பதவிகள் :

     1824இல் கற்பிட்டி நயன்மன்ற மொழிபெயர்ப்பாளராக அமர்த்தப்பட்டார்.
1828இல் புத்தளம் சிலாபம் பகுதிகளுக்கான மணியக்காரர் என்றழைக்கப்படும் ஊர்த் தலைமகனாகவும், 1833இல் அவர்தம் 27ஆம் அகவையில் மாவட்ட முதலியராகவும் அமர்த்தப்பட்டார். 1838இல் சய்மன் காசி, சட்டமன்ற உறுப்பினராக அமர்த்தம் பெற்றார். 1845இல் இலங்கை ஆட்சிப் பணியில் (Ceylon civil service) சேர்த்துக் கொள்ளப்பட்டார். இதனைத் தொடர்ந்து 1848இல் மாவட்ட நயனகராக அமர்த்தப்பட்டார். மாவட்ட நயன்மன்ற நடுவராக இருந்த போதே 1860ஆம் ஆண்டில், தமது 53ஆம் அகவையில் காலமானார். மாவட்ட நயனகராக பதவியமர்த்தப் பட்ட முதல் இலங்கையர் இவரே ஆவார்.

ஆற்றிய அரிய பணிகள் :
    
காசியின் பணிகள், அவருடைய புதுமையான ஆற்றல்களைக் காட்டுவனவாக விளங்கின. அவர் வரலாற்றறிவைப் புலப்படுத்துவன வாகவும், தமிழ் இனம் குமுக உயர்வு பற்றியனவாகவும், தமிழ் இலக்கியம் தமிழ்ப்புலவர்கள் பற்றினவாகவும் சமய அடிப்படை கொண்டனவாகவும் இருந்தன.
    
உலக உருண்டையில் இலங்கைத் தீவு அமைந்துள்ள அகலாங்கு நெட்டாங்கு அளவுகள் பற்றி, அக்கால நிலவரைவியலர் வியக்கும் வகையில் எடுத்துக் கூறியவர் காசி. புதும அளவைக் கருவிகள் எவையுமின்றி, மேலைநாட்டு அறிஞர் வியக்கும் வகையில், இலங்கையின் நீளம், அகலம்,  சுற்றளவு, பரப்பு முதலியவற்றை முதலில் கூறியவரும் அவரே.

இலங்கையின் அனைத்து இன மக்களின் வரலாறு பற்றியும், ஊர்ப் பெயர்களின் வரலாறு பற்றியும் ஆய்ந்தெழுதினார். சிலோன் கருப்பொருட் களஞ்சியம் (Ceylon  gazetteer) என்னும் பெயரோடு 1834 இல் இச்செய்திகள் வெளிவந்தன. இந்நூல், காசிக்குப் பெயரும் புகழும் பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் அரசு வெளியிட்ட அரசிதழுக்கும் பிற இதழ்களுக்கும் முன்னோடியாக இருந்தது.

வரலாற்று நூல்கள் :
    
     கற்பிட்டிப் பகுதியில் கரையோரத்திலுள்ள குதிரைமலை என்னும் இடத்தின் தொன்மைச் சிறப்புகளை ஆய்ந்து எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தின் வரலாற்றைத் தொல் பழங்காலத்தில் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றிய 1658ஆம் ஆண்டு வரையில் எழுதிய காசியின் நூல், பிற்கால வரலாற்று ஆசிரியர்களுக்குக் கைவிளக்காக உதவியது.

பரதவர் குல வரலாற்று நூலையும் காசி எழுதியுள்ளார். பல்வேறு நூல்களை ஆராய்ந்து இவர் எழுதிய இலங்கை வரலாற்றுக் குறிப்பு என்னும் நூலின் மூலம் சிறந்த வரலாற்று ஆசிரியராகக் காசி மதிக்கப்பட்டார்.

ஆக்கிய அகராதிகள் :

     தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக்கண்டறிந்து, அவற்றை நிரல்படுத்தி எழுதியிருக்கிறார். தமிழ் வடமொழி அகராதி, ஆங்கில -  தமிழ் அகராதி, தமிழ்ப் புதலியல்(botany) அகராதி ஆகிய நூல்களை எழுதினார்.  தமிழ் நூல்களின் பட்டியல் ஒன்றை அகராதி அமைப்பில் உருவாக்கினார். தமிழ்ப் புலவர்கள் 202 பேரின் வரலாறு கூறும்  நூலை, தமிழ் புளூடாக் (Tamil Plutarch) என்ற பெயரில் எழுதினார்.

     (பண்டை கிரேக்கத்தில் வாழ்ந்த 46 புலவர்களின் வரலாற்றை எழுதிய அறிஞர் புளூடாக்(Plutarch)கின் நூல், அவர் பெயரிலேயே புளூடாக் என்று வழங்கப்பட்டது.)
    
     மாலத்தீவு மொழியில் சிங்களமொழி கலந்துள்ளது பற்றி ஆராய்ந்தும், யாவாத்தீவின் மொழிக்கும் சமற்கிருத மொழிக்கும் உள்ள தொடர்பு பற்றி ஆராய்ந்தும் சய்மன் காசி எழுதியிருக்கிறார்.

தமிழர் தொடர்பான நூல்கள் :

     காசி எழுதிய தமிழ்ப்புலவர் வரலாறு கூறும் நூல், தெ.பொ.மீ., விபுலானந்த அடிகளார் ஆகியோரின் அணிந்துரையை ஏற்று 1946இல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்தது.

     தமிழ்மொழியில் ஆக்கப்பட்டிருந்த நூல்களின் பட்டியலை அந்நூல்களின் பெயர், நூலாசிரியர் பெயர், நூல்கள் கூறும் பொருள், ஆக்கிய ஆண்டு முதலிய விளக்கங்களுடன் தொகுத்து 1848இல் வெளியிட்டார். இவ்வகையில் வெளிவந்த நூல்களில் இதுவே முதல் நூலாகும்.

     சய்மன் காசி அவர்களுக்குப் புகழ் தந்த நூல் தமிழரின் சாதிப்பாகுபாடு, பழக்க வழக்கங்கள், குணவியல்புகள், இலக்கிய இலக்கண நூல்கள் தொடர்பானதாகும். மருத்துவக் கலாநிதி எசு.சிபோல் அவர்களின் பாராட்டு அணிந்துரையுடன் 1934இல் இந்நூல் வெளிவந்தது. இவரின் மற்றைய நூல்களைப் போலவே இந்நூலையும் காசி ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
    
     இந்நூல், தமிழ்நாட்டின் தொன்மை, தமிழ்மொழியின் பழமை, தமிழரின் உடைகள் அணிகலன்கள், நாகரிகச் சிறப்பு, உணவு வகைகள், மூத்தோரை மதிக்கும் பண்பு, பெண்கள் உயர்வாகப் போற்றப்படுதல், தமிழரின் திருமணச்சடங்கு முறைகள் மலையாள மொழி பற்றிய விளக்கம் முதலியவற்றைக் கூறுகிறது.

     தமிழர்கள் 3300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழந்து வருகின்றனர் என்றும் இந்நூல் விளக்குகிறது. 1833ஆம் ஆண்டுக்கு முற்பட்ட இலங்கை, மாநில மாவட்டப் பிரிவுச் சிக்கல்கள் இன்றி இருந்ததாகவும் அறிவிக்கிறது.
    
     அறிஞர் சய்மன் காசி அவர்களுடைய நூல்களும், ஆய்வுக்கட்டுரைகளும் அந்தக் காலத்தின் தேவைக்கேற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும்,
அவையனைத்திலும் தமிழ் உணர்வு இழையோடி இருப்பதனால், அவருடைய பணிகள் யாவும் தமிழ்த் தொண்டுகளாகவே கொள்ளப்படும் என்று அறிஞர்கள் போற்றுகின்றனர்.

     காசி, தமிழில் உதயாதித்தன் என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை 1841இல் தொடங்கிச் சிறிது காலம் நடத்தியதும் அவரின் தமிழ்ப்பற்றைக் காட்டுவதாகும் எனபதும் அறிஞர்களின் மதிப்பீடாகும்.

பிற நூல்கள் :

     காசி சமயஞ் சார்ந்த நூல்களையும் எழுதி இருக்கின்றார். திருக்கேணேசு வரத் திருக்கோயில் பற்றிய கவிராச வரோதயரின் பழைய தொன்மப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, 1831இல் வெளியிட்டார். கடவுள்மா முனிவரின் திருவாதவூரர் தொன்மத்தின் பகுதிகளையும் அல்லியரசாணி வரலாற்றையும் அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

     முசுலிம்களின் சீறாப் புராணத்தை ஆய்வுசெய்து, சீறாப் புராணத்தின் சிறப்பு என்னும் நூலை எழுதினார். கத்தோலிக்கத் திருச்சவைகளின் வளர்ச்சியும் முன்னேற்றமும் பற்றி எழுதியிருக்கின்றார். பிலிப்-டி-மெல்லோ, ஓசப் வாசு ஆகியோரின் வரலாறுகளையும் எழுதியிருக்கின்றார். மேலும், கிறித்தவ மறைதோன்றியத்தின் (வேதாகமம்) பழைய ஏற்பாட்டிலுள்ள ஆதித் தோன்றியம் பற்றிய ஒரு நூலையும் அவர் எழுதியுள்ளார்.

குமுகப் பணி :

     சய்மன் காசி, தம் சொந்த ஊராகிய கற்பிட்டியில் ஐம்பது பிள்ளைகள் படிக்கக்கூடிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியில் இலவயமாகக் கற்பிக்க ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

     கற்பிட்டியில் அவரது சொந்தச் செலவில், திருச்சவை ஒன்றையும் கட்டிக் கொடுத்தார்.

பாராட்டுகள் :

     மக்களைப் பற்றிய செய்திகளைத் திரட்டி நூலாக்கி வெளியிடும் காசியின் முயற்சியைப் பாராட்டி, சர் இராபர்ட்டு ஆட்டன், அவர் எழுதிய நூலின் பதிப்புச் செலவிற்கு 100கினி பணமும் அன்பளிப்பாகத் தந்தார். சர் சார்லசு மார்சல், சர் சான் வில்சன்,  எசு.சிபோல், சிலோன் அப்சர்வர் என்ற ஆங்கில ஏடு, ஆளுநர் மக்கன்சி ஆகியோரும் இவரைப் பாராட்டியுள்ளனர்.

     விபுலானந்த அடிகளார், தெ.பொ.மீ., களத்தூர் வேதகிரியார், முனைவர் கால்டுவெல், தி.பி.எ.என்றி ஆராய்ச்சி, எப்.எக்சு.சி.நடராசா ஆகியோரும் சய்மன் காசியைப் பாராட்டியுள்ளனர்.

     கற்பிட்டியில், காசியின் வீடு இருந்த தெரு, அவரைப் பெருமைப் படுத்தும் வகையில் செட்டித்தெரு என்று அழைக்கப் படுவதாயிற்று. காசியின் புகழுரைக்கும் பாராட்டு வாசகமொன்று, புத்தளம் நயன்மன்றத்தில் 1983இல் பொறிக்கப்பட்டது. 1987இல் அவர் உருவப்படந் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

முடிவாக...

     பதினேழே அகவையில் பதினொரு மொழிகளுக்கும் மேல் கற்றுப் பன்மொழிப் புலமை பெற்ற அறிவாற்றலராகத் திகழ்ந்தவர் சய்மன் காசி அவர்கள். அரசுப்பணிகளில் இருந்து கொண்டே, ஐம்பத்து மூன்று அகவைக்குள், பல்வேறு களப்பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்; ஏறத்தாழ ஐம்பதிற்கும் குறையாத நூல்களையும் நிறைய கட்டுரைகளையும் எழுதித் தந்துள்ளார்.

     மாந்தநேயப் பற்றாளராகவும், குமுகப்பணியில் வல்லவராகவும் காசி திகழ்ந்திருக்கிறார். பல்துறை அறிஞராகவும் வினையாண்மை மிக்கவராகவும் விளங்கிய சய்மன் காசியின் வாழ்க்கை, இளையோர்க்கு அரிய செயல்களை ஆற்ற வழிகாட்டி ஊக்கும் என்பதில் ஐயமில்லை.

     செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
     செயற்கரிய செய்கலா தார்.                                                                                               

----------------------------------------------------------------------------------------------------------------------------------
உசாத் துணை நன்றியுரைப்பு:

  1. தமிழ் வலைக் கலைக் களஞ்சியம் (விக்கிபீடியா)
  2. தமிழ்ப் பேரறிஞர் சைமன் காசிச் செட்டி வரலாறும் பணிகளும் தமிழவேள் க.இ.க. கந்தசுவாமி.
  3. ஈழத்துத் தமிழ்ச் சான்றோர் தமிழ்ஒளி க.செபரத்தினம்.
  4. kalaikesari.com.
 துணை செய்தார்க்கு நெஞ்சார்ந்த நன்றி.

------------------------------------------------------------------------ 

4 கருத்துகள்:

  1. வணக்கம் ஐயா.

    அரியச் செய்தியை அறியச் செய்தமைக்கு நன்றி பல.
    மிக்க பயனான செய்தி; பரப்பவேண்டிய செய்தியும் கூட.

    //மாந்தநேயப் பற்றாளராகவும், குமுகப்பணியில் வல்லவராகவும் காசி திகழ்ந்திருக்கிறார். பல்துறை அறிஞராகவும் வினையாண்மை மிக்கவராகவும் விளங்கிய சய்மன் காசியின் வாழ்க்கை, இளையோர்க்கு அரிய செயல்களை ஆற்ற வழிகாட்டி ஊக்கும் என்பதில் ஐயமில்லை.//

    உங்கள் ஆழ்ந்த உணர்வுதான் எனக்குள்ளும் எழுந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஈழத் தமிழர்கள் அறியாத விஷயம்.வெட்கமாக இருக்கிறது,நன்றி, ஐயா!

    பதிலளிநீக்கு
  3. அருமையான கட்டுரை நல்ல தகவல்கள் தமிழ்ச் சான்றோர் ஒருவரைப் பற்றி நல்ல ஆவணம் இது. நன்றி

    பதிலளிநீக்கு